“ஆண்மை” – புதுமைப்பித்தனின் சிறுகதை…

….
….


….

( புதுமைப்பித்தன் – தமிழ் இலக்கிய உலகில்
“சிறுகதை மன்னன்” என்று புகழ்ந்து பாராட்டப்பட்டவர்.
புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம்.
அந்தக்காலத்திலேயே அழகு தமிழில் கதைகள்
படைத்தார். மிக இளம் வயதிலேயே, (1906-1948) தனது
42-வது வயதிலேயே காச நோயால் காலமானார்
புதுமைப்பித்தன்…. பிற்காலத்தில், அவரது எழுத்துகள்
தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, அவரது
குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாயும் உதவிப்பணமாக
வழங்கப்பட்டது…. )

புதுமைப்பித்தனின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று
இது….இந்தக் கதையின் எழுத்து நடையைப் படிக்கும்
யாரும் இது 1934-ல் எழுதப்பட்ட கதை என்று
சொன்னால் நம்பவே மாட்டார்கள்….ஆனால் சம்பவங்களைப்
பார்த்தபின் உணர்ந்து கொள்வார்கள்… )

——————————————————————————
“ஆண்மை” – புதுமைப்பித்தனின் சிறுகதை…
——————————-

ஸ்ரீனிவாசனுக்குத் தன்னுடைய கலியாணத்தைப் பற்றி
நினைவில் இல்லை. ஏன் என்றால் அது பெப்ரமின்ட் கல்யாணம்.

ஸ்ரீனிவாசன் பெற்றோர்கள் பெரியவர்களாகியும், குழந்தைப் பருவம்
நீங்காததால் பொம்மைக் கலியாணம் செய்ய ஆசைப்பட்டார்கள்.
வெறும் மரப் பொம்மையைவிட, தங்கள் நாலு வயதுக் குழந்தை
சீமாச்சு மேல் என்று பட்டது.

பிறகு என்ன? பெண் கிடைக்காமலா போய்விடும்? ஆத்தூர்ப்
பண்ணை ஐயர் மகள் ருக்மிணிக்கு இரண்டு வயது. கலியாணம் ஏக
தடபுடல். பெற்றோர் மடியிலிருந்தபடியே ஸ்ரீமான் ஸ்ரீனிவாசனுக்கும்
ருக்மிணி அம்மாளுக்கும் திருமணம் நடந்தது. அந்தச் சாக்கில்
சஷ்டியப்த பூர்த்திக்கு முன்பே, திருமண மேடையில் உட்காரும்
பாக்கியம் இரு சம்பந்திகளுக்கும் கிடைத்ததுதான் மிச்சம்.

கலியாணம் என்ற பதத்திற்கு அகராதியில் ஒரு அர்த்தம்
இருக்கலாம். கவிஞனது வியாக்யானம் ஒன்று இருக்கலாம்.
சட்டம், சாஸ்திரம் இவற்றில் வேறு இருக்கலாம். அதெல்லாம்
எனக்குத் தெரியாது.

நடைமுறை உலகத்திலே இந்த மகத்தான கலியப்தத்திலே,
திருமணம் என்றால் குலப் பெருமை கிளத்தும் கலகாரம்பம்
என்று பெயர்.

ஸ்ரீனிவாசன் தகப்பனார் ஆத்தூர்ப் பண்ணையாருக்கு
இளைத்தவரல்ல. ஆத்தூர்ப் பண்ணையாரும் ஸ்ரீனிவாசன்
தகப்பனாருக்கு மசியக் கூடியவரல்ல. இப்படி இருவருக்கும்
ஆரம்பித்த மௌனமான துவந்த யுத்தம், நாளுக்கு நாள் வளர்ந்தது.
சீர்வரிசை, மரியாதை, இத்யாதி…

இத்யாதி, பரமேச்வர ஐயர் (ஸ்ரீனுவின் தகப்பனார்) தனது
பெருமைக்கேற்றபடி, ஆத்தூர்ப் பண்ணை ஐயர் நடந்து
கொள்ளவில்லை என்ற கம்ப்ளெய்ண்ட் (complaint).
அதற்காதாரமாக, “மாப்பிள்ளையென்று துரும்பைக்
கிள்ளிப்போட்டாலும் விறைத்துக் கொண்டுதான் நிற்கும்;

அதற்கு முன் பண்ணைப் பெருமையின் ஜம்பம் சாயாது”
என்பார்.

