….
….
….
பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும்
விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி
பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்றன.
விவசாயிகளைக் காக்கவே இந்த சட்டங்கள் என்று
மத்திய பாஜக அரசு சொல்கிறது…
ஆனால், அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து
ஒரே குரலில், இதை விவசாயிகளை அழிக்கும் சட்டங்கள்
என்று சொல்கின்றன…
———-
நம்மில் பலருக்கு இது பார்வையற்றவர்கள் யானையை
தொட்டுப்பார்த்து ஆளாளுக்கு கருத்து
சொல்வதைப்போல தான் தோன்றுகிறது ….
சாதாரண மக்களுக்கு இந்த சட்டங்களைப்பற்றி சரிவர
புரியவில்லை….
உண்மையில் இந்த சட்டங்கள் எத்தகையவை….?
விவசாயிகளை இவை எந்தவிதங்களில் பாதிக்கும் அல்லது
நல்லது செய்யும் ….?
பிபிசி செய்தித்தளம் இந்த சட்டங்களைப்பற்றி
சில விவரங்களை தருகிறது…
இவற்றைப் பார்த்த பிறகும் –
குழப்பங்கள் தொடரவே செய்கின்றன… என்றாலும் கூட
ஓரளவு விவரங்களை புரிந்துகொள்ள இது உதவுகிறது.
————————————————————————
( https://www.bbc.com/tamil/india-54215998 )
விவசாயிகள் மசோதா: இந்திய அரசின் விவசாயச் சட்டங்கள்
சொல்வது என்ன? அவை ஏன் எதிர்க்கப்படுகின்றன?
பிபிசி தமிழ்
19 செப்டெம்பர் 2020,
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் சமீபத்தில்
நிறைவேற்றப்பட்ட விவசாயம் தொடர்பான மூன்று
சட்டங்களுக்கு பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில்
உள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து
வருகின்றனர். இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநிலத்தைச்
சேர்ந்த ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத்
கவுர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியில் இருந்து
விலகியிருக்கிறார். இந்தச் சட்டங்களில் இருப்பது என்ன,
ஏன் விவசாயிகள் இதனைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்?
விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு கடந்த
ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக்
கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த மூன்று
மசோதாக்களும் மக்களவையில் நடப்புக் கூட்டத் தொடரில்
நிறைவேற்றப்பட்டுள்ளன.
சட்டங்கள் என்னென்ன, அவை என்ன சொல்கின்றன?
மொத்தம் மூன்று சட்டங்கள்.
1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020,
2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக
(மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020,
3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு)
விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள்
சட்டம் 2020.
இவை ஆங்கிலத்தில் முறையே –
Essential Commodities (Amendment) Act 2020,
Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation)
Act 2020, The Farmers (Empowerment and Protection) Agreement
on Price Assurance and Farm Services Act 2020 –
என அழைக்கப்படுகின்றன.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக்
கொண்டால், இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற
பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி
செய்யவும் சேமித்து வைக்கவும் அரசு அவ்வப்போது
கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
இப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி
கட்டுப்பாடுகளை பின்வரும் சூழலில்தான் விதிக்க முடியும்:
அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை அவற்றின்
விலை கடந்த 12 மாதங்களின் சராசரி விலையைவிட
100 சதவீதம் அதிகரிக்க வேண்டும். தானியங்களைப்
பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி
விலையைவிட 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்படி
இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப் பொருட்களைப்
பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது.
விளைபொருட்களை உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும்
வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் விற்பனை
செய்யவும் விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் இந்த சட்டத்
திருத்தத்தின் மூலம் அளிக்கப்படும் என்கிறது மத்திய அரசு.
இதனால், இந்தத் துறையின் பொருளாதாரம் மேம்பட்டு,
நேரடி அந்நிய முதலீடு விவசாயத் துறையில் கிடைக்குமென
மத்திய அரசு நம்புகிறது. உணவு விநியோகச் சங்கிலியில்
தேவைப்படும் குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றைக்
கட்டத் தேவைப்படும் முதலீட்டை இந்தச் சட்டம் எளிதாக்கும்
என்பது இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களின் வாதம்.
இரண்டாவதாக உள்ள விவசாய விளைபொருள் வியாபாரம்
மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்)
சட்டத்தைப் பொருத்தவரை விவசாய விளை பொருட்களை
மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எந்த இடத்திலும்
வியாபாரமும் வர்த்தகமும் செய்ய வழிவகுக்கிறது.
