ஏன் மோசம் ……?

….
….

….

3 விவசாய சட்டங்களும் ஏன் மோசமானவை ……?

கிராமப் பொருளாதாரம் குறித்தும், விவசாயிகள் நில குறித்தும்,
நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பல ஆண்டுகளாக
தொடர்ந்து எழுதிவரும் பத்திரிகையாளர் திரு.பி.சாய்நாத்.

இப்போது தீவிர எதிர்ப்புகளுக்கிடையே மத்திய பாஜக அரசு
கொண்டு வந்திருக்கும் 3 விவசாய சட்டங்களால் ஏற்படக்கூடிய
விளைவுகள் பற்றி திரு.சாய்நாத், பிபிசி செய்தித்தளத்திற்கு
ஒரு பேட்டி அளித்திருக்கிறார்…

கேள்வி – பதில் வடிவில் அமைந்திருப்பதால்,
பல விஷயங்கள் தெளிவாகப் புரிய வருகின்றன…
அந்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே –

—————————————————-

கே. இந்திய அரசு விவசாயம் தொடர்பாக கொண்டு
வந்திருக்கும் இந்தச் சட்டங்கள் குறித்து
உங்களுடைய கருத்து என்ன?

…………..

ப. இவை மிக மோசமான சட்டங்கள். இதில் ஒரு சட்டம்
ஏ.பி.எம்.சி பற்றியது (APMC என்பது Agricultural Produce Market
Committeeஐக் குறிக்கும். தமிழ்நாட்டில் ‘தமிழ்நாடு வேளாண்
விளைபொருள் விற்பனைச் (முறைப்படுத்துதல்) சட்டம் 1987″
என்று அழைக்கப்படுகிறது).

இவர்கள் இந்த ஏ.பி.எம்.சியை ஏதோ ஒரு வில்லனைப்போல,
விவசாயிகளை அடிமையாக்கி வைத்திருப்பதைப் போலச்
சித்தரிக்கிறார்கள். அதெல்லாம் முட்டாள்தனம்.

இப்போதும்கூட, பெரிய அளவிலான விவசாய விளைபொருள்
விற்பனை, ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு
வெளியில்தான் நடக்கிறது.

இந்த நாட்டில் விவசாயி தன் பொருளை, வயல்காட்டிலேயே
விற்றுவிடுகிறார். தரகரோ அல்லது கடன் கொடுத்தவரோ
வந்து எடுத்துச் சென்றுவிடுவார். வெறும் 6-8 சதவீத
விவசாயிகளுக்கு இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்
மூலம் ஒரு பாதுகாப்பு கிடைக்கிறது. நம் விவசாயிகள் என்ன
கோருகிறார்கள்? அவர்கள் தங்கள் விளைபொருளுக்கு ஒரு
நிலையான விலையைத்தான் கோருகிறார்கள்.
தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டங்களில் நிலையான
விலையைப் பற்றிப் பேசியிருக்கிறார்களா? விலை கடுமையாக
ஏறி இறங்குகிறது. கடுமையாக பேரங்கள் பேசப்படுகின்றன.

விளைபொருளுக்கு நிலையான விலை என்பதே கிடையாது.

குறைந்தபட்ச ஆதரவு விலை நிச்சயம் இருக்கும் என்கிறார்
பிரதமர். அவர் சொல்வது உண்மையென்றால், சுவாமிநாதன்
கமிட்டி பரிந்துரைகளின்படி குறைந்தபட்ச விலை
நிர்ணயத்திற்கென ஒரு சட்டத்தைக் கொண்டுவாருங்களேன்.

எல்லோருமே ஒன்று திரண்டு அதை ஆதரிப்பார்கள்.
எந்தக் கட்சியால் அதை எதிர்க்க முடியும்? ஆனால், நீங்கள்
அதைச் செய்யவில்லை. அந்த வாக்குறுதியில் நீங்கள்
உறுதியாக இல்லை.

அடுத்ததாக, ஒப்பந்த விவசாய முறை குறித்த சட்டம்.
இந்தச் சட்டம் ஒப்பந்த விவசாய முறையை சட்டபூர்வ
மாக்குகிறது. என்ன வேடிக்கையெனில், இந்தச் சட்டப்படி
ஒப்பந்தங்களை எழுத்துபூர்வமாக பதிவுசெய்வது கட்டாயமில்லை.

விருப்பமிருந்தால் செய்யலாம் என்கிறார்கள்.