ஸ்ரீனிவாசனும் ருக்மிணியும் துவந்த யுத்தத்தில் கலந்து
கொள்ளவில்லை. அதைப் பற்றி இருவருக்கும் தெரியாது.
பரமேச்வர ஐயர் ஒவ்வொரு வருஷமும் தன் புத்திரனைச் சம்பந்தி
வீட்டிற்கு அனுப்பி வைப்பார். பிறகு இல்லாத நோணாவட்டம்
எல்லாம் சொல்லிக்கொண்டு வருஷம் பூராவாகவும் பேச,
அது ஒரு ‘ஐட்டம் நியூஸ்’. ஸ்ரீனிவாசனுக்குச் சம்பந்தி
வீட்டிற்குப் போவதென்றால் ரொம்பக் குஷி. விஷயம் ருக்மிணி
இருக்கிறாள் என்ற நினைப்பினால் அல்ல, பக்ஷணம் கிடைக்கும்;

நாலைந்து நாள் ‘மாப்பிள்ளை’, ‘மாப்பிள்ளை’ என்ற உபசாரம்; விளையாட்டு, அப்பாவின் கோபமும் அடியும் எட்டாத இடம்;
மேலும் விளையாடுவதற்கு நிரம்பப் பயல்கள்; இதுதான்
மாமா வீடு என்றால் வெகு குஷி.

இப்படி பத்து வருஷங்கள் கழிந்தன.

சம்பந்தி சண்டை ஓயவில்லை.

சீமாவும் சின்னப் பையனாக இருந்து மெதுவாகப் பெரிய
மனிதனாகிவிட்டான். பரமேச்வர ஐயருக்குப் பையன் வளர வளர
குதூஹலம். ஆத்தூர்ப் பண்ணைக்குப் ‘புத்தி கற்பிக்க’
சாந்தி முகூர்த்தம் என்ற கடைசித் துருப்பை உபயோகிக்க வேண்டிய
காலம் நெருங்குவதில் மிகுந்த சந்தோஷம். ஆத்தூர்ப் பயலை என்ன செய்கிறேன் பார் என்று தம்

மனைவியிடம் வீரம் பேசினார். அவருடைய சகதர்மிணியும் தனது
கணவன் வீர புருஷன் என்பதில் மிகுதியும் களித்தாள்.

சீமாவும் மாமனார் வீட்டுக்குப் போவது படிப்படியாகத்
தடைபட்டுப் போயிற்று. முதலில் கொஞ்சம் வருத்தந்தான். ஆனால்
சீமா புஸ்தகம் படித்தவனல்லவா? அதில் ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று படித்திருக்கிறான். தந்தையின் சொல்
மந்திரத்தைவிட, கை மந்திரத்தில் அதிக அனுபவம் உண்டு.
சீமாவும் மாமனாரை வெறுக்க ஆரம்பித்தான்.

காரணமும் கொஞ்சம் உண்டு; ருக்மிணி முன்போல் அவனுடன்
விளையாடுவதில்லை. ஓடி ஒளிய ஆரம்பித்துவிட்டாள்.
ருக்மிணியின் தகப்பனாரும், அவன் அங்கு ஒரு தடவை
சென்றிருந்தபொழுது தகப்பனாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததை
எல்லாம் ருக்மிணி வந்து அவனிடம் சொல்லியழுதாள்.

அவளுக்குச் சீமாவின் தகப்பனாரை எப்படிப் பேசலாம் என்ற
வருத்தம். குழந்தையுள்ளத்தில் தன் இரகசியத்தைச் சீமாவிடம்,
அவன் அங்கு சென்றிருக்கும்பொழுது சொல்லிவிட்டாள்.
அதிலிருந்து ருக்மிணி என்றால் சீமாவிற்குத் தனது உள்ளம் என்ற
ஒரு பற்றுதல். ஆனால் மாமாவின் மீதும், அத்தையின் மீதும்
அடங்காத கோபம். அந்தக் கோபத்தில் ஏற்பட்ட வெறுப்பின் சாயை,
சீமாவின் மனவுலகத்தில் ருக்மிணியைத் தீண்டியதும் உண்டு.

ருக்மிணி புஷ்பவதியானாள்.

சடங்குகளும் ஏக தடபுடலாக நடந்தன. ஆத்தூர்ப் பண்ணை ஐயர்
நேரில் வந்து அழைத்தும், அங்கிருந்து ஒருவரும் போகவில்லை.