இதன் மூலம், மாநில அரசுகளால் இயக்கப்படும் விவசாய
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வெளியிலும்
பொருட்களை விற்க வழிசெய்யப்படுகிறது. இதனால்,
விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்தி பொருட்களுக்குக் கூ
டுதல் விலை கிடைக்குமென அரசு கூறுகிறது.
ஆனால், விவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசு
கொண்டிருக்கும் கட்டுப்பாடு இந்தச் சட்டத்தின் மூலம்
இல்லாமல் போகிறது.
வேறு மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மற்றொரு
மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை
வாங்கிச் சொல்லலாம் என்பதால், ஒரு மாநிலத்தில் ஒரு
பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால்
ஏதும் செய்ய முடியாது என்ற அச்சமும் இருக்கிறது.
மூன்றாவது சட்டம், விலை உத்தரவாதம், விவசாய
சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020.
விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம்
ஒன்றைச் செய்துகொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், விவசாய கான்ட்ராக்ட்களுக்கு
இந்தச் சட்டத்தின் மூலம் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.
மத்திய அரசைப் பொருத்தவரை இந்த மூன்று சட்டங்கள்
மூலமும் விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு
நல்ல விலையைப் பெற முடியும், கூடுதலான வர்த்தக
வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறது. மேலும், நுகர்வோரும்
வர்த்தகர்களும் பயனடைவார்கள். ஆகவே மூன்று
தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய சட்டங்கள் இவை
என்கிறது மத்திய அரசு.
இந்தியாவில் விவசாயம் என்பது மாநில அரசின் கீழ் உள்ளது.
ஆகவே விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் இந்த
மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக
எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
மேலும், பெரிய விதை நிறுவனங்கள், கான்ட்ராக்ட் விவசாய
நிறுவனங்கள், மிகப் பெரிய சங்கிலித் தொடர் சூப்பர்
மார்க்கெட்களுக்கு ஏதுவாக இந்தச் சட்டங்களைக் கொண்டு
வந்திருப்பதாக அவை குற்றம்சாட்டுகின்றன.
விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு
வெளியிலும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய
இந்தச் சட்டம் அனுமதிப்பது பல மாநிலங்களில் எதிர்ப்பை
ஏற்படுத்தியிருக்கிறது.
விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் என்றால் என்ன?
விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்பது
தமிழ்நாட்டில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்
துறையின் கீழ் இயங்கிவரும் விற்பனைக் கூடங்களைக்
குறிக்கிறது. விவசாயத்தின் மூலம் உற்பத்தியாகும்
பொருட்களை வாங்கவும் விற்கவும் முறைப்படுத்தவும்
தமிழ்நாடு அராசல் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு
1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளை பொருள்
விற்பனை (ஒழுங்கு முறை) சட்டத்தை பிறப்பித்து இந்த
ஒழுங்கு முறைக் கூடங்களை உருவாக்கியது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 268 ஒழுங்குமுறை விற்பனை
கூடங்களும் 108 கிராமப்புற சேமிப்பு கிடங்குகளும்
108 தரம்பிரிக்கும் மையங்களும் செயல்பட்டுவருகின்றன.
நிலக்கடலை, புளி, எள், கரும்பு வெல்லம், நெல், பருத்தி,
கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, கொள்ளு, ஆமணக்கு,
தேங்காய், மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு,
துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மறைமுக ஏலத்தின்
மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த விற்பனை நடக்கும்போது விவசாயி, வர்த்தகர்,
வேளாண்துறை அதிகாரி ஆகியோர் இருப்பார்கள். பொருட்கள்
வாங்கப்பட்டவுடன் விவசாயிக்கு பணம் அளிக்கப்பட்டுவிடும்.
இந்த ஒழுங்கு முறை விற்பனைக் கூட முறையானது
தமிழ்நாட்டைவிட, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம்
ஆகிய மாநிலங்களில் மிகவும் கட்டுப்பாட்டுடன்
செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து
விளைபொருட்களை பெற்று, மறுபடி விற்கும் வர்த்தகர்களுக்கு
பொருளின் மதிப்பில் 1-2 சதவீதம் கட்டணமாக
வசூலிக்கப்படுகிறது.
