சுஜாதாவை அடுத்து ஜெயமோகன் சொல்லும் சில ஆலோசனைகள்….

….
….

….

சுஜாதா அவர்களின் இளைஞர்களுக்கான 10 கட்டளைகளை
அண்மையில் தேடியெடுத்து இங்கே பதிவு செய்திருந்தேன்…

https://vimarisanam.com/2020/10/08/%e0%ae%9a%e0%af%81%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-10-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3/

அதையடுத்து திரு.ஜெயமோகன் கூறியுள்ள
சில ஆலோசனைகள் இங்கே –

இவை முற்றிலும் வித்தியாசமானவை.
வேறு நோக்கில் சொல்லப்படுபவை.
லட்சியங்களை முன்னெடுத்து செல்பவர்களுக்கானவை…

( கடைபிடிக்க முடியவில்லையென்றால் கவலை வேண்டாம்…
லட்சியவாதிகளுக்கானவை தானே இவை ….!!! )

——————————-

1) எது மகிழ்ச்சி என கண்டடையுங்கள்.
கேளிக்கை அல்லாதவையே மெய்யான மகிழ்ச்சி.
நான்குபேருடன் சேர்ந்து கொண்டாடுபவை நிறைமகிழ்வு
அளிப்பவை அல்ல. செய்யச்செய்யச் சலிப்பவை –
நீடுமகிழ்வு அளிப்பவை அல்ல. தன்னந்தனிமையில்
நீங்கள் மட்டுமே அடையும் மகிழ்ச்சி என்ன என்று
நோக்குங்கள்.

அது எப்போதுமே படைப்பூக்கத்துடன் முழுமையாக
ஒன்றி நீங்கள் செய்வதாகவே இருக்கும்.
அதில் உங்கள் கடுமையான உழைப்பை
அளிக்கவேண்டியிருக்கும். அதன்பொருட்டு துன்பப்படவும்
வேண்டியிருக்கும்.

ஆனால் அது சாதனையுணர்வை அளிக்கும்.
உங்களை தனித்துவம் கொண்டவராக உணரவைக்கும்.
நீங்கள் மட்டுமே ஆற்றத்தக்க ஒன்றை செய்கிறீர்கள் என
நினைக்கவைக்கும். அதுவே உங்கள் களம். அதைச்
செய்கையிலேயே நீங்கள் வாழ்க்கையை
அர்த்தப்படுத்துகிறீர்கள்.

2) மகிழ்ச்சிக்கு எது தடை எது துணை என உணருங்கள்.

மேலே சொன்ன மகிழ்ச்சிக்கு –
தடையாக ஆகக்கூடியவை உண்டு,
துணையாக ஆகக்கூடியவை உண்டு.

பலசமயம் நாம் இரண்டையும் பிரித்துக்கொள்வதில்லை.
கேளிக்கை சார்ந்த மிகையான ஈடுபாடுகள்,
ஆடம்பரப் பொருள்கள் மீதான பற்று,
போதைப்பழக்கம் போன்றவை மிகப்பெரிய தடைகள்.

ஆனால் ஒர் உறுதியான பொருளியல் அடித்தளத்தை
உருவாக்கி அளிக்கும் செயல்கள் தடைகள் அல்ல துணைகள்.
இந்தியச்சூழலில் குறைந்தபட்ச பொருளியல் நிலைக்கோள்
ஒன்று தேவை. அதை குறைந்த அளவு நேரத்தையும்
உழைப்பையும் அளித்து ஈட்டி அதன்மேல் நின்றுகொண்டு
கனவுகளை நோக்கிச் செல்லலாம்

3) இணையான உள்ளம் கொண்ட நண்பர்களுடன்
சேர்ந்ந்திருங்கள். இளமையில் நாம் நட்பை மிக விழைகிறோம்.
ஆனால் எல்லா நட்பும் நமக்கு நல்லது அல்ல.

வெறுமே வாழ்க்கையை வாழ்ந்து தீர்ப்பவர்களின் நட்பு
நேர விரயம். உணர்வு விரயம். அதைவிட முக்கியமாக
அவர்கள் நம்மை அவர்களின் தரம் நோக்கி தொடர்ச்சியாக
இழுப்பார்கள். அவர்கள் தங்கள் இயல்புப்படி உலகியலில்,
அன்றாடத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஆகவே –

அவர்களை நாம் எவ்வகையிலும் நம்மைநோக்கி ஈர்க்க
முடியாது. நாம் சொல்வதை புரிந்துகொள்ளவைக்க முடியாது.
ஆனால் அவர்கள் கூட்டாக இருக்கையில் ஆற்றல்
கொண்டவர்கள். நம்மை அவர்களைப்போல ஆக்கி
விடுவார்கள். நம் கனவுகளைக் கேலிப்பொருளாக்கி
விடுவார்கள். இலட்சியக் கனவுகள் கொஞ்சம் கேலி
செய்யப்பட்டால்கூட அர்த்தமில்லாதவை ஆகிவிடும்.

