மதமும்… அரசியலும்…

….
….

….

கீழே ஒரு அற்புதமான கட்டுரை.

இதை எழுதியது நான் அல்ல..
என்னால் இவ்வளவு கோர்வையாக எழுத முடியாது….

எழுதியது யார் என்பதை பிறகு சொல்கிறேன்.
ஆனால், நூற்றுக்கு நூறு இது தான் என் கருத்தும்.

முதலில் நண்பர்கள் எந்தவித முன்கூட்டிய
தீர்மானமும் இல்லாமல் இதைப் படித்து விட்டு,
பின்னூட்டங்கள் மூலம் தங்கள் கருத்தைச்
சொல்ல வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

——————————————————————

மதம் அரசியலின் அடிப்படையாக அமையும் அத்தனை
நாடுகளும் பொருளியல் வீழ்ச்சியைச் சந்திக்கும், சமூகநீதியும்
உடன் அழியும் என்பதையே உலகவரலாறு இதுவரை
காட்டுகிறது.

ஏனென்றால் மதம்வேறு, அரசியல் வேறு.
மதம் மனிதனின் பண்பாட்டு நினைவுகளின் தொகுதி,
அவனுடைய ஆன்மிகத்தேடல்களின் களம்.

அது நேரடியாக உலகியலுடன் தொடர்புகொள்ளும்
இடம் குறைவாகவே இருக்கவேண்டும்.
முழுக்க தவிர்க்கமுடியாது என்பதனால் –
கூடுமானவரை குறைவாக.

ஏன்?

மதத்தின் மேலே சொன்ன இரு அடிப்படைகளுமே
உலகியல் மீறிய தன்மை கொண்டவை.
மதம் பேசும் பண்பாட்டு
நினைவுகள் மிக நுண்மையானவை,
அதன் ஆன்மிக வழிகாட்டல் அந்தரங்கமானது.

அவற்றை அது உலகியல் அதிகாரமாக ஆக்கிக் கொள்ளும்
என்றால் உலகியலில் அதை கட்டுப்படுத்த எதிர்விசையே
இல்லை. விளைவாக வரம்பில்லா அதிகாரமே நிகழும்.
அது அழிவையே கொண்டுவரும்.

மதம் சார்ந்து உருவாக்கப்பட்ட உலகியல் அமைப்புகள்
அனைத்திலுமே மெல்லமெல்ல ஒருவகை சர்வாதிகாரம்
உருவாவதை காணலாம்.

எந்த ஆன்மிக இயக்கமும்
அமைப்பாக ஆகும்போது அதில் பிற அமைப்புகளைவிட
விரைவாகவே ஊழலும் சீர்கேடுகளும் பெருகுவதைக் கண்டு
நாம் அதிர்ச்சி அடைந்திருப்போம். அது இதனால்தான்.

நம்முடைய தொன்மையான மடங்களின் வரலாறே இதுதான்.
ஏனென்றால் மடாதிபதியின் அதிகாரம் குறியீட்டுரீதியானது,

மறுக்கமுடியாதது. ஆகவே அவர் கேள்விக்கு
அப்பாற்பட்டவர் ஆகிறார். அங்கே ஜனநாயகம் என்பதற்கே

இடமிருக்கமுடியாது. தட்டிக்கேட்கவே எவரும் இருக்க
மாட்டார்கள். ஆளிபிடித்தல்களும் போட்டுக்கொடுத்தல்களும்
குழுச்சண்டைகளும்தான் எஞ்சும்.

நம் மடங்களின் ஊழல்கள், அதிகாரச்சீரழிவுகள்,
ஒழுக்கச்சீரழிவுகள் எல்லாமே இந்த முற்றதிகாரத்தின்
விளைவுகள்.

அது அரசாங்கத்துக்கு நீடிக்குமென்றால் என்ன ஆகும்?
ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன், இந்தியாவின்
மடங்களைப்போல இந்தியப் பிரதமரின் பதவியும்
ஆகுமென்றால் இந்தியா என்ன ஆகும்?

இப்போது மடாதிபதிகளே அரசியல் தலைவர்களாகவும்
ஆவது தொடங்கிவிட்டது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

மதம் அகவயமானது என்பதனாலேயே அது குறியீடுகள்
வழியாகவே இயங்கமுடியும். அக்குறியீடுகள் மரபில்
ஆழமாக வேரூன்றியவை. அவற்றை அரசியலுக்குப்
பயன்படுத்தினால் அவற்றுக்கு எதிர்த்திசையாக
வைக்கத்தக்க குறியீடுகள் இருக்கமுடியுமா என்ன?

