அதிமுக ரகசியங்கள் -விகடன் சொல்வது எவ்வளவு தூரம் உண்மை…?

….
….

….

விகடன் செய்தித்தளம், அதிமுக-வின் உள்விவகாரங்கள்
குறித்த – இதுவரை வெளியே தெரியாத பல விவரங்களை
வெளியிட்டிருக்கிறது.

இவை எந்த அளவிற்கு உண்மை….?
யாரால் உறுதி செய்ய முடியும்….?

இதைப் படித்திராத விமரிசனம் தள வாசக நண்பர்களுக்காக –
அரசியல் சுவாரஸ்யம் கருதி அவை அப்படியே கீழே
தரப்படுகின்றன….

இவற்றில் – எது உண்மையோ…எந்த அளவு உண்மையோ…?
யாமறியோம் பராபரமே…!!!
ஆனால், இவற்றில் பெரும்பாலான விஷயங்கள்
உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு.

———————————————————————

“ரகசியங்களை உடைக்கட்டுமா?” – ஆவேச ஓ.பி.எஸ்;
மிரளும் எடப்பாடி!
(ந.பொன்குமரகுருபரன்)

“நான் வாய் திறந்து பேச ஆரம்பிச்சா, ஒரு பயலும் நிம்மதியா
இருக்க முடியாது” என்று கண்களில் அனலைக் கக்கியபடி
ஓ.பி.எஸ் உதிர்த்த வார்த்தைகள் கொங்கு வட்டாரத்தை
ஆட்டம்காண வைத்திருக்கின்றன. அப்படி என்ன ரகசியத்தை
ஒளித்துவைத்திருக்கிறார் ஓ.பி.எஸ்?

அ.தி.மு.க செயற்குழுவில் வெடித்த `யார் முதல்வர் வேட்பாளர்?’
என்கிற பிரளயம் இன்னும் அமைதியாகவில்லை. ஓ.பன்னீர்
செல்வத்தைச் சமாதானப்படுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு
முயல்வதும், ‘தன் இருப்பை விட்டுக் கொடுக்க முடியாது’
என ஓ.பி.எஸ் முஷ்டியை முறுக்குவதும் தொடர்கின்றன.
`11 உறுப்பினர்கள்கொண்ட வழிகாட்டுதல்குழுவை முதலில்

நியமித்துவிட்டு, மற்றவற்றைப் பிறகு பேசிக்கொள்ளலாம்’
என்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. `வழிகாட்டுதல்குழு அமைக்கப்பட்டால்,
அதில் ஆறு பேர் ஓ.பி.எஸ்-ன் ஆதரவாளராக இருப்பார்கள்.
கட்சி, மறைமுகமாக அவர் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்’
என்று குழு அமைக்கும் திட்டத்தை தாமதப்படுத்துகிறது
எடப்பாடி தரப்பு. இந்தச் சூழலில், இரண்டாவது நாளாக நேற்று
செப்டம்பர் 30-ம் தேதி, ஓ.பி.எஸ்-ன் பொதிகை இல்லத்தில்
நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தன்
ஆதரவாளர்களிடம் வெடித்துவிட்டாராம் ஓ.பி.எஸ்.

“ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடந்தது?” என்று ஓ.பி.எஸ்
ஆதரவாளர்களிடம் பேசினோம். “கே.பி.முனுசாமி, மனோஜ்
பாண்டியன் ஆகியோர் காலையிலேயே வந்துவிட்டனர்.
அவர்களுடன் சிற்றுண்டி அருந்திக்கொண்டே அடுத்தகட்ட
அரசியல் நகர்வு குறித்து ஓ.பி.எஸ் விவாதித்தார். `மூணு
வருஷமா நாம ஏமாந்தது போதும். ‘வழிகாட்டுதல்குழு
அமைக்காம இனி எந்தச் சமாதானம் சொன்னாலும் நீங்க
அதை ஏத்துக்கக் கூடாது’ என்று முனுசாமி கூறியதை
ஓ.பி.எஸ் ஆமோதித்தார்.

