கிண்ணிமங்கலத்து கல்வெட்டுகளும் -பிரமிப்பூட்டும் தகவல்களும்

….
….


….

அண்மையில், மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தில்
உள்ள ஒரு கோயிலில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த
மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில்
கண்டறியப்பட்டுள்ள பள்ளிப்படைகளிலேயே இதுதான்
பழமையானதாக இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில்
அமைந்திருக்கிறது கிண்ணிமங்கலம். இந்த ஊரில் உள்ள ஏகநாதர்
அனந்தவள்ளி அம்மன் கோயிலில் கடந்த சில நாட்களாக
வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள்
கிடைத்திருக்கின்றன.

காலத்தால் பழமையான இந்த கல்வெட்டில் தமிழியில்
(தமிழ் பிராமி) எழுதப்பட்டிருக்கிறது. ஒரு எண்பட்டைத் தூணில்
கிடைத்திருக்கும் இந்தக் கல்வெட்டில், ‘எகன் ஆதன் கோட்டம்’
என்ற வார்த்தைகள் கிடைத்துள்ளன.
….

….

அடுத்ததாக, வட்டெழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று
கிடைத்துள்ளது. இதில் ‘இறையிலி ஏகநாதன் பள்ளிப்படை
மண்டளியீந்தார்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்தக்
கல்வெட்டு கி.பி. 7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக
இருக்கலாம் என கருதப்படுகிறது.

தமிழில் இதுவரை கிடைத்த கல்வெட்டுகளில் ‘பள்ளிப்படை’
என்ற வார்த்தை இடம்பெற்ற பழமையான கல்வெட்டாக
இது இருக்கலாம் என மாநில தொல்லியல் துறையின்
செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இதற்குப் பிறகு அந்தக் கோயில் வளாகத்தில் மாநில
தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் ஆகஸ்ட் மாதம்
19ஆம் தேதி கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரையை விஜயரங்க சொக்கநாதன் ஆண்ட காலத்தில்
கி.பி. 1722ல் இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
மிகவும் விரிவாக அமைந்திருந்த இந்தக் கல்வெட்டில்
43 வரிகள் இடம்பெற்றிருந்தன.

….

….

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் பெயர்களை
வரிசையாகப் பட்டியலிட்டிருக்கும் இந்த கல்வெட்டு,
அந்த கோயிலை பள்ளிப்படை சமாதி எனக் குறிப்பிட்டு,
குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு உரிமையானது என கூறுகிறது.

“இதுவரை தமிழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள்,
நடுகற்களில் சமண படுகைகளில்தான் கிடைத்திருக்கின்றன.
முதல் முறையாக ஒரு தூணில் அந்த எழுத்துகள்
கிடைத்திருக்கின்றன. தவிர, தமிழி எழுத்துகளில் புள்ளி வைக்கும்
முறை கிடையாது. ஆனால், இங்கு கிடைத்திருக்கும்
‘அதன் ஏகன் கோட்டம்’ என்ற வார்த்தைகளில் நான்கு
இடங்களிலுமே புள்ளிகள் இருக்கின்றன.

ஆகவே இது பிற்காலத் தமிழியாக இருக்கலாம். இதுவரை
கிடைத்த தமிழி கல்வெட்டுகளில் ஆனைமலை கல்வெட்டில்தான்
முதன்முதலில் புள்ளி இருந்தது. ‘ட்’ என்ற ஒரு எழுத்தின் மேல்
இந்தப் புள்ளி அமைந்திருந்தது.

ஐராவதம் மகாதேவன் அதனை கி.பி. முதலாம் நூற்றாண்டைச்
சேர்ந்தது எனக் குறிப்பிட்டார். இந்தக் கல்வெட்டும் அந்தக்
காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்” என்கிறார் மாநிலத்
தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குனரும்
ஆய்வாளருமான சொ. சாந்தலிங்கம்.