இப்போது மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்தின்
மூலம் எல்லா மாநிலங்களிலும் விவசாய ஒழுங்கு முறை
விற்பனைக்கூடங்களுக்கு வெளியிலும் வர்த்தகர்கள் தங்கள்
பொருட்களை வாங்க முடியும்.
ஆனால், இதில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. விவசாய
ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 1-2 சதவீத கட்டணம்
விதிக்கப்படுகிறது. வெளியில் இந்தக் கட்டணம் இருக்காது
என்பதால், பலரும் வெளியிலேயே விற்பனை செய்ய
முயல்வார்கள். சில சமயங்களில் களத்திலேயே பொருட்களை
கிடைத்த விலைக்கு விற்கவும் விவசாயிகள் முன்வரக்கூடும்.
இதன் காரணமாகவே, விவசாய ஒழுங்கு முறை
விற்பனைக்கூடம் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில்
இந்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
பெரிய நிறுவனங்களுடன் விவசாயிகள் ஒப்பந்தம்
செய்து கொண்டு விவசாயம் செய்வதை ஒரு சட்டம்
உறுதிப்படுத்துகிறது.
“ஏற்கெனவே கரும்பு இந்த வகையில்தான் விவசாயம்
செய்யப்படுகிறது. அருகில் உள்ள சர்க்கரை ஆலைகளுடன்
ஒப்பந்தம் செய்துகொண்டு, விவசாயிகள் கரும்பைப் பயிட்டு,
ஆலைக்கு அளிக்கிறார்கள். ஆனால், ஆலைகள் பணம் தர
தாமதம் செய்வதை பல முறை நாம் பார்த்திருக்கிறோம்.
அப்படி நடந்தால், சிறிய விவசாயியால் என்ன செய்ய முடியும்?
நிறுவனங்களை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடியுமா?”
எனக் கேள்வி எழுப்புகின்றனர் எதிர்க்கட்சியினர்.
இந்த மூன்று சட்டங்களையும் தனித்தனியாக பார்க்க முடியாது.
ஒன்றாக இணைத்துதான் பார்க்கவேண்டும். சங்கிலித் தொடர்
சூப்பர் மார்க்கெட்டை நடத்தும் நிறுவனங்கள் பெரிய அளவில்
தானியங்களை வாங்கி சேமிப்பார்கள்.
ஆனால், அப்படி செய்ய முடியாத அளவுக்கு
தற்போது சட்டம் இருக்கிறது. அந்தக் கட்டுப்பாட்டை நீக்கத்தான்
இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்கின்றன
எதிர்க்கட்சிகள்.
இந்தக் கவலைகள் தவிர, தற்போது அரசு விவசாய
விளைபொருட்களுக்கு அறிவித்துவரும் குறைந்தபட்ச ஆதார
விலை என்பது, இனியும் தொடரும் என்பதை இந்தச் சட்டங்கள்
உறுதிசெய்யவில்லை என்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கவலை தெரிவித்துள்ளனர்.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மூன்று சட்டங்கள்
மாநிலங்களவையில் இன்று விவாதிக்கப்படவிருக்கிறது.
அங்கும் அவை நிறைவேற்றப்பட்டால், பிறகு குடியரசு தலைவர்
ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு இந்த சட்டம்
செயல்வடிவம் பெறும்.
———————————————————————
நேற்று பாராளுமன்றத்தில், மமதா பேனர்ஜியின் டி.எம்.சி.
கட்சியைச் சேர்ந்த எம்.பி. மஹூவா மொய்த்ரா இந்த சட்டங்களை
எதிர்த்து மிகக்கடுமையாகப் பேசினார்….
இந்த சட்டம் மாநில அரசின் உரிமைகளை பறித்துக்கொள்கிறது.
மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசால்
தன்னிச்சையாக கொண்டு வரப்பட்டிருக்கிறது.
மாநில சட்டங்களின்படி, ஒரு வர்த்தகர் பட்டியலிடப்பட்ட
விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்
என்றால் –
அவர் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அல்லது மாநில
சந்தைப்படுத்துதல் வாரியத்தால் வழங்கப்பட்ட உரிமத்தை
கொண்டிருக்க வேண்டும்.
அந்த கட்டுப்பாடு விதிக்கும் அதிகாரம் மாநில அரசிடம்
இல்லாமல் போனால், உரிமம் பெறாத வர்த்தகர்களிடம்
விவசாயிகள் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இந்த மசோதா விவசாயிகளின் நோக்கத்துக்கோ பண்ணை
வர்த்தகர்களின் நோக்கத்துக்கோ எவ்வித நலன்களையும்
தரப்போவதில்லை. இது கூட்டாட்சி முறையை ஒழிப்பதற்கான
அப்பட்டமான முயற்சி மட்டுமே.
