ஜைன முனிவரைப்பார்த்து உமக்கு”காமச்சுவை” தெரியுமா என்றால் என்ன செய்வார்…?

….
….


….

ஜைன முனிவரைப்பார்த்து உமக்கு
“காமச்சுவை” தெரியுமா என்றால் என்ன செய்வார்…?

காமச்சுவை பொங்கித் ததும்பும் “சீவக சிந்தாமணி” என்னும்
தமிழ்க் காப்பியத்தைப் படைப்பார்…!!!

என்ன பேத்தலாக இருக்கிறதே என்கிறீர்களா…?

நாம் அரைகுறையாக தெரிந்து கொண்டிருக்கும் பல
விஷயங்களை தோண்டிப்பார்த்தால், இப்படித்தான் சற்றும்
எதிர்பார்க்காத சமாச்சாரங்கள் வெளிவருகின்றன…!!!

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியை
இயற்றியவர் திருத்தக்க தேவர் என்னும் சமண முனிவர்.
சோழர் குலத்தில் தோன்றியவர்…இளமையிலேயே
துறவு நெறியை மேற்கொண்ட இவர் ஒரு சிறந்த
தமிழ்ப் பற்றாளர்….அதே சமயத்தில் வடமொழியிலும்
பெரும் புலமை பெற்றவர்.

இவர் மதுரையில் வாழ்ந்தவர். அங்குள்ள சங்கப்புலவர்களுடன்
வாழ்ந்து தமிழ்ச்சுவையை பருகியவர். இவர் தமிழில் சமணத்தின்
பெருமையைச் சொல்லும் ஒரு காப்பியத்தை இயற்ற
விரும்பினார்..

அப்போது தமிழ்ப் புலவர் ஒருவர் அவரைப்பார்த்து
‘சமணர்களுக்குத் துறவைப்பற்றி அல்லால் வேறு என்ன தெரியும்…?
காமச் சுவைபட ஒரு இலக்கியம் படைக்க உம்மால் முடியுமா…? ”

– என்று கேட்டு பழித்திருக்கிறார். இதனைக் கேட்ட திருத்தக்க
தேவர் ‘சமணர்கள் காமத்தை வெறுத்தனரே யன்றிப் பாடத்
தெரியாதவர்கள் அல்லர்’ என்றார். “அப்படி என்றால்
காமச் சுவைபட ஒரு நூல் இயற்றுங்கள் பார்க்கலாம் ”
என்றிருக்கிறார் அந்த ஏடாகூடமான புலவர்.

இதனைத் திருத்தக்க தேவர் தன் ஆசிரியரிடம் கூற, அவர்
தம் மாணாக்கரின் புலமைத் திறத்தை உணர்த்த, எதிரே ஓடிய
நரி ஒன்றைக் காட்டி ‘இது பற்றிப் பாடுக’ என்றார். உடனே
நரிவிருத்தம் பாடினார் தேவர்.

திருத்தக்க தேவரின் புலமைத் திறத்தை நரிவிருத்தம் பாடியதன்
மூலம் சங்கப் புலவருக்கு வெளிப்படுத்திக் காட்டிய ஆசிரியர்,
மீண்டும் தம் மாணவரை நோக்கி ‘ஜீவகன் வரலாற்றைப்
பெருங்காப்பியமாகப் பாடுக’ எனப் பணித்தார். அதோடு நில்லாமல்,
காவியத்தின் துவக்கமாக ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலைப்
பாடியும் கொடுத்தார்…

சீவக சிந்தாமணியின் காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டாக
இருக்கலாமென்று கருதப்படுகிறது… 10-ஆம் நூற்றாண்டில்
தமிழில் ராமாயணம் இயற்றிய கம்பர் இதுகுறித்து
அறிந்திருப்பதால், இது கம்பருக்கு முந்தைய காலத்தியது
என்று உறுதியாகச் சொல்லலாம்.

——————————————————————————–

என் குறிப்பு –
சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு சமண முனிவர்
இயற்றிய தமிழ்க் காவியம் இது. சமண முனிவருக்கு
காதலையும், காமத்தையும், கூடவே துறவு, சமண மதத்தின்
சிறப்பு ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து தர வேண்டிய கட்டாயம்.
சுமார் 3000 பாடல்கள்… அத்தனையையும் படிக்க ஆசை தான்.
ஆனால், எனக்கு கொடுத்து வைக்கவில்லை; சாம்பிளுக்கு கொஞ்சம்
படித்தேன். சிலவற்றை நண்பர்களும் ரசிக்க – கீழே தந்திருக்கிறேன்.

