ஞானதேசிகன் என்கிற இளையராஜா …

….
….

….

நீங்கள் எப்படி நினைவுகொள்ளப்பட வேண்டுமென
விரும்புகிறீர்கள் ..?

இதற்கு பதிலாக 1999-ல் விகடன் இதழுக்காக
இளையராஜா அவர்கள் அளித்த ஒரு அழகான பேட்டியிலிருந்து
சில பகுதிகள் கீழே –

————————-

கோயில் மாதிரி இருக்கிறது வீடு!

நிசப்தமான சூழல். மெல்லிய கதர் உடுத்திய ஒரு ஆர்மோனியப்
பெட்டி மாதிரி வருகிறார் இளையராஜா. மனசை வாசிக்கிற
கண்கள். தீபம் மாதிரி சிரிப்பு. “வாங்க” என்கிறார் சந்தோஷமாக!

தமிழ்த் திரை இசையில் ராஜா பதித்திருக்கிற அடையாளம்
பிரமிக்கும்படியானது. இவரது தாலாட்டு கேட்டு வளர்ந்த
பிள்ளைகள் இன்று அப்பாக்களாகிவிட்டார்கள். இப்போதும்

இளையராஜாவின் தாலாட்டு கேட்டபடிதான் தொட்டில்கள்
ஆடிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் வரைபடத்தில்
கூட காணக்கிடைக்காத ஒரு மலையோரக் கிராமத்தில்
பிறந்த மனிதன், தானே ஒரு வரலாறாக மாறிய வாழ்க்கை
இவருடையது.

சிறந்த இசையமைப்பாளருக்கான லதாமங்கேஷ்கர் விருதைப்
பெற குடும்பத்துடன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூருக்குக்
கிளம்பிக்கொண்டிருந்த ராஜா, நம்முடன் மனம்விட்டுப் பேசினார்.

பண்ணைப்புரத்து பழைய ஞாபகங்களில் தொடங்கி…
உணர்ச்சிமயமாக நீடித்த உரையாடல் இங்கே…

“என் தந்தை என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு எனக்கு வைத்த
பெயர் ஞானதேசிகன். பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா
என்ற இன்னொரு பெயரைக் கொடுத்துவிட்டார். சென்னை
வந்தபின் தன்ராஜ் மாஸ்டர் என்னை ராஜா என்றுதான்
அழைப்பார். பஞ்சு அருணாச்சலம் அவர்களோ இளையராஜா
என்று மாற்றுப்பெயர் சூட்டினார். கலைஞர் ஐயாவோ
இசைஞானி என்று பட்டம் சூட்டிவிட்டார். இப்படி எல்லோரும்
அவரவர்களுக்குப் பிடித்தபடி என்னை அழைக்க, நான்
என்ன பேறு பெற்றேன் என்ற கேள்வி என்னுள் அடிக்கடி
எழும்” – என்று நினைவுகளில் சிரிக்கிறார் இளையராஜா.

“படிக்காமல் போனது பற்றிய பழைய வருத்தம்
ஏதாவது உண்டா?”

“கல்வி எங்கும் பறந்து கிடைக்கிறது. கற்கும் தாக்கம்
உடையவனால் எதிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியும்.
கல்வி என்றதும் ஞாபகம். எட்டாம் வகுப்பு பரீட்சைக்கு கட்ட
வீட்டில் பணம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல்
அம்மா கவலைப்பட்டார்கள். என் அக்காவோ, தன்
கழுத்திலிருந்த தாலியை அத்தானுக்குத் தெரியாமல் விற்று,
அந்தப் பணத்தைக் கட்டி என்னைப் பரீட்சை எழுத
அனுப்பினார்கள். இந்த உணர்வை என் அக்காவுக்கு
எந்தப் பள்ளி அல்லது எந்தக் கல்வி தந்திருக்க முடியும்?
எந்தக் கல்வியால் என் நெஞ்சை இப்படிப் பிசைய முடியும்?
இந்த அன்புக்குக் கடன்பட்ட நான் என்ன செய்து இதைத்
திருப்பிக் கட்ட முடியும்?”

