ஒரு பொய்யை, நிஜமாக்க செய்யப்பட்ட கடும் முயற்சிகள்….!!!

….
….

…..

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் –
ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது உயிரை தற்கொலை மூலம்
தானே பறித்துக்கொண்டார். இந்த ‘தற்கொலை’க்குக் காரணம்
அவரது மனப் பிரச்சினை என்றும், அவரது தொழில் துறையில்
இருந்த அதீத அழுத்தம் என்றும் பல வகையில் பேசப்பட்டது.
ஆனால், அடுத்த ஒரு மாதத்திலேயே இந்த கோணங்கள்
அனைத்தும் மாறியது.

சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று
அரசியல்வாதிகளும், மீடியா நிறுவனங்களும் தொடர்ந்து
பேசத்துவங்கினர்… பாஜக பின்னணியிலுள்ள சில
பிரமுகர்கள் தொடர்ந்து இந்தக் கொலையைப் பற்றி பல
சதி-கதைகளை உருவாக்கினர். மஹாராஷ்டிர அரசியல்
முக்கியஸ்தர்களுக்கு -குறிப்பாக சிவசேனா தலைவர்,
அவரது மகன் ஆகியோருக்கு இதில் பங்கிருக்கிறது
என்றெல்லாம் பலத்த குரல்கள் எழுப்பப்பட்டன. இதன்
பிரச்சார மேடையாக அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி
முன் நின்றது.

பீஹார் அரசும், அங்கு ஆளும் கூட்டணியும்
இதில் ஆர்வம் காட்டின.

பீஹார் சட்டமன்ற தேர்தலில் இது ஒரு முக்கிய
பிரச்சினையாக உருவெடுக்கக்கூடிய சூழ்நிலையும் உருவானது.
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட மரணத்தை சந்தேகத்தின்
அடிப்படையில் பீஹார் போலீஸ் வந்து விசாரித்தது.
பிறகு பீஹார் அரசின் வேண்டுகோளின் பேரில், சிபிஐ
இந்த வழக்கை தன் வசம் எடுத்துக்கொண்டது.
நாள்தோறும் புதுப்புது கதைகள் வெளிவந்தன…..

இந்த நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில்
தகவல் தொழில்நுட்ப இணை பேராசிரியராகவும், மைக்ரோசாஃப்ட்
இந்தியா நிறுவனத்தில் ஆய்வாளராகவும் பதவி வகிக்கும்
ஜோயோஜீத் பால் என்பவர் இந்த விஷயம் குறித்து
நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

பாஜகவைச் சேர்ந்த அரசியல்வாதிகளும், ரிபப்ளிக் டிவி
உள்ளிட்ட சில மீடியா நிறுவனங்களுமே தற்கொலையிலிருந்து,
கொலையை நோக்கி இந்த வழக்கு திரும்பியதற்குக் காரணம்
எனத் தெரியவந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜோயோஜீத் ஆய்விலிருந்து –

– 1,03,125 ட்வீட்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன….
இதில், 7,818 அரசியல்வாதிகளின் ட்வீட்களும் அடங்கும்.

– குறிப்பாக 4,172 ட்வீட்கள் பீஹாரைச் சேர்ந்த
274 அரசியல்வாதிகள் மூலம் பதியப்பட்டவை.

17,328 ட்வீட்கள் 980 மகாராஷ்டிர அரசியல்வாதிகள்
மூலம் பதியப்பட்டவை.

45,969 ட்வீட்கள் 239 மீடியா நிறுவனங்கள் மூலமும்,
41,056 ட்வீட்கள் 1930 பத்திரிகையாளர்கள் மூலமும் பதிவு
செய்யப்பட்டவை.

இந்த அனைத்து ட்வீட்களும் ஜூன் 14ஆம் தேதி முதல்
செப்டம்பர் 12 வரையிலான மூன்று மாத காலத்தில்
பதிவானவை.

இந்த மூன்று மாத காலத்தில், சுஷாந்த் சிங் இறந்த
ஜூன் 14ஆம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதம்
வரையிலும், இந்த மரணம் பெரும்பாலும் தற்கொலையாகவே
பேசப்பட்டு வந்தது.

