….
….
….
….
பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்…
ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு!!
Updated: Tuesday, September 29, 2020, 8:47 சென்னை:
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய்
நோட்டுகளை 2016-ல் பிரதமர் மோடி ரத்து செய்து உத்தரவு
பிறப்பித்தார். நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த
நடவடிக்கை என்று கூறப்பட்டது.
இந்த நோட்டுக்களுக்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டு
புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, தொழிலதிபர்
சேகர் ரெட்டி பழைய நோட்டுகளுக்கு பதிலாக, வங்கி
அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2000 ரூபாய் நோட்டுகள்
வாங்கியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, சென்னையில் இருக்கும் சேகா் ரெட்டி வீட்டில்
சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவரது வீட்டில் இருந்து
பெட்டி பெட்டியாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்
செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
இது தொடா்பாக சேகா் ரெட்டி உள்பட அவரது நண்பா்கள்
6 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மொத்தம்,
ரூ.24 கோடி கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து, சேகர் ரெட்டி மற்றும் பிரேம்குமார்,
ஸ்ரீனிவாசுலு, ரத்தினம், ராமச்சந்திரன், பரம்சல் லோதா
ஆகிய 6 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இவர்கள் அனைவரும் ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக
சென்னை 11வது சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில் சேகர் ரெட்டிக்கு எதிராக –
போதிய ஆதாரங்கள் இல்லை
என்பதால் வழக்கை
முடித்து வைக்க வேண்டும்
என்று சிபிஐ
மனு தாக்கல் செய்து இருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜவஹா், சேகா் ரெட்டி உள்பட
6 போ் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த குற்றச்சாட்டின் கீழ் சேகர் ரெட்டி மீது மொத்தம்
மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதில்
ஏற்கனவே 2 வழக்குகளில் போதிய ஆதராங்கள் இல்லை என்று
முடித்து வைக்கப்பட்டன. தற்போது அவர் மீதான 3வது
வழக்கிலும் ஆதாரங்கள் இல்லை என்று சிபிஐ மது தாக்கல்
செய்து, அந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
( https://tamil.oneindia.com/news/chennai/cbi-has-acquitted-sekhar-reddy-in-the-illegal-money-exchange-case-398989.html?utm_source=/rss/tamil-
fb.xml&utm_medium=2.16.110.190&utm_campaign=client-rss )
——————————————————————————
துட்டு இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்பதற்கு
இது இன்னொரு உதாரணம்….
ஆதாரம் எங்கே கிடைக்கும்….?
எப்படி கிடைக்கும்….?
அதை யார் தேட வேண்டும் – கண்டு பிடிக்க வேண்டும்…?
வழக்கை பதிவுசெய்தவர்களே ஆதாரம் இல்லையென்று
சொல்லி கைவிட்டால் அதற்கு என்ன அர்த்தம்….?
அஞ்சு-பத்து இல்லை ….
24 கோடி ரூபாய்க்கு – அத்தனையும் புத்தம் புதிய
2000 ரூபாய் சலவை நோட்டு. வரிசையாக சீரியல் எண்
உள்ள நோட்டுக்கத்தைகள்.
2000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு,
அச்சடிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க சில வங்கிகள் மூலமாக
விநியோகம் செய்யப்பட்ட காலம்.
அத்தனைக்கும் ரெக்கார்டு இருக்கும். அச்சடிக்கப்பட்ட
இடத்திலேயே எந்த ஊருக்கு இந்த நோட்டுகள் அனுப்பி
வைக்கப்பட்டன…. எந்த ஊரில், எந்தெந்த வங்கிகளுக்கு
இந்த நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன என்பது
போன்ற விவரங்கள் நிச்சயமாக ரிசர்வ் வங்கியில் இருக்கும்.
அந்த சமயத்தில், நோட்டுகள் பிடிபட்ட சமயத்தில்,
தலைக்கு ஒரு 2000 நோட்டுக்கு மேல் யாருக்கும்
அதிகாரபூர்வமாக கொடுக்கப்படவில்லை; இந்த நிலையில்,
வங்கி உயர் அதிகாரிகளின் துணை/உதவியின்றி இந்த
நோட்டுகள் வெளிவந்திருக்க முடியாது.
1) இந்த நோட்டுகளை எந்த/எந்தெந்த வங்கியிலிருந்து அவர்கள்
பெற்றார்கள் என்று விசாரிக்கப்பட்டதா…?
2) இப்படி மொத்தமாக, கட்டு கட்டாக வங்கியில் நடைமுறை
உத்திரவுகளை மீறி அவர்கள் எப்படி பெற முடிந்தது
என்று விசாரிக்கப்பட்டதா…?