எழுத வந்தது தான் வந்து விட்டோம் –
சீவக சிந்தாமணியின் சிறப்புகளையெல்லாம்,
இயன்ற வரை எடுத்துக் கூறி –
அதன் இலக்கியச் சுவையையும் நண்பர்கள்
அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்
சில செய்திகளை கீழே விரிவாகத் தந்திருக்கிறேன்.
படித்ததில் எதை விடுவது என்பதில் கொஞ்சம் குழப்பம்.

எனவே, சற்றே நீண்டதாக இருந்தாலும், இந்த காவியத்தின்
சிறப்பை உள்ளதை உள்ளபடி அறிய இது உதவும்…
பல தளங்களிலிருந்தும் தேடியெடுத்த விஷயங்கள் இவை…!!!

8 பெண்களை காதலித்து மணந்த
கதையின் நாயகன் சீவகன் இல்வாழ்க்கைச் சுகத்தை,
– அதாவது காமத்தை -முற்றிலுமாக சுவைத்து மகிழ்ந்தது
கதையில் விவரமாகச் சொல்லப்படுகிறது….

ஆனால், வெறும் காதல், காமம் -ஆகியவற்றோடு
நின்று விடாமல், முற்றிலுமாக அனுபவித்த பின்னர் இவற்றில்
எல்லாம் ஈடுபாடு குறைந்துபோய் –

துறவறம் மேற்கொண்டு, இறைச் சிந்தனையில் ஈடுபட்டதையும்
சமண மத கொள்கைகளோடு விவரமாகச் சொல்கிறது.

அதாவது சிற்றின்பமும், பேரின்பமும் இணைந்து
கலக்கும் ஒரு தமிழ்ப் பேரிலக்கியம்…!!!
——————————————————————–

சீவக சிந்தாமணிக்கு முன்னர் எழுந்த பெரிய நூல்கள் எல்லாம்
வெண்பாவாலும், அகவலாலும் இயற்றப்பட்டன. ஆனால்
முதன் முறையாக ‘விருத்தப்பா’ என்ற ஒரு புதுச்செய்யுள்
வகையில் எழுதப்பட்டது சீவக சிந்தாமணி…
என்று கூறப்படுகிறது.

————————————————
விருத்தம் என்பது நான்கு அடிகள் உடையது.
முதல் அடியில் எத்தனை சீர்கள் வருமோ அத்தனை சீர்களே
பிற மூன்று அடிகளிலும் வரும்.
முதல் அடியில் அமைந்த சீர்களின் அமைப்பே
அடுத்த அடிகளிலும் அதே முறையில் வரும்.

அதனால் முதலடியின் ஓசையே பிற மூன்று அடிகளிலும்
திரும்பத் திரும்ப ஒலிக்கும். ஓர் அடிக்கு இத்தனை சீர்கள்
வரவேண்டும், இன்ன அளவான சீர்கள் வர வேண்டும் என்ற
வரையறை இல்லாமையால்,விருத்தம் பலவகையாக
விரிவு அடைந்தது.

ஒரு விருத்தத்தின் அடிகள் நீண்டு வரலாம்; மற்றொரு
விருத்தத்தின் அடிகள் குறுகி வரலாம். சிறு சிறு சீர்கள்
கொண்ட ஒரு விருத்தம் பரபரப்பாகவோ, துடிதுடிப்பாகவோ
ஒலிக்கலாம். நீண்ட சீர்கள் கொண்ட மற்றொரு விருத்தம்
ஆழமுடையதாகவோ, அமைதியுடையதாகவோ,
உணர்ச்சி நீண்டதாகவோ ஒலிக்கலாம். ஆகவே, விருத்தம்
என்ற பெயர் கொண்ட இது, ஒரு செய்யுள் வகையாக
இருந்தாலும் நூற்றுக்கணக்கான ஓசை வேறுபாடுகளைப்
படைத்துக்காட்ட இடம் தந்தது.