ஆனால், ஜூலை மாதத்திலிருந்து இது கொலையாக
இருக்கக்கூடும் என்ற கோணத்தில் மீடியாக்களில்
பெரும்பான்மையாக பேசப்பட்டு, மகாராஷ்டிர அரசாங்கத்துக்கு
நெருக்கடி அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும்
மேலான பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு
காங்கிரஸுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவில்
அரசமைத்த சிவசேனாவை, சுஷாந்தின் மரணம் மூலம்
பழிவாங்குவதாக அப்போது பேசப்பட்டது.

அதற்கு பாஜகவைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் ட்வீட்
எப்படி உதவியது என்பதை கீழேயுள்ள படம் மூலமாக
அறியலாம்.

பாஜகவைச் சேர்ந்த 3,478 அரசியல்வாதிகளின் ட்வீட்களில்
இடம்பெற்ற ‘தற்கொலை, கொலை, மர்மம்’ என்ற
வார்த்தைகளின் அளவினை மேலே உள்ள படம்
விளக்குகிறது. சுஷாந்த் இறந்தபோது, தற்கொலை என்ற
வார்த்தையைப் பயன்படுத்தி ட்வீட்களை பதிவு செய்த பாஜக

அரசியல்வாதிகள், ஜூலை 12ஆம் தேதி முதல் –
தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டு, ‘கொலை’ என்ற
வார்த்தையை தங்களது ட்வீட்களில் அதிகம் பயன்படுத்தி
யிருப்பதை ஜோயோஜீத் பால் படத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேசமயம் காங்கிரஸைச் சேர்ந்த 3037 அரசியல்வாதிகளும்
இது தற்கொலை என்ற வார்த்தைகளையே தங்களது
ட்வீட்களில் பயன்படுத்தியிருக்கின்றனர்.

இப்படி பாஜகவை சேர்ந்த அரசியல்வாதிகள் ‘கொலை’ என்று
பேசத் தொடங்கியதும், தேசிய ஊடகங்களாக முன்னிலைப்
படுத்திக் கொள்ளும் ஊடக நிறுவனங்கள், இது கொலையா
என்ற கேள்வியுடன் தங்களது பிரைம்டைம் நிகழ்ச்சிகளை
நடத்தத் தொடங்கின.

இப்படி எதிர்க்கட்சியிடமிருந்தும், மீடியா பக்கமிருந்தும்
ஏற்பட்ட அழுத்தம் மகாராஷ்டிர முதல்வரான
உத்தவ் தாக்கரேவை இந்த வழக்கில் அதீத அக்கறை
எடுத்துக்கொள்ள வைத்தது. பாஜகவின் அரசியல்வாதிகள்
கொலை எனப் பேசத் தொடங்கிய அதே காலத்தில்
மீடியா நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்
மத்தியிலும் ‘கொலை’ என்ற வார்த்தை அதிகம்
பயன்படுத்தப்பட்டதை கீழே உள்ள அட்டவணை மூலம்
இந்த ஆய்வினை நடத்திய ஜோயோஜீத் பால்
விளக்கியிருக்கிறார்.

சுஷாந்தின் மரணம் பல பேருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
அது எப்படியெல்லாம் அரசியலாக்கப்பட்டிருக்கிறது என்ற
தகவலும் அதே போன்றதொரு அதிர்ச்சியைக்
கொடுத்திருக்கிறது. சுஷாந்த் மரணத்தில் ஏதோ ஒருவித
மர்மம் இருக்கிறது என்று உணர்ந்தாலும், ஜூன் மாதம்
முழுவதையும் விட்டுவிட்டு ஜூலை மாதத்தில் அதனை
கொலை எனப் பேசியதற்குக் காரணம், பீஹார் தேர்தல்
என்று ஜூன் மாதத்திலேயே காங்கிரஸ் கட்சியினரால்
குற்றம் சாட்டப்பட்டது.

