“இந்திரா” – லா.ச.ராமாமிருதம் ….

….
….


….

தமிழ் எழுத்தாளர் லா.ச.ரா என்று அழைக்கப்படும்
லா. ச. ராமாமிர்தம் (1916 – 2007), அவருடைய
முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச்
சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி
சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக லா.ச.ரா என்ற
பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள்,
6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட
பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.

தினமணி கதிரில் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடராக
எழுதப்பட்ட அவரது சுயசரிதை சார்ந்த சம்பவங்கள் “சிந்தாநதி”
என்கிற பெயரில் வெளிவந்து, அவருக்கு1989-ல்
சாகித்ய அகாதமி விருதை பெற்றுத் தந்தது.

அந்த சிந்தாநதி தொடரின் ஒவ்வொரு அத்தியாயமுமே
ஒரு சிறுகதை… அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கதை
“இந்திரா” – கீழே…..

(சில சமயங்களில் அவரது எழுத்தை புரிந்துகொள்வது
சிரமமாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் ஒரு தடவைக்கு
இரண்டு தடவையாகப் படித்தால் புரியும் ….. ரசிக்கும்…!!!)

—————————————————————-

….

“இந்திரா”

——-

மாலை ஆபீஸ் முடியும் நேரத்துக்கு ஸ்ரீனிவாஸன்
என்னிடம் வந்தான். “நீங்கள் இன்று வீட்டுக்கு வரணும்.”

“என்ன விசேஷமோ?”

“என் மனைவிக்கு ஆறுதல் சொல்லணும்; எங்கள்
முதல் குழந்தை காலமாகிவிட்டதற்கு.” இது நான்
எதிர்பாராதது. என் ஸ்வரம் இறங்கிற்று.

“இதோ பார், சீனு, இதற்கெல்லாம் எனக்கு என்ன தகுதி?
பெரியவாள் சமாச்சாரம், ஆணுக்கு ஆண்,
பெண்ணுக்குப் பெண்.”

“No, you are a writer, you are gifted. நீங்கள் தான்-
I want it. Please.”

சீனிவாஸன் இதுபோல் அடிக்கடி ஆங்கிலத்துக்கு
நழுவிவிடுவான், நன்றாகவும் பேசுவான். கெட்டிக்காரன்,
Push உள்ளவன். உத்தியோகத்தில் எனக்கு
மூன்று வருடம் ஜூனியர்.

G.T.இல், தெருப் பெயர் மறந்துவிட்டது. ஏறக் குறைய
நாற்பது வருடங்கள் ஆகின்றன. வளைக்குள் வளைபோல்
குடித்தனங்கள் நிறைந்த ஒரு நீண்ட வீட்டினுள், கடைசி
வளையுள் அழைத்துச் சென்றான். வாசற்படியண்டை
உட்கார்ந்திருந்த ஒரு யுவதி என்னைப் பார்த்தும்
வெடுக்கென எழுந்தாள்.

“இந்திரா, This is the famous லா. சா. ரா”

வந்த கோபத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்,
முதலில். அப்போது நான் Famous இல்லை (“இப்போ மட்டும்?”
என்று கேட்டு விடாதீர்கள். மேலே சொல்லணும்)
இரண்டாவது. இது போன்ற அறிமுகம் எனக்குப் பிடிப்பதில்லை.
ஆயினும் அவன் படும் பெருமையை,
சந்தோஷத்தைக் கெடுக்க முடியுமா?

இருவரும் அவர்கள் குல முறையில், காலில் விழுந்து,
ஐந்து முறை கும்பிட்டுக் கும்பிட்டு, சேவித்தனர்.

இந்திரா- இட்ட பெயரா, அழைக்கும் பெயரா, இன்னமும்
அறியேன். அவ்வளவு இளவயதில், அந்த ‘ஐயங்கார்’
கட்டுக்கும் சுயமான துருதுருப்புக்கும்- ‘ரம்மியம்’ என்ற
வடமொழிக்கு அதே ஓசைருசி, பொருள் நளினத்துடன்
நேர் தமிழ், தெரிந்தவர் சொல்லுங்களேன்!

