எம்.ஜி.ஆர் – தன் அம்மாவின் கனவு குறித்து கூறியது ….!!!

….
….

….

எம்.ஜி.ஆர். ஒரு அற்புதமான மனிதர்.
மிகவும் வித்தியாசமானவர்.லட்சத்தில் அல்ல -கோடியில்
ஒருவர் தான் அவர் மாதிரி பிறக்கக்கூடும் என்பதற்கு
அவரது வாழ்க்கையே ஒரு உதாரணம்.

பாலக்காட்டு மலையாள நாயர் குடும்பத்தைச் சேர்ந்த
அவர் பிறந்தது இலங்கையில் – 1917-ல்.
இரண்டரை வயதிலேயே தந்தையை இழந்த அவர்
பிற்பாடு சிறுவயதில் வளர்ந்தது தன் தாய்மாமன்
இருந்த – கும்பகோணத்தில்….சிறு வயதிலேயே
பள்ளிப்படிப்பு நின்று போய் பாய்ஸ் நாடக கம்பெனியில்
மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்தார்.

1936-ல் முதல் படம்…. சதி லீலாவதி. ஆனாலும் கூட
14 வருடங்களுக்குப் பிறகு 1950-ல் தான் கதாநாயகனாக
முதல் வெற்றிப்படம் -மந்திரிகுமாரி

பின்னர் கூட – 37 வயதில்…1954-ல் தான்
இரண்டாவது வெற்றிப்படம் – மலைக்கள்ளன். அதன் பிறகு
தான் சூடு பிடிக்கத் துவங்கியது அவரது வாழ்க்கை…
தொடர்ந்து பல ஏற்றத்தாழ்வுகள். சரிவுகள் – உயர்வுகள்…

திரைப்படத்துறையில் யாரும் செல்லாத உயரத்திற்கு
சென்றார். வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார்.
மதுரை வீரன், நாடோடி மன்னன் போன்ற படங்கள்
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் அவரை
எடுத்துச் சென்றன. மக்களின் பேரபிமானத்தைப் பெற்றார்.

தான் சம்பாதித்தது அத்தனையையும் கணக்கே பார்க்காமல்
மற்றவர்களுக்கு அள்ளிக்கொடுத்தார். வள்ளல் என்று
புகழ் பெற்றார்…

பின்னர் அரசியலில் நுழைவு… செல்வாக்கு, புகழ்.
மகத்தான அரசியல் வெற்றிகள். தமிழக முதலமைச்சராக
உயர்த்துகிற அளவிற்கு மக்களின் அபிமானம்….
மறைந்து 33 ஆண்டுகள் ஆனாலும் –
மக்கள் மனதில் மறையாமல் நிலைத்து நீடிக்கிறார் ….

———————————

பிற்காலத்தில் அவ்வளவு பெயரோடும், புகழோடும்,
செல்வத்தோடும் திகழ்ந்து,

மற்றவர்க்கெல்லாம் அள்ளி அள்ளிக்கொடுத்த வள்ளல்
எம்.ஜி.ஆர். முன்னதாக – ஒரு காலத்தில்,
தன் அம்மாவின் இறுதி ஆசையைக்கூட நிறைவேற்ற
முடியாமல் என்ன பாடு பட்டிருக்கிறார்….!

எம்.ஜி.ஆர்.அவர்கள் தனது தாயின் மீது வைத்திருந்த
பாசமும், பக்தியும் எல்லாருக்கும் தெரிந்ததே.

“நான் ஏன் பிறந்தேன்..?” என்கிற தலைப்பில் எம்.ஜி.ஆர்.
அவர்கள் 50 வருடங்களுக்கு முன்னர் ஆனந்தவிகடனில் எழுதிய
சுயசரிதையிலிருந்து அவரது தாய் குறித்த நினைவுகளைப் பற்றிய
ஒரு பகுதியைப் படித்தேன் –

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பி கீழே பதிகிறேன்…

————————————————————

என் தாயாருக்கு ஓர் ஆசை இருந்தது. தான் சாகும்போது
தன் சொந்த வீட்டில் சாகவேண்டும் என்ற ஆசை!
அப்போது, என் அன்னை மரணத்தோடு போராடிக்
கொண்டிருந்த நேரம். படுத்த படுக்கையில் இருந்தார்.
அவருடைய ஆசையை நிறைவேற்றுவது எப்படி என்ற
கவலை, தீர்வே காண முடியாத பிரச்னையாக
எங்கள் முன் நின்றது.