காந்தி ராமராஜ்யம் என்று சொன்னதையே பிழையான
முன்னுதாரணம் என்று நான் நினைக்கிறேன். அன்று அதை
அவர் தேர்தலரசியல் சார்ந்து யோசித்திருக்க மாட்டார்.

ஓம் என்ற ஒலியையோ ராம் என்ற பெயரையோ அரசியல்
குறியீடாக்கினால் அக்குறியீடுகள்
நூற்றாண்டுகளாகத் திரட்டிக்கொண்டிருக்கும் அத்தனை
நுண்மையான உணர்வுகளையும் அதைப் பயன்படுத்தும்
கட்சிகள் தங்களுக்காக எடுத்துக்கொள்கின்றன. அவை
எதிர்க்க முடியாதவையாக ஆகின்றன.

உதாரணமாக, காவிக்கொடி என்பது இங்கே இந்துமரபின்
கொடி, அதை மத அமைப்புகள் அல்லாதவை
பயன்படுத்துவதை தடுக்கவேண்டிய பொறுப்பு
இந்துக்களுக்கு உள்ளது.

அந்தப்போக்கை அனுமதித்தால் காலப்போக்கில்
இந்து அடையாளங்களின் மதம்சார்ந்த
முக்கியத்துவம் அழியும்.

நாளை இன்னொரு கட்சி எழுந்து வந்து விஷ்ணுவின்
சுதர்சனத்தை தங்கள் அடையாளமாக ஆக்குகிறது என்று
கொள்வோம். இன்னொரு அமைப்பு சிவனின் உடுக்கை
ஆயுதமாக்குகிறது என்று கொள்வோம். பிறகு இங்கே
என்ன அரசியல் நடக்கும்?

மதக்குறியீடுகளை அரசியல்கட்சிகள் பயன்படுத்தும்போது
அவ்வாறு பயன்படுத்துவதை மட்டும்தான் நாம் எதிர்க்கமுடியும்.

அக்குறியீடுகளை எதிர்க்கமுடியாது, ஏனென்றால் அவை
வரலாற்றின் ஆழத்தில், சமூகக்கூட்டுமனதில்
இடம்பெற்றிருப்பவை. ஆனால் தேர்தரலசியலில்
என்ன நிகழுமென்றால் எதிர்க்கட்சியினர் அந்த
மதக்குறியீடுகளை எதிர்ப்பார்கள்,
அவற்றை சிறுமையும் செய்வார்கள்.

அக்குறியீடுகளைப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள்
‘அய்யோ மதக்குறியீடுகளை அவமதிக்கிறார்களே” என்று
கூச்சலிடுவார்கள். அந்த எதிர்ப்பால் -மதநம்பிக்கை
கொண்டவர்கள் மேலும் அக்குறியீடுகளை
பயன்படுத்துபவர்களை நோக்கிச் சாய்வார்கள்.

அரசியலில் மதம் ஊடுருவும்போது அது அரசியலின்
அடிப்படைகளை அழித்துவிடுகிறது.

நாம் நம் வரிப்பணத்தைக் கொண்டு அரசை நடத்தவே
ஆட்சியாளர்களை தேர்வுசெய்கிறோம்.

(ஆனால்..) அவர்கள் மதக்குறியீடுகளைக் கொண்டும்,
மதஉணர்வுகளைக் கொண்டும்
ஆட்சியை அடையமுடியும் என்றால் –

அவர்களின் ஏற்புக்கு அது மட்டுமே காரணமாகும் என்றால் –
அவர்கள் எதற்காக நல்லாட்சி அளிக்கவேண்டும்?
எதற்காக பொருளியல் நன்மைகளை செய்யவேண்டும்?
அவர்கள் என்னதான் பொருளியலழிவை உருவாக்கினாலும்
மதம்சார்ந்து அதிகாரம் கைக்கு வரும் என்றால்
மக்கள்நலனே கருத்தில் கொள்ளப்படாது(அல்லவா…?)

உலகமெங்கும் மதம் அரசியலில் ஓங்கியிருக்கும் நாடுகள்
அழிந்துகொண்டிருப்பதற்கான காரணம் இதுதான்.

