ஹாத்ரஸ் கற்பழிப்பு-கொலை – உண்மையில் நடந்தது என்ன..?

….
….

….

தொலைக்காட்சிகள், செய்தி நிறுவனங்கள் ஆகியவை
கோர்வையாக என்ன நடந்தது என்பதை விளக்கமாக
சொல்வதில்லை; அவ்வப்போது நடக்கும் சம்பவங்களையே
முக்கியப்படுத்தி பேசுகின்றன. வடக்கே உள்ளவர்களுக்கு உள்ளூர்
தொலைக்காட்சிகள் மூலம் அனைத்து விவரங்களும்
தெரிந்திருக்கலாம். ஆனால் இவ்வளவு தொலைவில் இருக்கும்
நமக்கு முழு விவரங்களும் ஒழுங்காக தெரியவேண்டுமே…
எனவே, கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விஷயத்தை
சரியாக புரிந்துகொள்ளுமாறு செய்திகளை கொஞ்சம் தொகுத்தேன்…
கீழே –

——————————————————–

அந்தப்பெண்ணின் வீடு –

…..


…..

சம்பவம் நடந்த கிராமம் ….
விவசாய நிலங்களில் தினை பயிரிட்டிருக்கிறார்கள்.
ஓர் ஆள் உயரத்திற்கு அவை வளர்ந்து நிற்கின்றன.

தினை பயிரிடப்பட்டிருக்கும் இடத்தில்தான் இந்த பாலியல்
வல்லுறவு நடந்ததாக கூறப்படுகிறது. இங்கிருந்து 100 மீட்டர்
தூரத்தில்தான் இந்த கிராமத்தை மெயின் சாலையுடன்
இணைக்கும் சாலை இருக்கிறது.

மருத்துவ அறிக்கை அந்தப் பெண் பாலியல் வல்லுறவுக்கு
ஆனாக்கப்பட்டதை உறுதிபடுத்தவில்லை என ஹத்ராஸ்
காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் கூறுகிறார்.

தடயவியல் விசாரணை இறுதி அறிக்கை இன்னும்
வரவில்லை. வந்தால் மட்டுமே தெளிவாக எதையும்
கூறமுடியும்.

பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டும்
அப்பெண்ணின் குடும்பத்தாருக்கும், இன்னும் அந்த மருத்துவ
அறிக்கை கிடைக்கப்பெறவில்லை.

அவரை டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில்
அனுமதிக்கும்போது கூட, அவர்களிடம் முந்தைய மருத்துவ
மனையின் மருத்துவ அறிக்கை தரப்படவில்லை;

“காவல்துறையினர் எங்களிடம் எந்த ஆவணங்களையும்
கொடுக்கவில்லை. என் சகோதரியின் மருத்துவ அறிக்கையும்
எங்களுக்கு தரவில்லை” என்கிறார் உயிரிழந்த பெண்ணின்
சகோதரர்.

இது குறித்து எஸ்பி. விக்ராந்த் வீரிடம் கேட்கப்பட்டதற்கு,
“அந்தத் தகவல்கள் விசாரணையின் ஒரு பகுதி. அது ரகசியமாக
வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்திருக்கிறார்.

“இந்த சம்பவம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும்
சேகரித்து வருகிறோம். தடயவியல் ஆதாரங்களும்
சேகரிக்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறி இருக்கிறார்.

ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை போல, பாதிக்கப்பட்ட
பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என
அவர் மட்டும் – மீண்டும், மீண்டும் அழுத்தமாகக் கூறுகிறார்.

“அப்பெண்ணின் நாக்கு அறுக்கப்படவில்லை. முதுகெலும்பு
உடைக்கப்படவில்லை. தொண்டை பகுதியை அழுத்தியதால்
அவருடைய கழுத்து உடைந்திருக்கிறது. இதனால் நரம்பு
மண்டலம் பாதிக்கப்பட்டது” என்பது போலீஸ் தரப்பின் கூற்று.