எங்களால் யாதொரு முடிவும் காண இயலவில்லை.
ஆனால், அன்னையின் ஆசையை ஈடேற்ற வேண்டும்
என்ற ஆர்வமும் மனத்துடிப்பும் பொங்கு கடலாக உள்ளத்தில்
கிளர்ந்தெழுந்த வண்ணம் இருந்தது.

சொந்த வீடு வாங்கும் பிரச்னைக்கு முன்னதாக,
இருக்கும் வீட்டிலிருந்து உடனே மாறவேண்டிய அவசியம்
ஏற்பட்டது. அப்போது, நாங்கள் அடையாறில் ஒரு வீட்டில்
குடியிருந்தோம். தாயின் உடல்நிலை காரணமாக,
நகரத்துக்குள் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படவே,

அடையாறிலிருந்து லாயிட்ஸ் வீதிக்கு இருப்பிடத்தை
மாற்றிக்கொண்டோம்.

மாதா மாதம் வாடகை தருவதாக நாங்கள் ஒப்புக்கொண்ட
தொகை 250 ரூபாய். இவ்வளவு தொகை கொடுக்க எப்படி
ஒப்புக்கொண்டோம் என்பது வேடிக்கைதான். ஏனென்றால்,
மாதம் நூறு ரூபாய் கூட நிரந்தர வருவாய் இல்லை.

தாயார் படுத்த படுக்கையாக இருந்தார். நடக்கவோ
சரியாகப் பேசவோ இயலாது. என்றும், எந்த நேரமும்
ஒரே ஒரு பிரச்னை மட்டும் அவர் மனத்தில்
அலைபாய்ந்துகொண்டே இருந்தது.

ஒரு சிறு குடிலாவது சொந்தமாக வாங்க வேண்டுமே
என்ற பிரச்னைதான் அது. அன்னையின் நெஞ்சிலிருந்து
வெளிவந்த இறுதி வேட்கையை நிறைவேற்ற
உணர்ச்சி வேகம் எங்களை உந்தித் தள்ளியது. ஆனால்,
அப்போதைய நிலைமை என்ன? பணம் திரட்ட வாய்ப்புதான்
என்ன? பதில் கூற முடியாது தவித்த பரிதாப நிலை
எங்களைப் பார்த்து எள்ளி நகையாடியது.

வாடகையைத் தவறாது செலுத்திவிட்டாலே போதும்
என்ற நிலையிலிருந்த எங்களுக்கு, `சொந்தவீடு’ என்பது
எத்தனை ஏணிகள் வைத்தாலும் எட்ட முடியாத ஓர்
ஆகாசக் கோட்டையாகவே இருந்தது. சிறிதளவுகூட
நம்பிக்கை ஏற்படவில்லை.

வருமானம் குறைவு என்பது மட்டுமில்லை. அந்த
வருமானத்துக்கும் உத்தரவாதம் கிடையாது. ஏதோ ஒரு
தொகை வரும். எப்போது வரும் என்று தெரியாது.

கிடைத்துக்கொண்டிருந்த வருமானம் திடீரென்று
நின்றுவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இப்படிப்பட்ட நிலையில் ஒருநாள், வீட்டு உரிமையாளர்
எங்களை அழைத்தார்.

“ரெண்டு வருஷமா வாடகை கொடுக்கறீங்க. இன்னும்
ஏழெட்டு வருஷம் கழிச்சு கணக்கு பண்ணினா மொத்த
கிரயத்தையே வாடகையா கொடுத்திருப்பீங்க.
அதைவிட இப்பவே விலைக்கு வாங்கிட்டா வாடகை
அவசியமிருக்காது. நல்லவங்களுக்கு வீட்டை
கொடுத்தோம்ங்கிற மனநிம்மதி எனக்கும் ஏற்படும்” என்றார்.

மௌனத்தைத் தவிர வேறு எந்த முடிவையும் எங்களால்
அறிவிக்க முடியவில்லை. “எப்படியாவது வாங்கிடுங்க.
வேற யாருக்கும் கொடுக்கப்போறதில்லே. எத்தனை
வருஷமானாலும் உங்களுக்குத்தான் அந்த வீடு”
என்றார் ஏ.வி.ராமன்.

