அறியாத விஷயங்கள் சில ….எவ்வளவு தூரம் நிஜம்… ?தெரிந்தவர் சொல்லலாம்…!!!

….
….

….

பலருக்குத் தெரியாத விஷயங்கள் என்று சிலவற்றைப்பற்றி
வலைத்தளத்தில் படித்தேன்…

சுவாரஸ்யமாக இருந்ததால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இவற்றில் எத்தனை செய்திகள்
நிஜம்….? எத்தனை கற்பனை…?

தெரிந்தவர்கள் சொல்லலாம். எனக்கு தெரிந்ததை மட்டும்
அங்கங்கே உறுதி செய்துள்ளேன்.

– ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல்
1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.
( நான் நேரில் இங்கு சென்று 30 அடி தூரத்திலிருந்து
பார்த்திருக்கிறேன். அருகில் நெருங்கி பார்க்க
அனுமதிப்பதில்லை; ஆனால், ஸ்ரீரங்கம் வரலாறு உண்மை
என்று சொல்கிறது…)

– தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல்
கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை
குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில்
குளிராகவும் இருக்கிறது.

– சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில்
குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.
(உண்மை.. இது சிற்பத்தின் சிறப்பு…)

– தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள
இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற
இசை வருகிறது.

– மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில்
மீன்கள் வளராது.

– காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை.
பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம்
வீசுவதில்லை.

(காசிக்கு நான் சென்றிருக்கிறேன்… முதல் மூன்றும் நிஜம்.
4-வது – காசியில் எனக்குத் தெரிந்து வாசனைப்பூக்கள்
எதுவும் விற்பனையாவதில்லை;)

– கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில்
சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.

– கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே
கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில்
ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில்
இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும்
அதிசயம் நடக்கிறது.

– சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும்
சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை
என மும்முறை )

– திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர்
கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது,
குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த
விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து
வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.

– செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை
ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை,
பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய
அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது
சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில்
ஜொலிப்பார்.

– ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம்
கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின்
சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும்.
அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம்.
ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

– ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம்
சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு
ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.

– சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம்
இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பார்க்க
முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து
ஸ்ரீராமரைப் பார்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

– தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி
தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிரார்த்தனை செய்து
பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர்
வந்துவிடுகிறது.

– குளித்தலை அருகில் ரத்தினகிரி மலை மேல் காகங்கள்
பறப்பதில்லை.

– தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில்
கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும்
கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக
நிற்கிறது.

– விருதுநகரில் மகான் திருப்புகழ்சாமி கோவில்
திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில்
வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு
பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே
இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்)

– திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத்

தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும்
சுடுவதில்லை.

– சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும்
தயிர் புளிப்பதில்லை.

– ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும்
எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

– திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)

திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு
மாறுகிறது.

– திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில்
அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும்
குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல்
எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

– திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு
ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட
பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.

(முன்பு உண்டு…. ஆனால் இப்போதெல்லம்
கழுகு வருவதில்லை என்று கேள்விப்பட்டேன்…)

– திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில்
மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால்
நீலநிறமாகிறது.

– நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள
ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம்

வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம்
நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண்
கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது…

.
——————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அறியாத விஷயங்கள் சில ….எவ்வளவு தூரம் நிஜம்… ?தெரிந்தவர் சொல்லலாம்…!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    //ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.// – அப்படி இல்லை என்பது என் எண்ணம். நான் அருகில் சேவித்திருக்கிறேன். அது ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த முறையான பள்ளிப்படை (அல்லது பிருந்தாவனம்) வகையில் கட்டப்பட்டது. அதாவது அவரது உடல் (துறவி என்பதால்) மண்ணில் அடக்கம் செய்யப்பட்டு அதன் மீது எழுப்பப்பட்ட சன்னிதி. அவரது உருவம் சுதையினால் செய்யப்பட்டது.

    (மங்களகிரியில்… பானக நரசிம்மர் வாயில் ஊற்றப்படும் பானகம் பாதி மட்டும் வெளியில் பிரசாதமாக வரும் என்பது போன்று பல நம்பிக்கைகள் உள்ளன).

    //குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.// இதுவும் விஞ்ஞானமே. நேரடியாக வெளிக்காற்று உள்ளே வராததாலும், கற்களின் தன்மையினாலும் குளிர்காலத்தில் வெளியில் உள்ளதைவிட வெப்பநிலை அதிகமாகவும், வெயில்காலத்தில் வெளியில் உள்ளதைவிட குறைவாகவும் – நேரடி சூரியக் கதிர்கள் படாததால் இருக்கும். இதனை நம் நாட்டு ஓடுகள் கட்டின கிராமத்து வீடுகளிலும் உணரலாம்.

    நிறைய விஷயங்கள், கொஞ்சம் அதீதமாக சொல்லப்படுவது. விஞ்ஞானத்துக்குப் புறம்பாக எதுவுமே நடப்பதில்லை என்பதுதான் நிஜம். அதில் கடவுளின் சக்தி என்று கோர்த்து விட்டுவிட்டால், யாரும் கேள்வி கேட்பதில்லை.

    நான் ஓமானில் (சலாலா) ஒரு இஸ்லாமிய துறவியின் சமாதியைப் பார்த்தேன். அது சும்மா 30 அடி நீளம் இருக்கும். அவங்க, அந்தத் துறவி அவ்வளவு உயரம் என்று சொன்னாங்க. இதுவும் இந்த மாதிரி விஷயமே. இதுமாதிரி மதம் கடந்த நம்பிக்கைகள் ஏராளம், ஆனால் எதுவும் விஞ்ஞானத்தின் முன்பு செல்லுபடியாகாது.