நீங்கள் (பாஜக அரசு) அரசியலமைப்பு வழங்கிய பாதுகாப்பை
அகற்ற ஒரு பூதத்தை உருவாக்குகிறீர்கள்.
அந்த பூதம் உங்களையே ஒரு நாள் காவு வாங்கும்.
——————–
மஹூவா மொய்த்ரா பாராளுமன்றத்தில் ஆவேசமாகப்பேசிய
காட்சி வெளிவந்திருக்கிறது… கீழே தந்திருக்கிறேன்.
மஹூவா கூறுவது போல் இந்த சட்டங்கள்
உண்மையிலேயே பாஜக அரசால் உருவாக்கப்படும் “பூதமா…”
அத்தனை மோசமான விளைவுகளை உண்டாக்குமா…?
நாம் சொல்வதை விட –
இதன் விளைவுகளை அனுபவிக்கப்போகும்
விவசாயிகள் எப்படி இதை எதிர்கொள்ளப்போகிறார்கள்
என்பதைப் பொறுத்தே அது இருக்கும் என்றே சொல்லத்
தோன்றுகிறது.
—————————————-
—————————————–
.
——————————————————————————————————————————-
//இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி செய்யவும் சேமித்து வைக்கவும் அரசு அவ்வப்போது
கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
இப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளை பின்வரும் சூழலில்தான் விதிக்க முடியும்://
இந்தச் சட்டங்களை இன்னும் ஆழமாக நாம் பார்க்கணும், நான் புரிந்துகொள்ளணும் என்று நினைக்கிறேன். ஆனால் என் மனதில் தோன்றுவது இரண்டுதான்.
1. நம் நாட்டில் unorganized sectors, அதாவது சாதாரண வியாபாரிகள், காய்கறி விற்கும் தள்ளுவண்டிக்காரர்கள், ரோட்டோரம் விற்கும் பெண்கள், நிறைய அளவு அவர்களது அன்றாட கஞ்சிக்கு இந்தப் பிழைப்பைத்தான் நம்பி இருக்கிறார்கள். இது Retail Chains மற்றும் பெரிய கம்பெனிகளுக்குப் போவது சாதாரண மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் விவசாயிகளுக்கு எந்த அளவு நல்லது என்பதை விவசாயம் செய்துகொண்டு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தாம் சொல்லணும். ஏற்கனவே உழவர் சந்தை போன்றவை விவசாயிகளுக்கு லாபம் என்று சொல்லப்பட்டது. அதாவது உள்ளூர் வியாபாரிகள் விவசாயிகளுக்குப் போதுமான லாபம் வழங்காததால்தான் உழவர் சந்தை, which was giving vegetables at lower rates to consumers, கன்ஸ்யூமருக்கும் விளைவிப்பவருக்கும் லாபம் என்று சொல்லப்பட்டது. Middle Agents கொள்ளையடிப்பதைத் தடுக்கிறது என்றார்கள். இனி Middle Agents என்பவர்கள் பெரும் பணம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
2. மேலே எடுத்துப்போட்டிருக்கும் உங்கள் வரிகளைப் பாருங்கள். வெங்காயம் ஃபெப்ருவரியில் கிலோ 45 ரூக்கு விற்றது (அதற்குச் சற்று முன்பு கூட 120 ரூபாயைத் தொட்டது, அதற்கு மேலும் சென்றது). இப்போ விலை சென்ற மாதத்தில் இருந்த 6 கிலோ 100 ரூபாயைவிட 3 கிலோ 100 ரூபாய்க்கு வந்துள்ளது. ஆனால் அதற்குல் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்குத் தடை கொண்டுவந்துவிட்டது. இது பீகார் தேர்தலினால் இருக்கலாம். ஆனால் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்திற்கும், அது இப்போது செய்ததற்கும் (அதாவது பாராளுமன்றத்தில் கொண்டுவந்த சட்டத்திற்கு மாறாக இப்போது ஏற்றுமதியைத் தடை செய்துள்ளது). இது ஏன்? எப்படி இது விவசாயிகளுக்கு நன்மையாக இருக்கும்?
.