ஆனால் இது மதத்திற்கு மட்டும் அல்ல, இனம் மொழி
நிறம் உட்பட ஏதேனும் கூட்டுவெறியின் மேல் ஏறி
அதிகாரத்தை அடையமுடியும் என்றாலே –

அங்கே நல்லாட்சிக்கான வாய்ப்பு இல்லாமலாகி விடுகிறது.
நீங்கள் ஒரு கட்சிக்கோ ஒரு மனிதருக்கோ வாக்களிப்பது
அவரது செயல்பாட்டால் அல்ல…. உங்கள் இனம், மதம்,
மொழி அடையாளம் சார்ந்துதான் என்றாலே (அவர்களிடமிருந்து )
திரும்ப எதையுமே எதிர்பார்க்க முடியாமலாகி விடுகிறது.

மதநம்பிக்கையாளர்கள் அறமற்றவர்கள்,
ஊழல்செய்ய மதமே துணையாகிறது என்பதுபோன்ற
எளிமைப்படுத்தல்கள் அபத்தமானவை.

மதமற்றவர்களும் ஒன்றும் அறத்தில் வேரூன்றியவர்கள் அல்ல.
மதத்தை கடந்தவர்களால் இன, நிறவெறிகளைக் கடக்க
முடியவில்லை என்பதை நாம் காண்கிறோம்.

மதத்தை கடந்த பலநாடுகளின் ஒட்டுமொத்தச் சமூகமும்
அந்நாடுகள் ஏழைநாடுகள்மேல் செய்யும்
கொடூரமான பொருளியலாதிக்கத்தை கண்டும் காணாமல்
இருப்பதைக் காண்கிறோம். மதமற்ற சமூகங்களின் கூட்டான
உளச்சோர்வுகளை, உளத்திரிபுகளையும் காண்கிறோம்.

மதங்களின் வன்முறை பற்றிப் பேசுபவர்கள் ஒன்றை
மறந்துவிடுகிறார்கள். ஆயிரமாண்டுகளில் மதங்கள் செய்த
வன்முறைக்குச் சமானமான வன்முறையை –

நூறாண்டுகளில் மதநம்பிக்கை அற்ற ஏகாதிபத்தியவாதிகளும்
சர்வாதிகாரிகளும் செய்திருக்கிறார்கள். ஸ்டாலினும்
போல்பாட்டும் ஹிட்லரும் ஆத்திகர்கள் அல்ல.
அந்தப் பேரழிவுகள் மதத்திற்காக நிகழ்ந்தவையும் அல்ல.

உண்மை என்னவென்றால் மதத்தை பொதுவாழ்க்கையில்
நிலைநிறுத்தாத நாடுகளில் மக்கள் தன்னலத்தையாவது
நாடுகிறார்கள்.

நாங்கள் கட்டும் வரிப்பணத்திற்கு எங்களுக்கு திருப்பிச்
செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். ஆட்சியாளர்கள் ஓரளவு
செய்தேயாகவேண்டும். ஏதேனும் அடிப்படையில் மக்கள்
உணர்ச்சித்தூண்டல் அடைந்து கூட்டாக வாக்களிப்பார்கள்
என்றால் அது நிகழ்வதில்லை. அவ்வளவுதான்.

மதம் பொதுவெளி அடையாளமாக ஆகாமலிருக்கையில்,
அது தனிநபரின் பண்பாட்டு அடையாளமாகவும்
ஆன்மிகத்தேடலாகவும் இருகையில், மட்டும்தான்
அது மதமாகவே நீடிக்கமுடியும்.

அரசியலுக்கு வந்துவிட்ட மதச்சின்னங்கள்
காலப்போக்கில் மதத்திற்கான ஆழத்தையும்
அர்த்தத்தையும் இழக்கும்.

அவ்வடையாளங்களை அரசியலடையாளங்களாக
ஆக்கிக்கொள்ளும் சமூகங்கள் தங்கள் அரசியலதிகாரத்தை
முதலில் இழக்கிறார்கள்.

காலப்போக்கில் மதத்தையும் இழப்பார்கள்.

ஓர் அடையாளவெறி மட்டுமே எஞ்சியிருக்கும்.