3) அதற்கான எழுத்துபூர்வமான ரிக்கார்டுகள் அவர்களது
அலுவலக பதிவேடுகளில் இருக்கின்றனவா…?
4) சம்பந்தப்பட்ட வங்கிகளில் உள்ள பதிவேடுகளுடன்
ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டதா…?
இவை எதிலும், எந்த ஆதாரமும் எப்படி இல்லாமல் போகும்…?
ஒருவேளை, அரசு அச்சகத்திலிருந்து நேரடியாக
இவர்களுக்கு கிடைத்திருக்குமோ….?
ஒருவேளை இவர்களே அச்சடித்திருக்க வாய்ப்பு உண்டோ…?
இதெல்லாம் எவ்வளவு சீரியசான விஷயங்கள்…?
அதெப்படி அவ்வளவு சுலபமாக ஆதாரம் இல்லை என்று
வழக்கு திரும்பப்பெறுகிறது….?
இப்போது, மக்கள் அனைத்தையும் மறந்திருப்பார்கள்
என்கிற நம்பிக்கையா …?
வாரம் ஒரு தடவை மட்டும் அனுமதிக்கப்பட்ட –
2000 ரூபாய்க்கு பழைய நோட்டை கொடுத்து, புதிய நோட்டை
வாங்க, கால்கடுக்க க்யூவில் நின்ற காலம் எனக்கு மறக்க
மறுக்கிறதே…
பெண்டாட்டி, பிள்ளைகளுடன், முதியோர்களுடன்
க்யூவில் நின்ற, இதைப் படிக்கும் நண்பர்களுக்கும் அந்த காலம்
மறந்திருக்காதே…
பின் எப்படி….? ஆதாரம் இல்லையென்று….?
மக்கள்
அத்தனை பேருமே
முட்டாள்கள்
என்று சிலர்
உறுதியாக நம்புகிறார்கள்.
அதை உறுதிப்படுத்தும் விதத்தில் தானே இந்த நாட்டின்
பெரும்பான்மை மக்களும் இருக்கிறார்கள்….?
.
——————————————————————————————————————————–
போங்க சார்,
24 கோடிக்கே புலம்ப வந்து விட்டீர்கள்.
எங்களுக்கு உரிய பங்கு வந்து விட்ட பின், 24 கோடி என்ன, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியானாலும் ஆதாரம் கிடைக்காமல்தான் போகும்.
எங்களுக்கு எங்கள் பங்கும் அரசியல் ஆதாயமும்தான் முக்கியம்
மோதி தலைமையிலான பாஜக அரசு, மிகவும் நேர்மையாக செயல்படுகிறது. ஊழல், சட்டத்தை வளைப்பது, குற்றவாளிகளைத் தப்பவிடுவது என்ற எதிலும் பாஜக ஈடுபடாது. நேர்மையில் அவர்கள் சமரசம் செய்துகொள்வதில்லை.
டிமானிடைசேஷன் நடந்தபோது 2000 ரூபாய், ஒருநாளைக்கு ஒரு நோட்டு மட்டுமே, அதற்கே தலைகீழாக நடந்து தண்ணீர் குடித்ததெல்லாம் நினைவில் வைத்திருக்கலாமா? அப்போ நான் வந்தபோது வெற்றி வீரனாக வெளிநாட்டிலிருந்து என் செலவுக்காக 6 நோட்டுகள் வாங்கிவந்தேன். (அதுக்கு ஹோட்டலில் சில்லரை கிடைக்காமல், சாப்பிட்டு முடித்தபிறகு அரை மணி நேரம் காத்திருந்ததெல்லாம் தனிக் கதை) இந்த ரெட்டி, அப்புறம் இன்னொரு கர்நாடக அமைச்சர் அவருடைய பூஜையில் கட்டுக் கட்டாக ஏகப்பட்ட 2000 ரூபாய் கட்டுகள் வைத்திருந்தது, இது மாதிரி பல நிகழ்வுகளை நாம் படித்த போது, நமக்கு ஜீரணிக்கும் சக்தி குறைவாக இருந்ததால் வயிறெரிந்தது உண்மை. அதுக்கு மத்திய அரசு என்ன செய்யும்? அவங்க நேர்மையாத்தான் இருக்காங்க, ஊழல், கொள்ளை விஷயத்தில் சமரசமே செய்துகொள்வதில்லை. ஏதோ கண்டெயினர் லாரியில் 400 கோடி ரூபாய் பிடிபட்டதுன்னாங்க, அப்புறம் வங்கியின் பணம்னு சொன்னாங்க, திருச்சில பஸ்ல 5 கோடி ரூபாய் பிடிபட்டது அது திருச்சி நேருவின் பணம்னாங்க, ஆனா பாருங்க.. ஆதாரம்லாம் கிடைக்காததுனால, யாரையும் குற்றம் சாட்ட முடியலை.