சம்பவம் நிகழ்ந்த ஒரு சில மணி நேரத்தில் கொடுத்த
வாக்குமூலத்தில், பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வல்லுறவு
குறித்து ஏதும் பேசவில்லை. அதில் முக்கிய குற்றவாளியின்
பெயரை குறிப்பிட்டுள்ள அவர், தன்னை எப்படி அவர்
கொலை செய்ய முயன்றார் என்பதை பற்றி பேசியிருக்கிறார்.

எனினும், மருத்துவமனையில் அந்தப்பெண் வாக்குமூலம்
கொடுத்த வீடியோ பதிவில், தனக்கு நடந்த பாலியல்
வல்லுறவு குறித்து அவர் பேசியிருக்கிறார். போலீஸாரிடம்
அளித்த வாக்குமூலத்திலும் அது குறித்துப் பேசியிருக்கிறார்.

அதில், இதற்கு முன்பும் அந்த முக்கிய குற்றவாளி தன்னை
பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாக அப்பெண்
குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் நடந்த தினத்தன்று என்ன நடந்தது என்பது குறித்து
பேசிய அவர், “இரண்டு பேர் என்னை பாலியல் வல்லுறவு
செய்தனர். பிறர் என் தாயின் குரலை கேட்டு ஓடிவிட்டனர்”
என்று தெரிவித்தார்.

சம்பவம் நடந்த தினத்தன்று என்ன நடந்தது என்பதை
அந்தப்பெண்ணின் தாய் தான் முதலில் வெளியுலகிற்கு
கூறியிருக்கிறார்.

அவர் கூறுகையில், “நான் என் மகளை புற்களை சேகரிக்க
அனுப்பியிருந்தேன். அவளும் அதை செய்து கொண்டிருந்தாள்.

பின்னர் அவளை வேறு எங்கும் காணாத போது, அந்த
இடத்தில் தேட ஆரம்பித்தேன். சுமார் ஒரு மணி நேரம் தேடிக்
கொண்டிருந்தேன். அவள் வீட்டிற்கு போயிருக்க மாட்டாள் என்று
தெரியும். அந்த இடத்தை 2 முறை சுற்றிச் சுற்றி வந்துவிட்டேன்.
அவள் கண்ணில் படவில்லை;

பின்னர் அவள் விவசாய நிலம் அருகே ஆடுகள் இருந்த
இடத்தில் படுத்துக் கிடந்ததை பார்த்தேன். அவளது
கழுத்துப்பகுதியை துணியால் சுற்றி இழுத்துள்ளனர். அவரது
உடைகள் களைந்து, அவள் மயக்கத்தில் இருந்தாள்” என்றார்.

“அவளது முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டிருந்தது.
கொலை செய்யப்பட்டது போல படுத்துக் கிடந்தாள்” என்று
அவரது தாய் கூறினார்.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் முதலில்
கொடுத்த வாக்குமூலத்தில், ஒருவருடைய பேரை மட்டுமே
குறிப்பிட்டிருந்தார்.

அது குறித்து அவரது தாயிடம் கேட்கப்பட்டதற்கு,
“நாங்கள் அவளை கண்டெடுத்த போது அவள்
அரை மயக்கத்தில் இருந்தாள். அப்போது ஒருவரது பெயரை
சொன்னாள். ஒரு மணி நேரம் கழித்து அவள் மயங்கிவிட்டாள்.

நான்கு நாட்களுக்கு பிறகுதான் நடந்த முழுவதையும்
அவளால் கூற முடிந்தது. மொத்தம் 4 ஆண்கள் இருந்ததாக
அப்போது அவள் குறிப்பிட்டாள்” என்கிறார்.

அந்தப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு
முன்னதாக, அவரது குடும்பத்தார் காவல் நிலையத்திற்கு
அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர்
தூரத்தில் காவல்நிலையம் இருக்கிறது.

“போகும் வழியெல்லாம் அவள் ரத்த வாந்தி எடுத்தாள்.
அவளது நாக்கு நிறம் மாறத் தொடங்கிவிட்டது. அவளிடம்
நடந்தது குறித்து ஏதாவது சொல் என்றேன். அவள் கழுத்து
இறுக்கப்பட்டதாக கூறினாள். வேறு ஏதும் சொல்ல முடியாது
என்றாள். பின்னர் அவள் தனது உணர்ச்சியை இழந்துவிட்டாள்”
என பெண்ணின் தாய் தெரிவிக்கிறார்.