ருக்மிணிக்கு மிகுந்த வருத்தம். தன் சீமா வராமல் இருப்பாரா
என்று ஏங்கினாள். ஆத்தூர் ஐயரும் குழந்தை ருக்மிணிக்குச்
சாந்தி முகூர்த்தம் செய்விக்க ஒரு நல்ல தினத்தைப் பார்த்து,
பரமேச்வர ஐயருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

பரமேச்வர ஐயருக்கு இந்தக் கடிதத்தைக் கண்டதும் உள்ளம்
ஆனந்தக் கூத்தாடியது. தான் நெடுநாள் எதிர்பார்த்திருந்த தினம் வந்த உத்ஸாகத்தில் அன்று விருந்து நடத்தினார். பிறகு சம்பந்திக்கு
ஒரு நீண்ட கடிதம் ஏறக்குறையக் குற்றப் பத்திரம் ஒன்று எழுதி,
அதில் 5000 ரூபாய் கையில் தந்தால்தான் தன் மகன் சாந்தி
முகூர்த்தம் செய்வான் என்றும், மேலும்

சம்பந்தி ஐயரவர்களின் சீர்வரிசைக் குறைகளை எல்லாம்
இப்பொழுது சரிக்கட்டி மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும்
எழுதி இருந்தார்.

இந்த விஷயத்தில் சீமாவிற்கு மனத்தாங்கல்தான்;
இவ்வளவிற்கும் ருக்மிணி, பாபம் என்ன செய்தாள் என்று நினைத்தான். ஆனால் தகப்பனாருக்கு அடங்கிய பிள்ளை. சொல்லவும்
முடியவில்லை; மெல்லவும் முடியவில்லை.

இந்த விஷயத்தைப் பற்றி ருக்மிணி தனக்குக் கடிதம் எழுதுவாள்
என்று எதிர்பார்த்தான். அவள் எழுதினால் அவன் நாவல்களில் படித்த
கதாநாயகி போல், ருக்மிணியும் தன்னைக் காதலிக்கிறாள் என்று
அப்பாவின் கோபத்தையும் எதிர்ப்பதற்குத் தயாராகியிருந்தான்.

ஆனால் கடிதம் வரவில்லை.

சீமாவிற்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஒருவேளை
நாவல்களில் படித்த மாதிரி… வேறொருவனைக் காதலிக்கிறாளோ என்னவோ!

பொம்மைக் கலியாணம் செய்யப்பட்ட பெண், வேறொருவனைக்
காதலித்து… கடைசியாக பிரம்ம சமாஜத்தில் கலியாணம் செய்து
கொள்ளுவதுதான் நாவல் சம்பிரதாயப்படி சுவாரஸ்யமான முடிவு.

அப்பொழுதுதான் கதாசிரியனும், வாசகர்களே என்று ஆரம்பித்துக்
குழந்தைக் கலியாணத்தின் கொடுமைகளைப் பற்றி வியாசம் எழுத
முடியும். சீமாவின் உள்ளத்தில் என்னஎன்னவோ எண்ணங்கள்
எல்லாம் குவிந்தன. ஆனால் ருக்மிணியின் மீது ஒரு பெரிய
ஏமாற்றம்தான் மிச்சம்.

கடிதம் வரவில்லை.

சீமாவிற்கு ஒரு யோசனை தோன்றியது. ருக்மிணியை
இரகசியமாகக் கவனித்தால், அல்லது அவளைச் சந்தித்தால், தன்னைக் காதலிக்கிறாளா என்று கண்டுபிடித்துவிடலாமே என்று தோன்றியது. அப்பாவிற்குத் தெரியாது போக வேண்டும்.

சீமா இப்பொழுது சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறான்.

அப்பாவிற்குத் தெரியாமல் போவது அவ்வளவு கஷ்டமல்ல.
பள்ளிக்கூட மாணவனுக்கா தகப்பனாரிடம் இருந்து பணம் தருவிக்க
வழி தெரியாது?

ஆத்தூர் ஐயரவர்களுக்குப் பண்ணைத் திமிரும் சிறிது உண்டு.
பரமேச்வரன் தன் வழிக்கு வராமல் எங்கு போய்விடுவான் என்று
தைரியம். தன் சொல் சக்தியால், பரமேச்வர ஐயர் வேறு பெண்
சீமாவிற்குப் பார்க்க எத்தனித்தால் தடுத்துவிடலாம் என்ற தைரியம்
இருந்தது. பயல் சீமாவும் இப்படி இருப்பானா என்றுகூடச்
சில சமயம் பேசியதுண்டு. இதைக் கேட்ட சமயமெலாம்
ருக்மிணிக்குக் கண்ணீர் வரும்.

