பசி ….?

….
….

….


….

மனிதரின் நல்வாழ்வுக்காக எத்தனையோ
நல்ல விஷயங்கள் குறித்து சொல்லி இருக்கிறார்
வள்ளல் ராமலிங்க அடிகளார்….

ஆனால், எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக
நாம் உணர்வது –

பசி குறித்து அவர் சொன்னவை தான்.

அப்படி என்ன சொன்னார்…?

———————————–

பசி என்று ஒன்று இல்லாவிட்டால்
உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர்
எதிர்பார்க்க மாட்டார்கள்.

அப்படியில்லாத போது, ஒருவருக்கொருவர் உதவ
மாட்டார்கள். அப்படி உதவ வில்லை என்றால்,
மனிதநேயம் இல்லாமல் போய்விடும்.

மனிதநேயம் இல்லாவிட்டால்,
கடவுள் அருள் கிட்டாது. எனவே, கடவுளை அறிய,
கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஓர்
உபகாரக் கருவிதான் பசி ….

பசி ஏழைகளின் அறிவாகிய விளக்கை
அணைக்க முயலும் விஷக்காற்று!

பசி ஏழைகளின்மேல் பாய்ந்து
கொல்லப் பார்க்கும் புலி!

பசி உச்சி முதல் பாதம் வரை
பாய்ந்து பரவும் விஷம்!

பசி வர பத்தும் பறந்து போகும் என்பது போல்,
பசிப்பிணி என்பது மிகவும் பயங்கரமானது.

அத்தனை பாவங்களுக்கும் அடிப்படை பசி தான்.
பசியைத் தீர்த்துக்கொள்ள, மக்கள் எத்தகைய
பாவத்தையும் செய்ய யோசிக்கமாட்டார்கள்!

பசி உண்டானதும் அறிவு மயங்கும்.
கடவுளைப் பற்றிய நினைப்பு
அடியோடு ஒழிந்து போகும்.
சித்தம் கலங்கும். நம்பிக்கை குலையும்.

கண் பஞ்சடைந்து போகும்.
காதில் இரைச்சல் ஏற்படும்.
நாக்கு உலர்ந்து போகும்.
கை, கால் சோர்ந்து துவளும்.

வார்த்தை குழறும். வயிறு வாடும்.
தாபமும் கோபமும் பெருகும்.
நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை
ஆகிய வேதனைகளும் ஒன்று திரண்டால்
என்ன வேதனை உண்டாகுமோ, அதுவே பசி வேதனை…

அதே வேளையில் பசி அகன்றுவிட்டாலோ,
பசியால் நேர்ந்த அத்தனை துன்பங்களும் அகலும்.

தத்துவங்கள் மறுபடி தழைக்கும்.
உள்ளம் குளிரும்.
சித்தம் தெளியும்.
உள்ளேயும் வெளியேயும் உயிர்க்களை உண்டாகும்.
கடவுள் நம்பிக்கை துளிர்க்கும்.

தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம்,
பொன், மணி ஆகியவற்றைக் காணும்போது கொள்ளும்
மகிழ்ச்சியைவிட, பசியால் வேதனைப்படுபவர்கள்
உணவைக் காணும்போது பெறும் மகிழ்ச்சி அதிகம்.

ஆதலால், உணவைக் கடவுளுக்குச்
சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பிற உயிர்களின் பசியாற்றி, ஒப்பில்லா திருப்தி
இன்பத்தை அளிப்பவர்கள் புண்ணியர்கள்.
இந்தப் புண்ணியத்துக்கு வேறு எந்தப் புண்ணியமும்
இணை இல்லை;

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி.

அப்படி அழிவு வேலைக்கெல்லாம் போகத் தேவையில்லை;
அனைவரின் பசியையும் ஆற்றுவோம்.

முயற்சி எடுத்து செய்தால்,
நம்மால் முடியக்கூடிய காரியம் தான் அது….

பிறரது பசியைப் போக்குவதையே
நமது முதல் நோக்கமாக, முதல் கடமையாக – கொள்வோம்.

இந்த உலகில், மனிதர் மட்டுமல்லாமல்,
பசியால் எந்த ஜீவனும் வாடாமல் பார்த்துக்கொள்வோம்.

இரக்கமோ – வேறு எதாவதோ,
நல்ல குணமோ – இல்லையோ,
இறப்பிற்கு பின்னர் நாம் நல்ல இடத்துக்கு
போய்ச் சேருவதை அது நிச்சயம் உறுதி செய்யும்.

—————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.