இதுதவிர, கோட்டம் என்ற சொல் இதில் இடம் பெற்றிருப்பதும்
ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழி கல்வெட்டில் இதுவரை
கோட்டம் என்ற சொல் இதுவரை இடம்பெற்றதில்லை.
டபூலாங்குறிச்சி வட்டெழுத்துக் கல்வெட்டில்தான் முதன்முதலாக
கோட்டம் என்ற சொல் இடம்பெற்றிருக்கிறது. ஆகவே கோட்டம்
என்ற சொல் இடம்பெற்ற முதல் தமிழி கல்வெட்டும் இதுதான்”
என்கிறார் சாந்தலிங்கம்.

‘இறையிலி ஏகநாதன் பள்ளிப்படை மண்டளியீந்தார்’ என்ற
வட்டெழுத்துக் கல்வெட்டில் இடம்பெற்றிருக்கும் பள்ளிப்படை
என்ற சொல், அந்த இடம் பள்ளிப்படை கோவிலாக, அதாவது
மறைந்தவர்களின் சமாதி மீது எழுப்பப்பட்ட கோவிலாக
இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

“திருச்சுழியில் உள்ள சுந்தர பாண்டிய ஈஸ்வரன் பள்ளிப்படை
தான் இதுவரை கிடைத்ததிலேயே பழைய பள்ளிப்படையாக
கருதப்பட்டு வந்தது. இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

ஆனால், இந்த கல்வெட்டை வைத்து இதனை பள்ளிப்படை
என்று கொண்டால், இதுதான் பழமையான பள்ளிப்படையாக
இருக்கும்” என்கிறார் சாந்தலிங்கம்.

மூன்றாவது கல்வெட்டான கி.பி. 1722 ஆண்டைச் சேர்ந்த
விசயரங்க சொக்கநாதன் கால கல்வெட்டில் வரிசையாக
நாயக்க மன்னர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர,
பாண்டிய மன்னர்களின் பெயரான நெடுஞ்செழியன் பெயரும்
பராந்தகப் பாண்டியன் பெயரும் இடம்பெற்றிருப்பதுதான்
ஆச்சரியமளிக்கிறது. “விடையாவும் நெடுஞ்செழியன் பராந்தக
பாண்டிய ராசாகளின் பட்டயத்தில் கண்டபடி” என்று இந்த
கல்வெட்டு குறிப்பிடுகிறது.

நெடுஞ்செழியன் என்ற பெயருடன் சங்ககால பாண்டியர்கள்
மூவர் இருந்துள்ளனர். பராந்தக பாண்டியனின் காலம் கி.பி.
ஒன்பதாம் நூற்றாண்டு. இந்த மன்னர்களைப் பற்றி 18ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த விசயரங்க சொக்கநாதனுக்கு எப்படித்
தெரிந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

“இந்த இடம் தொடர்பான பட்டயங்கள் ஏதும் இருந்திருக்கலாம்.
அந்த பட்டயங்களில் இந்த மன்னர்களின் பெயர்கள்
குறிப்பிடப்பட்டிருக்கலாம். அதை வைத்து விசயரங்க
சொக்கநாதன் இந்த மன்னர்களின் பெயர்களையும் கல்வெட்டில்
பொறித்திருக்கக்கூடும்” என்கிறார் அழகப்பா பல்கலைக்கழகத்தின்
வரலாற்றுத் துறையின் வருகைதரு பேராசிரியரான
சு. ராஜவேலு.

புகழ்பெற்ற வேள்விக்குடி செப்பேட்டில், சங்ககாலத்தில்
வழங்கப்பட்ட நிலத்தை 1000 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த
வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுகளைக் காண்பித்து திரும்பப்
பெற்ற செய்தி இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்
ராஜவேலு.