சிபிஐ அதிகாரிகளால் எந்த வழக்குக்கும் துப்பு கிடைக்கவில்லை என்பதால், கண்டுபிடிக்க முடியவில்லை. கொள்ளைக்காரர்கள் ஆதாரங்களை விட்டுச் செல்லாததற்கும், அவர்களே அந்த ஆதாரங்களை நீதிமன்றத்துக்கு அனுப்பாததற்கும் சிபிஐ மீது நாம எப்படி குற்றம் சாட்ட முடியும்? அவங்க பாவம்தானே. நாம குற்றம் சுமத்த வேண்டியது அந்தக் கொள்ளைக்காரர்களைத்தானே. அதுவும் தவிர, சிபிஐ என்பது தனி அமைப்பு. அவர்கள் சொதப்புவதற்கு மத்திய அரசை எப்படி குற்றம் சாட்ட முடியும்?
வள்ளுவர்தான் நம்மைப் போன்றவர்களுக்கு மண்டையில் உறைக்கும்படிச் சொல்லியிருக்கிறாரே… ‘நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ என்று. இன்னமும் கியூ, கால்கடுக்க நின்றது, சில பல ஜீவன்கள் முக்தியடைந்தது.. இவைகளை மறக்காமல்,..இந்த பஜனையே எத்தனை காலத்து நாம் பாடப்போறோம்?
என்ன நான் சொல்றது?
பல கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள்,
வர்த்தகர்கள் என்று பெரும் எண்ணிக்கையிலானவர்கள்
வங்கி அதிகாரிகளைப் பிடித்து வளைத்து,
கமிஷன் கொடுத்து கோடி கோடியாக
நோட்டுகளை மாற்றிக் கொண்டார்கள்.
பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு
கமிஷன் அடிப்படையில் (20 % 25% என்று)
புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டன.
வரிசையாக, ஊர் ஊராக, வங்கி பெயர்களுடன்
அப்போது பத்திரிகைகளில் பெயர்கள் வந்தன.
அவர்கள் மீதெல்லாம் வழக்கு தொடரப்படுவதாக
கூட மத்திய அரசு அறிவித்தது.
4 வருடங்கள் ஆகியும் இதுவரை எந்த வழக்கும்
போடப்பட்டதாகத் தெரியவில்லை;
பாஜக அரசு ஊழல் செய்தது என்று சொன்னால்
சொல்பவர்களுக்கு நாக்கு இல்லாமல் போய் விடும்.
மீடியாக்கள் வாயத்திறந்தால், வருமான வரித்துறையும்,
ஈ.டீ.யும் படையெடுக்கும்.
எதிர்காலத்தில் எப்போதாவது வேறு கட்சிகள்
எதாவது ஆட்சிக்கு வந்தால், தோண்டினால் சில
எலும்புக்கூடுகள் கிடைக்கலாம்.
பாரத் மாதா கீ ஜேய்; வந்தே மாதவரம்.
இது மட்டுமல்ல.
லட்சக்கணக்கான ‘ஜன்தன்’ கணக்குகளில்,
அன்றாடங்காய்ச்சிகளின் பெயரில்
பல கோடி ரூபாய்கள் டெபாசிட் செய்யப்பட்டு
பின்னர் வித்டிரா செய்யப்பட்டிருப்பதாக
செய்திகள் வந்தன.
பின்னர் பல ஆயிரக்கணக்கான கணக்குகளில்
இன்னமும் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு
அவை முடக்கப்பட்டு இருப்பதாகவும்
அவற்றில் பணம் எப்படி போடப்பட்டது என்று
விசாரணைகள் நடப்பதாகவும் செய்திகள் வந்தன.
கே.எம்.சார் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.
இது முட்டாள்களின் நாடு. இந்த மக்களுக்கு
இந்த மாதிரி தலைவர்கள் தான் கிடைப்பார்கள்.
இதை பொறுக்க முடியாதவர்கள் நாட்டை விட்டு
ஓடிப்போகலாம்.
மக்கள் முட்டாள்கள் என்று இதை விட வெளிப்படையாக சொல்ல முடியாது. ஒரு தனியார் வங்கியிலிருந்து நேரடியாக லாரியில் பணம் வந்தது என்று எழுதினார்கள். இப்போது ஆதாரம் இல்லை என்று புளுகுகிறார்கள்!
இன்னும் ‘ஆதாரம் இல்லை என்பதால் விடுவிக்க வேண்டும்..’ என்று எத்தனை வழக்குகளில் கேட்கப்போகிறார்களோ!
‘எரியற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி’ என்று பார்த்து அரசை தேர்ந்தெடுக்கும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்!