இப்போதுகூட ஒரு இடைத்தரகரும் விவசாயியும்
வாய் வார்த்தைகளை நம்பித்தானே ஒப்பந்தங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள்? இந்தச் சட்டத்திலுமே அதையே
தானே சொல்கிறீர்கள்?

எழுத்து மூலமாக இருந்தால்கூட,
பெரிய நிறுவனமானது ஒப்பந்தத்தை மீறினால் உங்களால்
என்ன செய்ய முடியும்? சிவில் கோர்ட்டுகளுக்குச் செல்ல
முடியாது.

அப்படியே நீதிமன்றத்திற்குச் சென்றாலும், பெரிய
நிறுவனங்களுக்கு எதிராக உங்களால் என்ன செய்ய முடியும்?

வழக்கறிஞரை வைத்துக்கொள்ள பணம் இருக்குமா
விவசாயியிடம்? பேரம் பேசும் சக்தியோ, ஒப்பந்தத்தைச்
செயல்படுத்தச் செய்யும் அதிகாரமோ விவசாயியிடம்
இருக்காது என்றால், அந்த ஒப்பந்தத்திற்கு என்ன அர்த்தம்?

அடுத்ததாக அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்.
மிகத் தீவிரமான நிலை ஏற்பட்டால் தவிர, இப்போதிலிருந்து
எதுவும் அத்தியாவசியப் பொருட்கள் இல்லை என்று
ஆக்கியிருக்கிறார்கள்.

விலை மிக மிக அதிகமாக உயர்ந்தால்தான் அந்தத்
தீவிர நிலை ஏற்படும். அவர்கள் அதற்கென ஒரு விதியை
வைத்திருக்கிறார்கள். அந்த விதிப்படி எந்தப் பொருளும்
எப்போதும் அத்தியாவசியப் பொருள் ஆகாது.

விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுப்பதற்காக இவற்றை
யெல்லாம் செய்ததாகச் சொல்கிறார்கள். உண்மையில்
விவசாயிகளின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

அவர்கள் எப்போதுமே எந்த அளவுக்கு வேண்டுமானாலும்
பொருட்களை சேமித்து வைக்கலாம். பெரிய கார்ப்பரேட்
நிறுவனங்கள்தான் தானியங்களை ஓரளவுக்கு மேல்
சேமித்துவைக்க கட்டுப்பாடு இருந்து வந்தது. இப்போது
அந்தக் கட்டுப்பாட்டை நீக்கியிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் விவசாயியின் பேரம் பேசும் சக்தி என்ன,
பெரிய நிறுவனங்களின் பேரம் பேசும் சக்தி என்ன?
இந்தச் சட்டம் மத்தியதர வகுப்பு மக்களையும் கடுமையாக
பாதிக்கும். எல்லோருமே இதனால் பாதிக்கப்படுவார்கள்.

—————————————————————-

கே. ஒப்பந்த விவசாய முறையைப் பொறுத்தவரை,
ஏற்கனவே கரும்பு விவசாயத்தில் இருக்கிறது. அதனைச்
சட்டபூர்வமாக்கியிருப்பதில் என்ன தவறு?

……………

ப. இவை எந்த மாதிரி ஒப்பந்தம் எனப் பார்க்க வேண்டும்.
இந்த ஒப்பந்தங்களில் விவசாயிக்கு எந்த அதிகாரமும்
கிடையாது. பேரம் பேசும் வலிமை இருக்காது. இதில் எழுத்து
மூலமான ஒப்பந்தம் தேவையில்லை.
சிவில் கோர்ட்களை அணுக முடியாது. விவசாயிகள்
கொத்தடிமைகளாக மாற, அவர்களே செய்துகொள்ளும்
ஒப்பந்தமாக இருக்கும்.

உதாரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் பாலின் விலையை
எடுத்துக்கொள்வோம். மும்பையில் ஒரு லிட்டர்
பசுவின் பால் 48 ரூபாய். எருமைப் பால் ஒரு லிட்டர் 60 ரூபாய்.

மாடு வைத்திருக்கும் விவசாயியிக்கு இந்த 48 ரூபாயிலிருந்து
என்ன கிடைக்கிறது? 2018-19ல் பெரிய அளவில் விவசாயிகள்
பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள்.