புதியவன்,
இந்த மசோதாக்கள் மூலமாக
சில விஷயங்கள் – வெளிப்படையாக
தெரிய வருகின்றன ….
1) அரசியல் சட்டத்தின்படி மாநிலங்களுக்கு
பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ள இடங்களில்/
உரிமைகளில், மத்திய அரசு தன்னிச்சையாக
ஆக்கிரமித்துக் கொள்கிறது.. வரம்பு மீறுகிறது…
( ஒருவேளை எந்த மாநில அரசாவது
நீதிமன்றத்திற்கு சென்றால்…??? )
2) விவசாயிகளை விட (அதாவது
உற்பத்தியாளர்களை விட ) அதனை
வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு
அரசு அதிக வசதிகளைச் செய்து
கொடுக்கிறது. அதாவது விவசாயம்
வர்த்தக மயமாக்கப் படுகிறது.
3) பாஜக தொடர்ந்து சாதாரண மக்களை
பாதிக்கக்கூடிய செயல்களில்
(அதாவது பணக்கார/வர்த்தகர்களுக்கு –
சாதகமான செயல்களில் ஈடுபட்டு)
மக்களிடம் தன் செல்வாக்கை கொஞ்சம்
கொஞ்சமாக இழந்து வருகிறது.
இது தொடருமேயானால் – உருப்படியான,
வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாமலே
பாஜக – மக்களிடையே செல்வாக்கிழந்து
போகும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
மாநில அரசுகளுக்கான பணிகளில் மத்திய அரசு நுழையக் கூடாது. இன்று மோதியை ஆதரிப்பவர்களுக்கு நாளை காங், திமுக போன்ற ஊழலில் ஊறிப்போனவர்கள் வந்தால் அதிலும் இந்திரா போன்றவர்கள் வந்தால் சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடும், மன்மோகன் போன்ற பொம்மைகள் வந்தால் ஜவுளித் துறையில் நடந்ததுபோல, மொரீஷியஸ் என்ற கை ஏந்தும் நாட்டிலிருந்து பல்லாயிரம் கோடி முதலீடுகள் வந்தது போல ஊழல் தலைவிரித்து ஆடும்.
கார்ப்பொரேட்டுகளை வளப்படுத்துவது கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிந்துகொள்வதற்குச் சமம். அதிகாரம் பரவலாக்கப்படணும். வியாபாரம் பரவலாக்கப்படணும். 500 விவசாயிகள் இருந்த இடத்தில் 700 ஆகப் பெருகினால் வியாபாரம் தழைக்கும், பலதரப்பட்ட குரல்களுக்கும் ஜனநாயகத்தில் வாய்ப்பு உண்டாகும். 500 பேரை அழித்து ஐந்து பேர் வியாபாரம் செய்தால் அமெரிக்காவைப் போல, அரசு வியாபாரிகளின் அடிமைகளாக ஆகிவிடும். ஆயுத வியாபாரிகளுக்காக போரை உண்டாக்குவது, மருத்துவ வியாபாரிகளுக்காக உள் கட்டமைப்பை நாசம் செய்வது, உணவு வியாபாரிகளுக்காக நாட்டின் உறவைப் பயன்படுத்தி குப்பை உணவுகளை அடுத்த நாட்டின் தலையில் கட்டுவது, மற்ற நாட்டுப் போக்குகளை மாற்றுவது, அரசியலுக்காக நான் என்ஜிஓ எனப்படும் புல்லருவிக் கூட்டங்களை, எட்டப்பர்களை, தேசத் துரோகிகளை பணத்தை இறைத்து வளர்த்துவிடுவது என அரசு செயல்படும். மக்களின் நலன் புறக்கணிக்கப்படும்.
அமெரிக்காவிலாவது தார்மீக நெறிமுறை உண்டு. நம் நாட்டிலோ அதுவும் மக்களிடையே கிடையாது. கல்வி அறிவு குறைவான, தேச நலனைப் பற்றிக் கவலையில்லாமல் சுயநலமாக இருப்பவர்கள் இந்தியாவில் 90%.
மோதி அரசு போகும் பாதை சரியல்ல.
நரேந்திர மோடி எப்பொழுதும் பெரிய கார்பொரேட் களுக்கு ஆதரவாகவே செயல் படுவார். ஏழைகளுக்கு ஆதரவாக செயல் படுவார் என்று எதிர்பார்ப்பதே பெரிய முட்டாள் தனம்.