  2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    இது உண்மை
    சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம்
    இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பார்க்க
    முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து
    ஸ்ரீராமரைப் பார்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    நீங்கள் சொல்லும் கருத்துடன் நான்
    உடன்படுகிறேன். ஆனால் –

    நான் நிறைய தடவை இந்த சந்நிதிக்கு
    சென்றிருக்கிறேன்… ஆனால், அருகில் நெருங்கி
    பார்க்க அனுமதிப்பதில்லை; அங்கு பணிபுரியும்
    சிலரிடம் பேசிப்பார்த்தேன்… அவர்களும்
    விக்கிபீடியாவில் சொல்லப்பட்டிருப்பதைத்தான்
    சொல்கிறார்கள்..

    விக்கிபீடியா சொல்கிறது :
    பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில்,
    துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது.
    மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள்
    (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம்
    கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம்
    என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி
    அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய
    உடையவர் சன்னிதி.

    இன்றும் நாம் இவருடைய பூத உடலை
    தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி,
    கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக்
    காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுசரின்
    சன்னதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு
    தானான திருமேனி.என்று பெயர்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      இப்போ இத்தனை வசதிகள் (போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்ற) இருந்தும் இந்தியாவின் பல இடங்களுக்குச் செல்லமுடிந்ததில்லை. இராமானுஜர், ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, தெரியாத கர்நாடகா தேசத்துக்குச் சென்று அங்குள்ள அரசனை வைணவனாக்கி, வைணவ சமயத்தை அங்கு பரப்பியிருக்கிறார். திருப்பதிக்குச் சென்று அங்கு கோவில் வழிபாட்டை 1 வருடம் தங்கி ஒழுங்குபடுத்தியிருக்கிறார், கீழ்த் திருப்பதியில் கோவிந்தராஜர் கோவிலை, சன்னிதிகளை ஸ்தாபிதம் செய்திருக்கிறார் (நம்ம ஊர்ல அரசு இதைச் செய்கிறேன் என்று அதிகாரத்தில் சொன்னால், அதற்கு எதிர்க்கட்சிகள் எவ்வளவு எதிர்ப்புகள் தெரிவித்து செயல்பாட்டை முடக்கும் அல்லது கிடப்பில் போடவைத்துவிடும்). கர்னாடகா, ஆந்திரா இவற்றில் வைணவம் வளரவைத்திருக்கிறார். பிறகு நேபாளுக்குச் சென்று முக்திநாத் ஆலயத்தை தரிசித்திருக்கிறார். காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம், கர்னாடகா (திருநாராயணபுரம், தொண்டனூர்), தில்லி என்று பல இடங்களுக்கு நடந்திருக்கிறார். ஒரு சகாப்தத்தையே உருவாக்கியிருக்கிறார். அப்படிப்பட்ட சரித்திர புருஷன் நடமாடிய இடத்தில் நாம் நிற்க வாய்ப்பு கிடைப்பதே எவ்வளவு அரிதான விஷயம்?

      அவர் ஆரத்தழுவிய தன் விக்ரகம், ஸ்ரீபெரும்புதூரில் இன்றும் உள்ளது. அது தானுகந்த திருமேனி. இன்னொரு விக்கிரகம் மேல்கோட்டையில் உள்ளது (அது முதலானது. இராமானுசர் மேல்கோட்டை-திருநாராயணபுரத்தை விட்டு 12 வருடங்கள் கழித்து நீங்கும்போது தன் நினைவாக அங்குள்ளவர்கள் கேட்டதற்கு இணங்க அனுமதி தந்து தொட்டுத் தந்த தன் “தமர் உகந்த திருமேனி’ விக்கிரகம்). மூன்றாவது, அவரின் மறைவுக்குப் பின்னானது, தானான திருமேனி. திருவரங்கத்தில் உள்ள உருவம், அவருடைய அந்திம கால உருவத்தை ஒத்திருக்கவேண்டும்.

      மற்றபடி செண்டிமெண்ட், பக்தி, நம்பிக்கைகள் போன்ற விஷயங்களுக்குள் விவாதம் இல்லை அல்லவா?

      //வைணவ மரபில்,துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது// – எப்போதுமே துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது என்றே நினைக்கிறேன். இது வைணவம், சைவம் என்றல்ல. துறவிகளின் பூத உடலை இப்படித்தான் கையாளவேண்டும் என்பதற்கு மரபும் வழிமுறைகளும் இருக்கின்றன. சமீபத்தில் பரமாச்சார்யாருக்கு என்ன செய்தார்கள் என்பதைப் பார்த்திருப்பீர்கள். அவைகளை பிருந்தாவனம் என்பார்கள் (நவ பிருந்தாவனம் என்று கேள்விப்பட்டிருப்பீங்க, ராகவேந்திரர் சம்பந்தப்பட்டதை) . (பள்ளிப்படை என்ற வார்த்தையை உபயோகிக்க மாட்டார்கள். அது சாதா மனிதர்களுக்கானது. ராஜராஜன் மனைவி பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை, ராஜராஜனின் பள்ளிப்படை-இது இன்னும் அந்த இடம்தான் என்று நிரூபிக்கப்படலை, ஆதித்யன் பள்ளிப்படை, சுந்தரபாண்டியன் பள்ளிப்படை போன்றவை 1000 ஆண்டுகளுக்குமேல் பழமையானது.

  4. GOPI சொல்கிறார்:

    விக்கிபீடியாவில் இப்படி தவறான
    தகவல்கள் இருக்கலாமா ?
    இருக்க விடலாமா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.