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ் கூட்டணிக்குக்
கொடுக்கும் அழுத்தம் வரவிருக்கும் பீஹார் தேர்தலில்
ஐக்கிய ஜனதா தளம்-பாஜக அமைத்திருக்கும் தேசிய
ஜனநாயகக் கூட்டணிக்கு நல்ல மைலேஜைக் கொடுக்கும்
என்ற எண்ணத்தில் தான் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட
மரணத்துக்கு, பீஹாரிலிருந்து போலீஸ் கிளம்பிச்சென்றது.

ஜூன் 14 முதல் ஜூன் 29 வரையிலான காலகட்டத்தில்
மும்பை போலீஸ்-பீஹார் போலீஸ் என்ற வார்த்தைகள்
அரசியல்வாதிகள், மீடியா நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள்
மத்தியில் 1000க்கும் குறைவாகவே பயன்படுத்தப்
பட்டிருக்கின்றன. ஆனால், ஜூலை 30லிருந்து
செப்டம்பர் 13 வரை கிட்டத்தட்ட பத்தாயிரம் முறைக்கும்
மேலாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதில், பாஜகவின் அரசியல்வாதிகள் கிட்டத்தட்ட
3000 முறை மும்பை போலீஸைப் பற்றியும், 4000 முறை
பீஹார் போலீஸைப் பற்றியும் பேசியிருக்கின்றனர். இதில்,
மும்பை கமிஷனர் பரம்பிர் சிங் அவர்களை பதவி விலகக்
கோரியும், பீஹார் போலீஸினைப் பாராட்டிய ட்வீட்களும்
அடங்கும். பாஜக அரசியல்வாதிகளைத் தொடர்ந்து
மீடியா நிறுவனங்களும், பத்திரிகையாளர்களும்
எத்தனை முறை மும்பை, பிகார் போலீஸைப் பற்றிப்
பேசினார்கள் என்பதை கீழேயுள்ள படம் விளக்குகிறது.

ஒரு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பதிவு செய்யும்
ஒவ்வொரு ட்வீட்டும் இந்த சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை
ஏற்படுத்த முடியும் என்பதை ஜோயோஜீத் பால் நடத்தியுள்ள
இந்த ஆய்வு விளக்குகிறது. இதுமட்டுமில்லாமல்
எண்ணற்ற பொய் தகவல்களும் சுஷாந்த் மரணத்திற்குப்
பிறகு வெளியாகி பல்வேறு நபர்களுக்கும் எத்தனையோ
பிரச்சினைகளைக் கொடுத்திருக்கின்றன.

ஆனால், அந்த பொய் செய்திகளுக்குப் பின்னால்
இருப்பவர்கள் யார் என்பதைப் பற்றிய கவலை
இந்த மரணத்தை தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக்
கொண்ட யாருக்கும் இல்லை.

….

….

ஆளும் அரசு, காக்கும் போலீஸ், நீதி வழங்கும் நீதிமன்றம்
ஆகியவற்றை நெருக்கடிக்குள் கொண்டுவந்துவிட்டு,
மீடியாக்களுக்கு பிரைம்டைம் நிகழ்ச்சிக்கான கருவை டிஜிட்டல்
மீடியா மூலம் கொடுத்துவிட்டால் எதையும் சாதித்துவிடும் நிலை
உருவாகியிருப்பது, நாளைய இந்தியாவிற்கே மிகப்பெரும்
சவாலாக இருக்கக்கூடும்.

( ஜோயோதீப் பால் வெளியிட்ட ஆய்வறிக்கை,
மற்றும் மின்னம்பலம் செய்தியின் அடிப்படையில் ….)

.
———————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஒரு பொய்யை, நிஜமாக்க செய்யப்பட்ட கடும் முயற்சிகள்….!!!

 1. கார்த்திகேயன் சொல்கிறார்:

  உண்மை இதே மாதிரியான ஆய்வுகள் தமிழகத்திலும் நடத்தபட்டால் திருட்டு திராவிட கும்பல்களின் 50 ஆண்டுகால முகத்திரை கிழித்தெரியப்படும்.

