திருமதி தமிழிசையின் முயற்சிகள்….


….
….

….

நான் சில செய்திகள் பார்த்தேன்.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கோவா மற்றும் தெலங்கானா
மாநிலங்களில் ஒடிக்கொண்டிருக்கும் கோதாவரி ஆற்றின்
உபரிநீர் கடலில் போய் கலக்கிறது. `அதன் ஒரு பகுதியை
தமிழத்துக்குக் கொண்டுவரும் திட்டம் ஒன்று ஏற்கெனவே
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பரிசீலனையில் இருக்கிறது.

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ்`
காளீஸ்வரம் திட்டம் ’
என்கிற பெயரில் கோதாவரி ஆறு
நீரேற்றுத் திட்டம் ஒன்றினை சுமார் ஒரு லட்சம் கோடி
திட்ட மதிப்பீட்டில் உருவாக்கி பாசன வசதியை மேம்படுத்தும்
முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்.
`காளீஸ்வரம் திட்டம்’ போடப்பட்டு, முதற்கட்ட வேலைகள்
முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தத்
திட்டத்தின் மூலம் உபரி கோதாவரி நீர் தெலங்கானா
மாநிலத்தின் வறட்சியால் பாதிக்கப்பட்ட மேட்டுப் பகுதிகளுக்கு,
சுமார் 310 மீட்டர் உயரத்துக்கு, 11 குழாய்களில் மேலே ஏற்றி,
அங்கிருந்து ஒரு செயற்கை ஆற்றை சுமார் 150 கி.மீ நீளத்துக்கு ஏற்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம், 12 மாவட்டங்களிலுள்ள,
18 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில்
நவீன தொழில்நுட்பம் மூலம் உருவாக்கவிருக்கின்றனர்.

தற்போது முதற்கட்டமாக, ஐந்து மாவட்டங்கள் பயன்பெற்று
வருகின்றன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை
கவனிக்கும் தனியார் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில்
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பொறியாளர் ஒருவர் இருந்து
வருகிறார்.

அண்மையில் தரைமார்க்கமாகவே காரில் சுமார் 500 கி.மீ
தூரம் பயணம் செய்து அந்தத் திட்டத்தை, அதிகாரிகளின்
துணையோடு நேரில் பார்வையிட்டிருக்கிறார் தெலங்கானா
கவர்னர் டாக்டர் தமிழிசை.

காளீஸ்வரம் திட்டம்போல் இன்னொரு திட்டத்தை உருவாக்கி,
கோதாவரி ஆற்றின்வழியாக கடலில் போய்க் கலக்கும்
உபரி நீரின் ஒரு பகுதியை தமிழகத்துக்குத் திருப்பிவிட்டால்
உதவிகரமாக இருக்குமே… என்று இது குறித்து தெலங்கானா முதலமைச்சரிடம் பேசியிருக்கிறார் தமிழிசை.

அப்போது அவர், “ஆந்திரா வழியாகத்தான் நீர் தமிழகத்துக்குப்
போக வேண்டும். எனவே, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனிடம்
பேசுங்கள். பிறகு, தமிழ்நாடு முதல்வரிடம் பேசலாம்’’ என்று
சொல்லியிருக்கிறார். அடுத்து, விஜயவாடாவில் ஒரு
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கவர்னர் தமிழிசை போயிருக்கிறார்.
அங்கே, ஆந்திர முதல்வர் ஜெகனும் இருந்தாராம்.
அவரிடமும் தமிழகத்துக்கான தண்ணீர்த் தேவையை எடுத்துச்
சொல்லியிருக்க்கிறார் கவர்னர் தமிழிசை.

அவரும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துவிட்டுச்
சொல்வதாக பாசிட்டிவ் சிக்னல் காட்டியிருக்கிறார். அதே
நேரத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
அவர்களும், கோதாவரித் திட்டத்தில் ஆர்வமாக இருந்ததால்,

தமிழக அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ஜெயக்குமார்
இருவரையும் தெலங்கானா முதல்வரைச் சந்தித்து
பேசவைத்திருக்கிறார். இந்த இரண்டு அமைசசர்களும்

ஹைதராபாத்திலுள்ள ராஜ்பவனில் தங்கி, தெலங்கானா
முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சுமார் நான்கு மணி நேரம்
சந்தித்து, நீர்ப்பங்கீடு பற்றி விவாதித்திருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக கவர்னர் தமிழிசை, மத்திய
ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத்திடமும்
பேசி இருக்கிறார்.