அறிவுப்பூர்வமாக சம்பாஷிக்கத் தெரிந்து, மரியாதையும்
தெரிந்து, பெண்மையின் பிகு குறையாமல், இன்முகம்,
பண்பு, உபசரிப்பும் கூடிவிட்டால், – அதெல்லாம்
புண்ணிய சமாச்சாரம், எல்லாருடைய அதிர்ஷ்டமல்ல.

அவள் என் கதைகளைப் படித்தவள் அல்லள்.
ஆனால் நேரம் போனதே தெரியவில்லை.

நான் சாப்பிடுவதற்கு இலை வாங்கச் சீனு போனான்.
போகும்போது எனக்கு ஜாடை காட்டிவிட்டுப் போனான்.

தக்குணுண்டு சாமிக்குத் துக்குணுண்டு நாமம்-ஒரு குட்டி
அறைக்குள் ஒரு குஞ்சான் அறை. அவர்கள் ஆண்ட இடம்
அவ்வளவுதான்- உள் அறையில் எட்டிப் பார்த்தேன்.
குழந்தையை மடியில் போட்டுத் தூங்கப் பண்ணிக்
கொண்டிருந்தாள். இது பெண். நறுவலாகத் தான் இருந்தது.
இன்னும் ஆறு மாதம் ஆகியிருக்காது.

என்னைப் பார்த்ததும் புன்னகை புரிந்தாள்.

“என் பெற்றோருக்கு நான் ஐந்தாவது பிறப்பு!” என்றேன்.
எங்கானும் ஆரம்பிக்கணுமே! முன்பின் பீடிகையில்லாமல்,
இதுவும் ஒரு ‘பாணி’தான், இல்லை?

“அப்படியா? அப்போ தங்கள் குடும்பம்-” சட்டெனக்
குழப்பத்தில் அவள் முகம் மாறியது. “இல்லை, தேவரீர்
மூத்தவர்னு அவர்…..” என்று இழுத்தாள்.

“நான் ஐந்தாவது என்று சொன்னேனே தவிர, எனக்கு
முன்னதெல்லாம் தக்கித்து என்று சொல்லவில்லையே!
அப்புறம், திலோமம் பண்ணி, தவங்கிடந்து, விரதமிருந்து,
ராமேசுவரம் போய் அடியேன் ராமாமிருதம்,
ஏன் பிறந்தேன்னு இருக்கு.”

“அப்படிச் சொல்லக்கூடாது.”

அவள் குரல் நடுங்கிற்று.

“தமாஷுக்குக் கூடச் சொல்லக் கூடாது!’ என்று மீண்டும்
அடித்துச் சொன்னாள்.

நான் தமாஷுக்குச் சொல்லவில்லை என்று
அவள் எப்படி அறிவாள்?

“நான் சொல்ல வந்தது அது அல்ல. வேறு.
‘நட்டதெல்லாம் பயிரா? பெத்ததெல்லாம் பிள்ளையா?’ ன்னு
அம்மா சொல்வாள். அதையேதான் உன்னிடம் சொல்ல வந்தேன்.”

அவள் புரிந்துகொண்டு விட்டாள். உடனேயே அவள்
கன்னங்களில் வழிந்த கண்ணிர் எனக்குச் சற்று
அதிசயமாகத்தானிருந்தது. ஆனால் நான் விடவில்லை.
தொடர்ந்தேன்.

“அந்தக் குழந்தை குறை ப்ரசவமா, நிறை ப்ரசவமா,
இருந்து போச்சா, உடனேயே போச்சா, எதுவும் அறியேன்.
இப்போ நீ அழுவது சுமந்த கனத்துக்கா, வளர்த்த பாசத்துக்கா,

உனக்குத்தான் தெரியும். துக்கங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது
முறையல்ல. அவரவர் துக்கம் அவரவருடையது. ஆனால்
இப்போ உன் மடியில் ஒரு குழந்தையிருக்கிறது.
அது உன் முகத்தைப் பார்த்துச் சிரிக்க, நீ அதன் முகத்துள்
குனிந்து சிரிக்க…..”

இதெல்லாம் நானா?

அப்புறம் இரண்டு மாதங்களுக்கொரு முறை அங்கு
போவேன். என் வீட்டுக்கு நான் அவர்களை அழைக்கவில்லை.
நான் அழைக்காமல் அவர்கள் எப்படி வருவார்கள்?