எங்களால் காலம் கடத்தப்பட்ட நிலையிலும், தமது வாக்கு
மாறாமல் எங்களுக்கு அந்த வீட்டை சொந்தமாக்கினார்.

`சொந்த வீட்டில் சாகணும்’ என்று எங்கள் அன்னையார்
ஆசைப்பட்டார்கள். அவர்கள் இறந்தபோது அந்த வீடு
சொந்த வீடு இல்லை.

ஆனாலும் அவர்கள் இறந்த அந்த வீடு, அவர்களின்
சொந்தவீடாக அதாவது எங்களின் `தாய் வீடாக’
ஆகிவிட்டது.

.
———————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to எம்.ஜி.ஆர் – தன் அம்மாவின் கனவு குறித்து கூறியது ….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    தமிழ்நாட்டில் மூன்று பெர்சனாலிட்டிகள், அவங்க அம்மாவை ரொம்பவே மதித்துப் போற்றினாங்க, வறுமையிலிருந்து நல்ல நிலைமைக்கு வந்தாங்க. அவங்க யாருன்னு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவங்க ஆரம்பகாலம் கொடிய வறுமை.

    அதுல ஒருத்தர் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு மத்தவங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தவர். இன்னொருவர், தன் ஆரம்பகால வறுமையை எண்ணியோ என்னவோ எச்சில் கையால் காக்கையைக் கூட ஓட்டாமல் பலப் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டுப் போனார். மூன்றாமவர், தன் திறமையால் முன்னுக்கு வந்தார், ஆனால் அவரும் கஷ்டப்படுகிறவர்களுக்கு வெளிப்படையாக உதவினவர் இல்லை. ஆனால் நாம் எல்லோரும் அனேகமா அலுக்காமல் தெரிந்துகொள்ள விரும்புவது எம்.ஜி.ஆர் அவர்களில் கொடைவள்ளல் தன்மையைத்தான். அவரைப் பற்றி பிறர் எழுதிய புத்தகங்களிலெல்லாம் அவர்களது அனுபவமாக இதனைக் குறிப்பிட்டிருப்பார்கள். அதனால்தான் தமிழக மக்கள் உள்ளங்களில் அவர் என்றும் வாழ்கிறார்.

    ஒரு கொடுமையான சூழலில், கஞ்சி காய்ச்சக்கூட எதுவும் வீட்டில் இல்லை என்ற சூழலில் அம்மாவிடம், தேவர் அரிசி கொடுத்ததற்காக அவருக்கு திரையுலகில் எவ்வளவோ உதவியிருக்கிறார் எம்.ஜி.ஆர். தனக்கு உதவி செய்தவர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் பன்மடங்கு அவர் திருப்பி உதவி செய்திருக்கிறார் (அந்த இன்னொருவர், உதவிகளைப் பெற்றுக்கொண்டு, தன் பணத்தில் உதவாமல், இன்னொரு அல்லக்கையை கை காட்டி விட்டு அவனிடமிருந்து அடித்துக்கொள் என்று சிலருக்கு வழி செய்திருக்கிறார்). தன் மீது அவநம்பிக்கையோடு இருந்த வலம்புரி ஜானுக்கும், தன் கடைசி மாதத்தில், பொங்கலுக்கு தோட்டத்துக்கு வா, தருகிறேன் என்று சொன்னவர், டிசம்பர் இறுதியில் மறைந்துவிடுகிறார். ஆனால் அவரது அமைச்சரவையில் இருந்த ஈரோடு முத்துச்சாமி, எம்ஜிஆர் மறைந்த பிறகு, வலம்புரியிடம் 3 லட்சம் தருகிறார்

    எம்ஜிஆர் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்ற வரலாற்று நூல் வள வள வெனவும் கடைசிப் பகுதிகள் சவ சவ என்று இருந்தாலும், அவ்வளவு ஏழ்மைத் தன்மையிலிருந்து தன் குணங்களினால் மக்கள் மனதில் உயர்ந்த மனிதர் என்ற மரியாதை அவர்மீது நமக்குப் பிறக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.