“அவனை மறந்துவிடு. கொட்டத்தை அடக்கிவிடுகிறேன்”
என்று ருக்மிணியிடம் சொல்லிய காலங்களும் உண்டு.

‘போங்கள் அண்ணா’ என்று கண்ணீர்விட்டு உபவாசம்
இருப்பதே ருக்மிணியின் வழக்கமாகிவிடும் போல் இருந்தது.
அவள் கணவன் என்ற வார்த்தையின் பூரண அர்த்தத்தையறிந்தவள்
அல்ல. உள்ளத்திலே ஏதோ தன்னையறியாத பக்தி, பாசம்
சீமாவின் மீது வளர்ந்துகொண்டே இருந்தது.

சிறு பருவத்தில் அவனுடன் விளையாடினதெல்லாம்
ஒன்றிற்குப் பத்தாக உள்ளத்தில் விளையாட ஆரம்பித்தன.
எத்தனையோ தடவை ‘அவருக்குக் கடுதாசு எழுத வேண்டும்’
என்று காகிதங்களை எடுத்து முன்வைத்த நேரங்கள் உண்டு.
ஆனால் என்ன நினைத்துக்கொள்வாரோ,

மாமாவிற்குத் தெரிந்தால் பெரிய அவமானம் என்ற பயம்.

ஊர் வாயை மூட முடியுமா? ருக்மிணி வாழாவெட்டியாகி
விட்டாள் என்று ஊர்க் கிழங்களிடையே பேச்சு. ஊர்ச் சிறுமிகளுக்கும் ருக்மிணி என்றால் சிறிது இளக்காரம். இதனால் ருக்மிணிக்கு
ஆறுதலாக ஒருவரும் இல்லை. அவள் தாயார் அவள்
தகப்பனாரின் எதிரொலி.

புஷ்பங்களிலே பல வகையுண்டு. சிலவற்றைப் பார்த்ததும்
குதூகலம், களிப்பு இவையெல்லாம் பிறக்கும். சில சாந்தியை
அளிக்கும். சில உள்ளத்தில் காரணமற்ற துக்கத்தை, சோகத்தை
எழுப்பும்.

ருக்மிணி இயற்கையிலேயே நல்ல அழகி. சிறு பிராயத்திலேயே
ஆளை விழுங்கும் விழிகள். அதுவும் இயற்கையின் பரிபூரண கிருபை
இருக்கும்பொழுது! ஆனால் கூம்பிச் சாம்பிய உள்ளத்தின் உள்ளொளி,
அவளது துயரம் தேங்கிய கண்களில் பிரதிபலிக்கும். அவளைப்
பார்க்கும்பொழுது, நம்மையறியாத பெருமூச்சு வரும்.

ஊர்ப் பேச்சிற்கும் பொச்சரிப்பிற்கும் பயந்து, அதிகாலையிலேயே
ஆற்றிற்குச் சென்றுவிட்டு வந்து விடுவது வழக்கம். ஆத்தூரில்
ஊருக்குச் சற்றுக் கூப்பிடு தூரத்தில்தான் ஆறு. ருக்மிணி பயமற்றவள்.

அன்று விடியற்காலை நிலா பால் போல்
காய்ந்து கொண்டிருக்கிறது.

ருக்மிணி குடம் எடுத்துக்கொண்டு குனிந்த தலை நிமிராமலே
ஆற்றிற்குச் செல்லுகிறாள்.

கண்களிலே சற்றுக் கூர்ந்து, முகத்துடன் நெருங்கி நோக்கினால்
சந்திரனில் பிரதிபலிக்கும் கண்ணீர்.

அந்த ஆறுதான் அவள் கவலையைக் கேட்கும்.

ஆத்தூர் சிறிய ஸ்டேஷன். மூன்று மணி வண்டி கொஞ்ச
நேரம்தான் நிற்கும். சீமா அதிலிருந்து இறங்கினான். எப்படியாவது ருக்மிணியை அவள் பெற்றோருக்குத் தெரியாமல் காண்பது என்ற
நினைப்பு. கண்டு அவளிடம் என்ன பேசுவது, என்ன சொல்வது
என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை.

அவளை எப்படித் தனியாக, இரகசியமாகச் சந்திப்பது என்றுகூட
எண்ணவில்லை. வீட்டின் பக்கம் சென்றால் வெளி முற்றத்திற்கு
வரமாட்டாளா? வந்தால் தன்னை அடையாளம் கண்டுகொள்ள
மாட்டாளா? என்ற நம்பிக்கை. அவன் அவளைச் சந்தித்து
வெகு நாட்களாகி விட்டதென்ற, ஏறக்குறைய ஐந்து வருஷத்திற்கு மேலாகிவிட்டதென்ற நினைப்பே இல்லை.

