நெதர்லாந்தில் உள்ள ராஜேந்திர சோழன் கால செப்பேடுகள்…!!!

….

….


….

செப்பேடுகள்….
1000 ஆண்டுகளுக்கு முன், சுமார் 8-க்கு 2 அங்குல அளவில்,
செவ்வக வடிவில் ஒரே அளவில் அழகாக செதுக்கப்பட்ட
செப்பேடுகள். அழகிய அந்தக்காலத் தமிழில் எழுத்துக்கள்
வடிக்கப்பட்டு, இடது பக்கத்தில் துளையிடப்பட்டு, ஒரு
வளையத்துக்குள் வரிசையாக கோக்கப்பட்டு, வளையம் மூடி,
முத்திரை (seal ) வைக்கப்பட்டு எதிர்காலத்திற்காக
பாதுகாக்கப்பட்டிருக்கின்றன….

இதை வடித்த எழுத்தச்சர், வடிக்கச் சொல்லி உத்திரவு
போட்ட மன்னர் – எப்படி இருந்தார்கள்; என்ன மாதிரி
உடையணிகள் அணிந்திருந்தார்கள்; எந்த வகைத் தமிழில்
உரையாடினார்கள்; இவற்றை எல்லாம் நினைத்துப் பார்க்கவே
பரவசமாக இருக்கிறது.

இவற்றை எல்லாம் கையிலெடுத்து, தொட்டுத் தடவிப்பார்க்கும்
பாக்கியம் நமக்கு கிடைக்குமா…? தமிழகத்திலிருந்து எத்தனையோ
ஆயிரம் மைல்கள் தொலைவில் இருக்கும் நெதர்லாந்தில்
பத்திரமாக இருக்கின்றன 1000 ஆண்டு பழமை வாய்ந்த நமது
செப்பேடுகள்….

அண்மையில் புகைப்படங்களுடன் கூடிய ஒரு அற்புதமான
செய்தியை பார்த்தேன்….1000 ஆண்டுகளுக்கு முன்னர்,
தமிழகத்தில், சோழமன்னர்களால் வடிக்கப்பெற்ற
செப்பேடுகள்….

மிக அழகாக, மிக நேர்த்தியாக செவ்வக வடிவில்
சுலபமாக கையாளும் விதத்தில் அமைக்கப்பட்டு, பத்திரமாக
வளையத்தில் கோக்கப்பட்டிருக்கிறது….

அதன் நேர்த்தியும், தொன்மையும் பிரமிக்க வைக்கிறது….
…..


….


….

………

டச்சு கிழக்கிந்தியக் கம்பனி மூலம் இந்தியாவுக்கு வந்த
நெதர்லாந்து நாட்டினர் சோழ மண்டலக் கடற்கரையில்
பழவேற்காடு, சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட சில இடங்களில்
சுமார் 200 ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தினர்.

அந்த சமயத்தில் இந்தியாவிலிருந்து சில பழங்காலச்
செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டிற்கு கொண்டு
செல்லப்பட்டிருக்கின்றன.

அதில் – ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆட்சி செய்த
ராஜேந்திரச் சோழனின் தானங்களைப் பற்றிக் குறிப்பிடும்
செப்புச் சாஸனங்கள் நெதர்லாந்தில் உள்ள லெய்டன்
பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் குடியேற்ற நாடுகளில்
இருந்து சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் குறித்து
முடிவெடுப்பதற்காக ஆலோசனைக் குழு ஒன்று கடந்த
ஆண்டு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது பரிந்துரைகளை
சில நாட்களுக்கு முன்பாக, அந்நாட்டின் கல்வி, கலாசார,
அறிவியல் துறை அமைச்சர் இங்ரிட் வான்
எங்கெல்ஷோவனிடம் அளித்தது.

அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படி, நெதர்லாந்தில் உள்ள
அருங்காட்சியகங்களில் குடியேற்ற நாடுகளின் அரும்பொருட்கள்
இடம்பெற்றிருந்தால், அந்த அரும்பொருட்கள் உரிமையாளரின்
சம்மதம் இல்லாமலோ, வலுக்கட்டாயமாகவோ,
சட்டவிரோதமாகவோ கொண்டுவரப்பட்டிருக்கும் பட்சத்தில்,
சம்பந்தப்பட்ட நாடு அதைக் கோரினால் அதனைத் திருப்பி
அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரும்பொருட்கள் அந்தந்த
நாடுகளுக்கு இதுபோல திருப்பியளிக்கப்படலாம் எனக்
கருதப்படுகிறது.

நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக
அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருக்கும்
சிலசோழர் கால செப்பேடுகள் – ஆனைமங்கலச் செப்பேடுகள்
எனவும் Leiden Copper plates எனவும் அழைக்கப்படும் இந்தச்
செப்பேடுகள், சோழ வரலாறு குறித்த முக்கியமான
ஆவணமாகக் கருதப்படுகின்றன.

இந்தச் செப்பேடுகள் இரண்டு காலகட்டத்தில்
எழுதப்பட்டிருக்கின்றன. 21 ஏடுகளைக் கொண்ட முதல் தொகுதி
ராஜேந்திரச் சோழனால் வழங்கப்பட்டது.

3 ஏடுகளைக் கொண்ட இரண்டாவது தொகுதி ராஜேந்திர
சோழனின் பேரனான குலோத்துங்கச் சோழனால்
(1070-1120)வழங்கப்பட்டது.

ராஜேந்திரச் சோழன் வழங்கிய 21 செப்பேடுகளும் ஒரு
மிகப் பெரிய வளையத்தினால் ஒன்றாக
இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வளையம் ராஜேந்திர
சோழனின் முத்திரையால் இணைக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல, குலோத்துங்கனால் வழங்கப்பட்ட சிறிய
செப்பேட்டுத் தொகுதியும் ஒரு வளையத்தால்
இணைக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் உள்ள இந்தச் செப்பேடுகளில் என்ன இருக்கிறது
என்பது ஏற்கனவே படிக்கப்பட்டு, பதிப்பிக்கப்பட்டுவிட்டது.

ராஜேந்திர சோழன் வழங்கிய செப்பேடுகளில் ஐந்து
செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும் 16 செப்பேடுகள் தமிழிலும்
எழுதப்பட்டிருக்கின்றன. சமஸ்கிருதத்தில் உள்ள பகுதி,
சோழ மன்னர்களின் பரம்பரையைச் சொல்கிறது. தமிழில் உள்ள
பகுதி ராஜேந்திரச் சோழனின் தந்தையான ராஜராஜ சோழனின்
சில சாதனைகளைச் சொல்கிறது.

பிறகு, ராஜராஜ சோழனின் 21-வது ஆட்சிக் காலத்தில்
ஸ்ரீ விஜயநாட்டு மன்னனான மாற விஜயதுங்க வர்மன்,
தன் தந்தையின் பெயரால் நாகப்பட்டினத்தில் கட்டிய சூடாமணி
பன்ம விகாரம் ஆனைமங்கலத்தைச் சுற்றியுள்ள
26 கிராமங்களைத் தானமாகக் கொடுத்திருந்தான். அந்த
தானத்தை இந்தச் செப்பேடுகள் மூலம் ராஜேந்திரச் சோழன்
தாமிரசாசனம் செய்தான்.

முதலாம் குலோத்துங்கச் சோழன் வழங்கிய செப்பேடு,
அந்த பௌத்த விகாரைக்கு அளிக்கப்பட்ட தானத்தை அவன்
காலத்தில் உறுதிசெய்யவும் மேலும் விரிவாக்கிய தானத்தை
அளிக்கவும் எழுதப்பட்டிருக்கின்றன.

19ஆம் நூற்றாண்டின் துவக்கப் பகுதிவரைகூட இந்த
விகாரையின் இடிபாடுகள் நாகப்பட்டினத்தில் இருந்தன.
1867ல் விகாரை முழுவதுமாக இடித்துத்தள்ளப்பட்டதாகத்
தெரிகிறது.