கீதாவுக்கு முதல் ஆண்டு நிறைவு வந்தபோது, நான்
சீனுவிடம் பணம் கொடுத்து, குழந்தைக்கு ஏற்றபடி,
காஞ்சிபுரம் பட்டுத் துண்டு வாங்கிக்கொள்ளச் சொன்னேன்.

திணறிப்போனார்கள். எப்படியும் அந்த நாளிலும் அது
ஒரு கணிசமான ஐட்டம் அல்லவா?

அது சரி, ஐயாவுக்கு எங்கிருந்து இந்தத் தாராளம்?
குழந்தைமேல் பாசம் பொங்கிற்றோ?
இல்லை, கொல்லையில் காசு மரமா?

திருவல்லிக்கேணியில் அதுவும் வாடகை வீட்டில்
கொல்லைப்புறமா? இடமும் ஏவலும் நன்றாப் பார்த்துக்
கேட்டேளே? அந்தக் குழந்தையை நான் தொட்டதுகூட இல்லை.

அப்போ? கர்ண பரம்பரையாக்கும்!

கர்ணனைப் பற்றி பேச்சு எடுத்ததால் சொல்கிறேன்;
கொடுப்பது என்பது கருணையால் மட்டும் அன்று.
குழந்தையை மூட்டை கட்டி ஆற்றில் விட்ட தொட்டியிலிருந்து,

கடைசியில் உயிர் விட்ட தேர்த் தட்டுவரை, கர்ணன்
வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவன்.

தாயாரிலிருந்து, மனைவியிலிருந்து,
தெய்வத்தால் வரை. அம்சங்களுக்குக்
குறைவு இல்லை. சாபங்களுக்கும் குறைவில்லை.
தாய் மூலம் தன் உண்மை தெரிந்தும், கடைசிவரை
வெளிப்படுத்த முடியவில்லையே! உண்மையும் துரோகம்.
துரோகம் தவிர-அப்பா, வேண்டாம்.

ஏன் கொடுத்தான் ?

வாழ்க்கைமேல் வெறுப்பு, தன் மேலேயே வெறுப்பு.
கூடவே ஒரு இறுமாப்பு. விதியே, உன் கை வரிசை
இவ்வளவுதானா? இதற்கு மேலும் உன்னால் முடியுமா?

கொடுப்பதில் ஒரு பழிவாங்கல் இருக்கிறது. யாரை?
என் விதியை, நான் வந்த வழியை எடுத்துக்கொள்,
எடுத்துக்கொள், எல்லாவற்றையும் எடுத்துக்கொள்.
நான் கொடுக்கக் கொடுக்க, எனக்கு விஷய விரக்தி கூடக்கூட,
உனக்கு அபஜெயம்.

அந்த மனநிலையில் இருந்தேன் என்று வைத்துக்
கொள்ளுங்கோளேன். இத்தனை கசப்புக்குக் காரணம்?
எதற்கு சொல்வதில் பயனில்லை. அதனால் நிலைமை
மாறப்போவதில்லை.

அதனாலேயே சொல்லத் தேவையுமில்லை

1951 வாக்கில் எங்கள் வங்கி பெரிய வங்கியோடு
இணைந்த போது, Retrenchmnet கோடரி ஸ்ரீனிவாஸன் மேல்
விழுந்தது. பிறகு அவன் பிஸினஸ்ஸில் புகுந்து விட்டான்.
ஒரு அச்சுக்கூடம் சின்னதாக ஆரம்பித்தான். உத்தியோகம்
அவனை விட்ட வேளை, அவனுடைய நல்ல காலத்தின்
துவக்கமாக அமைந்துவிட்டது.

சீக்கிரமே வீடு கட்டி, குரோம்பேட்டைக்குப் போய் விட்டான்.
எங்கள் சந்திப்புக்கு வாய்ப்புக்களும் குறைந்து போயின.
எப்போதேனும் ரயிலில் சந்தித்தால் உண்டு. எங்கள்
தண்டவாளங்கள் மாறிவிட்டன. எங்களுக்கு ஒருத்தருக்கொருத்தர்
நேரமில்லை.

கண்ணில் படவில்லை, மனதிலும் படவில்லை.

நான் உத்தியோகத்தில் உழன்று மாற்றம் ஆகி, அங்கு உழன்று,
முறையாக ஓய்வு பெற்றுச் சென்னைக்குத் திரும்பி ஆச்சு,
ஒன்பது வருடங்கள்.