ஸ்டேஷனிலிருந்து வந்தால் – அதாவது அங்கு வண்டிகள்
கிடையாது. நடந்துவந்தால், அந்தப் பாலமற்ற ஆற்றைக் கடக்க
வேண்டும்.

நடந்துவருகிறான்.

கரையேறி அக்ரகாரத்திற்கு நேராகச் செல்லும் பாதை வழியாக
நடந்து வருகிறான். மனத்தில் பயம் கொஞ்சம் பட்பட் என்று
அடித்துக்கொண்டது.

எதிரே ஒரு பெண் வருகிறாள்.

அவள்தான்.

விதியும் கோழை சீமாவின் மேல், கருணை கூர்ந்தது போல்
அவளை அனுப்பியது.

பால் போன்ற நிலாதான்.

சிற்றாடை கட்டிக்கொண்டு சில சமயம் சீமாவென்று கூப்பிட்டு,
பின்னோடு அலைந்து கொண்டிருந்த ஒரு குழந்தை, திடீரென்று
பதினான்கு வயது நங்கையாக, அதிலும் அழகியாக மாறியதைக்
கண்டால், யாருக்குத்தான் அந்த மங்கிய நிலவில் அடையாளம்
கண்டுபிடிக்க முடியும்?

அவள் தன்னைக் கடந்து செல்லும்வரை கூர்ந்து கவனித்தான்;

உள்ளம் அவள்தானென்று காரணமற்றுக் கூறியது. ஆனால் அவள்
ஜாடையெல்லாம்… மெதுவாகப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால்…
நம்பிக்கை யாரை விட்டது?

“ருக்மிணி!”

அந்தப் பெண் திடுக்கிட்டு நின்றாள்.

“ருக்மிணி!”

வந்தவள் ருக்மிணிதான். தன் பெயரைக் கூப்பிடக் கேட்டதும்
பயம். வாயடைத்த பயம். ஆனால் குரல் ஜாடை எல்லாம் இரண்டாம்
முறை சப்தத்தில் யாருடையது மாதிரியோ பட்டது.

“ருக்மிணி!” என்றான் மறுபடியும். சற்றுத் தைரியமாக “யாரது?”
என்றாள்.

“நான்தான் சீமா!”

வார்த்தைகளைக் கேட்டதும் அவள் உள்ளத்தில் தாங்க முடியாத
குதூகலம்; அதில் பிறந்த சோகம், கண்களில் ஜலம் தாரைதாரையாகப்
பொங்கியது. அழ வேண்டுமென்றிருந்தது. சிரிக்க வேண்டுமென்று
தோன்றியது. கண்டத்தில் ஏதோ ஒன்று கட்டியாக உருளுவதுபோல்
இருந்தது. உதடுகள் அழ வேண்டுமென்று துடித்தன. உதட்டை
மெதுவாகக் கடித்துக்கொண்டு விழுங்கினாள்.

“ருக்மிணி, என்ன இன்னும் அடையாளம் தெரியவில்லையா?
இன்னும் சந்தேகமா?”

“இல்லை, ஆத்திற்கு வாங்க, போவோம்” என்றாள்.

“நான் அங்கே வரவில்லை…”

ருக்மிணிக்கு ஏதோ மனதில் அடித்த மாதிரி இருந்தது.

“உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். இங்கே வா. ஆற்றங்கரைப்
பக்கம் போவோம்” என்றான்.

“சரி” என்றாள். சீமாவிற்கு இதில் சிறிது ஆச்சர்யம்தான்.
வெகு துணிச்சல்காரி என்று பட்டது.

“ருக்மணி உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும்! கேட்பையோ?”

“சந்தேகமா?”

“பின் ஏன் எனக்குக் கடிதம் எழுதவில்லை…?”

“நினைத்தேன்… நீங்கள் என்னவாவது நினைச்சிப்பியளோ
என்று பயம்.”

“இப்படிப் பயப்பட்டா நான் சொன்னபடி எப்படி நடப்பாய்?”

“கட்டாயமாக நடக்கிறேன். சத்தியமா நடக்கிறேன்.
சத்தியமாக…” என்று துடிதுடித்துக்கொண்டு பேசினாள்.

“உன் மாமாவும், அப்பாவும் சண்டை பிடிச்சுக்கிறாளே,
அவர்கள் நம்மைக் கவனித்தார்களா? அவர்களுக்கு ஒரு புத்தி
கற்பிக்க வேண்டும்.