தமிழ்க் கவிதையில் ஏற்பட்ட இந்தப் புரட்சியால் உணர்ச்சிக்கு
ஏற்றவாறு கவிதையின் நடையை மாற்றியமைக்கும் வடிவச்
சிறப்பு மேலும் வளர்ந்து பெருகத் தொடங்கியது. பிற்காலத்தில்
கம்பர் இதில் பெரும் வெற்றி பெற்றார். சேக்கிழார், கச்சியப்பர்

ஆகியோரும் இந்த யாப்பைப் பயன்படுத்தி வெற்றி
பெற்றுள்ளனர் என்று இலக்கிய விமரிசகர்கள் கூறுகின்றனர்.

————————————————————-

நாடு நகரம் முதலியவற்றை வருணிக்கும் முறையிலும்,
ஐந்திணையாகப் பகுக்கப்படும் நிலங்களின் இயற்கை
அழகுகளை விளக்கும் முறையிலும்,
இசை முதலிய கலைகளை விளக்கும் முறையிலும்,
சீவக சிந்தாமணி, காப்பிய அமைப்பின் முன்னோடியாகச்
சிறப்புற்றுத் திகழ்கிறது.
காதல்/காமச் சுவை மிகுந்திருந்தாலும், எண்வகைச் சுவையும்
இக்காப்பியத்தில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன.

பெயர்க் காரணம் –

சீவகனின் தாயார் முதன் முதலில் தன் மகன்
சீவகனுக்கு இட்ட பெயர் சிந்தாமணி. ‘சீவ’ என்பது பின்னர்
‘அசரீரி’யாக ஒலித்ததால் சீவகசிந்தாமணி என்று பெயர்
பெற்றது என்பர்.

—————————————————
நூலின் அமைப்பு

இந்நூல் 13 இலம்பகங்களையும்
(இலம்பகம் என்றால் காண்டம் என்பது போன்ற பகுப்பு),
மொத்தம் 3145 செய்யுட்களையும் உடையது.

—————————————————–

சீவகன், எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொண்ட
நிகழ்ச்சிகள் காப்பியத்தின் பெரும் பகுதியாக அமைந்துள்ளன.
சீவகனின் நண்பன் பதுமுகன் திருமணம் செய்து கொண்ட
நிகழ்ச்சியும் இடம் பெற்றுள்ளது.

சீவக சிந்தாமணியின் கதைச் சுருக்கம் –

ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன்.
இவன், மனைவி விசையை மீது அளவு கடந்த
காதல் கொண்டு, அரசாட்சியைக் கட்டியங்காரன் என்ற
அமைச்சனிடம் ஒப்படைத்துவிட்டு, அந்தப்புரத்திலேயே
காலம் கழித்தான்.

கட்டியங்காரன் சூழ்ச்சி செய்து, அரசனைப் போரிட்டுக்
கொன்றுவிட முயலும் பொழுது, சச்சந்தன், கருவுற்றிருந்த
தன் மனைவி விசையையை ஒரு மயில் பொறியில் ஏற்றி
அனுப்பிவிட்டான்;

பின்னர் போரில் மடிந்தான்.

விசையை இடுகாட்டில் சீவகனைப் பெற்றெடுத்தாள்.
பின்னர் அவளும் தவம் செய்யச் சென்றுவிட்டாள்.

கந்துக்கடன் என்ற வணிகன், சீவகனை எடுத்து வளர்த்தான்.
சீவகன் அச்சணந்தி என்பவரிடம் கல்வி கற்றான்.
சீவகன், தன் நண்பனுக்குக் கோவிந்தையைத் திருமணம்
செய்து வைத்தான். தானும் தன் பல்வேறு திறப்பாடு
காரணமாக எட்டு பெண்களை மணந்தான்.

கட்டியங்காரனின் சூழ்ச்சியை முறியடித்து,
அவனை வென்று, ஏமாங்கத நாட்டின் ஆட்சியையும்
கைப்பற்றினான். பின்னர்,
இல்வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, ஞானம் பெற்று
துறவு நிலையை அடைந்தான்.
இதுவே, சீவக சிந்தாமணி கூறும் கதை.

மனிதன் மன்னராக இருக்கலாம்; (எத்தனை) மகளிரை
வேண்டுமானாலும் மணக்கலாம்;
அறநெறி தவறாமல் போரிடலாம்;

ஆனால், தன் கடமைகளை ஆற்றிய பின்னர்,
இறுதியில் முற்றும் துறந்து, தவம் புரிதல்
உயிரின் உயர்ந்த கடமை என்ற சமணத் தத்துவத்தை
இக்காப்பியத்தின் கதை வெளிப்படுத்துகிறது.