இந்நிலையில், சஃப்தர்ஜங் மருத்துவமனையின் பிரேத
பரிசோதனை அறிக்கையில், “கழுத்தின் அருகே முதுகுத்தண்டு
பகுதியில் ஏற்பட்ட ஆழமான காயங்கள் மற்றும் பிற
காயங்களால் அப்பெண் உயிரிழந்துள்ளார். மேலும் கழுத்துப்
பகுதியில் குத்தியதற்கான தடயமும் இருக்கிறது” என
கூறப்பட்டுள்ளது.

ஆனால் இது மட்டுமே உயிரிழப்புக்கான காரணம் இல்லை
என்றும் உடலின் உள்உறுப்புகளை ஆய்வு செய்ததன்
அறிக்கை வந்தால்தான், சரியான காரணம் தெரியவரும்
என்று கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததையடுத்து பேசிய சஃப்தர்ஜங்
மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர், “20 வயதான
அப்பெண்ணுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி அன்று பிற்பகல் 3.30
மணியளவில் நரம்பியல் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜவாஹர்லால் நேரு
மருத்துவக் கல்லூரியின் பரிந்துரையின் பேரிலேயே அவர்
இங்கு சேர்க்கப்பட்டார்.

இங்கு அனுமதிக்கப்படும்போதே அவர் மோசமான நிலையில்
இருந்தார். சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29ஆம் தேதி
மாலை 6.25 மணிக்கு உயிரிழந்தார்” என தெரிவித்திருக்கிறார்.

செப்டம்பர் 14ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் பாலியல்
வன்முறை சம்பவத்திற்கு பிறகு, போலீஸார் 3 முறை
முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டிருந்த சட்டப்
பிரிவுகளை மாற்றியுள்ளனர்.

முதலில் கொலை முயற்சி வழக்காக இது பதிவு செய்யப்பட்டது.
பின்னர் பாலியல் வல்லுறவுக்கான சட்டப்பிரிவுகளும்
சேர்க்கப்பட்டனர். பின்னர் அந்தப் பெண் உயிரிழந்த பிறகு,
கொலை வழக்கையும் இதில் சேர்த்துள்ளனர்.

சம்பவம் நடந்த 5 நாட்களுக்கு பிறகே முதல் கைது நிகழ்ந்தது.
போலீஸ் விசாரணையில் தாமதம் இருந்ததா என்று கேட்டதற்கு
பதிலளித்த எஸ்.பி விக்ராந்த், “செப்டம்பர் 14 காலை 9.30 மணிக்கு
பாதிக்கப்பட்ட பெண், அவரது தாய் மற்றும் சகோதரருடன் காவல்
நிலையத்திற்கு வந்தனர்.

யாரோ அவரை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றதாக
பெண்ணின் சகோதரர் தெரிவித்தார். 10:30 மணிக்கு முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்யப்பட்டது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக
மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கிருந்து அலிகர் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

சிகிச்சை உடனடியாக தொடங்கப்பட்டது. 307 பிரிவின் கீழும்
எஸ்சி எஸ்டி சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக
விசாரணை அதிகாரியிடம் அப்பெண் வாக்குமூலம் அளித்தார்.

அதனையடுத்து, மற்றொரு குற்றவாளியின் பெயரும் இந்த
வழக்கில் சேர்க்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

பின்னர் 22-ஆம் தேதிதான், தன்னை நான்கு பேர் பாலியல்
வல்லுறவு செய்ததாக அந்தப்பெண் கூறினார். இதனை ஏன்
முன்கூட்டியே சொல்லவில்லை என்று கேட்டதற்கு,
தான் கூறும் நிலையில், முழு சுயநினைவுடன் இருக்கவில்லை
என்று அவர் தெரிவித்தார். பின்னர் கூட்டு பாலியல் வல்லுறவு
வழக்காக இது மாற்றப்பட்டது. மீதமிருந்த 3 பேரும் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று
எஸ்.பி விக்ராந்த் கூறி இருக்கிறார்.