நாம் இருவரும் அவர்களுக்குத் தெரியாமல் எங்கேயாவது
போய்விட வேண்டும். நீ என்னுடன் வருகிறாயா? கட்டாயம்
வருகிறாயா? கையடித்துக் கொடு.”

“வருகிறேன் சீ…” தன்னையறியாமல் பழைய சிறு குழந்தை
நினைவிலே முடிக்கப் போனாள். திடீரென்று கணவன் என்ற
மரியாதை நினைவு அவளைக் குழப்பியடித்துவிட்டது. கோபித்துக் கொள்வாரோ, மரியாதைக் குறைவாகப் பேசியதற்கு என்ற நினைவில் விம்மினாள்.

விம்மலுடன் “மன்னியுங்கோ” என்ற வார்த்தை வெளிவந்தது.

சீமாவிற்கு ருக்மிணி தன்னை மறக்கவில்லை என்பதில்
பரிபூரண ஆனந்தம்.

“ருக்மிணி நீ என்னைச் சீமா என்று கூப்பிட்டால்தான்…!”
என்று அவள் சத்தியம் செய்வதற்கு எடுத்த கையைத் தனது கரத்தில் பற்றினான். அவள் கை எவ்வளவு மெதுவாக புஷ்பம் போல் இருக்கிறது. உள்ளத்தில் இருந்து ஏதோ ஒன்று உடல் பூராவாகப் பாய்வது போல்
இருந்தது.

ருக்மிணியும் கரத்தை இழுக்கவில்லை. இழுக்க இயலாதபடி
வலுவிழந்தாள். கூச்சமும், நாணமும் முகத்தைச் சிவக்கச் செய்தன.

“நீங்கள் இப்படிக் கேட்டால்…”

“சொன்னால்தான்…”

“சீமா” என்று மெதுவாக அவன் காதுடன் காது வைத்துக் கூறினாள்…
அதரங்கள் என்றும் மலராத விதம் மலர்ந்தன.

சீமாவின் கரங்கள் அவள் இடையில் மெதுவாகச் சுருண்டன.

அவள் இடையிலிருந்த குடம் கை சோர்ந்து மணலுக்கு நழுவியது.

“ருக்மிணி! நான் சொன்னபடி கேட்பாயோ!”

“இன்னும் சந்தேகமா? நீங்கள் கூப்பிடும் இடத்திற்கு வருகிறேன்.”

அவள் கண்களில் ஒரு ஜோதி பிரகாசித்தது. ஒரு கொஞ்சுதலும்,
குழைவும் காணப்பட்டது.

ருக்மிணி அவனது மார்பில் சாய்ந்தாள்.

“ருக்மிணி நான் வந்ததாக எவருக்கும் தெரியக் கூடாது. உன்
அப்பாவிற்குக்கூட…”

“ஆகட்டும்.”

இருவரும் தழுவிக்கொண்டனர்.

பிரிய மனம் வரவில்லை. விலக மனம் வரவில்லை.

“ருக்மிணி!” என்றான்.

“சீமா” என்றாள்.

அவள் கரத்தில் முத்தமிட்டான்.
அவளைச் சுற்றியிருந்த கரங்களை மீட்டான்.

குழந்தை ருக்மிணி நாணத்தினால் தழுதழுத்த குரலில்
மெதுவாக “நான்” என்றாள்.

சடக்கென்று சீமா விலக்கிக்கொண்டு “போய் வருகிறேன்
கண்ணே” என்று வெகுவேகமாகச் சென்றான்.

ருக்மிணிக்குத் துக்கம் நெஞ்சையடைத்தது. அவன் முதுகில்
வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். விம்மி விம்மி
மூச்சு வந்து கொண்டிருந்தது.

ஆற்றின் அக்கரையை அடைந்ததும் சீமா திரும்பிப் பார்த்தான்.

ருக்மிணி அவன் இருந்த திக்கில் கும்பிட்டாள்.

ருக்மிணியின் நெஞ்சில் மறுபடியும் மேகம் கவ்வியது.

நடந்த கனவு மறைந்தது.

ருக்மிணி கணவனுக்குக் கொடுத்த வாக்குத் தத்தத்தை
மறக்கவில்லை. பெற்றோரிடம் கூறவில்லை. ஆனால் இயற்கை
கூறாது விடவில்லை. ருக்மிணி தனது கணவனின் நினைவை
மறவாத வண்ணம் இயற்கை கருணை புரிந்தது.