`நாம ஒன்றிணைஞ்சதாலதான்
இரட்டை இலைச் சின்னம் கட்சிக்குக் கிடைச்சுது.
கட்சியையும் ஆட்சியையும் நாமதான் காப்பாத்தினோம்.
ஆனா, நம்மை ஏதோ துரோகிங்க மாதிரி பேசுறாங்க.
2012-ல சசிகலாவை அம்மா ஒதுக்கிவெச்சப்போ,
பல சொத்துகளை நிர்வகிக்குற பொறுப்பை அம்மாவே
என்னிடம் கொடுத்தாங்க. அந்த அளவுக்கு நான் நம்பிக்கைக்கு
உரியவனா இருந்தேன். என்னையவே தி.நகர் எம்.எல்.ஏ சத்யா
முறுக்கிட்டு வந்து நின்னது சரியாண்ணே?” என்று மனோஜ்
பாண்டியன் ஆவேசமாகவும், ஓ.பி.எஸ் எதுவும் பேசாமல்
அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயற்குழுவில் மனோஜ்
பாண்டியன் பேசிக்கொண்டிருந்தபோது, நாற்காலிகளை
யெல்லாம் தள்ளிவிட்டு ஆவேசமாக சத்யா சத்தம்
போட்டதைத்தான் மனோஜ் பாண்டியன் குறிப்பிட்டார்” என்றனர்.

இந்தப் பிரச்னைகள் முடியும்வரை தன் தரப்பிலிருந்து கட்சி
சம்பந்தமான அறிக்கை, கோப்பு எதற்கும் கிரீன் சிக்னல்
கொடுக்கப்போவதில்லை என்ற முடிவில் ஓ.பி.எஸ் இருப்பதாக
அவரது நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
`கட்சி உடையக் கூடாதுனு அமைதியா இருக்கேன்.
என் அமைதியை பலவீனமா நினைச்சுட வேணாம்’ என்று
எடப்பாடி தரப்பு ஆதரவாளர்களுக்கு சூசகமாகத் தெரிவித்தாராம்.

`என்னாச்சுண்ணே?’ என்று மனோஜ் பாண்டியன் கேட்டதும்,
`அணிகள் ஒருங்கிணைஞ்சபோது இரண்டு தரப்பும்
பேசிக்கிட்டதையெல்லாம் இப்ப வெளியில கசியவிட்டு
நம்ம பெயரைக் கெடுக்கத் திட்டம் போடுறாங்களாம்.
நான் பேச ஆரம்பிச்சா என்னாகும்?’ என்று கடுகடுத்தார்
ஓ.பி.எஸ். `சரி விடுங்க பார்த்துக்கலாம்’ என்று முனுசாமி
சமாதானப்படுத்தியதும், சென்னை பெருநகர வளர்ச்சிக்
குழுமத்தின் 265-வது குழுமக் கூட்டத்துக்கு கிளம்பிச் சென்றார்
ஓ.பி.எஸ். கட்சியில் இப்போதிருக்கும் இரட்டைத் தலைமை
நிலையே தொடர வேண்டும். தேர்தல் முடிந்ததும்,
முதல்வர் யார் என்பதை எம்.எல்.ஏ-க்களைக் கூடி
முடிவெடுத்துக்கொள்ளலாம் என்பது ஓ.பி.எஸ்-ன் நிலைப்பாடு.

சட்டமன்றத் தேர்தலுக்குள்ளாக வழிகாட்டுதல்குழுவை
அமைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். கட்சியிலும்
ஆட்சியிலும் அதிகாரத்தை விட்டுத்தர மறுக்கிறது எடப்பாடித்
தரப்பு.

முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை முன்மொழிந்தால்,
கட்சியின் பொதுச்செயலாளராக ஓ.பி.எஸ்-ஐ அறிவிக்கலாம்
எனச் சில சீனியர்கள் மத்தியஸ்தம் செய்தனர். இந்த டீல்
பற்றி இரண்டு தரப்பும் இன்னும் பேசவில்லை. நடப்பு நிலை
இப்படியே தொடர்கிறது” என்றனர்.

“எல்லாம் சரி. ஓ.பி.எஸ் மனதுக்குள் ஒளிந்திருக்கும் அந்த
ரகசியம்தான் என்ன?”- ஓ.பி.எஸ்-க்கு மிக நெருக்கமான
அ.தி.மு.க முக்கியஸ்தர் ஒருவரிடம் பேசினோம்.

“துரோகம்தான். எல்லாம் த்ரில் சினிமாக்களை மிஞ்சிய ரகம்”
என்றபடி பேச ஆரம்பித்தார். “ஜெயலலிதா மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டவுடன், சசிகலாவின் உறவுகள் மெள்ள
மெள்ள அ.தி.மு.க-வைக் கன்ட்ரோலுக்குள் எடுக்க
ஆரம்பித்தனர்.