“இவ்வளவு அழகான வீட்டை இதுவரை பார்த்ததில்லை.
எங்கு பார்த்தாலும் சிற்பங்களும் மலர்களுமாக ஒரு கோயில்
போலிருக்கிறது உங்கள் வீடு. இது யாருடைய ரசனை?”

“என் மனைவி ஜீவாவுக்குத்தான் அந்தப் பெருமை.
இந்த இடத்தை வாங்கி வீடு கட்டிக்கொண்டிருந்த நேரத்தில்
நான் பார்க்கவேயில்லை. முக்கால்வாசி வேலைகள்
முடிந்த பிறகுதான் நான் பார்த்தேன். `ஐயோ… இவ்வளவு
பெரிய வீடா… எனக்கு வேண்டாம்’ என்று சொல்லி புலம்ப
ஆரம்பித்துவிட்டேன்.

சிறிய வயதில் இதற்கெல்லாம் ஆசைப்பட்டிருந்தது
உண்மைதான். `தூணில் அழகியதாய்… நன்மாடங்கள் துய்ய
நிறத்தினதாய்…’ என்று பாரதி போல ரசனையும்
கலையுணர்வும் எனக்கு இருந்தது. `நீங்கள் விரும்பாமலே
இதுபோல அமைந்திருக்கிறதென்றால், அதுவே கடவுள்
உங்களை இந்த இடத்தில இரு என்று சொல்கிறார் என்றுகூட
அர்த்தமாகும் இல்லையா’ என்றாள் என் மனைவி.

இந்த வீடு கோயில் போல இருக்கிறது என்றாலோ, உள்ளே
நுழைந்ததும் மன அமைதி கிடைக்கிறது என்றாலோ அதற்குக்
காரணம் என் மனைவிதான். அவள் இல்லாவிட்டால்
இந்த வீடும் இந்தத் தோற்றம் அளித்திருக்காது. நானும்
இப்படி இருந்திருக்க மாட்டேன்.

என் மனைவி அது வேண்டும்.. இது வேண்டும்,
குழந்தைகளுக்கு அதைச் செய்யவேண்டும்… இதைச்
செய்யவேண்டும் என நச்சரித்திருந்தால் எனக்கு எந்த
இசையும் வந்திருக்காது. அவளுக்கு என் அம்மாவின்
சமாதிக்குச் சென்று பூஜை செய்வது, அன்னதானம் செய்வது,
நவராத்திரியை வருடாவருடம் கொண்டாடுவது போன்ற
விஷயங்களில்தான் ஆர்வம். என்னைத் தெய்வமாக
வணங்குவாள். அதற்கு நான் அருகதை உடையவனா
என்பது வேறு விஷயம். அவளின் தெய்வ பக்தியும்
ஈடுபாடும் வேறு யாருக்கும் வராது.”

திரை இசையைக் கடந்து ஏதாவது செய்யவேண்டும்’
என்ற தீவிர யோசனை வருவதுண்டா?”

“இசையில் ஆர்வமும் என்மேல் நம்பிக்கையும் உள்ள
இளைஞர்களுக்கும் உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கும்
சொல்கிறேன்.

இசைக்கென மட்டும் இசைந்து மன உறுதியும்
வைராக்கியமும் கொண்ட புதியதொரு அமைப்பை
உருவாக்குங்கள். அதில் வியாபாரத்துக்காக மட்டுமல்லாது
இசையில் என்னென்னவெல்லாம் செய்ய முடிகிறதோ அதை
எட்டுத்திக்கும் எடுத்துச்செல்லுங்கள். அப்போது என்னிடமிருந்து
என்ன இசை வெளிவருகிறது என்று பாருங்கள்.

