காடு வளர்ப்பது அவ்வளவு சுலபமா என்ன …!!!

….
….

….

….

நமக்கருகிலேயே – சத்தம் போடாமல்,
விளம்பரம் ஏதுமின்றி ஒரு அரிய சாதனை
நிகழ்ந்து வருகிறது.

—————–
பிபிசி தமிழ் செய்தித்தளத்தின் மூலம்
தெரிய வந்த செய்தி –
(https://www.bbc.com/tamil/india-53807756)

விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில், 100 ஏக்கர்
நிலத்தில் தனி ஒருவர் உருவாக்கிய உலர் வெப்பமண்டல
காடு. மரங்கள், செடிக் கொடிகள் நிறைந்த இந்த காட்டில்
பறவைகள், பாம்புகள், சிறிய விலங்குகள் உள்ளிட்ட அனைத்தும்
அமையப்பெற்ற இந்த பகுதி, ஆரண்யா காடு மற்றும்
சரணாலயம் என்று அழைக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தைச்
சேர்ந்தவர் சரவணன். விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு
மரங்கள் வளர்ப்பது, காடுகளைப் பராமரிப்பது என இயற்கை மீது
கொண்டிருந்த ஈர்ப்பு காரணமாக, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு
புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரில் தன்னை
இணைத்துக் கொண்டார். பின்னர், தொடர்ந்து சமூகப் பணிகளைச்
செய்து வந்தார்.

இயற்கையைப் பராமரிப்பதில் சரவணனின் அளவு கடந்த
பற்றை உணர்ந்த ஆரோவில் நிர்வாகத்தினர், புதுச்சேரி அருகே
விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் கட்டாந்தரையாக
மரங்களற்று இருந்த 100 ஏக்கர் நிலத்தைக் காடுகளாக உருவாக்க
சரவணனிடம் ஒப்படைத்தனர்.

பிறகு அந்த இடத்தில் உலர் வெப்ப மண்டல காடுகளை
உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் சரவணன்.

நிலத்தில் மண் வளத்தைப் பெருக்க, மழைநீரை வீணாக்காமல்
சேமிப்பதற்கு சம உயர வரப்புகள் அமைத்து மழைநீர்
வெளியேறாமல், பூமிக்கடியில் செல்லும்படி செய்தார். இதனால்
அந்த பகுதியில் நீர் வளமும், மண்ணின் வளமும் பெருகியது.

இதனையடுத்து அப்பகுதி கிராம இளைஞர்கள் உதவியுடன்
100 ஏக்கர் நிலத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை
நடும் பணியில் ஈடுபட்டார். இதனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு
மேலாக இவரின் கடின முயற்சியால், தற்போது மரம், செடி,
கொடிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள்
வளர்ந்து, ஆரண்யா வனம் பசுமையாகக் காணப்படுகிறது.

சரவணன் உருவாக்கிய இந்த ஆரண்யா வனத்தில்,
சேராங்கொட்டை, சப்போட்டாவில் தாய் மரமான கணுபலா,
பெருங்காட்டுக்கொடி, மலைப்பூவரசு, செம்மரம், தேக்கு,
கருங்காலி, வேங்கை, துரிஞ்சை உள்ளிட்ட ஆயிரத்திற்கு
மேற்பட்ட மர வகைகள் இங்கே இருக்கின்றன.

மேலும் மாங்குயில், மயில், பச்சைப்புறா, கொண்டலாத்தி,
அமட்ட கத்தி உள்ளிட்ட 240 பறவை வகைகளும்
காணப்படுகின்றன.

இதையடுத்து முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, மரநாய், நரி,
தேவாங்கு, உடும்பு, எறும்புத்தின்னி, புனுகு பூனை, நட்சத்திர
ஆமை உள்ளிட்ட பல வன விலங்குகள் மற்றும்
20 வகையான பாம்பு இனங்களும் ஆரண்யா வனத்தில் வசித்து
வருகின்றன.
….

….

குறிப்பாக ஆரம்பக் காலத்திலிருந்து தன்னந்தனியாக ஆரண்யா
காட்டை உருவாக்கிய சரவணன், தனது குடும்பத்துடன்
இந்த காட்டிலேயே வசித்து வருகிறார்.

இந்த பூமி யாருடையது? என்ற கேள்வியை ஆரண்யா
வனத்திற்குச் செல்லும் ஒவ்வொருவரிடம் கேட்கிறார் சரவணன்.
ஆனால், அனைவரும் இந்த பூமி மனிதர்களுக்கானது, ஜீவ
ராசிகளுக்கானது என்று பதிலளிப்பதாகக் கூறுகிறார்.