இரண்டு மாத காலங்களில் இயற்கையின் கோளாறுகள்
அவள் மீது தோன்றலாயின. வீட்டிற்குத் தெரியாது.

பண்ணை ஐயர் திடுக்கிட்டுப் போய்விட்டார். சீமாவைப் பற்றி
அவர் நினைக்கவேயில்லை. தனது குற்றம் என்று உள்ளம் கூறியது.

க்ஷாத்திரத்தை எல்லாம் மகளின் மீது தாக்கினார். “யார் என்று சொல்?
பயலைத் தொலைத்து விடுகிறேன்” என்று கர்ஜித்தார். இதற்கு மேல்
தாயாரின் பிடுங்கல் வேறு. ருக்மிணி ஒன்றிற்கும் பதில்
சொல்லவில்லை.

கணவன் இட்ட பணியை மறப்பாளா? அவர் வருவார், கடிதம்
எழுதுவார் என்ற நம்பிக்கை இருக்கும்போது…

இரகசியம் என்பது சில விஷயங்களில் வெகு கஷ்டமான
காரியம். ஊரிலே மெதுவாகப் பரவியது. ஊர்ப் பேச்சிற்குக்
கேட்பானேன்? ஒன்றிற்குப் பத்தாகத் திரிந்தது. எந்த ஊர்க்குருவியோ
போய் பரமேச்வர ஐயர் குடும்பத்திற்கும் கூறிவிட்டது.
பரமேச்வர ஐயருக்கு நெஞ்சில் அடித்த மாதிரி இருந்தது.
ருக்மிணியின் மீது அவருக்கு உள்ளூர ஒரு பாசம் இருந்து வந்தது.
முதலில் நம்ப முடியவில்லை. சமாசாரம் உண்மை என்ற
பிறகு என்ன செய்ய முடியும்? சம்பந்தியின் மீதிருந்த க்ஷாத்திரத்தை
எல்லாம் ருக்மிணியின் மீது சுமத்தி, தம் மகனுக்கு நீண்ட கடிதம்
எழுதிவிட்டார்.

முன்பு சீமாவிற்கு பணம் எடுத்துக்கொண்டு ருக்மிணியுடன்
ஓடிப்போக வேண்டுமென்ற ஆசை, நம்பிக்கை இரண்டும் இருந்தன.

இப்பொழுது அந்த நம்பிக்கையும் பறந்துபோய்விட்டது. தான்தான்
குற்றவாளி என்று அப்பாவிடம் கூச்சமில்லாமல் எப்படிச் சொல்லுவது?

மேலும் ருக்மிணியின் மீது பழி ஏற்பட்டுவிட்டதே, அவளை
எப்படி ஊரார் அறியாமல் வைத்து வாழ்வது? சீமாவின் மனம்
கலங்கியது.

இச்சமயம் ருக்மிணியிடம் இருந்து குழறிக் குழறி கண்ணீரால்
நனைந்த ஒரு கடிதம் வந்தது. அவளைக் கூட்டிக் கொண்டு
போய்விட வேண்டுமாம். முன்பு சொன்னபடி சீக்கிரம் வர வேண்டுமாம்.
அப்பா வையராளாம்; வீடு நரகமாக இருக்காம். அப்பாவிடம்
சொல்லவில்லையாம். குழந்தை ருக்மிணிக்கு என்ன நம்பிக்கை!

சீமாவிற்கு என்ன பதில் எழுதுவது என்று தெரியவில்லை.
தைரியம் இல்லை; பேசாமல் இருந்துவிட்டான்.

ருக்மிணியைப் பற்றி இரவெல்லாம் நினைத்து அழுதான்.

ஆனால் தகப்பனாரிடம் வேறு கல்யாணம் செய்துகொள்ளப்
போவதில்லை என்று கூறத் தைரியம் இருந்தது. அப்பா
இருக்குமிடத்திற்கும் சென்னைக்கும் வெகுதூரமல்லவா? அதனால்தான்
தைரியமிருந்தது. மேல் படிப்பிற்கு அவசியம் 200 ரூபாய் வேண்டுமாம்.

அந்தப் பொய் சொல்லியாவது…

ருக்மிணி கடிதத்தை எதிர்பார்த்தாள். அது எப்படி வரும்?…
உள்ளூர ஏற்பட்ட இந்த மன உளைச்சலும், இருதய உடைவாலும்
சீமா நிறுவிய இலட்சியம் உடைந்துபோயிற்று.

அந்த அதிர்ச்சியில் மூளை குழம்பிவிட்டது.

“அவர் வந்துவிட்டாரா? சீமா வந்தாச்சோ?”

