“52 நாட்கள் SPB-யுடன் ” – சிகிச்சை கொடுத்த டாக்டர் தீபக் சுப்ரமணியன்…

….
….

….

52 நாட்களாக SPB மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது
நிகழ்ந்த மறக்க முடியாத நினைவுகளை மருத்துவர்கள் பகிர்ந்து
வருகின்றனர்.

எஸ்பிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது
வீடியோ வெளியிட்ட இளையராஜா,
‘பாலு எழுந்து வா,
உனக்காகக் காத்திருக்கிறேன்’,
என அதில் உருக்கமாகப் பேசியிருந்தார்.

இந்த வீடியோவை, எஸ்பிபி-யின் மகன் சரண் ஐசியுவில்
அவருக்கு போட்டுக் காண்பித்த போது, எஸ்பிபி கண்கலங்கி –
போனை அருகில் எடுத்து வரச் சொல்லி இரு முறை
இளையராஜாவுக்கு முத்தமிட்டாராம். இந்த தகவலை
அவருக்குச் சிகிச்சை அளித்த எம்ஜிஎம் மருத்துவமனை
மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

—————

எஸ்பிபிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான
டாக்டர் தீபக் சுப்பிரமணியன் தனது இன்ஸ்டாகிராமில்
உருக்கமாக ஒரு பதிவை இட்டுள்ளார்…

சகாப்தத்துடன் 52 நாட்கள் என்ற தலைப்பில் எழுதியுள்ள
அந்த பதிவிலிருந்து –

“மருத்துவமனைக்கு சென்றதும், முந்தைய நாள் இரவு
எதாவது முக்கியமாக நடந்ததா என மருத்துவ குழுவுடன்
டிஸ்கஸ் செய்வேன்.

அதன்பின், நோயாளிகளை ஒரு முறை பார்த்துவிட்டு வந்து,
அறுவை சிகிச்சை இருந்தால் அதற்காகச் சென்றுவிடுவேன்.
இதுதான் வழக்கமான நாட்களில் நடக்கும்.

ஆனால் எஸ்பிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
இந்த 52 நாட்களும் வித்தியாசமாக இருந்தது. எனது இதயத்துக்கு
நெருக்கமான ஒருவருடன் தினசரி 4 முதல் 5 மணி நேரம்
செலவிட முடிந்தது. நான் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்
போது பல இரவுகள் அவரது பாடல்களை கேட்டபடி கழித்தது
நினைவு இருக்கிறது. தூங்கச் செல்லும் வரை அவரது
பாடல்களைக் கேட்பேன். மகிழ்ச்சி, வருத்தம் என எந்த
மனநிலையிலிருந்தாலும் அவரது பாடல்கள் நிம்மதியைக்
கொடுக்கும்.

ஜூலை மாத இறுதியில் சரணுடன் இன்ஸ்டாவில்
பேசியிருந்தேன். அப்போது, வேலைக்காக அப்பா ஹைதராபாத்
செல்ல விரும்புவதாகக் குறிப்பிட்டார். தற்போதைய சூழலைக்
கருத்தில் கொண்டு நான் கவலைப்பட்டேன்.

இதையடுத்து ஆகஸ்ட் 3ஆம் தேதி எஸ்பிபி சார் என்னை
அழைத்துக் காய்ச்சல் இருப்பதாகத் தெரிவித்தார். கொரோனா
பரிசோதனை செய்ய சொன்னேன். துரதிர்ஷ்டவசமாக பாசிடிவ்
என ரிசல்ட் வந்தது.

அவரது வயதைக் கவனத்தில் கொண்டு உயரிய பாதுகாப்பு
கண்காணிப்பின் கீழ் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் அவருக்கு
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கத் தொடங்கினோம்.
இரண்டு மாதங்களாக அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது
என்பதைச் சொல்ல விரும்பவில்லை என்றாலும், அந்நாட்களில்
உணர்வுப்பூர்வமாக என்ன நடந்தது என்பதைப் பகிர
விரும்புகிறேன்.

எனக்குக் கடந்த 5 ஆண்டுகளாக எஸ்பிபி சாரை தெரியும்.
இந்த 5 வருடத்தில் ஒருமுறை கூட அவர் விஐபி போல் நடத்தச்
சொல்லி கேட்டதில்லை. பல நேரங்களின் என்னிடம்
அப்பாயிண்ட்மெண்ட் கேட்கும்போது, எனது உதவியாளர்களிடம்
எஸ்பிபிக்கு முன்னுரிமை கொடுத்து எந்தத் தொந்தரவுமின்றி
அழைத்து வரச் சொல்லுவேன். அதற்கு அவர், ‘என்னையும்
மற்ற நோயாளிகளைப் போலவே நடத்துங்கள். டாக்டர்,
என்னை மட்டும் சிறப்பாகக் கவனிக்க வேண்டாம்’ என்று கூறுவார்.

எங்களது மருத்துவமனையில் எடைகுறைப்பு அறுவை சிகிச்சை
துறையைத் தொடங்கிய போது எஸ்பிபியைத் தவிரச் சிறப்பு
விருந்தினராக வேறு யாரையும் அழைக்க எனக்குத்
தோன்றவில்லை. எனவே, அதற்கான அழைப்பிதழில் பத்மஸ்ரீ
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்று குறிப்பிட்டிருந்தோம்.
அழைப்பிதழைப் பார்த்ததும் அவர் தொலைபேசி மூலம்
தொடர்புகொண்டு, ‘எதற்கு தீபக்?, எஸ்பிபி என்று மட்டும்
போட்டால் போதும்’ என்று தெரிவித்தார்.