சமண சமயத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும்
மக்களிடையே எடுத்துரைப்பதற்காக எழுந்த காப்பியம்
சீவக சிந்தாமணி.

உரையாசிரியர் நச்சினார்க்கினியர் சமண சமயத்
தத்துவங்களை நன்கு அறிந்த பின்னரே இந்நூலுக்கு
உரை எழுதினார் என்று கூறுவர். அந்த அளவு
சமணக்கோட்பாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அருகனைத் துதித்து ஆங்காங்கே காப்பியத்தில் பாடல்கள்
வருகின்றன. உலக நிலையாமை, செல்வ நிலையாமை,
யாக்கை நிலையாமை என்பன பற்றியும்
எடுத்துரைக்கப்பட்டுள்ளது. துறவறத்தின் பெருமை
நிலைநாட்டப்பட்டுள்ளது.

பஞ்ச நமஸ்காரம்

பஞ்ச நமஸ்காரம் என்பது சமண சமயத்தின் மூல மந்திரம்.
இதன் பெருமையை உணர்த்தும் நிகழ்ச்சி ஒன்று
குணமாலையார் இலம்பகத்தில் இடம்பெற்றுள்ளது.

தாம் உண்ணுவதற்காக அந்தணர் ஆக்கிய சோற்றை
நாயொன்று கவ்விச் சென்றது. அதனால் கோபங் கொண்ட
அந்தணர், நாயை அடிக்க ஓடினர்.

நாய் அஞ்சி ஓடி, அருகில் இருந்த குளத்தில் பாய்ந்தது.
அவர்கள் அதனை அடித்து, அதன் காலை ஒடித்தனர்.
அதைக் கண்ட அந்த நாயின் சொந்தக்காரன் மிகுந்த துன்பம்
அடைந்தான். அவனது துன்பத்தைக் கண்ட சீவகன்,
பஞ்ச நமஸ்காரத்தை நாயின் செவியில் ஓதினான்.
நாய் செவிமடுத்து அதனைக் கேட்டது.

சிறிது நேரத்தில் அந்த நாய் சுதஞ்சணன் என்னும்
தேவனாகியது. சுதஞ்சணன் தனக்கு நடந்தவைகளை
யெல்லாம் உணர்ந்து கொண்டான். சீவகனின் இச்செயல்,
பின்வரும் பாடலில் விளக்கப்பெறுகிறது.

-உறுதிமுன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில்
மறுகல் நீ பற்றொடு ஆர்வம் விட்டிடு மரண அச்சத்து

இறுகல் நீ இறைவன் சொன்ன ஐம்பத அமிர்தமுண்டால்
பெறுதி நற் கதியை என்று பெருநவை அகற்றினானே.

(பாடல், 946)

‘முன்னே செய்த நன்மை ஒன்றுமில்லை என்று நினைத்து
நீ வருந்த வேண்டாம். பற்றையும் ஆர்வத்தையும் விட்டுவிடு,
இறப்பு என்னும் அச்சத்தைக் கொள்ளாதே; இவ்வாறு வாழ்ந்து,
இறைவன் கூறிய ஐம்பதமாகிய அமிர்தத்தை (பஞ்ச நமஸ்காரம்)
நீ பருகினால் நற்கதியை அடைவாய்’ என்று கூறி நாயின்
பெருந்துன்பத்தை நீக்கினான்.

உலகப்பற்றை நீக்கி, பஞ்சநமஸ்காரத்தை அறிந்தால் நற்கதியை
அடையலாம் என்ற சமணக் கோட்பாடு இதன் வாயிலாக
வெளிப்படுத்தப்படுகிறது.

மும்மணிக் கோட்பாடு :

நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவை
மும்மணிகள் எனச் சமண சமயம் கூறுகிறது. சமணர்களின்
கோட்பாடாகிய மும்மணிக் கோட்பாட்டையும் சீவகன்
கூறுகிறான். சித்திர கூடம் என்னும் இடத்தில் வாழும்
துறவிகளுக்குச் சீவகன், அருகப் பெருமானின் மறை
மொழிகளைப் பின்பற்றுமாறு கூறுகையில் மும்மணிக்
கோட்பாட்டைக் குறிப்பிடுகிறான்.