ஒருசிறு துரும்பு முதல் ஈரேழு புவனங்களையும்
ஆட்டிப்படைக்கும் `சக்தி’ விரும்பினால் இவையெல்லாம்
நடக்கும். ஏன் நீங்களே ஒரு அமைப்பை உருவாக்கி
இதையெல்லாம் செய்யலாமே என்று நீங்கள் கேட்கலாம்.
அந்த புத்தியை ஆண்டவன் எனக்குக் கொடுக்கவில்லை.

நல்லவேளை… கொடுத்திருந்தால் சென்னை நகரம் முழுக்க
நான் கட்டிய கல்யாண மண்டபங்களும் அதற்குத் தேதி
கிடைக்காமல் அலைபவர்களும் ஒரு நாலைந்து ரெக்கார்டிங்
தியேட்டர்களும் – அதைப் பார்த்து வயிறெரிபவர்களும்
அதிகமாயிருப்பார்கள்.”

“நவீன இசை பற்றிய உங்கள் கருத்து என்ன..?”

“என் கவலையெல்லாம் சப்தங்கள் மீதுதான். நேற்று
ரீ-ரிக்கார்டிங் பண்ணிக்கொண்டிருக்கும்போது திடீரென
ஒன்று எழுந்தது. பத்துப் பதினைந்து விநாடிகள்தான்
கேட்டிருப்பேன். எனக்குத் தலைசுற்றல் வந்து நான்
தடுமாறிப் போனேன். என் பக்கத்தில் நின்றிருந்த உ
தவியாளரைப் பார்த்தால், ` இந்த சவுண்ட் ரொம்ப டிஸ்டர்ப்
பண்ணுது சார்…’ என்றார்.

சிந்தித்துப் பார்த்தால்… அதே மாதிரியான சப்தங்களைத்தான்
இன்றைய இளைஞர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஒலிகள் அவர்களுக்குள் என்ன மாதிரியான பாதிப்புகளை
உண்டாக்கும் என்று நினைத்தால் கவலை வருகிறது.

நமது மண்ணின் இசை எல்லாமே இயற்கை வாத்தியங்கள்
தந்தவை. இப்போது விஞ்ஞானத்தின் எல்லைகள்
விரிந்துகொண்டே போக கம்ப்யூட்டரே இசையமைக்கிறதாம்.

வார்த்தைகளை அள்ளிப்போட்டால் அதுவே பொறுக்கியெடுத்துப்
புதுக்கவிதை எழுதுகிறதாம்.

`நானோ கீரைத்துண்டு
நீயோ மாமிசத்துண்டு

பிறகு எப்படி வரும்
நமக்கு காதல்?”

என்று மனிதனைப் பற்றி கம்ப்யூட்டர் ஒரு கவிதை எழுதியதாக
நண்பர் சொன்னார். நான் சிரித்துக்கொண்டேன்.”

“உங்கள் அம்மாவைப் பற்றி எப்போதும் பேசி வந்திருக்கிறீர்கள்.
ஆனால், உங்கள் அப்பா பற்றி நாங்கள் அறிந்ததில்லை…”

“என் அப்பா பெயர் ராமசாமி. சின்ன வயதிலேயே அவரை
இழந்ததால் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை. `கருவறையில்
நிற்கிற சாமி’ மாதிரி அவரைப் பார்த்தால் கொஞ்சம் பயம்
கலந்த மரியாதையோடு விலகி நின்ற நினைவுதான்
இருக்கிறது.”

“உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் `கருவறையில்
நிற்கிற சாமிதானா…?”

“இல்லை. என் மனைவிக்கு கணவன். குழந்தைகளுக்குத்
தகப்பன். அவர்கள் மீது அன்பும் அக்கறையும் உள்ள ஒரு
குடும்பஸ்தன்.”

“கார்த்திக், பவதாரிணி, யுவன்ஷங்கர் என்று உங்கள்
மூன்று பிள்ளைகளும் இசைத்துறையில் கவனிக்கும்படியாக

வளர்ந்துவருகிறார்கள். ஒரு முன்னோடி என்ற முறையில்
அவர்களை எப்படிக் கணிக்கிறீர்கள்..?”