அதன் முடிவில் விவசாயிக்கு ஒரு லிட்டர் பாலுக்கு
30 ரூபாய் விலை தருவதாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால்,
பெருந்தொற்று துவங்கிய பிறகு, ஏப்ரல் மாதம் முதல்
விவசாயிக்கு கிடைப்பது லிட்டருக்கு 17 ரூபாய்தான்.

50 சதவீதம் விலை குறைந்துவிட்டது. இது எப்படி நடந்தது?

ஆகவே இந்தச் சட்டங்களின் நோக்கம், விவசாயத்தில்
கார்ப்பரேட் சக்திகளை வலுப்படுத்துவது தான். இது பெரும்
குழப்பத்தில்தான் போய் முடியும்.

இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் சொந்தப் பணத்தை
விவசாயத் துறையில் முதலீடு செய்ய மாட்டார்கள்.
பொதுமக்களின் பணம்தான் இதில் முதலீடு செய்யப்படும்.

பிஹாரில் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக்கூட சட்டமே
கிடையாது. 2006ல் நீக்கிவிட்டார்கள். என்ன ஆனது? கார்ப்பரேட்
நிறுவனங்கள் அங்கே விவசாயிகளுக்கு சேவை
செய்கின்றனவா? முடிவில் பிஹார் விவசாயிகள் சோளத்தை
ஹரியானா விவசாயிகளுக்கு விற்கிறார்கள்.
இதில் இருவருக்குமே லாபமில்லை.

———————————————————————


…………

கே. விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்
கூடங்களுக்கு வெளியிலும் விவசாயிகள் தங்கள்
பொருட்களை விற்கலாம் என அனுமதிப்பன் மூலம்
என்ன மோசமாகிவிடும்?

……….

ப. இப்போதும் பெரும்பாலான விவசாயிகள் ஒழுங்கு முறை
விற்பனைக்கூடங்களுக்கு வெளியில்தான் விற்கிறார்கள்.
அது ஒன்றும் புதிது அல்ல. ஆனால், சில விவசாயிகள்
விற்பனைக்கூடங்கள் மூலம் நன்மையடைகிறார்கள்.
அதையும் சிதைக்கப்பார்க்கிறார்கள்.

——————————————————————

கே. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தொடரும்
என்கிறது அரசு..

…………

ப. இருக்கும். அதன் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும்.
இப்போது பயன்படுத்துபவர்கள்கூட பயன்படுத்த மாட்டார்கள்.
இந்த தாராளமயக் கொள்கை கல்வி, சுகாதாரம் ஆகிய
துறைகளிலும் அமல்படுத்தப்பட்டது.
அதன் விளைவு என்ன ஆனது? அதுதான் விவசாயத்திலும்
நடக்கப்போகிறது.

இப்போது கொரோனா பரவும் வேகத்தில், உலகிலேயே
முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. இந்த அரசு போன
பட்ஜெட்டில் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளைக்கூட
தனியார் நிர்வாகத்தின் கீழ் விடுவதற்கு முன்வந்தது.
அரசுப் பள்ளிகள் இப்போதும் இருக்கின்றன. ஆனால்,
அவற்றுக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

ஏழைகள்தான் இந்தப் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள்.
அந்தப் பள்ளிகளையும் அழித்துவிட்டு, ‘நீங்கள் எந்தப்
பள்ளிக்கூடத்தில் வேண்டுமானாலும் படிக்கும் வாய்ப்பு
உங்களுக்கு இருக்கிறது’ என்று சொன்னால் அவர்கள்
எங்கே போவார்கள்?

அதேபோலத்தான், இப்போது வேளாண் ஒழுங்குமுறை
விற்பனைக்கூடங்களைப் பயன்படுத்திவருபவர்கள், எங்கே
செல்வார்கள்? அதுதான் நான் கேட்கும் கேள்வி.

—————————————————————

கே. இந்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்
திருத்தப்பட்டிருப்பதன் மூலம், பெரிய நிறுவனங்கள்
பொருட்களை வாங்கிச் சேமித்துவைக்க இருந்த தடை
நீக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் பெரிய அளவில் இனி
பொருட்களை வாங்குவார்கள். அதனால் விவசாயிகளுக்கு
கூடுதல் விலை கிடைக்காதா?

………..

ப. எப்படி ஐயா கிடைக்கும்? இந்த அத்தியாவசியப் பொருட்கள்
சட்டமே எதற்காகக் கொண்டுவரப்பட்டது? வர்த்தகர்கள்
விளைபொருட்களை பெருமளவில் சேமிக்கிறார்கள்,
பொருட்களைப் பதுக்குகிறார்கள் என்பதற்காகக் கொண்டு
வரப்பட்டது.