மெய்வகை தெரிதல் ஞானம்
விளங்கிய பொருள்கள் தம்மைப்
பொய்வகை இன்றித் தேறல்
காட்சிஐம் பொறியும் வாட்டி
உய்வகை உயிரைத் தேயாது
ஒழுகுதல் ஒழுக்க மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே
இருவினை கழியு மென்றான். – (பாடல், 1436)

ஞானமாவது உண்மையை அறிதல்,
காட்சியாவது அவ்வாறு அறிந்த
பொருள்களைப் பற்றித் தெளிதல்,
ஒழுக்கமாவது ஐம்பொறிகளையும்
அவற்றின் போக்கில் செல்லவிடாமல் தடுத்து
உயிர் உய்யும் வகையில் நடத்தலாகும்.
இம்மும்மணியும் நிறைந்தபோதே
இருவினையும் கெடும் என்று
சீவகன் அறிவுரை கூறுகின்றான்.

வினைக் கொள்கையும் பிறவும் – ( விதியைப் பற்றி விரிவாக… )

காப்பியம் முழுக்க வினைக் கொள்கை இடம் பெறுகிறது.
வர வேண்டிய நன்மைகள் வரும்.
போகவேண்டிய நலன்கள் போகும்.

இதனை,

ஆம் பொருள்கள் ஆகும் அது யார்க்கும் அழிக்கொண்ணா
போம்பொருள்கள் போகும்அவை பொறியின் வகைவண்ணம்
– (காந்தருவதத்தையார் இலம்பகம், 356)

மக்களாகப் பிறந்தவர்களுக்கு வாழ்நாளும் இன்பங்களும்
கருவிலே அமைக்கப்பட்டன என்றும் இறப்பதும் பிறப்பதும்
வினைபற்றியே நிகழ்வன என்றும் கருத்துச்
சொல்லப்பட்டிருக்கிறது. மக்கள் யாக்கையின் இழிவு
குறித்தும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நிலையாமை குறித்து நிகழ்ச்சி மூலம் திருத்தக்க தேவர்
விளக்குகிறார். செல்வத்தைச் சேர்த்து வைத்துத் துய்க்காமல்
புதைத்துவைத்த ஒருவன், இறக்கும் நேரத்தில் புதையல்
குறித்துச் சைகையில் காட்ட அதை உணராத உறவினர்கள்,
அவன் விளாம்பழம் கேட்கிறான் என நினைக்கின்றனர்.

அவன் இறந்த பின்பு அவன் நினைவாக
விளாங்கனியைப் படைத்தனர் என்கிறார்.
பிறருக்குக் கொடுக்க மனமில்லாதவர்கள் அடையும்
இழிவை,

மண்ணார் சட்டி கரத்தேந்தி
மரநாய் கௌவுங் காலினராய்
அண்ணாந் தேங்கி இரப்பாரை
அறிந்தோம் அறிந்தோம் அம்மம்ம
பண்ணார் மொழியார் பால்அடிசில்
பரிந்தங் கூட்ட முகம் திருப்பி
உண்ணா நின்ற போதொருவற்(கு)
உதவா மாந்தர் இவர்தாமே

என்றும்,

மாசித்திங்கள் மாசின சின்னத் துணிமுள்ளின்
ஊசி மூசிய வாடை உடையாகப்
பேசிய பாவாய் பிச்சையெனக் கையகல் ஏந்திக்
கூசிக்கூசி நிற்பர் கொடுத்துண் டறியாதார்

-என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்பிறவியில் செய்யும் வினையின் பயன்
அடுத்த பிறவியில் தொடரும் என்ற கருத்தை
முத்தி இலம்பகத்தில் குறிப்பிடுகிறார்.

அல்லித்தண்டு முறிந்து விழுந்தாலும் அதன் நூல்
அறுந்துவிடாமல் இரண்டு துண்டுகளையும்
தொடர்புறுத்தும். அதுபோலப் பிறவி முடிந்தாலும்
வினை, அடுத்த பிறவியுடன் அதனை இணைக்கும்
என்கிறார்.

அல்லித்தாள் அற்ற போதும் அறாத நூல் அதனைப்போல
தொல்லைத்தம் உடம்புநீங்கத் தீவினை தொடந்து நீங்கா

-என்று குறிப்பிடுகிறார்.

பிறப்பை அறுத்து வீடுபேறு நிலை அடைதலைச்
சமணம் வலியுறுத்தியது.