இந்த அளவுக்கு மென்மையான, கனிவான மனிதர்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது,
அவரை ஐ.சி.யுவிற்கு மாற்ற வேண்டியிருந்தது. இதை அவர்
எப்படி எடுத்துக்கொள்வார் என்று நான் மிகவும் கவலையாக
இருந்தேன். ஆனால் அவர், ”எந்தவித தயக்கமும் வேண்டாம் தீபக்
தேவையானதைச் செய்யுங்கள்” என்றார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், தீவிர
சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியபோதும், அவர் மூச்சுக் குழலுக்குக்
குழாய் செலுத்தும் வரை எனக்குப் பல முறை வீடியோ கால்
செய்தார்.

குழாயை உட் செலுத்துவதற்கு முன், டாக்டர் சபாநாயகம்
மற்றும் டாக்டர் நந்தகிஷோர் இருவரும் ஆக்ஸிஜன் செறிவு
குறைவாக இருப்பதால், என்ன செய்ய வேண்டும் என்று
அவருக்குத் தெரிவித்த ஒரு கணம் எனக்கு நினைவிருக்கிறது.

அப்போது அவர், “நான் சிறந்த மருத்துவர்களின் கைகளில்
இருக்கிறேன். எதை செய்ய வேண்டுமோ, செய்யுங்கள்” என்று
நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

அவருக்கு மீண்டும் சுய நினைவு திரும்பிய பிறகு,
அவருக்காகவே ஏற்படுத்தப்பட்ட சிறப்புத் தீவிர சிகிச்சைப்
பிரிவில் எழுதத் தொடங்கினார்.
ஒவ்வொரு முறை எழுதும் போதும், “உங்கள் அனைவருக்கும்
என் மரியாதையுடன்” என்றே எழுதத் தொடங்குவார்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை மரியாதையுடன்
நடத்தினார்.

சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைத்தார். அனைத்தும்
நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

அவர் மறைவுக்கு 2 நாட்கள் முன்பு வரைகூட அவரை தினமும்
20 நிமிடங்கள் எழுப்பி உட்கார வைப்போம். அவர் குணமடைந்ததைப்
பார்ப்பது நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால் திடீர் திருப்பமாக
மிக விரைவாக எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

எவ்வளவு வதந்திகள் கிளம்பினாலும் இந்த 52 நாட்கள்
என் வாழ்வின் பொக்கிஷமான நினைவுகளைக் கொண்டதாக
மாறிவிட்டது. அவரைக் கவனித்துக் கொள்ள அவர் என்னைத்

தேர்ந்தெடுத்தது எப்போதும் மறக்க முடியாதது. என்னால்
முடிந்தவரை அவருடன் நேரம் செலவிட்டது மகிழ்ச்சியாக
இருந்தது.

அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களை அவருடன்
ஒன்றாக்கிக் கொண்டார். இந்த காலகட்டத்தில் நாங்கள்
மிகவும் நெருக்கமாகிவிட்டோம். அப்போது நடந்த தினசரி
சந்திப்புகளை இப்போது இழக்கிறேன்.

மிக முக்கியமாக, ஒரு நபர் எவ்வளவு அடக்கமாகவும்,
வலிமையாகவும் இருக்க வேண்டும் என்பதை எஸ்பிபி சார்
எனக்கு கற்றுக்கொடுத்தார். அவர் போற்றத்தக்கப் போராளி.
கடைசி வரை போராடினார்.

எஸ்பிபி சார் அற்புதமான மனிதர்…… எப்போதும் அவரது
குரல் மற்றும் பாடல்கள் மூலம் நம்முடன்- வாழ்ந்து
கொண்டிருப்பார்…

.
———————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to “52 நாட்கள் SPB-யுடன் ” – சிகிச்சை கொடுத்த டாக்டர் தீபக் சுப்ரமணியன்…

 1. Tamilmani சொல்கிறார்:

  படிக்கும் போதே கண்ணில் நீர் வர வைத்து விட்டது மருத்துவர் தீபக் அவர்களின்
  பதிவு. நோயாளிக்கும் மருத்துவருக்கும் உள்ள புரிதல், நெருக்கம் ,ஒத்துழைப்பு
  அனைத்தும் ஒரு நோயாளி குணமடைய உதவும் காரணிகள். எல்லாம் இருந்தும்
  மிக சிறப்பான சிகிச்சை இருந்தும் திரு பாலு அவர்கள் மரணமடைந்தது நம் எல்லோரின்
  துர்அதிர்ஷ்டமே . சிறந்த பாடகராக மட்டும்மில்லாமல் சிறந்த மனிதராகவும் திரு SPB
  அவர்கள் இருந்துள்ளார் என்பது அவர் பங்கு கொண்ட பல நேர்காணல்கள் மூலம்
  அறிவோம். அவரின் குடும்ப மருத்துவர் நல்ல சிறப்பான சிகிச்சை அளித்தும் இன்று
  அவர் நம்மிடையே இல்லை என்பது WHAT IS PRE WRITTEN CANNOT BE RE WRITTEN என்ற
  தத்துவத்திற்கு வலு சேர்க்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.