.
——————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to மதமும்… அரசியலும்…

 1. M.Subramanian சொல்கிறார்:

  சுயமாக சிந்திக்கக்கூடியவர்கள், படித்தவர்கள்,
  என்று நாம் நம்பும் சிலர் கூட மதம் என்று
  வரும்போது தீவிரமான அணுகுமுறையை
  மேற்கொள்வதைப் பார்க்கிறேன்.
  மத உணர்வுகள் மேலோங்கும்போது,
  அறிவுபூர்வமாக சிந்திப்பதை அவர்கள்
  கைவிட்டு விடுகிறார்கள். என் நண்பர்கள்,
  உறவினர்களிடையே கூட இத்தகையவர்கள்
  இருக்கிறார்கள்.

  ஆட்டிப்படைக்கும் மத உணர்வுகளிலிருந்து
  விடுபட்டு, அறிவுபூர்வமாகவும், நியாயமாகவும்
  அவர்களை சிந்திக்கவும், செயல்படவும் வைப்பது
  எப்படி என்று எனக்கு புரியவில்லை.

  பாஜகவை ஆதரிக்கும் பலர் இப்படித்தான்.
  அவர்களின் மனசாட்சியும், உள்ளுணர்வும்
  தவறு என்று சொன்னால் கூட, அவர்களின்
  மதாபிமானம் அதை செயலிழக்கச் செய்து
  விடுகிறது.

  அரசியலை அரசியல்வாதிகளிடம் விடுங்கள்.
  மதத்தை, மதப்பெரியவர்களிடம் விட்டு விடுங்கள்,
  இரண்டையும் கலப்பது இந்த நாட்டிற்கு
  நல்லதல்ல என்று உங்கள் வலைத்தளத்தின்
  மூலம் நானும் அத்தகையவர்களுக்கு
  வேண்டுகோள் வைக்கிறேன்.

 2. சராசரி மனிதன் சொல்கிறார்:

  பகுத்தறிவாளர்கள் என்று தங்களை பறைசாற்றிக்கொள்ள முயலும் அறிவாளிகள் யாவரும், வழக்கம் போல, பெரும்பான்மை சமுதாயத்திற்க்கே தங்கள் அறிவுரையை நேரடியாகவோ மறைமுகமாகவோ வாரி இறைக்கிறார்கள். இதுதான் இங்கு பிரச்சினையின் ஊற்று கண்.
  ஒரு மாற்றத்திற்காவது பிற சில மதங்களுக்கும் தங்கள் அறிவுரையை அள்ளி வீசலாமே .
  கேட்டால் நாங்கள் எல்லா மதத்தினருக்கும் பொதுவாகத்தானே அறிவுரை வழங்குகின்றோம் என்று சமாளிப்பார்கள்.
  ஆனால் இந்த கட்டுரையை படிக்கும் பொழுதே வெளிப்படையாக தெரிவது இவர்களது அறிவுரை என்றென்றும் அந்த பெரும்பான்மை சமுதாயத்திற்கே என்று.
  மதத்தை வெறித்தனமாக வன்முறையின் ஊற்று கண்ணாக பார்க்கும் மதங்கள் யார் என்று யாவரும் அறிவரே.
  அவர்களையும் நாம் மனிதர்களாக மாற்றுவோமே

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   “சராசரி மனிதன்” என்று தன்னை அழைத்துக்கொள்ளும்,
   பாஜக பக்தருக்கு….(நீங்கள் ஒவ்வொரு முறை ஒவ்வொரு
   பெயரில் இங்கே வரவேண்டிய அவசியம் இருக்காது –
   நேர்மையாகவும், உண்மையாகவும் எழுதினால்…!!! )

   – இந்த கட்டுரையும் சரி,
   நான் இந்த வலைத்தளத்தில் எழுதும்
   இதர கருத்துகளும் சரி –
   எல்லா மதத்தினருக்கும் சேர்த்தே
   கூறப்படுவது தான்.

   நானென்ன அரசியல்வாதியா…?
   தேர்தலுக்கு நிற்கப்போகிறேனா ..
   ஜால்ரா போட்டு குறிப்பிட்ட வகுப்பு
   மக்களை தாஜா செய்வதற்கு…?

   ம-னி-தம் என்று சொல்லிப் பாருங்கள்…
   “மதம்” அதற்குள் அடங்கி விடும்.

   மனிதத்தை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
   தானாகவே மதத்தையும் சேர்த்தே நேசிப்பீர்கள்…
   மதமும் அதனுள் அடக்கம் என்பதால்.