இப்போது எவ்வளவு பொருட்களை வேண்டுமானாலும்
பதுக்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறீர்கள். இதன் மூலம்
விவசாயிகளுக்கு விலை உயரும் என்கிறீர்கள்.

உண்மையில் விவசாயிகளுக்கு விலை உயராது.
கார்ப்பரேட்களுக்குத்தான் லாப உயர்வு கிடைக்கும்.

இந்த உலகத்தில் எப்போதுமே விவசாயியின் கையில்
பொருள் இருக்கும்போது விலை குறையும்.

வியாபாரிகள் கையில் பொருள் இருக்கும்போது
விலை உயரும். அதுதான் வழக்கம்.

இந்தச் சட்டங்களால் வியாபாரிகளின் எண்ணிக்கை
குறையும். சந்தையில் ஏகாதிபத்தியம் இன்னும் அதிகரிக்கும்.

அப்படியிருக்கும்போது விவசாயிகளுக்கு எப்படி விலை
கூடுதலாகக் கிடைக்கும்?

கார்ப்பரேட் மருத்துவமனைகள் இருக்கின்றன. இதனால்,
சாதாரண நோயாளிகளுக்கு என்ன பயன்? மும்பையில்

மருத்துவமனைகளில் ஒரு சாதாரண கோவிட் சோதனை
செய்ய ஆறாயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்து பத்தாயிரம்
ரூபாய் வரை ஆகிறது.

இந்த நிறுவனங்கள் இருப்பது லாபம் ஈட்டுவதற்காக.
நோயாளிகளுக்கோ, விவசாயிகளுக்கோ சேவைசெய்ய அல்ல.

————————————————————-

கே. விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள்
இருக்கும், குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்கும் என
அரசு சொல்கிறது. அப்படியென்றால் இந்தச் சட்டங்களை
ஏற்பீர்களா?
…………….

ப. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இருக்கும் என்பதை
நான்கூட ஏற்கிறேன். அரசுப் பள்ளிகள் இருப்பதைப்போல
இருக்கும். ஆனால், அரசு அதைக் கவனிக்காது.

குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்துச் சொல்கிறீர்கள்.
ஆனால், இது குறித்து இந்த அரசு சொல்வதை
நம்ப முடியவில்லை.

விவசாயத்திற்கான ஒட்டுமொத்தச் செலவு மற்றும்
அதோடு ஐம்பது சதவீதத்தை அதிகரித்து குறைந்தபட்ச
ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என்றது எம்.எஸ்.
சுவாமிநாதன் கமிட்டி.

எங்களைத் தேர்ந்தெடுத்தால் 12 மாதங்களில் எம்.எஸ்.
சுவாமிநாதன் கமிட்டி சொன்னதைப்போல குறைந்தபட்ச
ஆதரவு விலையை நிர்ணயிப்போம் என 2014ல்
நரேந்திர மோதி வாக்குறுதி அளித்தார்.

இந்த வாக்குறுதியை நம்பி எத்தனை லட்சம் விவசாயிகள்
வாக்களித்திருப்பார்கள்?

ஆனால், முதல் 12 மாதங்களில் என்ன செய்தார்கள் என்றால்,
எங்களால் இதைச் செய்ய முடியாது என நீதிமன்றத்தில்
பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்தார்கள். இது நடந்தது 2015ல்.

பிறகு 2016ல் விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்
சொன்னார், இது போல ஒரு வாக்குறுதியை தாங்கள்
எப்போதுமே தரவில்லையென்றார்.

2017ல் விவசாயத்துறை அமைச்சர் சொன்னார், “எம்.எஸ்.
சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை விடுங்கள்; மத்தியப்
பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌகான் செய்வதைப்
பாருங்கள்” என்றார். அந்த வருடத்தில்தான் அங்கு ஐந்து
விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

2017-18, 2018-19 ஆகிய இரு வருடங்களில் பட்ஜெட்டைத்
தாக்கல் செய்த அருண் ஜேட்லி, தாங்கள் எம்.எஸ்.
சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை ஏற்கனவே
நிறைவேற்றிவிட்டதாகச் சொன்னார்………!!!!!