4) பொருளுலகில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
இந்த யுகம் பொருட்களுடையது. ‘வாங்குவோன்’ என்பதே
இன்றைய சராசரி மனிதனுக்கு இந்த காலகட்டம் அளிக்கும்
அர்த்தம்.

வாங்க ஆரம்பிப்பவன் தன்னைச் சிறையிட்டுக்
கொள்கிறான். எல்லாரும் வாங்குவதனால், வெறும்
ஆசையினால் வாங்க ஆரம்பித்தால் நமக்கு உகந்ததை,
நாம் மிக விரும்புவதை இழக்கிறோம். உதாரணமாக
ஒரு நவீன செல்பேசி ஒன்றரை லட்சம் ரூபாய்.
அதன் ஆயுள்காலம் மூன்றாண்டுகள்.

ஆண்டுக்கு ஐம்பதாயிரம் ரூபாய். மாதம் நாலாயிரம் ரூபாய்.
ஐம்பதாயிரம் ரூபாய் மாதவருமானம் உள்ள ஒருவர்
நான்காயிரம் ரூபாயை ஒரு செல்பேசிக்காகச் செலவிடுவார்
என்றால் அவர் மீட்பில்லாமல் சிக்கிக்கொள்கிறார்.

ஃபேஷன் என்பதைப்போல மாபெரும் மோசடி வேறில்லை.
இந்தக் காலகட்டம் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து
தனிமனிதன் மேல் செலுத்தும் மோசடி அது. அதிலிருந்து
வெளியே நிற்பவர்களுக்குரியதே இவ்வுலகின்
மெய்யான மகிழ்ச்சி.

5) சராசரியாக இல்லாமல் இருப்பதில்
ஆணவம் கொள்ளுங்கள்.

இந்தச் சமூகம் சராசரிகளால் கட்டப்பட்டுள்ளது.
சராசரியான கல்வி, அனைவருக்கும் உரிய செய்திகள்
என ஒரு பொதுப்பரப்பு தொடர்ச்சியாக கட்டி
உருவாக்கப்படுகிறது. அதில் ஒருவராக இருந்தால்
ஒரு சராசரி மகிழ்ச்சியும் உண்டு. ஆனால் அதிலிருப்பவன்
எதையும் தனக்கென கண்டடைய முடியாது.

மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய இன்பம் எதையேனும்
சாதித்தோம் என்னும் உணர்வு. அதை அடைய முடியாது.
ஆகவே சராசரிகளிலிருந்து விலகியிருங்கள். எல்லாரும்
பேசும் சினிமாவை, அனைவரும் விவாதிக்கும்
பொதுத்தலைப்பை தவிர்த்துவிடுங்கள். அனைவரும்
செய்வனவற்றை செய்யவேண்டாம். அனைவரும்
செல்லுமிடத்திற்குச் செல்லவேண்டாம்.
நான் வேறு என்பதைப்போல் நிமிர்வு – வேறில்லை…

6) அன்றாட மிகையரசியலை தவிர்த்துவிடுங்கள்
இன்றைய சூழல் ஊடகங்கள் வழியாக அரசியல் மிகைப்
படுத்தப்படுவது. அரசியல் தேவை. ஆனால் அது
நாமே அறிந்து நாமே முடிவெடுப்பதாக இருக்கவேண்டும்.

இன்று ஊடகங்களில் அரசியல்சார்ந்த உணர்ச்சிகளை
பலமடங்கு மிகையாக்குகிறார்கள். சமூக ஊடகங்கள்
எப்போதும் அதை கொதிநிலையிலேயே வைத்திருக்கின்றன.
அனைவரும் எண்ணி எண்ணி கொதித்த ஓர் அரசியல்
செய்தியை மூன்றுமாதம் கழித்து சென்று பாருங்கள்.
அது எந்த அளவு சுருங்கிச் சிறுத்திருக்கிறது என்பதைக்
காண்பீர்கள்.