“கார்த்திக் மிகவும் புத்திசாலி. இசையில் அவனுடைய
அணுகுமுறை வித்தியாசமானது. மற்றவர்களுக்கு வெகுநேரம்
பிடிக்கிற வேலையை அவன் சில மணி நேரங்களில்
செய்துவிடுவான். பவதா – நல்ல குரலை வைத்துக்கொண்டு
பயிற்சி செய்யாமல் இருக்கிறாள். மிகவும் Spritual Purity
உண்டு. யுவன் – எதுவும் கற்றுக்கொள்ளாமலேயே எல்லாமும்
அவனுக்கு வரும். அப்படி ஒரு அமைப்புள்ளவன்.

மூன்று பேருமே வாய்ப்புகள் இருந்தும் கல்லூரிக்குப் போய்
படிக்காமல் வேறு துறைகளில் ஈடுபடாமல் இசையிலேயே
கவனம் செலுத்துகிறார்கள்.

ஒரு தகப்பனாக நான் அவர்களுக்குத் தந்தது இந்த சுதந்திரம்.
தங்கள் அடையாளங்களைத் தேடி பாதைகளைக் கண்டெடுக்க
வேண்டியது அவர்களே!”

“உங்கள் பாதிப்பில் உருவானவர்கள் நிறையபேர். `ராஜா
மட்டும் குருதட்சணைன்னு கேட்க ஆரம்பிச்சா… இன்னிக்கு
மியூஸிக் பண்ற பாதிப்பேருக்குக் கட்டைவிரல்
பறிபோயிடும்’னு ஒரு ஜோக் உண்டு. நீங்க சொல்லுங்க…
உங்கள் சிஷ்யன் யார்?”

“முதலாவதாக எனக்கு `குரு’ என்ற எண்ணமே வந்ததில்லை.
இசை என்பது சிவ சொத்து. ஆள் ஆளுக்கு அள்ளிக்கிட்டுப்
போறாங்க. இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது.”

“தற்போது தங்களை நடத்திக்கொண்டிருப்பது பழைய
நினைவுகளா… அல்லது நாளைய கனவுகளா…?”

“இரண்டுமே இல்லை. ஒரு மனிதனுக்கு வரும்
பெருமைக்கும் சிறுமைக்கும் அவனா காரணமாக முடியும்?
நான் இப்படித்தான் நினைப்பேன்.
இசையில் ஆர்வம் கொண்டேன். இங்கு வந்தேன். சந்தர்ப்பம்
வந்தது. வேலை செய்தேன். பெயர் வந்தது. இப்படி ஒரு
பெயர் எனக்கு இல்லாது போயிருந்தாலும் சந்தர்ப்பமே
கிடைக்காது போயிருந்தாலும் இசை என்னை விட்டுப்
போயிருக்காது. நானும் இசையை விட்டுப்போயிருக்க
மாட்டேன்.

கங்கைக்கு – இப்போது அது போகும் பாதை கிடைக்காது
போயிருந்தாலும் அது வேறு பாதையைத் தேடிக்
கொண்டிருந்திருக்கும். வேறு பாதையில் அது போயிருக்க
முடியும் என்றாலும் இப்போது ஓடிக்கொண்டிருக்கும்
பாதையில்தான் போகிறது என்பதால் இந்தப் பாதை அதற்கு
விதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.

“பிரார்த்தனையின்போது வேண்டுவது என்ன…?”

“என்னிடம் வேண்டுதல்களே இல்லை. `என்னைத்
தூயபொருளாக்கி உன் திருவடியில் ஏற்றுக்கொள் அம்மா’
என்பது மட்டுமே ஒரு மந்திரமாக உள்ளே
ஓடிக்கொண்டிருக்கிறது.”

“நீங்கள் எப்படி நினைவு கொள்ளப்பட வேண்டுமென
விரும்புகிறீர்கள்?”

“அது உங்கள் பாடு. வந்த சுவடு தெரியாமல்
சென்றுவிடவே விருப்பம் எனக்கு!”

( நன்றி – விகடன் ஸ்பெஷல்…)

.
—————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.