“இந்த பூமி வருங்கால சந்ததியருக்கானது, வெறும் கல்வி
மற்றும் செல்வத்தால் நம்முடைய பிள்ளைகளும்,
பேரக்குழந்தைகளும் வாழ வைத்திட முடியாது, அது
உண்மையும் இல்லை. இனி வரும் காலத்திற்கு இந்த பூமியை
அவர்களிடத்தில் இயற்கை வளங்களுடன் அழகாகக்
கொடுக்க வேண்டும்.

அதைநோக்கியே நம்முடைய பயணம்
இருக்க வேண்டும்,” என்றார் அவர்.

சிறிய வயதிலிருந்தே இந்த பூமியைக் காப்பாற்றிக்
கொடுக்கவேண்டும் என்ற வெறி இருந்ததாகக் கூறும் சரவணன்.
அதன் தாக்கமே இந்த ஆரண்யா காட்டை உருவாக்க
உதவியது என்கிறார்.

“முதல் முதலில் நான் வந்து பார்க்கும் பொது பொட்டல்காடாக
எதுவுமே இல்லாத கட்டாந்தரையாக இருந்தது. இதைக் காடாக
மாற்ற நிலத்தின் தன்மையை ஆய்வு செய்தேன். இதற்கு முன்பு
இங்கே எந்த வகையான தாவரங்கள் இருந்தது என்பதைத்
தெரிந்துகொண்டு, அந்த விதைகள் எங்கே இருக்கிறது என்று
ஆராய்ந்து இங்கே கொண்டுவந்தேன்.

புதுச்சேரியில் மனிதரால் உருவாக்கப்பட்ட காடு எப்படி
இருக்கிறது என்பதற்கு இந்த ஆரண்யா வனம் அடையாளமாகத்
திகழ்கிறது.

மேற்கொண்டு இதனை ஆய்வு செய்யப் பெருமளவில்
மாணவர்கள் இங்கே வந்து படித்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது 25 ஆண்டுகளைக் கடந்து, அற்புதமான காடாக
உருவாகியிருக்கிறது. இதற்கான 25வது ஆண்டு விழா
கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது,” என சரவணன்
தெரிவித்தார்.

“இந்த காட்டில் அழிந்து வரும் தாவரங்கள் எண்ணற்ற
வகையில் இருக்கிறது. மேலும், பல்வேறு பூச்சி வகைகள்,
பறவைகள், பாம்புகள், சிறிய விலங்குகள் என இங்கே
வாழ்கிறது. குறிப்பாக, புதுச்சேரியைச் சுற்றியுள்ள கல்லூரிகள்
மற்றும் மிகவும் முக்கியமாகப் புதுவை பல்கலைக்கழகத்தில்
பல துறையைச் சேர்த்த மாணவர்கள் இங்கே படிக்கின்றனர்.
அவர்கள் செய்த ஆய்வில், எண்ணற்ற பறவைகளும்,
விலங்கினங்களும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது,”
என்கிறார் அவர்.

கூடுதலாக, இங்கே பெரு ஓடை அமைத்துள்ளது. அந்த
ஓடையைப் பாதுகாத்து, மிகவும் அற்புதமான சுற்றுச்சூழலை
உருவாக்கி இருக்கிறோம் என்று கூறுகிறார்.

ஒரு புறம் வளர்ச்சியை நோக்கிக்கொண்டு சென்றிருக்கும்
போது, காடு பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வியை
அனைவருக்கும் கொடுக்கவேண்டும் என்ற முயற்சியைக்
கூடுதலாகச் செய்தார் சரவணன்.

“அதன் ஒரு முயற்சியாக இந்த ஆரண்யா வனத்தில்
பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தியுள்ளார்.
இதில் ஆண்டிற்கு 5000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைச்
சந்திக்கிறேன். அவர்களுக்குச் சூழலைப் பற்றிய கல்வி
கொடுக்கிறேன். அதில், எவ்வாறு பாதுகாப்பது, பராமரிப்பது
உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

சம உயர வரப்புகள், நீர்த் தேக்கங்கள் இங்கே
ஏற்படுத்தியுள்ளோம். இதிலிருந்து மீறி வரும் நீரை பூமிக்கடியில்
சேமிக்க, நிறையக் கசிவு நீர் குட்டைகள் அமைத்துள்ளோம்.
இத்தனை சூழலும் அமையப்பெற்ற காரணத்தினாலேயே
ஆரண்யாவின் சுற்றுச்சூழல் மேலோங்கி இருக்கிறது.
பிள்ளைகளின் எதிர்கால கல்விக்கு நிறைய வாய்ப்புகளை
ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறோம்,” என்கிறார் அவர்.