மத்திய அரசு மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்,
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தமிழக
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய மூன்று
முதலமைச்சர்களையும் இணைத்து, தமிழகத்துக்குத் தண்ணீர்
கிடைப்பதற்கான முயற்சியில் திருமதி தமிழிசை
ஆர்வத்துடன் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

இது மகிழ்ச்சியான, வரவேற்கத்தக்க ஒரு செய்தி.

மற்ற கட்சிகளிடமிருந்து ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.க்களையோ,
இரண்டாம் கட்ட, 3-ஆம் கட்ட தலைவர்களையோ
கடத்திக்கொண்டு வந்து பாஜகவில் இணைப்பதன் மூலம்
தமிழகத்தில் பாஜக வளராது…. அது வளர்வது போன்ற
வெறும் தோற்றத்தை மட்டுமே உருவாக்கும்.

இது போன்ற, தமிழக மக்களுக்கு உதவிகரமான
பல நலத்திட்டங்களை முனைப்புடன் கொண்டு வந்து
செயல்படுத்துவதன் மூலம் மட்டும் தான் பாஜக தமிழக
மக்களிடம் செல்வாக்கு பெற முடியும். இதை திருமதி
தமிழிசை சௌந்திரராஜன் அறியாதவர் அல்ல.

திருமதி தமிழிசை சௌந்திரராஜன் அவர்களின் முயற்சிகள்
வெற்றி பெற்று விரைவில் கோதாவரி-காவிரி ஆறுகளின்
இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமென
வாழ்த்துவோம்.

.
—————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to திருமதி தமிழிசையின் முயற்சிகள்….

 1. Jksmraja சொல்கிறார்:

  KM sir,

  இது எல்லாம் பிஜேபி இனரால் கசிய விடப்படும் பொய் செய்தி. இது ஒருநாளும் செயல்பாட்டிற்கு வர முடியாத கனவு திட்டம். இதன் உண்மையான நோக்கம்; தமிழ் நாட்டு மக்களை ஆசையில் மிதக்க விட்டுவிட்டு காவிரி ஆற்று தண்ணீரை அதன் உரிமைகளை மறக்க அடிக்க செய்யும் யுக்தி. அதன் மூலம் டெல்டா மாவட்ட மக்களை விவசாயத்தில் இருந்து அப்புற படுத்தி விட்டு, மீத்தேன் திட்டத்தை எதிர்ப்பு இல்லாமல் நிறைவேற்ற எடுக்கும் முயற்சி. தமிழிசையை எதற்க்காக கவர்னர் ஆக்கினார்கள் என்பதன் உள்நோக்கம் இப்பொழுதான் புரிகின்றது.

  நமக்கு உரிமை உள்ள காவிரியில் இருந்து தண்ணீர் பெறுவதற்க்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலையில் நமக்கு உரிமையே இல்லாத ஆற்றில் இருந்து அவ்வளவு எளிதாக தண்ணீர் கொடுத்து விடுவார்களா என்ன?

  நிதின் கட்கரி இதுபோல் அறிவித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இப்பொழுது தமிழிசை என்ற தமிழரை வைத்து ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள் போல் இருக்கிறது.

  மிஞ்சிமிஞ்சி போனால், N.T ராமராவ் – எம் ஜி ஆர் போட்ட சோமசீலா அணையில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் திட்டம் போல செலவு எல்லாம் நமது தலையில் ஏற்றி விட்டு அந்த கட்டமைப்பை அவர்களின் பாசனத்திற்கு மட்டுமே பயன்படுத்த பயன் படலாம்.

 2. jksmraja சொல்கிறார்:

  இந்த மாதிரியான செய்திகள் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கும் வரை வந்து கொண்டு இருக்கும். இதன் இரண்டாவது நோக்கம்; பிஜேபி மீது தமிழக மக்கள் கொண்டுள்ள எதிர்மறையான எண்ணத்தை மாற்றுவதாகும். தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பின்பு இது கிணற்றில் போட்ட கல்லாட்டம் ஆகிவிடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.