துறவு வெளிவேடமல்ல என்பது சமணக் கருத்து.
உள்ளத் துறவைச் சமணம் வலியுறுத்துகிறது.
வீடுபேற்றை வெளிவேடத் துறவால் அடைய முடியாது
என்பது சிந்தாமணியில் வலியுறுத்தப்படுகிறது.

சடைவளர்த்துக் காட்டில் வாழ்ந்து
குளத்தில் மூழ்கி எழுகிறது கரடி,
எனினும் அதன் பிறப்பொழியவில்லை.
புற ஒழுக்கத்தால் மட்டும் பிறப்பு ஒழியாது.

– நீட்டிய சடையமாகி நீர்மூழ்கி நிலத்தில் சேர்ந்து
வாட்டிய உடம்பின் யாங்கள் வரகதி விளைத்தும் என்னிற்
காட்டிடை கரடி போகிக் கயம் மூழ்கிக் காட்டின் நின்று
வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்றுரை விடுமின்

-என்றான்

இவ்வாறு சமண சமயக் கோட்பாடுகள் காப்பியத்தில்
பல இடங்களில் சீவகன் வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றன.

திருத்தக்க தேவர் சமண சமயப் பற்றின் காரணமாகப்
பிறசமயங்களைத் தாழ்த்தியும் பேசுகிறார்.

பிரமன், சிவபெருமான், திருமால், புத்தர் ஆகியோரை
இகழ்ந்து பாடுகிறார். பிரமன் ஓர் அழகிய பெண்ணை
விடாது காண வேண்டி நான்கு முகங்கள் கொண்டதும்,
அக்காமம் காரணமாக விண்ணகம் இழந்ததும் (சீவக. 207)
இவரால் காட்டப்படுகின்றன.

சிவபெருமான் தனது உடலிலேயே உமையம்மையை
வைத்துக் கொண்டது இகழ்வானது என்கிறார்.

கண்ணன் கோபியர் துகிலைக் கவர்ந்து இகழப்பட்டதும்-

காமத்தால் வருந்திய பெண் கழுதைக்காகத்
தானும் ஓர் ஆண் கழுதையாகப் புத்தர் மாறியதும் –

ஒரு பெண்ணைப் பாண்டவர் ஐவரும் மணந்து கொண்டதும்
இவரால் இகழ்ச்சிகளாகச் சுட்டப்பட்டிருக்கின்றன.

———————————

இந்த இடுகையை எழுத முனைந்ததன் விளைவாக,
ஒரு நல்ல தமிழ்க் காப்பியத்தின் சில பகுதிகளை
ரசித்துப் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது என்பதில்
எனக்கு பெருமகிழ்ச்சி.

“தமிழுக்கு அமுதென்று பேர்….”

.
————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ஜைன முனிவரைப்பார்த்து உமக்கு”காமச்சுவை” தெரியுமா என்றால் என்ன செய்வார்…?

 1. mukhilvannan சொல்கிறார்:

  மிக அருமையான பதிவு. வாழ்த்துகள்.

 2. புதியவன் சொல்கிறார்:

  இடுகையைப் படிக்கும்போது என் மனம் வேறு எங்கோ லயித்துவிட்டது.

  முன்னோர்கள் சொன்னவற்றை எதையுமே தவறாகப் புரிந்துகொள்வதில் (எது சுலபமோ அப்படிப் புரிந்துகொள்வதில்) நம்மவர்கள் சமர்த்தர்கள். பட்டோலையில் எழுதி வைத்தவை கரையானுக்கு இரையாகிவிடக்கூடாது என்பதற்காக போகியின்போது, புது பட்டோலைக்கு மாற்றியபிறகு பழையதை எரித்துவிடலாம் இல்லை ஆற்றில் போட்டு விடலாம் என்று சொன்னால், வீட்டில் இருக்கும் பழைய ஓலைகளை எரித்துவிட்டால் லட்சுமி கடாட்சம் பெருகும் என தவறாகப் புரிந்துகொண்டு நல்ல நல்ல இலக்கியங்களைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டனர் நம்மவர்கள். இல்லாவிடின் நமக்கு நிறைய காப்பியங்கள் கிடைத்திருக்கும்.

 3. N.Rathna Vel சொல்கிறார்:

  ஜைன முனிவரைப்பார்த்து உமக்கு”காமச்சுவை” தெரியுமா என்றால் என்ன செய்வார்…? – அருமையான இலக்கியப்பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

 4. atpu555 சொல்கிறார்:

  பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.