மருத்துவ அறிக்கையில் கூட்டு பாலியல் வல்லுறவு
செய்யப்பட்டதற்கான ஆதாரம் இருக்கிறதா என அவரிடம்
கேட்கப்பட்டதற்கு –

– பதிலளித்த எஸ்.பி விக்ராந்த், “கூட்டுப்பாலியல்
வல்லுறவு செய்யப்பட்டதாக தற்போது கிடைக்கப்பெற்றுள்ள
மருத்துவ அறிக்கை கூறவில்லை. தடயவியல் இறுதி
அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அதனை பார்த்த பிறகே
எதையும் சொல்ல முடியும். பாதிக்கப்பட்ட பெண்ணின்
பிறப்புறுப்புகளில் காயம் இருந்ததாக மருத்துவ அறிக்கை
குறிப்பிடவில்லை. இந்த அறிக்கையும் வழக்கின் ஒரு
அங்கமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடு இரவு சுமார் 2.30 மணியளவில்
போலீஸார் அப்பெண்ணின் சடலத்தை எரித்தனர். தங்களை
இறுதி சடங்குகள் செய்யக்கூட அனுமதிக்கவில்லை என
அப்பெண்ணின் குடும்பத்தார் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஆனால் போலீசார் இதனை மறுக்கின்றனர்.
குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையிலேயே
இறுதி சடங்குகள் நடத்தப்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.

பெண்ணின் சடலம் நள்ளிரவில் அவசரம் அவசரமாக
போலீசாரால் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிறகு
அப்பெண்ணின் குடும்பம் மற்றும் தலித் சமூகத்தின் கோபம்
மேலும் அதிகரித்திருக்கிறது.

இந்த சம்பவத்தின் மூலம் மீண்டும் –
இரண்டாவது முறையாகவும் அப்பெண் ‘வல்லுறவு
செய்யப்பட்டார்’ என அவர்களில் சிலர் இந்த எரிப்பு சம்பவத்தை
விவரிக்கின்றனர்.

ஆதாரத்தை அழிக்கவே போலீஸார் இவ்வாறு செய்ததாகவும்
அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய
அந்தப்பெண்ணின் சகோதரர் –

“எங்கள் உறவினர்கள் தாக்கப்பட்டனர்.
போலீஸ்காரர்களே சடலத்தை எரித்துவிட்டனர்.
யாருடைய உடலை போலீஸார் எரித்தனர் என்பது கூட
எங்களுக்கு தெரியாது. கடைசியாக ஒரு முறை கூட அவள்
முகத்தை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. இவ்வளவு
அவசர அவசரமாக போலீஸார் ஏன் இப்படி செய்ய வேண்டும்?”
என்று கேள்வி எழுப்புகிறார்.

இதைப்பற்றி விளக்குமாறு எஸ்.பி. விக்ராந்திடம்
கேட்கப்பட்டதற்கு,

“அப்பெண் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டது.
பிரேத பரிசோதனை எல்லாம் முடிந்து இரவு 12 மணி
ஆகிவிட்டது. ஒருசில காரணங்களால் பாதிக்கப்பட்ட
பெண்ணின் சடலத்தை உடனடியாக கிராமத்திற்கு கொண்டு
வர முடியவில்லை.

தந்தையும், சகோதரரும் சடலத்துடன் வந்தனர்.
இரவில் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்பது அவரது
குடும்பத்தாரின் முடிவாக இருந்தது….?
மரக்கட்டைகளை சேகரிக்கவும், பிற விஷயங்களிலும்
(மட்டுமே) காவல்துறையினர் உதவினார்கள். அவர்களது
குடும்பம்தான் இறுதிச்சடங்கை நடத்தியது” என்கிறார்.

குற்றம் சுமத்தப்பட்டவர்களின் குடும்பங்கள் கூறுவது ..?