இதுதான் புலம்பல் இரவும் பகலும்.

அவளது குழம்பிய மனதில் ‘சென்னைக்கே அவரிடம்
சென்றுவிட்டால்’ என்று பட்டது.

பித்தத்தில் மூளை கூர்மையாக வேலை செய்யும். இரவு
எல்லோரும் படுத்த பிறகு அப்பாவின் பெட்டியைத் திறந்து பணத்தை
எடுத்துக் கொண்டாள். அன்று சீமா விடியற்காலையில் சென்ற
வண்டியில் போய்விட வேண்டும் என்ற திட்டம். பித்தத்தின்
கதியை என்ன சொல்வது!

நினைத்தபடியே செய்து முடித்தாள்.

வண்டி சாயங்காலம் சென்னையில் கொண்டு வந்து சேர்த்தது.

பிறகு?

அவளுக்குத் தெரியவில்லை.

பித்தத்தின் வேகம் அதிகமாயிற்று.

“அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டு விடுங்கள்”
இதுதான் வார்த்தைகள்.

சென்னையில் கேட்கவா வேண்டும்? அதிலும் ஒரு அழகிய
சிறு பெண் அலங்கோலமாகப் போகும்பொழுது.

அவளைத் தொடர்ந்து காலிக் கூட்டம். முக்கால்வாசி
சிறுவர்கள் கும்பல் கூடித் தொடர்ந்தது.

சில விடர்களும் தொடர்ந்தார்கள்.

ருக்மிணியும் ஏகாக்கிராந்தையாக அதே புலம்பலுடன்
சென்றாள்.

சிலர் சிரித்தார்கள். சிலர் துக்கப்பட்டார்கள். சென்னை
அவசரத்தில் வேறு என்ன செய்ய முடியும்? மற்றவர்களுடன்
வருத்தத்துடன் பேசிக்கொண்டு சென்றார்கள்.

அன்று சீமாவிற்கு உதவி செய்த குருட்டு விதி அவனை
அங்கு கொண்டு தள்ளி, மறுபடியும் உதவி என்ற தனது
விளையாட்டை ஆரம்பித்தது.

அவனும் அவள் வந்த தெருவில் அவளை நோக்கி
வந்துகொண்டிருந்தாள்.

கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவளிடம் சென்று
“ருக்மிணி” என்றான்.

“அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டுவிடுங்கள்”
என்றாள்.

அவள் குரலில் ஒரு சோகம் – நம்பிக்கையிழந்த
சோகம் – தொனித்தது.

கண்களில் அவனைக் கண்டுகொண்டதாகக் குறிகள் ஒன்றும்
தெரியவில்லை.

“என்னைத் தெரியவில்லையா, என்ன? ருக்மிணி நான்தான் –
சீமா வந்திருக்கிறேன்.”

“அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டு விடுங்கள்”
என்றாள் மறுபடியும்; குரலில் அதே தொனிப்பு.

அவளிடம் விவாதம் செய்யாமல் ஒரு வண்டி பிடித்து
அவளை ஏற்றிக்கொண்டு சென்றான்; துக்கம் நெஞ்சையடைத்துக்
கொண்டது. என்ன மாறுதல்? கசங்கிய மலர்.

வண்டியில் போகும்பொழுது மறுபடியும் “அவரைக் கண்டீர்களா?
சீமாவிடம் கொண்டு விடுங்கள்” என்றாள்.

சீமாவிற்குப் பதில் பேச முடியவில்லை…

பிறகாவது அவள் அவனைக் கண்டு கொண்டாளோ என்னவோ?
எனக்குத் தெரியாது.

—————-
மணிக்கொடி, 18/11/1034
.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to “ஆண்மை” – புதுமைப்பித்தனின் சிறுகதை…

 1. Rajs சொல்கிறார்:

  A movie based on this would be classic

 2. புவியரசு சொல்கிறார்:

  சொந்தக் காலில் நிற்க முடியாத,
  சொந்தமாக முடிவெடுக்க துணிவில்லாத,
  அந்தக் காலத்து பிள்ளைகளின்
  கையாலாகாத்தனத்தை அற்புதமாக
  சித்தரித்திருக்கிறார் புதுமைப்பித்தன்.
  1934-ல் இத்தகைய எழுத்து நடையை
  பார்ப்பது அபூர்வமே.
  அந்தச் சிறுபெண் ருக்மிணியைப்பற்றி
  நினைக்கும்போதே நெஞ்சை அடைக்கிறது.
  அற்புதமான பதிவு, மிக்க நன்றி சார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.