அதாவது, 2014ல் எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி
பரிந்துரை நிறைவேற்றப்படும் என்பது;

2015ல் அதைச் செய்ய முடியாது என்பது;

2016ல் நாங்கள் அப்படி வாக்குறுதி கொடுக்கவேயில்லை
என்று சொல்வது;

2017ல் எம்எஸ். சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையெல்லாம்
தேவையில்லை, சிவராஜ் சிங் சௌகானைப் பாருங்கள்
என்று பேசுவது;

2018, 2019ல் நாங்கள் அந்த அறிக்கையை செயல்படுத்தி
விட்டோம் என்று சொல்லிவிடுவது – இதுதான் நடந்தது.

சுவாமிநாதன் கமிட்டி என்ன சொன்னது என்றால்,
உள்ளீட்டுச் செலவு, உழைப்புக் கூலி, நிலத்திற்கான வாடகை
எல்லாம் சேர்த்து அதிலிருந்து 50 சதவீதம் கூடுதலாக
குறைந்த பட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றது.

ஆனால், இவர்கள் உள்ளீட்டுச் செலவு மற்றும் உழைப்புக்
கூலியைச் சேர்த்து கோதுமைக்கு விலை நிர்ணயித்தார்கள்.
இது சுவாமிநாதன் கமிட்டி சொன்னதைவிட குவிண்டாலுக்கு
500 ரூபாய் விலை குறைவாக இருந்தது.

ஆகவே இவர்கள் சொல்வது பொய். இப்படி இவர்கள்
மாற்றிமாற்றி பேசும்போது, நான் ஏன் இவர்களை
நம்ப வேண்டும்?

விவசாய ஒழுங்கு முறை விற்னைக்கூடங்கள்தான்
வியாபாரிகளின் ஏகாதிபத்தியத்தை உடைத்தன.
விவசாயிகளுக்கு நியாயமான விலையைக் கிடைக்கச்
செய்தன. கல்வியிலும் சுகாதாரத்திலும் தாராளமயமாக்கம்
வந்தபோது என்ன நடந்ததோ, அது விவசாயத்தில் நடக்காது
என்பது என்ன நிச்சயம்?

——————————————————————–

கே. பல தருணங்களில் விவசாய ஒழுங்கு முறை
விற்பனைக் கூடங்களில் விற்பனை நடப்பதில்லை;
அரசும் கொள்முதல் செய்வதில்லை. அம்மாதிரி சூழலில் பெரிய

நிறுவனங்கள் விளை பொருளை
நல்ல விலை கொடுத்து வாங்குவதில் என்ன தவறு?

…………

ப. பெரிய நிறுவனங்கள் விவசாயிகளுக்கு லாபம்
தருவதற்காக வரவில்லை. பங்குதாரர்களுக்கு லாபம்
ஈட்டுவதற்காகத்தான் வருகிறார்கள். விவசாயிகளின்
விலையைக் குறைத்துத்தான் அந்த லாபத்தைப் பெறுவார்கள்.
விவசாயிகளுக்கு விலை அதிகமாகக் கொடுத்தால்,
அவர்களுக்கு எப்படி லாபம் கிடைக்கும்?
——————————————————————–

கே. இப்படி தாராளமயமாக்கம் செய்வதன் மூலம்,
குளிர்பதன கிடங்குகள் அமைப்பது போன்ற விவசாயக்
கட்டமைப்புகளில் கூடுதல் தனியார் முதலீடுகள்
வரக்கூடும். இதை ஏன் தடுக்க வேண்டும்?

………….

ப. இது போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்கவென்றே
ஒரு நிதி இருக்கிறது. இதை ஏன் தனியாரிடம்விட வேண்டும்?

ஒரு அரசு தன்னுடைய பங்காக விவசாயிகளுக்கு என்ன
செய்யப்போகிறது?

இந்திய உணவுக் கழகம் கிட்டங்கிகளை கட்டுவதை
நிறுத்திவிட்டது. சேமித்துவைக்கும் பணியை தனியாரிடம்
அளித்தது. அதனால், பஞ்சாபில் விஸ்கி மற்றும் பீர்
ஆகியவற்றுடன் தானியங்களை சேமித்து வைத்திருக்கிறார்கள்.

தனியாரிடம் கிட்டங்கிகளைவிட்டால், அவர்கள் பெருமளவு
பணத்தை வாடகையாகக் கேட்பார்கள். அது இலவசமல்ல.
அரசு எந்த ஆதரவையும் அளிக்காது.