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சற்று அருகில்தான்
குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடும் இருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்ட 3 பேரின் குடும்பங்களும்
பெரும் கூட்டுக்குடும்பமாக இருந்தனர்.

தற்போது ஆண்கள் எல்லாரும் வெளியேறி விட,
அந்த வீட்டில் பெண்கள் மட்டுமே இருக்கின்றனர்.

தங்களின் பிள்ளைகள் தவறாக இந்த வழக்கில்
சேர்க்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு 32 வயது.
அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன.
மற்றொருவருக்கு 28 வயது, இரண்டு குழந்தைகள்.
மீதமுள்ள இருவருக்கு சுமார் 20 வயது இருக்கும்.
திருமணம் ஆகவில்லை.

இவர்களின் தாயார்களிடம் இந்த சம்பவம் குறித்து
கேட்கப்பட்டபோது,

“இது பழைய பகை.
இப்படி செய்வதுதான் அவர்கள்
(பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தார்) வேலை.
தவறான குற்றச்சாட்டுகளை வைப்பார்கள்.
பின்னர் பணம் கேட்பார்கள். மக்களிடமும் இருந்தும்,
அரசாங்கத்திடம் இருந்து இழப்பீட்டுத் தொகை
பெற்றுக்கொள்வார்கள்” என்று கூறினர்….?

அவர்களிடம் பேசும்போது தொடர்ச்சியாக அவர்கள்
தாங்கள் பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும்,

பாதிக்கப்பட்டவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்
என்பதையும் அடிக்கடி கூறி பதிவு செய்திருக்கின்றனர்.

குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் தாய் கூறுகையில்,
“நாங்கள் தாக்கூர். அவர்கள் ஹரிஜன். அவர்களுக்கும்
எங்களுக்கும் என்ன சம்மந்தம்.?
அவர்கள் வழியில் வந்தால் நாங்கள் தூரமாக சென்று
விடுவோம். எங்கள் பிள்ளைகள் ஏன் அவர்கள் இடத்திற்கு
சென்று பெண்ணை தொடுவார்கள்?” என்று கேட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க மூன்று நபர்கள் கொண்ட
சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உத்தர பிரதேச அரசு
அமைத்திருக்கிறது.

தற்போது அந்த கிராமத்தின் எல்லைக்குள் நுழைய ஊடகங்கள்
உள்பட வெளி நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊருக்கு வெளியே ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலேயே
வெகு பலமான போலீஸ் தடுப்புகள் போடப்பட்டு, வெளியில்
இருந்து யாரும் ஊருக்கு உள்ளேயே, ஊருக்கு உள்ளேயிருந்து
வெளியேயோ செல்ல முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஊருக்குள் நுழைய முயன்று போராட்டம்
நடத்தியதும், போலீசார் அவர்களிடம் அத்துமீறி
நடந்துகொண்டதும், இந்த விவகாரம் அகில இந்திய அளவில்
பெரிதாக பேசப்படுபவதும் பின்னால் நிகழ்ந்தவை.

கடைசியாக வந்த தகவல்களில் அந்தப்பெண்ணின்
குடும்பத்தாரிடம், டிஸ்டிரிக்ட் மேஜிஸ்டிரேட் – “யாரிடமும்
எதுவும் பேசக்கூடாது” என்று மிரட்டி இருப்பது வீடியோ
மூலம் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது.

இதன் பின்னர், அந்த குடும்பத்தினரிடமிருந்த
செல்போன்கள், போலீசாரால் பிடுங்கிக்கொள்ளப்பட்டு விட்டதாக
செய்திகள் வருகின்றன.

கடைசியாக, அந்தப்பெண்ணின் சகோதரன், போலீஸ்
காவலையும் மீறி, வேலியைத் தாண்டிக் குதித்து வயல்வெளியில்
தப்பித்து ஓடி வருவதும், அவரை போலீஸ்காரர்கள்
துரத்திக்கொண்டு ஓடி வருவதும் செய்தியாளர்களால்
படம் பிடிக்கப்பட்டு விட்டு வெளிவந்து விட்டது.

