பாஜக தனித்து நின்றாலே 60 இடங்களில் வெற்றி பெறும்…

….
….

….

தமிழக பாஜக இளைஞரணியின் செயற்குழுக் கூட்டத்திலும்
பின்னர் செய்தியாளர் கூட்டத்திலும்
கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் முருகன்
பேசியதிலிருந்து ஒரு பகுதி கீழே –
( https://www.minnambalam.com/politics/2020/08/31/39/bjp-warnings-admk-
minimum-60-constituencies-for-alliance )

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை –
ஊட்டியில் இருந்து நாகப்பட்டினம் வரை – ஒவ்வொரு பாஜக
மாவட்ட அலுவலகத்திலும் தினந்தோறும் கொரோனா
ஊரடங்கிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சகோதரிகள்
பாஜகவை நோக்கி வந்து சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

கமலாலயத்தில் தினமும் பலர் வந்து சேர்கிறார்கள்.
மாற்றுக் கட்சியினர் பாஜகவை தேடி வருகிறார்கள். இதற்குக்
காரணம் மோடியின் வீரமான ஆட்சி தமிழகத்திலும்
வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். நம்முடைய சட்டமன்றத்
தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் கூட இல்லை.
வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள்
கோட்டையில் அமர்ந்திருப்போம் என்ற லட்சியத்தோடு
பணிகளை நாம் செய்ய வேண்டும்” என்று பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன்,
“ வருகிற சட்டமன்றத் தேர்தலில் 60 இடங்களில் நாங்கள்
தனித்து நிற்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. அந்த இடங்களில்
வெற்றி பெறக் கூடிய வாய்ப்பும் இருக்குது.

மேலும் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய சேர்மன்,
மாவட்ட சேர்மன்னு பல இடங்கள்ல பாஜக வெற்றி
பெற்றிருக்கோம். எனவே சட்டமன்றத் தேர்தல்ல நாங்கள்
முக்கியப் பங்கு வகிப்போம்” என்று கூறினார்…

————————

தமிழக பாஜக-வின் தன்னம்பிக்கை பிரமிப்பூட்டுகிறது…

அதிமுக தலைமை, பாஜகவின் விருப்பத்தை புரிந்துகொண்டு,
அதனை தனியே போட்டியிட விட வேண்டும்…
தங்களுடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டும் என்று
நிர்பந்திக்கக்கூடாது.

தமிழக பாஜகவும் – தாங்கள் வாய்ப்பேச்சில் மட்டுமல்ல,
செயலிலும் வீரர்கள் தானென்று,
சொன்னபடியே, 60 இடங்கள் என்ன… அதற்கு மேலும்
வெற்றி பெற்று, தங்களை ஏளனமாகப் பேசும் தமிழக
ஊடகங்களின் தலையில் மண்ணை அள்ளிப்போட்டு,
தங்கள் சக்தியை நிரூபிக்கும் என்று நம்புவோமாக….

திருவாளர் முருகன் அவர்கள் சொல்வது போல் –

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை –
ஊட்டியில் இருந்து நாகப்பட்டினம் வரை –
ஒவ்வொரு பாஜக மாவட்ட அலுவலகத்திலும்
தினந்தோறும் கொரோனா ஊரடங்கிலும் கூட
பாஜகவை நோக்கி வந்து சேர்ந்துகொண்டிருக்கும்
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சகோதரிகள்
பாஜகவை வென்று காட்டுவார்கள் என்று நம்புவோமாக…!!!

இந்த வெற்றிக்காகவே, அண்மையில் நியமிக்கப்பட்ட அதன்
11 துணைத்தலைவர்களும் கூடவேயிருந்து அயராது உழைத்து,
பாடுபடுவார்கள் என்று நம்புவோமாக.

தேர்தல் முடிவில், திமுக கூட்டணி அல்லது அதிமுக கூட்டணி
கிட்டத்தட்ட ஜெயித்து, ஆனால் ஆட்சியமைக்க –
மெஜாரிடி பெற 11 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக
இருக்கும் நிலை ஏற்படும் என்றும் –

தங்கள் உதவியின்றி தமிழகத்தில்
ஆட்சியமைக்க யாராலும் முடியாது என்கிற சூழ்நிலையில்
-எந்தக் கட்சி கூட்டணி இசைகிறதோ –
அந்தக்கூட்டணியில் இணைந்து,
ஏற்கெனவே, சோ அவர்கள் துக்ளக் நாடகத்தில் காட்டிய
வழிப்படி, இந்த 11 துணைத்தலைவர்களும்,
11 துணை முதலமைச்சர்களாக
நியமிக்கப்படுவார்கள் என்றும் நம்புவோமாக….

11 துணை முதலமைச்சர்களோடு, பாஜக வெற்றி ஊர்வலம்
வரும் அந்த நாளும் விரைவில் வருமென்று நம்புவோமாக.

———————————-

என்ன சார் இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்…
நடக்கக்கூடிய விஷயங்களா இவை ..? என்று கேட்கிறீர்களா…?

கனவு காணும் உரிமை எனக்கும் உண்டே…!!!

.
—————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to பாஜக தனித்து நின்றாலே 60 இடங்களில் வெற்றி பெறும்…

  1. புதியவன் சொல்கிறார்:

    இந்தச் செய்தியைப் படித்தபிறகு எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை.

    எதிலயும் ஒரு நியாயம் இருக்கணும். எனக்கு என்ன கவலை என்றால், இவரைப்போல் தமிழகக் கட்சித் தலைவர்கள் எல்லாரும் அள்ளிவிட ஆரம்பித்தால், தமிழகத்தின் மொத்த சட்டமன்றத் தொகுதிகள் 4500ஐவிட அதிகமாகிவிடாதா என்பதுதான்.

    ஒரு தொகுதில சொந்தமா வெற்றி பெற்றுக் காண்பிக்கட்டும். அப்புறம் 6 தொகுதிகள், 60 தொகுதிகள், 600 தொகுதிகள்லாம் பார்க்கலாம். பாஜக தமிழகத் தலைவரும், வடிவேலு கட்டவுட்டை வைத்துக்கொண்டு 6 பேக்ஸ் வைத்திருப்பதுபோல் விளம்பரப்படுத்துவதைப் போல, CHEAPஆக ஏன் பேசுகிறார் என்று தெரியவில்லை.

    முதலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அறிவிக்கணும். தீவிர இந்து எண்ணம் உடையவர்கள், பொதுமக்கள் இவர்களின் ஆதரவு அந்தக் கட்சிக்கு உண்டு (தலைமை என்று ஒருவர் இன்னும் சரியாக அமையாவிட்டாலும்). தமிழகத்துக்கு இப்போதைக்கு பாஜக தேவையில்லை. சட்டசபைத் தேர்தலில் பாஜக வுக்கு என்று ஒரு ஆதரவுத் தளம் இல்லை என்று காண்பிக்க, அதிமுக தைரியமாக முடிவெடுக்குமா இல்லை அதிமுக தலைமை, தங்கள் கட்சியை அழிக்க நினைக்குமா என்பதை ஆவலுடன் காணக் காத்திருக்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.