அம்மா இருந்தவரை ஒதுங்கியிருந்த தினகரன்,
திவாகரனெல்லாம் கட்சிக்குள் நுழைந்தனர். சில மூத்த
அமைச்சர்களுக்கு சசிகலா தரப்பினர் இரவில் போன் போட்டு,
`நான் பார்த்து உனக்குப் பதவி வாங்கிக் கொடுத்தேன். இப்ப
பெரிய ஆளா ஆகிட்டே… கண்டுக்குறதே இல்லை…
இனி கட்சிக்கு நாங்கதான்’ என்று ஒருமையில் பேசியதை
அந்த அமைச்சர்கள் ரசிக்கவில்லை.

குறிப்பாக, கொங்குப் பகுதி அமைச்சர்களுக்கு இந்தக் குடைச்சல்
ஏரிச்சலை ஏற்படுத்தியது. முதல்வரின் பொறுப்புகளை
கவனித்து வந்த ஓ.பி.எஸ்., ஜெயலலிதாவின் மறைவுக்குப்
பிறகு முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். எல்லாம்
நல்லபடியாக நடப்பதுபோலத் தோன்றினாலும், கட்சியிலும்
ஆட்சியிலும் சசிகலா தரப்பினரின் கை ஓங்கியது சலசலப்பை
உருவாக்கியது.

எடப்பாடி தரப்புதான் ஆரம்பத்தில் ஓ.பி.எஸ்-ஐ கொம்பு
சீவிவிட்டார்கள் என்பது இப்போது ஓ.பி.எஸ்-ன் பின்னால்
இருப்பவர்களின் கருத்து. ஓ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக
போர்க்கொடி தூக்கவும், அவரது முதல்வர் பதவிக்கு செக்
வைத்தார்கள். ஓ.பி.எஸ் வெறுத்துப்போய் தர்மயுத்தம்,
சமாதி தியானம் என்றெல்லாம் இறங்கவும், சசிகலா
தரப்புக்கும் ஓ.பி.எஸ் தரப்புக்கும் இடைவெளி அதிகமானது.

அப்போது `இதுக்கெல்லாம் கவலப்படாதண்ணே’ என்று
சொன்ன பலரும் பிறகு எடப்பாடி பக்கம் சாய, ஓ.பி.எஸ்-ஸால்
அதைத் தாங்க முடியவில்லை என்கிறார்கள்.

ஓ.பி.எஸ்-ஐ விரட்டிவிட்டாகிவிட்டது. `அடுத்தது யார் முதல்வர்?’
என்கிற கேள்வி சசிகலா வட்டத்தில் எழுந்தது. தினகரன்,
வெங்கடேஷ் எனப் பலருக்கும் முதல்வர் நாற்காலி மீது ஆசை
முளைத்தது. சசிலாவை முதல்வராக முன்னிறுத்தும் வியூகத்தை
தினகரன் வேகப்படுத்தினார்.

இது மறைந்த ம.நடராசனுக்குப் பிடிக்கவில்லை. `டெல்லி
கோபமாகிவிடும். நம் மீதான தவறான பார்வை மறையட்டும்.
அதுவரை அமைதியாக இருங்கள். சிறுபான்மைச் சாதியைச்
சேர்ந்த ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுங்கள்’ என்று அவர்
அட்வைஸ் செய்தார்.

ஆனால், டெல்லியைக் கோபப்படுத்தியே தீருவது என்பதில்
தினகரன் தெளிவாக இருந்தார். அப்போதுதானே சசிகலாவை
டெல்லி கைது செய்யும், தனக்கு முதல்வர் சான்ஸ் அடிக்கும்
என்று அவர் காய்நகர்த்தினார். அதற்கு ஏற்றாற்போல,
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாகி,
சசிகலா சிறை செல்ல வேண்டிய சூழல் உருவானது.

புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டிய காலக்கெடு
முற்றியது. அன்றைக்கு தகவல் தொடர்புத்துறை அமைச்சராக
இருந்த செங்கோட்டையனின் பெயர் முதல்வர் பதவிக்கு
பலமாக அடிபட்டது. அவருக்காக எவ்வளவு செலவு செய்யவும்
தயார் என்று அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி
உத்தரவாதமளித்தார்.