  – இவன் எந்த கட்சியையும் சேராத பொதுசனம்

 2. M.Subramanian சொல்கிறார்:

  அர்னாபின் ரிபப்ளிக் டிவியின் உரிமையாளர்
  உண்மையில் பங்களூரைச் சேர்ந்த பாஜக எம்.பி.
  டிவியில் அர்னாப்புக்கும் பங்கு உண்டு.
  பாஜக கட்சியிலிருந்தும் இதற்கு முழு ஆதரவும்,
  நிதியுதவியும் உண்டு. எனவே அர்னாப் இப்படி
  நடந்து கொள்வதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை;
  அந்த ஃப்ராடு சொல்வதை விவரம் தெரிந்த
  யாரும் நம்புவதில்லை; பைத்தியக்காரன் உளறினால்,
  4 பேர் சுற்றி நின்றுகொண்டு வேடிக்கை பார்ப்பதுபோல்
  தான் அர்னாப் டிவியை பார்ப்பவர்களும்.
  ஆனால், பாஜகவைச் சேர்ந்த தீவிர அர்னாப்
  ரசிகர்களும் உண்டு. அவர்கள் கட்சியின் தீவிர
  செயல்பாட்டாளர்கள். எனவே அவர்கள்
  அர்னாப் ரசிகர்களாக செயல்படுவதில் அதிசயமில்லை;
  அர்னாப், பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு.
  அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

 3. புதியவன் சொல்கிறார்:

  நம்ம நாட்டு கிரிக்கெட் டீம் வெற்றி பெற்றால் ஏதோ நாமே வெற்றி பெற்றது போல் மகிழ்ச்சி ஏற்படும். அதே கதைதான் இந்த கட்சிப் பிரச்சார தொலைக்காட்சிகளுக்கு. பாஜக தொலைக்காட்சியான இந்த ரிபப்ளிக் தொலைக்காட்சி (வேற என்னத்தச் சொல்றது? கொஞ்சம் விட்டால் டி.வி. விவாத மேடையிலிருந்து அர்னாப், பார்க்கிறவர்கள் வீட்டுக்குள் குதித்து விடுவதைப் போன்ற ஆக்ரோஷமான, எதிராளிகள் முட்டாள்கள் என்று நினைத்துக் கத்தும் வாதங்கள், எப்போப் பார்த்தாலும் நம்பர் 1 என்று விளம்பரங்கள் போடுவது… போலிகள்தாம் ரொம்பவும் கூச்சல் போடுகின்றன.

  தமிழ்நாட்டில் இந்த மாதிரி துருவினால் பெரிய ஃப்ராடு குழுமம் வசமாகச் சிக்கிக்கொள்ளும். நம் திறமையான சிபிஐ ஆபீசர்கள் வழக்கு நடத்தத் தெரியாமல் ஆதாரம் இல்லை என்று சொல்வார்கள். அவ்ளோதான்.

  முதல்ல கட்சித் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள்லாம் ஒழிக்கணும் என்று எழுத நினைத்தேன். அப்புறம் நமக்கு பார்ப்பதற்கு வெளிநாட்டு சேனல் மற்றும் அனிமல் சேனல்கள்தாம் பாக்கி இருக்கும்.

 4. புதியவன் சொல்கிறார்:

  இந்த மின்னம்பலம், தட்ஸ் தமில்…என்ற வரிசையில் வரும் எல்லா ஊடகங்களும்.. இவங்க கட்சிச் சாயம் நல்லா பார்த்தால் நமக்குத் தெரிந்துவிடும். எல்லாப் பயலுகளுக்கும் பின்னணில யாரேனும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

 5. tamilmani சொல்கிறார்:

  தமிழ்நாட்டில் இதே மாதிரி ஒரு குடும்ப சேனல் , பொய்களையே
  மூலதனமாக கொண்டு ஊரை ஏமாற்றி வருகிறது. அவர்கள் ஆய்வு அறிக்கை
  தயார் செய்பவர்களையே நன்கு “குளிப்பாட்டி” கட்சி மாற வைத்து விடுவார்கள்.
  அந்த கும்பலிடம் உள்ள பணம், திரைப்படங்கள், பெட்ரோல் பங்குகள் , ஷாப்பிங் மால்கள்
  ரியல் எஸ்டேட் , மீடியா , கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. i too dont belong to any political party.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.