“‘அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை அவற்றின்
விலை கடந்த 12 மாதங்களின் சராசரி விலையைவிட
100 சதவீதம் அதிகரிக்க வேண்டும். தானியங்களைப்
பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி
விலையைவிட 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்படி
இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப் பொருட்களைப்
பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது””
இந்தக் கட்டுப்பாடு உணவுப் பொருட்களைப்
பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாததால் இனிமேல் ஏகப்பட்ட
உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்கள் தோன்றும்.அவை எல்லாவத்தையும் பதுக்கி ஆர்டிபிசியல் டிமாண்டை ஏற்படுத்தி கொள்ளை லாபம் பார்க்கும்.
தயாநிதி மாறன் என்று நினைக்கிறேன், அவர் ஜவுளித்துறை மந்திரியாக இருந்தபோது ஒரு குற்றசாட்டு சொல்லப்பட்டது. அதாவது பருத்தி உண்மையாக, உதாரணத்திற்கு, நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தால் அதை அரசாங்க ரெக்கார்டுகளில் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு, இந்த ஆண்டு பருத்தி நமது நாட்டில் உள்ள மில்களில் தேவையை விட அதிகமாக விளைய இருப்பதால் பருத்தியின் விலை குறையும், அது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மந்திரி சபையில் விவாதிக்கப்பட்டு பருத்தியை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பார்கள். பெருநிறுவனங்களும் விவசாயிகளிடம் பருத்தியை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக சொல்லி வெளிநாடுகளில் உள்ள தங்களது சேமிப்புக்கிடங்கில் சேமித்து வைத்து கொள்ளும் . பருத்தி உண்மையிலேயே குறைவான நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு அதுவும் ஏற்றுமதியாகிவிட்டதால் உள்ளூர் மில்கள் பருத்தி இல்லாமல் திண்டாடும். விலையும் உச்சத்தை தொடும். ஆனால் அதனால் விவசாயிகளுக்கு ஒரு நன்மையையும் இருக்காது.
உடனே மந்திரிசபையை கூட்டி இந்த ஆண்டு பருத்தி ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தாலும், மழைபெய்யாததாலும் விவசாயிகள் தரமான விதையை வாங்கி பயிர் செய்யாததாலும் நாம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு குறைவாகவே பருத்தி விளைந்திருக்கிறது. ஆகையால் நமது உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு பருத்தி இறக்குமதி செய்ய அனுமதிக்கிறோம் என்பார்கள். உடனடியாக பெருநிறுவனங்கள் அதிகவிலைக்கு இறக்குமதி செய்வதாக சொல்லி தங்கள் சேமிப்பு கிடங்கில் இருந்து இறக்குமதி செய்து பெரும் லாபம் பார்ப்பார்கள்
இப்பொழுது செய்யப்பட்டுஉள்ள சட்ட மாற்றத்தின் மூலம் இந்த நாடகங்கள் தேவை இல்லாமல், பெருநிறுவனங்கள் நாம்நாட்டிலே பதுக்கி பெரும் லாபம் பார்க்கும். அதனால் விவசாயிகளுக்கு எந்த விதமான நன்மையையும் ஏற்படப்போவது இல்லை
நரேந்திர மோடி எந்த ஒரு முறைகேட்டையும் சட்டபூர்வமானதாக
மாற்றுவதில் வல்லவர்
குறுகிய காலத்தில் இந்த சட்டங்களால் சில நன்மைகள் ஏற்படலாம்.
விளை பொருட்களை சேமிக்கும் கிடங்குகள் உருவாக முதலீடுகள் கிடைக்கும். அதனால் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். அழுகும் பொருட்களுக்கு நிலவும் விலை ஏற்றத்தாழ்வுகள் குறையும். காய்கறிகள் சில சமயம் கிலோ 100 ரூபாய் சில சமயம் 200 ரூபாய் போன்ற ஏற்றத்தாழ்வுகள் குறையும்.
விளை பொருட்களை எங்கும் விற்கலாம் என்பதால் நாடு முழுவதும் உள்ள விளை ஏற்றத்தாழ்வுகள் குறையும்.