யாராலும் செய்யமுடியாத வேலையைக் காடு மட்டுமே
செய்யும், உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் காடு
நிழற்குடை என்று கூறும் சரவணன். இந்த பூமிக்கு நாம்
பருகக் கூடிய நீரை இந்த காடு மட்டுமே கொடுக்கிறது
என்று கூறுகிறார்.

“உலகில் எந்தவொரு ஓடையாக இருந்தாலும், ஆறாக
இருந்தாலும் அதற்கு நீர் பிடிப்பு பகுதி என்று இருக்கும்.
வடிநில பகுதி என்று அழைக்கப்படும் நீர்ப்பிடிப்பு பகுதியில்
மழை நீரை அப்படியே பூமிக்கடியில் சேகரித்துக் கொள்ளும்.

இன்று நீர்ப்பிடிப்பு பகுதியில் இருக்கக் கூடிய இயற்கை
வளங்களை அழித்ததின் விளைவாக நமக்குக் குடிநீர் பிரச்சினை,
நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் மற்றும் பல
பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம்,” என்கிறார்.

இயற்கை சீற்றம் எப்போதுமே வருவது தான் அதனால்
மனிதர்களுக்குப் பெரிய தீங்கு இருக்காது. ஆனால், இன்று
நாம் தீங்கைச் சந்திப்பதில் விளைவு இயற்கைக்கு எதிராக
மனிதனுடைய செயல் மேலோங்கி இருப்பதே காரணம்
என்று கூறுகிறார் சரவணன்.

மிக முக்கியமாக, இந்தியாவின் ஒவ்வொரு கிராம
பஞ்சாயத்திலும் 30 விழுக்காடு காடுகள் உருவாக்க நாம்
அனைவரும் உறுதி எடுக்க வேண்டும் என பொது மக்களுக்கும்,
இந்திய அரசிற்கும் வேண்டுகோள் வைக்கும் சரவணன்,
அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

.
———————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to காடு வளர்ப்பது அவ்வளவு சுலபமா என்ன …!!!

 1. sridhar சொல்கிறார்:

  அருமையான ஒரு மனிதரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஐயா. அவருடைய சேவைக்கு தலை வணங்குகிறேன்

 2. புதியவன் சொல்கிறார்:

  இதைப்பற்றி முன்னமே படித்திருந்தேன்.

  அடையாரில் (மரங்கள் இருக்கு ஆனால் அனேகமா காங்க்ரீட் காடுகள்தாம்) நிறைய கீரிகளைப் பார்த்திருக்கிறேன். என்னடா.. நகரத்தில் கீரியா என யோசித்தும் இருக்கிறேன்.

  இங்கு நான் வசிக்கும் இடத்திலும், மயில், கிளிகள், பருந்துகள், பலவித புறாக்கள், சிறிய அழகிய குருவிகள், மைனாக்கள் போன்றவற்றைப் பார்க்கிறேன். இது நிச்சயம் அவைகளுடைய இடமாகத்தான் இருந்திருக்கவேண்டும். இப்போது காங்க்ரீட் காடுகளாகிவிட்டன.

  காடுகள் வளர்ப்பது பாராட்டுக்குரியது. இருக்கும் ஏரிகள் ஸ்வாஹா ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியதும் நமது கடமை. உதாரணமாக, பீர்க்கங்காரணை பெரிய ஏரி..இப்போது மண் அள்ளிப்போட்டு இடத்தை விற்கும் வேலையில் அரசு இறங்கியிருக்கிறது.

 3. jksmraja சொல்கிறார்:

  ” மிக முக்கியமாக, இந்தியாவின் ஒவ்வொரு கிராம
  பஞ்சாயத்திலும் 30 விழுக்காடு காடுகள் உருவாக்க நாம்
  அனைவரும் உறுதி எடுக்க வேண்டும் என பொது மக்களுக்கும்,
  இந்திய அரசிற்கும் வேண்டுகோள் வைக்கும் சரவணன்,
  அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்”.

  EIA 2020 நடைமுறைக்கு வந்தால் இவரின் முயற்சி சவக்குழிக்குத்தான் போகும்.

 4. rathnavelnatarajan சொல்கிறார்:

  காடு வளர்ப்பது அவ்வளவு சுலபமா என்ன …!!! – திருவண்ணாமலை மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தைச்
  சேர்ந்தவர் சரவணன். விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு
  மரங்கள் வளர்ப்பது, காடுகளைப் பராமரிப்பது என இயற்கை மீது
  கொண்டிருந்த ஈர்ப்பு காரணமாக, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு
  புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரில் தன்னை
  இணைத்துக் கொண்டார். பின்னர், தொடர்ந்து சமூகப் பணிகளைச்
  செய்து வந்தார். – அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.