   உங்களுக்கு இன்னமும் சந்தேகம் எதாவது
   இருக்குமேயானால் மீண்டும் ஒருமுறை
   இங்கே வெளிப்படையாக உரக்கச் சொல்கிறேன்…

   இங்கே சொல்லப்படும் கருத்துகள்
   அனைத்து மதத்தினருக்கும் சேர்த்து தான்.
   மனிதரை நேசியுங்கள்…
   மனித நேயம் வளருங்கள்…
   நாம் தேடும் இறைவன் அங்கே தான் இருக்கிறான்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்…. சில சமயங்களில் நம் கருத்தை எழுதினால் உடனே நீங்க பாஜக அபிமானி, பாஜக தொண்டன், பக்தர் என்றெல்லாம் எழுதிடறீங்க. ஒரு கட்சியின் தொண்டன் என்று சொன்னாலே, அவங்களால கட்சியின் தவறுகளை ஒத்துக்கொள்ள முடியாது, உடனே justify பண்ணுவாங்க – எல்லா செயல்களையும். ஆனால் நீங்க தவறு என்று எண்ணுவது, எனக்கு சரி என்று படலாம் என்பதை நீங்க ஏற்றுக்கவேணும் இல்லையா?

    இந்தக் கட்டுரைல என்ன எழுதியிருக்காங்க? காவி, ராமராஜ்யம் என்றெல்லாம். அவங்க பொதுவா எழுதறதுன்னா எப்படி எழுதியிருக்கணும் என்பதையும் பாருங்க. எந்த இஸ்லாமியக் கட்சியாவது ‘பச்சை நிறம், பிறைச்சந்திரன்’, இஸ்லாமிய உடை போன்றவை இல்லாமல் பொது இடங்கள்ல கூடறாங்களா? தங்களது அடையாளம் இல்லாமல் ஏதாவது பொதுக்கூட்டம் நடத்தியிருக்காங்களா? இதனை நான் தவறு என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. They represent Muslims. BJP looks like representing Hindus. கஞ்சி குடிக்கப்போகிறேன் என்று சொல்லி குல்லா போட்டுக்கொண்டு செல்பவர்களும் (பிற மதத்தினர்) எதை நமக்குக் காட்டுகிறார்கள்? அதேபோல கிறிஸ்துவ நிறுவனங்களின் விழாக்களுக்குச் செல்பவர்களும் அப்படித்தான். (ஆனால் இந்த அரசியல்வாதிகளுக்கு இதிலெல்லாம் சிறிதுகூட நம்பிக்கை இல்லாமல் இருந்தபோதிலும் வாக்குக்காக இப்படி வேஷம் போடறாங்க)

    இன்றைக்கு, அரசியலில் மதம் புகக்கூடாது என்று சொல்பவர்கள் யாரும் பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கப் சிப் என்று பொத்திக்கொண்டு இருந்தவர்கள்தாம்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     புதியவன்,

     // எந்த இஸ்லாமியக் கட்சியாவது ‘பச்சை நிறம்,
     பிறைச்சந்திரன்’, இஸ்லாமிய உடை போன்றவை
     இல்லாமல் பொது இடங்கள்ல கூடறாங்களா?
     தங்களது அடையாளம் இல்லாமல் ஏதாவது
     பொதுக்கூட்டம் நடத்தியிருக்காங்களா?
     இதனை நான் தவறு என்ற அர்த்தத்தில்
     சொல்லவில்லை. They represent Muslims.

     BJP looks like representing Hindus. அதேபோல
     கிறிஸ்துவ நிறுவனங்களின் விழாக்களுக்குச்
     செல்பவர்களும் அப்படித்தான். //
     —————-

     நான் சொல்வது
     அனைத்து மதத்தினருக்கும் சேர்த்து தான்….
     திரும்பத் திரும்ப சொல்கிறேன்-

     அரசியலையும் மதத்தையும் கலக்காதீர்கள்.

     அரசியலை அரசியலாக –
     நாட்டின் நல்ல நிர்வாகத்திற்காக,
     முன்னேற்றத்திற்காக,
     ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக –
     செயல்படுத்த வேண்டும்.

     இதில் மதம்
     நுழையுமானால் –
     – அது எந்த மதமாக இருந்தாலும் சரி –
     நாடு குட்டிச்சுவர் தான்;

     இந்த கட்டுரை வலியுறுத்துவது
     அதைத்தான்.