அதற்குச் செலவழித்த நேரம் எவ்வளவு
பெரிய விரயம். அரசியல்வாதிகள் தங்கள் அதிகார
நோக்குடன் அரசியல்செய்திகளை உணர்ச்சிக்
கொந்தளிப்பாக ஆக்குகிறார்கள். அதற்கு உங்களை
அளிக்கவேண்டாம். அரசியல் சார்ந்த மிகையுணர்ச்சி
விரைவிலேயே எதிர்மறைத்தன்மையை அளிக்கும்.
ஏனென்றால் இன்றைய அரசியல் எதிர்மறைத்தன்மை
கொண்டது. நாம் அர்த்தமில்லாத கசப்பும் காழ்ப்பும்
நிறைந்தவர்களாவோம். அது ஏதோ அறவுணர்ச்சியின்
வெளிப்பாடு என நம்பிக்கொண்டிருப்போம். ஆகவே
அதிலிருந்து மீளவே மாட்டோம். உள அழுத்தமும்
சோர்வுமே நிகர பயன்.

7) ஒருநாளில் ஒரு மணிநேரமாவது நூல்களை வாசியுங்கள்.
கட்டுரை வாசிப்பு, யூடியூப் கேட்பு எல்லாமே தேவைதான்.
ஆனால் முழுநூலாக வாசிக்காதவரை நாம் எதையும்
முழுமையாக அறிவதில்லை.

எடுத்த நூலை வாசித்து முடியுங்கள். ஒரே சமயம்
ஒரு புனைவு, ஒரு புனைவிலி என வாசிக்கலாம்.
ஒரே கோணத்தை பலவாறாக விரித்தெடுக்கும் நூல்களை

தொடுத்துக்கொண்டு வாசிக்கலாம். வாசிப்பதற்கு
ஒரு நேரத்தை திட்டமிட்டு ஒதுக்கிக்கொண்டால் மட்டுமே
இன்றைய சூழலில் வாசிப்பு நடைபெறும். நேரம் கிடைத்தால்
வாசிக்கலாம் என்று நினைப்பவர்கள் வாசிப்பதே இல்லை.
தொடர்ச்சியாக ஒருமணிநேரம் வாசியுங்கள். நடுவே
மின்னஞ்சல் பார்க்காமல், குறுஞ்செய்தி அனுப்பாமல்,
அரட்டை அடிக்காமல், டிவி பார்க்காமல் முழுமையாக
ஒருமணிநேரம். போதும்.

8) கொஞ்சமேனும் உடற்பயிற்சி செய்யுங்கள்
நடை நல்லது. இலக்கியவாசிப்போ ரசனையோ
உள்ளவர்களால் வேறெந்த உடற்பயிற்சியையும்
செய்ய முடியாது.

9) எப்போதும் செல்பேசியில் கிடைத்துக்கொண்டிருக்காதீர்கள்
உலகத்தவர் முழுக்க எப்போதுவேண்டுமென்றாலும்
உங்களை அழைக்கமுடியும் என்றால் நீங்கள்
வெட்டவெளியில் நிர்வாணமாக நிற்கிறீர்கள். செல்பேசியை
குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயன்படுத்துவது
மிகச்சிறந்தது. அது இயலாதவர்கள் செல்பேசியை அணைத்து
வைக்கும் பொழுதையாவது வகுத்துக் கொள்ளுங்கள்.

10) தூங்குவதற்கு முன் இசை கேளுங்கள்
சின்ன விஷயம். ஆனால் இன்றைய வாழ்க்கையில்
நாம் ஒருநாளில் பலவாறாக சிதறுண்டுவிடுகிறோம்.

இசையே நம்மை தொகுக்கிறது. நம் செயல்களின் நடுவே
அறுபட்டு அப்படியே இரவு தூங்கினால் நம் அகம்
நிலைகுலைகிறது. காலையில் சற்று பதற்றத்துடன் எழுவோம்.
அப்பதற்றம் நாள்முழுக்க நீடிக்கும். முந்தையநாள் கேட்ட
ஒரு மெட்டு இயல்பாக நாவில் எழ கண்விழிப்பதே
நல்ல காலை….

——————————————-

என் குறிப்பு –

முழுசாக லட்சியவாதிகள் ஆக முடியாவிட்டாலும் பரவாயில்லை;
நம்மை நாமே சீர்திருத்திக்கொள்ளவாவது,
சில மோசமான பழக்கங்களிலிருந்து விடுபடுவதற்காவது,
மேற்கண்ட ஆலோசனைகளில் சிலவற்றை அவசியம்
நம் அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்….

அவை என்னென்ன என்பதை படிக்கும்போதே,
நாம் ஒவ்வொருவரும் உணர முடியும்.

.
————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.