——————————————————————-

கே. 1991க்குப் பிறகு இந்தியா எல்லாத் துறைகளையும்
தாராளமயமாக்கிவிட்ட நிலையில், விவசாயத்தில் மட்டும்
ஏன் அதை எதிர்க்க வேண்டும்?

………..

ப. இதெல்லாம் 1991ல் துவங்கியதுதான். இதன் தத்துவம்
என்னவென்றால், திறந்த சந்தை என்பது சுதந்திரம்;
அரசு ஆதரவளித்தால் அது அடிமைத்தனம்.

திறந்த சந்தையில், விவசாயி வர்த்தகர்களின் கருணையை
எதிர்பார்த்திருக்க வேண்டும். அமெரிக்காவிலும்
ஐரோப்பாவிலும் விவசாயத்திற்கு எவ்வளவு மானியம்
கொடுக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். உலகிலேயே மிகப்
பெரிய அளவில் மானியங்கள், அமெரிக்காவிலும்
ஐரோப்பாவிலும் தரப்படும் விவசாய மானியங்கள்தான்.

ஆனால் – இந்த மானியங்களை விவசாயிகள் பெறுவதில்லை.
விவசாயம் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெறுகின்றன.
அதுதான் நடக்கப்போகிறது.

——————————————————————-

கே. இதற்குத் தீர்வு என்ன?
……………..

ப. விவசாயிகள் ஒன்றாக இணைந்தால், ஆயிரக்கணக்கான
உழவர் சந்தைகளை உருவாக்க முடியும். அவற்றை
விவசாயிகளே கட்டுப்படுத்துவார்கள். கேரளாவில் விவசாய
விளைபொருள் ஒழுங்குமுறைக் கூடம் கிடையாது.

அதற்கான சட்டமும் இல்லை. ஆனால் சந்தைகள் உண்டு.
ஆகவேதான் சொல்கிறேன், விவசாயிகளே கட்டுப்படுத்தும்
சந்தைகள் வேண்டும். இப்போதுகூட
நகரங்களில் அம்மாதிரி முயற்சிகள் நடக்கின்றன. அதைச்
செய்ய எதற்கு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்?

.
———————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஏன் மோசம் ……?

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… பாஜக அரசு, அமெரிக்க வியாபார நிறுவனங்களின் நன்மைக்காக நம் விவசாயிகளின் நன்மையைக் காவு கொடுக்கத் தீர்மானித்துவிட்டது. இப்போது ஏன் இந்தச் சட்டம் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படவேண்டும்? (உடனே யாரும் காங்கிரஸ்-திமுக ஆஹோ ஓஹோ என்று ஆரம்பிக்கவேண்டாம். பொம்மை மன்மோகன் அரசுதான் ஒரு நாளுக்கு 20 ரூபாய் கையில் வைத்திருந்தால் அவன் பணக்காரன் என்று சொன்னது, அரசு ஏழைகளுக்கு மட்டும்தான் உதவி செய்யும் என்று அப்போது அரசு சொன்னது, அமெரிக்காவின் அடிமையாக).

  // இந்த உலகத்தில் எப்போதுமே விவசாயியின் கையில் பொருள் இருக்கும்போது விலை குறையும். வியாபாரிகள் கையில் பொருள் இருக்கும்போது
  விலை உயரும். அதுதான் வழக்கம்.//

  இரு வரிகளில் பட் என்று உண்மையைச் சொல்லிவிட்டார். வியாபாரிகள் ஸ்டாக் வைத்தால் (பதுக்கல்) அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். தேவை ஏற்படும்போது அதிக விலைக்கு விற்க. அவர்கள் விவசாயிகளுக்கு உதவப் போவதில்லை. இப்போதுள்ள நடைமுறையில் 1000 ஏஜண்டுகள், குறு வியாபாரிகள் பயன் பெறும் இடத்தில் ஓரிரு கார்ப்பொரேட் கம்பெனிகள் பயனுறும் (1000 என்பது உதாரணம்தான். இது குறைந்த பட்சம் சில லட்சங்கள் இருக்கும், தமிழகத்தில் மட்டும்)