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      // இன்றைக்கு, அரசியலில்
      மதம் புகக்கூடாது என்று சொல்பவர்கள்
      யாரும் பத்து, பதினைந்து வருடங்களுக்கு
      முன்னால் கப் சிப் என்று பொத்திக்கொண்டு
      இருந்தவர்கள்தாம். //

      —————

      உண்மை தான். ஆனால், அப்போது
      அதற்கான தேவை எழவில்லையே.
      இன்று போல் அன்று
      யாரும் மதம் கொண்டு
      அலையவில்லையே…?

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 3. புதியவன் சொல்கிறார்:

  கட்டுரை சொல்லும் செய்திகள் அர்த்தம் வாய்ந்தவை. ஆனால்,

  //மதநம்பிக்கை அற்ற ஏகாதிபத்தியவாதிகளும் சர்வாதிகாரிகளும் செய்திருக்கிறார்கள். ஸ்டாலினும் போல்பாட்டும் ஹிட்லரும் ஆத்திகர்கள் அல்ல.
  அந்தப் பேரழிவுகள் மதத்திற்காக நிகழ்ந்தவையும் அல்ல.//

  இந்த கண்ணோட்டம் தவறானது. ஏதாவது ஒன்றை, ஒரு நம்பிக்கையை, எது தங்களுக்கான ஆதரவைப் பெற்றுத்தரும் என்பதை அவதானித்து அதன்படி வெற்று கோஷத்தை எழுப்பி அந்த மூலம் சர்வாதிகாரிகள் ஆனவர்கள் அவர்கள். அதாவது ‘மத நம்பிக்கை’ மட்டும் அல்ல, எந்த பாப்புலர் நம்பிக்கையைப் பிடித்துக்கொள்பவர்களும், அல்லது இல்லாத ஒன்றை எதிரியாக சிருஷ்டித்து ஆட்சியைப் பிடிப்பவர்களும் ‘பெரும்பான்மையினரின் நம்பிக்கை’ என்பதையே தங்களுக்கான அடித்தளமாகக் கொள்கிறார்கள். இது பற்றி மிக விளக்கமாக எழுத இயலும்.

  //அவர்கள் மதக்குறியீடுகளைக் கொண்டும், மதஉணர்வுகளைக் கொண்டும்
  ஆட்சியை அடையமுடியும் என்றால்// – இதைத்தானே திமுக செய்து ஆட்சியைப் பிடித்தது. அப்போது இந்த நடுநிலை கட்டுரையாளர் பிறந்திருக்கவில்லையோ? திமுக என்ன செய்தது? சிறுபான்மையினரை தாஜா செய்தது, அந்த வாக்குகளுக்காக, இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தியது. இப்போதும் அந்தக் கட்சி இந்துக்களுக்கு எதிரான கட்சி என்றே தன்னைப் பிரகடனம் செய்துவருகிறது. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க திமுக செய்த தகிடுதத்தங்களைப் பற்றி எதையும் யோசிக்காமல், இப்போது இந்தியாவைப் பற்றி ரொம்பவே கவலைப்படுகிறார் கட்டுரை ஆசிரியர்.

  இது ஏதோ பாஜகவில் மட்டும் நடப்பதாக கட்டுரையாளர் எழுதியிருக்கிறார். அவர் கனவுலகிலிருந்து நன உலகிற்கு வந்தால், எல்லாக் கட்சியும் அதே அடித்தளத்தில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வார்.

 4. Ramnath சொல்கிறார்:

  அதெப்படி சார் இந்த கட்டுரை உங்களுக்காகவே
  எழுதப்பட்டது மாதிரி தோன்றுகிறது ?
  நீங்களும் அதை கரெக்டாகப்புரிந்துகொண்டு
  பதில் கொடுக்கிறீர்கள்.

  • சராசரி மனிதன் சொல்கிறார்:

   இந்த கட்டுரையில் , அறிவுரையை வழங்குபவர் உதாரணமாக சுட்டி காட்டும் காவி கொடி ,விஷ்ணு, ஓம் போன்ற மத அடையாளங்கள் வேறு எந்த மதத்தினருக்கோ ?
   பகுத்தறிவாளர்களுக்கு மட்டுமே புரிகின்ற மொழி …..

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    சராசரி மனிதன் என்று சொல்லிக்கொள்பவருக்கு-

    அதிலென்ன சந்தேகம்…?