தற்போது இந்த இடத்தில் உள்ள ஏகநாதர் கோவில்
19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இங்குள்ள 1942ஆம்
ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டிலும் அந்த இடம் ஜீவசமாதி
என்றே குறிப்பிடப்படுகிறது.
(நன்றி – பிபிசி செய்தித் தளம் )

.
——————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கிண்ணிமங்கலத்து கல்வெட்டுகளும் -பிரமிப்பூட்டும் தகவல்களும்

 1. புதியவன் சொல்கிறார்:

  முதலில் உள்ள படம் – மிகப் பழமையான பிராமி எழுத்துகளாக இருக்கலாம். கொஞ்சம்கூடத் தெளிவாகத் தெரியலை.

  இரண்டாவது கல்வெட்டு சமீபத்தைய கல்வெட்டு (மூன்று கல்வெட்டுகளில்) இதில் தமிழ் எழுத்துக்கள் தெளிவாகப் படிக்கும்படி இருக்கிறது.. அதாவது இப்போ நாம் எழுதும் எழுத்துக்களை ஒட்டி இருக்கு. உதாரணமா நஞ்சை புஞ்சை என்றெல்லாம் வாசிக்க முடியுது. இது 17ம் நூற்றாண்டுக்கு அப்புறம் உள்ள கல்வெட்டாகத்தான் இருக்கும் (20ம் நூற்றாண்டா இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை).

  மூன்றாவது கல்வெட்டு, பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டு எனத் தோன்றுகிறது. தெரிந்த அளவில் முதல் வரியில் ஆரம்ப எழுத்து இ, கடைசி மூன்று எழுத்துகள் லா, யா, க என்பதுபோலத் தெரிகிறது. முழுவதுமாகப் பார்த்தால்தான் ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

  கல்வெட்டுகளில் தெளிவாகவும் அழகாகவும் பொறிக்கப்பட்டிருப்பது தஞ்சை பெரியகோவிலில் உள்ள கல்வெட்டுகள்தாம். அதை, சிறிது நாம கல்வெட்டுகள் பற்றிப் படித்திருந்தால், படித்துவிட முடியும். 7-8 நூற்றாண்டில்தான் வட்டெழுத்து உள்ள கல்வெட்டுகள் இருந்திருக்கவேண்டும்.

  கல்வெட்டுகளையும் ஓலைச்சுவடிகளையும் நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஓலைச்சுவடியில் பல நூற்றாண்டுகளாகவே தமிழ் எழுதப்பட்டுக்கொண்டு வந்திருக்கிறது. ஓலைச்சுவடிகளின் பாதுகாப்பிற்காக, எழுத்தின்மேல் புள்ளி போட்டிருக்க மாட்டார்கள், அதுபோல குறைந்த இடத்தில் நிறைய எழுதுவதற்காக வார்த்தைகளுக்கு இடைவெளி விட்டிருக்க மாட்டார்கள்.

  //கிடைத்ததிலேயே பழைய பள்ளிப்படையாக கருதப்பட்டு வந்தது.// – பஞ்சவன் மாதேவி (ராஜராஜ சோழனின் மனைவிகளில் ஒருவர்) பள்ளிப்படை 1030ம் வருடத்தையது (அதற்குச் சில வருடங்கள் முந்தி இருக்கும்). அதில் கல்வெட்டுகளும் உண்டு. ராஜராஜ சோழன் 1016-17 (?)ல் மறைந்த போது அவனுக்கும் ஒரு பள்ளிப்படை எழுப்பியிருக்கிறார்கள். இராமானுஜருக்கு உள்ள பள்ளிப்படை 1137ம் வருடத்தைச் சேர்ந்தது. பஞ்சவன் மாதேவி மற்றும் இராமானுஜர் பள்ளிப்படை நல்ல நிலைமையில் இன்றும் இருக்கின்றன.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   உங்களுக்கு கல்வெட்டுகளில் ஆர்வம் உண்டு
   என்பது என் நினைவில் இருந்தது. உங்களிடமிருந்தும்
   எதாவது கூடுதல் விவரங்கள் கிடைக்கும் என்று
   எதிர்பார்த்தேன்… நன்றி.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s