முதலில், இந்த இரண்டு செப்பேட்டுத் தொகுதிகளும்
ஃப்ளோரன்சியஸ் கேம்பர் என்பவரால் இந்தியாவிலிருந்து
நெதர்லாந்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

இவரது வழிவந்தவர்களின் வசம் இந்த செப்பேட்டுத்
தொகுதிகள் இருந்த நிலையில், அந்தக் குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் ஹமேக்கர் குடும்பத்தினருடன் திருமணம்
செய்துகொள்ள, செப்பேடுகள் ஹமேக்கர் குடும்பத்தினரிடம்
வந்து சேர்ந்தன.

முடிவாக, 1862-ல் பேராசிரியர் எச்.ஏ. ஹமேக்கர் (1789 – 1835)
குடும்பத்தினரால், இந்தச் செப்பேடுகள் லெய்டன்
அருங்காட்சியகத்திற்குவழங்கப்பட்டன.

இந்தியாவில் அரும்பொருட்கள் தொடர்பான Indian treasure
trove சட்டம் 1878ல் இயற்றப்பட்டது. இந்த இரண்டு செப்பேட்டுத்
தொகுதிகளும் அதற்கு முன்பாகவே இந்தியாவைவிட்டு
வெளியேறிவிட்டன. 1970 நவம்பரில் யுனெஸ்கோ இது
தொடர்பாக ஒரு விதிமுறைகளை உருவாக்கியது. ஆனால்,
அவை 1970 நவம்பருக்குப் பிறகு திருடப்பட்டு, சட்டவிரோதமாக
கொண்டுசெல்லப்பட்ட பொருட்களுக்கே பொருந்தும். ஆகவே
இதன் அடிப்படையில் இந்த செப்பேடுகளைக் கோர முடியாது.

ஆனால், தற்போது அந்நாடு வெளிநாட்டவர்களின்
அரும்பொருட்களைத் திரும்பத் தர நெதர்லாந்து அரசு
கொள்கையளவில் முடிவெடுத்திருப்பதால், இந்தச் செப்பேடுகளின்
பண்பாடு, தொன்மை முக்கியத்துவத்தை மனதில்வைத்து,
நல்லெண்ண அடிப்படையில் இதனை நமக்கு திரும்பத்
தருமாறு தமிழக அரசு கோரிக்கை வைக்கலாம்…

அதனை நெதர்லாந்து அரசு ஏற்றுக்கொண்டால் –
ராஜேந்திர சோழனின் செப்புச் சாஸனங்களும் தமிழ்நாட்டுக்கு
திரும்பி வரும் என்று நம்பலாம். நிச்சயம் வருமென்று நம்புவோம்.
(உதவி -பிபிசி செய்தித்தளம் )

.
——————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to நெதர்லாந்தில் உள்ள ராஜேந்திர சோழன் கால செப்பேடுகள்…!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    அரசன் உத்திரவு போட்டு எழுத்தச்சர் எழுதுவதற்கு முன்பு, நான்கு வகையான லேயர் உண்டு. ஓலை மந்திரி, எழுத்தை வடிப்பதற்கு உரிய அதிகாரி (அவர்தான் இதனை எழுத்தில் வடிப்பவரிடம் கொடுத்து, வடித்தபின் சரிபார்த்து பிறகு தனது மேலதிகாரியிடம் அனுப்புவது) என்று பல்வேறு கட்ட அதிகாரிகள் இருந்ததால்தான் சரியான தகவல்களைக் கொண்டுள்ளதாக அவை அமைந்தன.

    சோழர் காலத்தில்தான் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் முறையாகவும் அழகுறவும் செய்யப்பட்டன. செப்பேடுகளை ஓரளவு நாமே வாசிக்கும்படியான தமிழ், க்ரந்தம், சமஸ்கிருத எழுத்துக்களின் கலவை உண்டு.

    இதெல்லாம் தமிழர்களின், தமிழ்ப்பகுதியின் நாகரீக, கலாச்சார, மொழித் தொன்மையைக் காட்டுகிறது.

    நிற்க… இந்தச் செப்பேடுகள் அந்த நாடுகளிலேயே இருந்தால் முறையாகப் பராமரிக்கப்படும் என்பது என் எண்ணம். நம் நாட்டில் இவற்றை ஒழுங்காக பராமரிக்க இயலாது, அரசியல்வாதிகளால் (அவர்களது பினாமி அல்லது உதவியால்) களவு செய்யப்பட்டுவிடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.