    இன்று ஆட்சியில் இருப்பவர்கள் யார்…?

    மதத்தின் அடிப்படையில்,
    மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு
    ஆட்சிக்கு வந்தது யார்…?

    அவர்களைக் குறித்தது தான்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • சராசரி மனிதன் சொல்கிறார்:

     அய்யா,
     மதவெறிக்கு பிஜேபி யை மற்றும், தொடர்ந்து உதாரணமாக குறிப்பிடுவது ஏனோ?
     ஏன் மற்றவர்களின் மத வெறிக்கள் , இது போன்ற பகுத்தறிவாளர்களின் கண்களுக்கு தெரிவதில்லை.ஒருவேளை பயமா , அல்லது அதுதான் மத சார்பின்மையா .
     சமீபத்தில் FACBOOK இல் ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றி கூறப்பட்ட ஒரு செய்திக்காக ஒரு ஊரையே சூறையாடியவர்களின் அந்த மதவெறி பற்றி மட்டும் ஏன் இது போன்றவர்கள் உயர்ந்த கருத்துக்களை தெரிவிப்பதில்லை. ஏன் இந்த அறிவுரை வழங்குபவர்கள் இது போல் காணாமல் போகிறார்கள்.
     ஒருவேளை இதில் ஈடுபட்டவர்கள் பிஜேபியினராக இருந்திருந்தால் இந்த நவீன சிந்தனையாளர்கள வீறு கொண்டு எழுந்திருப்பார்கள் அல்லவா .
     எனவே நமது அறிவுரை என்றென்றும் ஒருதலை பட்சமானது என்பதே நிதர்சனம்.மேலும் அது உள்நோக்கம் கொண்டதாகவே எனக்கு படுகின்றது.

 5. Arasur Thiruvengadam சொல்கிறார்:

  The writer is using a particular symbols to argue his point.History of civilization has known shibboleth is required to regenerate a declining societyOne of the strategies is to provide target for focused action-lt can be religion,economic factors or inequalities in the social fabric or even the geographical peculiarities of ones countryGreek civilization died because of excessive indolenceRomans on account of greed for other areas for dominance and economic JpowerJudaism was replaced by Christianity using religious practices.The crusades were fought until both sides realized the futility.The Holy Roman Empire was ultimately found to be neither holy roman nor empire as both religious and political power competed for supremacy Hitler had themes and economic exploitation.Western democracies used in here tear of losing one’Sownproperty rights under communism to dismember USSR.Islam under threat used by Arabian countriesHinduthva is another shibboleth using the symbols held in reverence for the ideals behind and religion all over the world has been the opium of the peopleCulture and religion is a very dangerous cocktail.Arasur Thiruvengadam

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Arasur Thiruvengadam,

   ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயங்களை
   மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.நன்றி.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இத்தனை பின்னூட்டங்களுக்குப் பிறகும்,
  இந்த கட்டுரையை/கருத்தை வெளியிட்டவர்
  யாரென்று யாருமே கேட்கவில்லை
  என்பது எனக்கு ஆச்சரியம் தருகிறது.

  இருந்தாலும் இது என் கடமை என்பதால்
  சொல்கிறேன் –
  நூற்றுக்கு நூறு என் கருத்தும்
  இதே தான் என்றாலும் –

  இந்த கருத்து/கட்டுரைக்கு
  சொந்தமானவர் பிரபல இலக்கியவாதி,
  எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்.
  சாதாரணமாக ஜெ.மோ. அரசியல்
  கட்டுரைகள் எழுதுவதில்லை;
  அபூர்வமாகத்தான்; இது அப்படியொன்று.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   நான் இதை அனுமானித்திருந்தேன். குறைந்தபட்சம் இந்து மத்த்தைச் சேர்ந்தவர்கள்தான் இதனை எழுதியிருக்கணும் என நினைத்தேன். நடுநிலைக் கண்ணோட்டம் என்று சொல்பவர்கள் அனைவருமே இந்துக்கள் என்ன செய்யணும் என்று வியாக்யானம் செய்வார்களே தவிர மற்றவர்களைப் பற்றி உண்மையை உரக்கக் கூறும் தைரியம், நேர்மை இருக்காது.

   அவருடைய கருத்து இது. அது நேர்மையா உண்மையா இருக்கணும்னு அவசியமில்லையே என்ற அளவில் நான் கட்டுரையைப் பார்க்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.