  நாட்டுக்கு எது மிக மிக அத்யாவசியம்? மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள், லைப்ரரீஸ், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளங்கள். இதையெல்லாம் கவனிக்காமல், தனியார் தனியார் என்று போவது நல்லதா? அரசு அதிகாரிகள், ஊழியர்கள் 95 சதவிகிதம் ஊழல் பேர்வழிகள், லஞ்சம் வாங்குபவர்கள். அதனை எப்படி control செய்வது, எப்படி முடிந்தவரை Profit Center போல குறைந்த அளவு ஆட்களைக்கொண்டு நடத்துவது என்று ஆராயாமல், என்னால் இந்த ஊழல்வாதிகளை மேனேஜ் செய்ய முடியவில்லை, அதனால் தனியாருக்குத் தாரை வார்க்கிறேன் என்று முடிவெடுப்பது என்ன நியாயம்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அடானி – குஜராத்தில், சென்னையில்
   கப்பல், துறைமுகம் பிசினசில் ஏற்கெனவே
   இறங்கி காலூன்றியாகி விட்டது.

   6 முக்கிய விமான நிலையங்களை
   மெயின்டெனன்ஸ் கான்ட்ராக்ட்
   என்கிற பெயரில்
   ஆக்கிரமிப்பு செய்தாகி விட்டது.

   நிலக்கரி சுரங்கள் ஏற்கெனவே
   நிறைய உண்டு. இப்போது புதிதாகவும்
   சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

   நிறைய மாநிலங்களில் மின்சக்தி
   உற்பத்தி நிலையங்களை உருவாக்கி,
   மின்சார உற்பத்தி, விநியோகத்தை
   கைப்பற்றியாகி விட்டது.

   மற்றவை நிறைய இருக்கின்றன.
   மாதிரிக்கு முக்கியமாக இவை போதும்..

   விவசாயத்தில் இதுவரை
   அடானி குழுமம் நுழையவில்லை;
   அவர்கள் எப்போது தான்,
   எப்படி இந்த துறையில் இறங்குவது…?

   இந்த சட்டங்கள் அவர்களுக்கு
   பெரிய அளவில் உதவி புரியக்கூடும்.

   முன்னொரு காலத்தில் –
   டாட்டா, பிர்லா என்று இருந்தார்கள்.

   பின்னர் அம்பானி குடும்பம்..

   தற்போது -அடானி குடும்பம்…

   வர்த்தகம் தழைத்தால் தான்
   வர்த்தக பிரமுகர்கள் தழைக்க முடியும்.
   வர்த்தக பிரமுகர்களும்,
   தொழிலதிபர்களும் தழைத்தால் தான்
   -அரசியல்வாதிகள் வளர முடியும்.

   ஆயிரக்கணக்கான கோடிகள்
   அரசியல் கட்சிகளுக்கு டொனேஷனாக
   வருகின்றனவே…
   அவை எதற்காக கொடுக்கப்படுகின்றன
   என்று நினைக்கிறீர்கள்…?

 2. jksmraja சொல்கிறார்:

  எல்லோரும் விவசாயிகள் பாதிக்கப்படப்போவதை மட்டுமே பேசுகிறார்கள். விவசாயிகள் பாதிக்கப்படப்போவது நூறு சதவிகிதம் உண்மை. அதைப்போல அவர்களுடன் சேர்ந்து சாதாரண குடிமக்கள் அனைவரும் பாதிக்கப்படப்போவதும் உண்மை. இன்னும் கொஞ்ச நாட்களில் நம்முடைய உணவுக்கான செலவு குறைந்தபட்சம் ஐம்பது சதவீதம் உயரும். இப்பொழுது மாதம் ஐந்தாயிரம் வரை செலவழிக்கும் குடும்பம் இனிமேல் குறைந்தது எட்டாயிரம் வரை செலவழிக்க வேண்டி வரலாம். வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். பட்டினி சாவுகள் அதிகரிக்கும்.

  காரணம், இப்பொழுது சில சமயங்களில் உணவு தானியங்கள் மற்றும் காய் கறிகள் மிகவும் குறைவான விலைக்கு கிடைக்கும். உதாரணம் தக்காளி வெங்காயம் போன்றவை நம்மால் கிலோ பத்து ரூபாய்க்கு வாங்க முடியும் . இது ஒரு உதாரணம் தான். இதைப்போல அனைத்தையும் சில சமயங்களில் மிகவும் குறைந்த விலைக்கு நம்மால் வாங்க முடியும். இனிமேல் பெரு நிறுவனங்கள் அனைத்தையும் பதுக்கி அவர்களின் லாபத்திற்காக ஒரு குறிப்பிட்ட விலைக்கும் கீழ் விற்பதற்காக பொருட்களை வெளியில் அனுப்பவே மாட்டார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.