——————-
பின் குறிப்பு –

மேலே தந்திருப்பது செய்திகளின் தொகுப்பு மட்டுமே.
விமரிசனம் என்று எதையும் எழுதவில்லை;
ஒரே ஒரு கருத்தை மட்டும் இங்கே சொல்ல விரும்புகிறேன்.
காமுகர்கள், மனசாட்சி இல்லாத மனிதர்கள் ஹாத்ராசி’ல்
மட்டும் இல்லை; இந்தியா முழுவதையும் இந்த நோய்
மிகக்கடுமையாக பாதித்திருக்கிறது.

இது ஒரு மிக மோசமான சமூக வியாதி.
மிகக்கடுமையான உடன் நடவடிக்கைகளாலும்,
கடுமையான, உடனடியான விசாரணை/தண்டனைகளாலும் தான்
இதை ஓரளவாவது தடுக்க இயலும்.

ஆனால், உத்திரப்பிரதேச அரசும், காவல்துறையும் இதுவரையிலும்,
குற்றம் இழைத்தவர்களுக்கு சாதகமாகவே செயலபட்டு
வந்திருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
குற்றத்தின் தீவிரத்தை குறைத்துக் காட்டும் முயற்சியில்
உ.பி.அரசு நேரடியாகவே ஈடுபட்டிருக்கிறது.

காவல் துறை தன்னிச்சையாக இந்த அளவு தொடர்ந்து
செயல்பட்டிருக்க முடியாது. ஆட்சியாளர்களின் ஆலோசனைப்படி
தான் தொடர்ந்திருக்க முடியும். ஆட்சியாளர்களின் இத்தகைய
செயல்களுக்கு – சாதி, மத அணுகுமுறைகளே காரணமாக
இருந்திருக்க முடியும். ஆட்சியில் உள்ள இவர்களின் மனோபாவம்
மாறினாலொழிய, ஹாத்ரஸ்’கள் தொடர்ந்து கொண்டே தான்
இருக்கும்.

இந்தியா முழுவதும் ஒருமித்து எழும் பொதுமக்களின்
ஆவேசம் மற்றும் எதிர்ப்பு ஆட்சியாளர்களின் போக்கை
தற்காலிகமாகவாவது கொஞ்சம் மாற்ற உதவலாம்.

பொதுவாகவே எந்த மாநிலமாக இருந்தாலும் சரி,
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி,
என்ன காரணமாக இருந்தாலும் சரி,
இந்த மாதிரி குற்றங்களை இனி மூடி மறைப்பதில்லை
என்கிற முடிவிற்கு வர வேண்டும்.

இந்த மாதிரி குற்றங்கள் நடக்கும்போது, உடனடியான,
தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க காவல் துறைக்கு
நிரந்தரமான -standing orders – சட்டபூர்வமான உத்திரவுகள்
கொடுக்கப்பட வேண்டும். சாதியோ, மதமோ இதில்
தலையிடுவதை அனுமதிக்கக்கூடாது. இத்தகைய
குற்றச்செயல்கள் தனியே விரைவு நீதிமன்றங்கள்
(special ourts) மூலம் விசாரிக்கப்பட்டு, 2 மாதங்களுக்குள்
மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.
ஒரு அப்பீலுக்கு மேல் நீதிமன்றங்களே அனுமதி வழங்கக்கூடாது.

.
—————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ஹாத்ரஸ் கற்பழிப்பு-கொலை – உண்மையில் நடந்தது என்ன..?

 1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  அரசு நிர்வாகமும் , போலீசும் மிக மோசமாக
  நடந்து உள்ளார்கள் .அரசு சொல்லாமல்
  போலீசோ , நிர்வாகமோ செய்து இருக்க மாட்டார்கள் .

  உ பி அரசோ , பா ஜ க வோ இதை பற்றி அதிகமாக
  அலட்டிக்கொள்ளவில்லை . எதோ ஒரு குக்கிராமம் ,
  அங்கு எதோ நடந்தது – சுருக்கமாக
  அது மாதிரி எல்லாம் ஒன்றும் இல்லை ! ஒரே போடு !
  மற்றப்படி எதிர்க்கட்சிகள் என்ன செய்து விட முடியும் ?
  அவர்கள் கேள்வி கேட்டு அதற்கு பதில் சொல்ல
  வேண்டும் என அவசியம் பா ஜ க விற்கு இல்லை .