விவசாயிகளுடன் எவரும் ஒப்பந்தம் செய்துகொள்ள வகை செய்யப்படுவதால் futures வர்த்தகம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் கிடைக்கும் (https://fci.gov.in/procurements.php?view=89 படி 2010 இல் குவிண்டால் 1000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட நெல் 2020 இல் 1868 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. Futures வர்த்தகம் மூலம் ஒருவர் விவசாயிகளிடம் குவிண்டால் 2000 ரூபாய்க்கு அடுத்த வருடம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் – பயிர் விளையும் முன்னேயே — கொள்முதல் விலை 2000 க்கு குறைந்தாலும் விவசாயிக்கு நஷ்டம் இல்லை. அதிகம் ஆனால் வர்த்தகருக்கு லாபம். விவசாயிக்கு ஒப்பந்த விலை கிடைக்கும்.
நீண்ட கால விளைவுகள் கவலை அளிக்கின்றன.
சேமிக்கும் கிடங்குகளின் வாடகை லாபத்தை தின்றுவிடும். விவசாயிக்கு பலன் எதுவும் மிஞ்சாது. முதலீடு அதிகம் என்பதால் சிறு விவசாயிகளால்
சொந்தமாக இந்த கிடங்குகளை கட்டவோ பராமரிக்கவோ முடியாது
அமெரிக்காவில் இதே போல் உள் கட்டமைப்பை அதிகரித்து விலை பொருட்களை சேமிக்கும் கிடங்குகள் அதிகம் ஆன கடந்த நூற்றாண்டில் 6,000,000 பார்ம்ஸ் 2,000,000 ஆக சுருங்கிவிட்டது. விளை நிலங்கள் குறையவில்லை. பெரிய விவசாயிகள் சிறு விவசாயிகளை விழுங்கி விட்டார்கள்.
(https://www.washingtonpost.com/news/wonk/wp/2014/09/16/the-decline-of-the-small-american-family-farm-in-one-chart/)
இதே தான் இந்தியாவிலும் நடக்கும். இருக்கும் நிலம், விவசாயக்கூலி , பயிர் விலை , பயிரிட ஆகும் செலவு எல்லாம் ஒரு ஒழுங்கில் இருந்தால் தான் விவசாயி பிழைக்க முடியும். இந்த சட்டத்தினால் கொள்விலை குறையாது என்றாலும் அதிகரிக்கவும் செய்யாது. விலைவாசி ஏறிக்கொண்டே இருக்கும்போது விவசாயக்கூலி, பயிரிட ஆகும் செலவு இரண்டும் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கும். இருக்கும் நில அளவு மாறப்போவதில்லை. இதனால் சிறு விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக இருக்கும் நிலத்தை பெரிய விவசாயிகளுக்கும் நிறுவனங்களுக்கும் விற்க முனைவார்கள்.
அமெரிக்கா போன்ற அதிக மக்கள் தொகை இல்லாத நாடுகளுக்கு இதன் விளைவுகள் குறைவு. நம் நாட்டில் அப்படி இல்லை. அரசு கணக்குப்படியே 9 கோடி விவசாயக்குடும்பங்கள் இருக்கின்றன (சரியான கணக்கு நம் அரசிடம் இல்லை என்பது ஒரு குறை).
அமெரிக்காவில் நடந்தபடியே இந்தியாவிலும் நடந்தால் கிட்ட தட்ட 6 கோடி குடும்பங்கள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டி வரலாம்.
இன்னுமொரு விளைவு மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை குறிவைக்கிறது இந்த திட்டம். இதனால் மாநில அரசுகளுக்கு விவசாயிகள் மீது அக்கறை குறையும். மாநில திட்டங்களில் விவசாயத்துக்கு பெரிய ஒதுக்கீடு இருக்காது
மேலும் அதிகாரம் ஒரே இடத்தில் குவிவது பெரிய ஆபத்து
நம் நாட்டை பொறுத்தவரை கூட்டுறவே நன்மை பயக்கும்.
கூட்டுறவு பால் பண்ணைகளினால் கரோனாவில் பெரிய அளவு பால் கொள்முதல் குறைந்தாலும் உற்பத்தியாளர்களுக்கு பெரிய அளவு நஷ்டம் ஆகவில்லை. அரசு கூட்டுறவை பலப்படுத்தினால் நல்லது. அதிலுள்ள அரசியல் வாதிகளை மொத்தமாய் துடைத்தெறிந்தால் கூட்டுறவு சங்கங்கள் உருப்பட வழி கிடைக்கும். Amul க்கு கிடைத்த Kuriyan அவர்களைப் போன்றவர்கள் கிடைத்தால் இது சாத்தியம்.
தனிப்பதிவாகவும் போட நினைக்கிறேன்..