நான்கு வருடங்களுக்கு முன் ஒரு கல்யாணப் பத்திரிகை
வந்தது, ஒரு பத்திரிகை ஆபீஸிலிருந்து திருப்பப்பட்டு.
வதுக்களின் பெயர்கள், அழைப்பவர் பெயர் எல்லாமே புதுசு.

ஆனால் ஊன்றிப் படித்தபோது-

“என் சகோதரியும் லேட் எஸ். ஆர். ஸ்ரீனிவாஸனின்
இரண்டாவது புத்திரியுமான செளபாக்கியவதி வேதாவை,”

…..எஸ். ஆர். ஸ்ரீனிவாஸன் லேட்..?
என்னைவிடப் பத்து வயது இளையவன்.
என்ன அக்ரமம்! ஆனால் அவன் தானா?

கல்யாணம் மைலாப்பூரில். நான் அடைந்த நேரம்,
மத்தியானச் சாப்பாடு முடிந்து, வரவேற்புக்கு முன்,
சந்தடி சற்று ஒய்ந்த நேரம்.

நறுவலாக ஒரு ஸ்திரீ, முப்பது வயதிருக்கலாம்.
எதிர்ப்பட்டாள்.

“கல்யாணப் பெண்ணின் தாயாரைப் பார்க்க முடியுமா?”

“என்னோடு வாங்கோ.”

சாமான் அறைக்கெதிரில் முன்றானையை விரித்துப்
படுத்திருந்த-

“அம்மா, உன்னைப் பார்க்க யாரோ மாமா வந்திருக்கார்.”

-உருவம் எழுந்தது. பாவம், அசதி.

“யாரது? ஓ!”

முகம் அரவிந்தமாகும் அந்த அற்ப நேரத்துள் நிகழும்
கற்ப காலத்துக்கு என்னிடம் வார்த்தை இல்லை.

அப்படியேதான் இருக்கிறாள். “என்னடி கீதா?
லா. ச. ரா. வைத் தெரியவில்லியா?”

அந்த சந்தோஷ நேரத்தில் ஸ்ரீனிவாசனைப் பற்றிய நினைவு
தவிர்க்க முடியாது.

ஆனால் கல்யாண வீடு. கண்ணிர் சிந்தக்கூடாது.
கண்ணிர் பளபளக்கும் விழிகளில் சிரிப்புடன் கீதா!

“மாமா! நீங்கள் என் ஆண்டு நிறைவுக்குக் கொடுத்தேளே,
பட்டுப் பாவாடை- பத்திரமா என் பெட்டி அடியில் இருக்கு.”

பூமி கிடு கிடு.

சிந்தா நதியில் மிதந்து வந்த ஒரு விளக்கு.

.
———————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to “இந்திரா” – லா.ச.ராமாமிருதம் ….

 1. M.Subramanian சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்
  இந்தக் கதையை படிக்கும்போது, நமது நண்பர்
  ஒருவர் நம்மிடம் நேரே தனது அனுபவத்தைப்பற்றி
  பேசுவது போலவே ரியலிஸ்டிக்காக இருக்கிறது.
  இப்போதெல்லாம் சிறுகதைகளை பிரசுரம்
  பண்ணுவது அநேகமாக நின்று விட்டது.
  வார இதழ்களை எல்லாம் சினிமா, அரசியல்
  துணுக்குகளும், அதிர்ச்சிக் கட்டுரைகளும்
  ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன.
  நல்ல நல்ல சிறுகதைகளாக நீங்கள் அவ்வப்போது
  இங்கே போடுவது நல்ல முயற்சி.
  தயவு செய்து இந்த வழக்கத்தை தொடருங்கள்
  என்று கேட்டுக்கொள்கிறேன். என்னைப்போல்
  நிறைய பேர் feel பண்ணுவார்கள் என்றே
  நினைக்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சுப்ரமணியன்,

   நல்ல சிறுகதைகளை தேர்ந்தெடுத்து,
   தொடர்ச்சியாக இந்த தளத்தில்
   போடுவதற்கு வழி யோசித்துக்
   கொண்டிருக்கிறேன். விரைவில்
   செய்யலாம் என்று நம்புகிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s