சத்யராஜ் நடித்த `அமைதிப்படை’ படக் கதையாக அந்தச்
சூழலில் அமாவாசையாக மாறி நின்றார் எடப்பாடி. `கட்சியில
எனக்கு சீனியர். அம்மாவோட பிரசாரப் பயணத்தையெல்லாம்
வடிவமைத்தவர் அண்ணன் செங்கோட்டையன். அவர்தான்
முதல்வர் பதவிக்குத் தகுதியானவர்’ என்று சசிகலாவிடம்
ஸ்டண்ட் அடித்த எடப்பாடி, செங்கோட்டையனுக்கு பணபலம்
போதாது என்கிற கருத்தையும் கட்சிக்குள் பரப்பினார்.

ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுமென்றால் பணபலம் அவசியம்.
அன்று கூவத்தூரில் குழுமியிருந்த எம்.எல்.ஏ-க்களை
பா.ஜ.க-வுக்குக் காவு கொடுக்காமல் தடுப்பதற்கு பெரிய விலை
கொடுக்க வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு
செங்கோட்டையினிடம் சக்தியில்லை.

என்ன செய்வது என சசிகலா யோசித்துக்கொண்டிருந்த
நிலையில், சிலர் மூலமாகத் தன் பெயரை முன்னிறுத்தினார்
எடப்பாடி பழனிசாமி. `நெடுஞ்சாலைத்துறை அமைச்சரா
இருக்கறதால எவ்வளவு செலவு வந்தாலும் எடப்பாடி
சமாளிச்சுக்குவார். நீங்க சிறைக்கு போன கொஞ்ச நாள்லயே
உச்ச நீதிமன்றத்துல மறு சீராய்வு பெட்டிஷன் போட்டு
விடுதலையாகிடலாம். ஓ.பி.எஸ்-ஐ விட தீவிர விசுவாசி
எடப்பாடி’ என்றெல்லாம் தன்னைப் பற்றிப் பேசவைத்தார்.
அவர் திட்டம் பலனளித்தது. 2017, பிப்ரவரி 16-ம் தேதி
சசிகலா ஆதரவுடன் முதல்வராக அரியணை ஏறினார்.

சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ்-ஐ கொம்புசீவி வெளியேற்றி
விட்டு, 40 எம்.எல்.ஏ-க்களுடன் அவருக்கு ஆதரவு தருவதாக
அவரையும் ஏமாற்றிவிட்டு, செங்கோட்டையனை முதல்வர்
வேட்பாளராக ஒருபக்கம் முன்னிறுத்தி, மறுபக்கம்
அவருக்குப் பணபலம் போதாது என்று சசிகலாவைக்
குழம்பவைத்து, கடைசியில் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டார்
எடப்பாடி பழனிசாமி.

எவ்வளவு பெரிய திட்டம் பாருங்கள்… தங்கள் கன்ட்ரோலில்தான்
எடப்பாடி இருப்பார் என்று சசிகலா உறவுகள் நம்பியது தவறு.
அவர்களைக் குண்டுக்கட்டாக வெளியே வீசியெறிந்ததும்
எடப்பாடிதான்.

தன்னிடம் எடப்பாடி தரப்பு பேசிய விவகாரங்களையெல்லாம்
ஓ.பி.எஸ் பொதுவெளியில் பேச ஆரம்பித்தால் யாருக்கு நஷ்டம்…

அணிகள் ஒன்றிணைந்தபோதே, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு
ஓ.பி.எஸ்தான் முதல்வர் வேட்பாளர் என்று பேசப்பட்டது.
இவையெல்லாம் எடப்பாடிக்கு இப்போது மறந்திருக்கும்.
காலம் அதை ஞாபகப்படுத்தும்” என்று முடித்துக்கொண்டார்
அந்த முக்கியஸ்தர்.

அ.தி.மு.க-வுக்குள் நிகழும் முட்டல் மோதல் நாளுக்கு நாள்
விஸ்வரூபமாகிவருகிறது. ஓ.பி.எஸ்-ன் இந்த `ரகசியம்
உடைக்கட்டுமா?’ எச்சரிக்கை கிடைத்தவுடன், மிரண்டு
போயிருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.

இவ்வளவு களேபரத்துக்குப் பிறகும் `முதல்வர் வேட்பாளர்
பழனிசாமிதான்’ என்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
அது அவரது சொந்தக் கருத்து என்று அமைச்சர்கள்
ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர்.

விளக்கமளித்துவிட்டாலும் `டேமேஜ்’ சரியாகவில்லை.
அக்டோபர் 7-ம் தேதி தீர்வு ஏற்படுமா?

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to அதிமுக ரகசியங்கள் -விகடன் சொல்வது எவ்வளவு தூரம் உண்மை…?