  முதல்வரோ , கட்சியின் பெரிய தலைவர்களோ
  ஒன்றும் சொல்லவில்லை . இரண்டாம் கட்ட
  ஐ டி விங் தடித்தனமாக பதில் கொடுத்தார்கள் .
  அப்புறம் மோடி திருதராஷ்டிர ராஜா போல –
  எதற்கும் யாருக்கும் பதில் கொடுப்பதில்லை .

  எதிர்க்கட்சிகள் அரசியல் பண்ண ஆரம்பித்தன .
  இதை பா ஜ க எதிர்பார்க்கவில்லை .

  இப்ப பீகார் தேர்தல் வருது – என்னமும் ஆயிட்டா ?
  உடனே மாநில அரசு போலீஸ் மேல் நடவடிக்கை எடுத்தது .
  இது எல்லாம் பெயரளவில்தான் !

  தாகூர் என்பவர் உயர்ந்த சாதி என்றும் , தலித்
  கீழ்ச்சாதி என்றும் இன்று வரை உள்ளது .
  உ பியில் சாதி வெறி அதிகம் .இன்றும் கூட
  பெயர் சொன்னால் என்ன சாதி ? என விசாரிப்பார்கள் .

  அப்புறம் பிராமணர்களும் உண்டு – சுமார் 10 சதம் .
  சாதி பெருமை பேசினாலும் ஒரு சிலர் மட்டுமே
  வசதியாக உள்ளனர் . விவசாய நிலம் இல்லாதோர்
  எல்லா சாதியிலும் உள்ளனர் .
  வேலையில்லா திண்டாட்டம் பெரிய பிரச்சினை !

  தலித் , தாகூர் , பிராமின் எல்லா சாதிகளும்
  கிட்டத்தட்ட ஒரே தரத்தில்தான் உள்ளன .
  மிஸ்ரா என கைவண்டி இழுப்பவரை பார்க்க முடியும் .

  அப்புறம் முஸ்லீம்கள் பல தொகுதிகளில்
  வெற்றியை தீர்மானிக்கும் அளவில் உள்ளனர் .

  உ பி அரசியல் சாதியை மையமாக கொண்டு
  செயல்படுகின்றது . அரசு , நீதி மன்றம் ,
  போலீஸ் எல்லாவற்றிலும் சாதி பார்ப்பார்கள் .

  ஹாத்ராஸில் ஒன்றுமே நடக்கவில்லை என்பது
  இப்ப எல்லாம் போலீஸ் செயல் என சொல்லுகிறார்கள் .

 2. புவியரசு சொல்கிறார்:

  அடக்கிப் பார்த்தார்கள்
  மிரட்டிப் பார்த்தாகள்
  எதுவும் நடக்கவில்லை;
  விஷயம் எல்லை மீறிப்போய் விட்டது
  என்றவுடன் அதிகாரிகளை கைகாட்டுகிறார்
  ஆதித்யநாத். அதிகாரிகள் தாமாகவே
  செயல்பட்டார்களா ? 25 லட்சம் இழப்பீடு
  அறிவித்தது கூட அதிகாரிகள் தானா ?
  யோகிக்கு தெரியாமல் அதிகாரிகள்
  இத்தனை நாட்கள் ஆட்டம் போட்டிருக்க
  முடியுமா ? இதை வெறும் ஜாதி மோதலாக
  காட்ட முயற்சித்தார்கள்.
  பொறுக்கி அரசியல்வாதிகள் ஓட்டு வங்கிக்காக
  என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
  மக்கள் விழித்துக்கொள்ள ஆரம்பித்து
  விட்டார்கள்; கொஞ்சம் கொஞ்சமாக
  பாஜகவின் ஜாதி, மத அரசியல் சாயம்
  வெளுத்து வருகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.