 1. புதியவன் சொல்கிறார்:

  இந்தப் பின்னணிச் செய்தியில், விகடனின் திமுக எஜமான்களின் லீலைகள் எவ்வளவு இருக்கிறது என்பது கேள்விக்குரியது. விகடனின் செய்திகள் நம்பக்கூடியவை இல்லை. நிற்க….

  அதிமுக என்பது தனித்த கட்சி. அதன் கொள்கைகள் balanced. அதாவது மதத்தைச் சார்ந்து இருக்கும் கட்சி அல்ல. அதனால்தான் பொதுமக்களின் ஆதரவு அதற்கு அதிகம். திமுக என்பது சிறுபான்மையினரையும், நாத்திகர்களையும் மட்டும் சார்ந்த கட்சி. அது இந்துக்களின் எதிரியாகச் செயல்படுகிறது.

  ஆரம்பகாலத்தில் நான் ஓபிஎஸ் அவர்களைத்தான் balanced leader என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டார் என்று பலர் சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் பிறகு நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் பார்த்த பிறகு, அதிமுக என்ற கட்சி ஓபிஎஸ் தலைமையில் இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் எனக்கு வருகிறது. அதிமுக, பாஜக எஜமானர்களின் பேச்சுக்கேற்றபடி ஆடக்கூடாது. ஏன் டிரம்பை/அமெரிக்காவின் மூக்கு நுழைப்பை இந்தியா-சீனா, இந்தியா-பாகிஸ்தான் விஷயத்தில் நாம் ஏற்றுக்கொள்வதில்லை? இந்தியா தனித்துவ நாடு, நம் பிரச்சனையை நாமே பார்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கைதான். அப்புறம் எதற்கு அதிமுக விவகாரங்களில், பாஜக எஜமானர்களின் பேச்சை கேட்கவேண்டும், அவர்களிடம் பஞ்சாயத்துக்குப் போய் நிற்கவேண்டும்? இதைச் செய்தது ஓபிஎஸ் அவர்கள்தானே. அதிமுக இரண்டுபட்டால் யாருக்குக் கொண்டாட்டம்? இந்த அடிப்படை எண்ணம் ஓபிஎஸ்ஸிடம் இல்லையே.

  பாப்புலர் லீடர் இல்லாத நிலையில், எடப்பாடியின் ஆட்சியில் என்ன குறை இருந்தது? (எனக்குப் பிடிக்காதது எந்தப் பிரச்சனை என்றாலும் பிரச்சனை எழ விடாமல் பிச்சைக் காசை விட்டெறிவது. எவன் செத்தாலும் அவனுக்கு அரசு பணம் கொடுப்பது. ஆனால் அதிமுக இதனைச் செய்வது திமுக அரசியல் செய்து ஆட்சிக்கு எதிர்ப்புணர்வைக் கொண்டுவரக் கூடாது என்பதற்காக என்று புரிகிறது). அதிமுக எடப்பாடி அவர்களின் தலைமையில்தான் தேர்தலைச் சந்திக்க வேண்டும். அதற்கு அச்சாரமாக, செயற்குழு, பொதுக்குழுவில் எடப்பாடியா ஓபிஎஸ்ஸா என்று தேர்தல் வைத்துப் பார்த்துக்கொள்ளட்டும். நிர்வாகிகள் என்ன நினைக்கிறார்களோ அதன்படி ஒற்றுமையாக தேர்தலைச் சந்திக்கட்டும். சசிகலா கும்பலை உள்ளே நுழைக்கவேண்டாம்.

  அதிமுக, பாஜக இல்லாமல்தான் தேர்தலைச் சந்திக்கவேண்டும். பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்தால் தோல்வி நிச்சயம், அதைவிட அதிமுகவின் பெயர் மிகவும் கெட்டுப்போகும். பாஜகவால் அதிமுகவுக்கு பைசா பிரயோசனம் கிடையாது. ஒருவேளை பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து (அழுத்தம் காரணமாக), 10 எம்.எல்.ஏ சீட்டுக்கு அதிகமாக பாஜகவுக்குக் கொடுத்தால், என்னைப்போன்ற அதிமுக அனுதாபிகள் நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள். திமுக கட்சி ஊழல், தேசத் துரோகம், மக்கள் விரோத கொள்கைகள், இந்து மத எதிர்ப்பாளர்கள். அந்தக் கட்சியைப் பிடிக்காத பெரும்பான்மையானவர்களுக்கு அதிமுகதான் வேண்டுமே தவிர பாஜக அல்ல.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.