” விநாயகர் ” நிச்சயம் கோபித்துக் கொள்ள மாட்டார்…

….
….

….

இன்று வெளியாகியுள்ள ஒரு பத்திரிகைச் செய்தி கீழே –
(விமரிசனத்திற்கு கீழே …)

இந்த சமயத்தில் மக்களின் பொது பாதுகாப்பும், நலனும் தான்
முக்கியம். தொற்று நோயிலிருந்து தப்ப மக்களுக்கு எல்லா
விதங்களிலும் உதவியாக இருக்க வேண்டும் என்பதை
அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

நானும் தீவிரமான கடவுள் நம்பிக்கை உள்ளவன் தான்…
அதை இந்த தளத்தின் வாசக நண்பர்கள் நன்கு அறிவர்.

ஆனால், எனது உறுதியான நம்பிக்கை –

கடவுளை எந்த விதத்தில் கொண்டாடினாலும்
அவர் ஏற்றுக் கொள்வார். இதே மனநிலை தான்
பக்குவமுள்ள பக்தர்கள் அனைவருக்கும் இருக்கும்…
இருக்க வேண்டும்.

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைப்போம்
என்றும் ஊர்வலம் போவோம் என்றும் தொடர்ந்து பிடிவாதம்
பிடிப்பது சரியல்ல…. இதற்கு அந்த அமைப்புகளைச்
சேர்ந்த தீவிர ஆதரவாளர்களைத் தவிர்த்து, பொதுமக்களிடையே
கூட நிச்சயமாக ஆதரவில்லை என்பதை அவர்கள்
அறியவேண்டும்.

தமிழகத்தில் எத்தனை வருடங்களாக பொது இடங்களில்
சிலை அமைப்பதும், ஊர்வலம் போவதும் நடக்கிறது என்பதை
பிடிவாதம் பிடிக்கும் அமைப்பினர் வெளியே சொல்வரா…?
20-25 ஆண்டுகளுக்கு இந்த மாதிரி பழக்கம் இங்கே இருந்ததா…?

சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து, அரசியல்வாதிகள்
பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும்.
————————————————————————

செய்தி –

‘விநாயகருக்காக’ வீடு தேடி சென்ற முருகன்..

கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டு விநாயகர்
சதுர்த்தி பண்டிகையை போது பொது இடங்களில்
சிலைகளை நிறுவ கூடாது, வீடுகளுக்குள்ளேயே மக்கள்
கொண்டாடி கொள்ளலாம் என்று தமிழக அரசு சில
தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. முதல்வர்
இல்லத்திற்கு நேரில் சென்ற பாஜக தலைவர் முருகன்..

இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என்றும், தடையை மீறி
விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வோம் என்றும்,
இந்து அமைப்புகள் பலவும் எச்சரித்துள்ளன. அரசின்
உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தையும் நாடி உள்ளன
சில அமைப்புகள்.

இருப்பினும், அரசு அனுமதி பெற்று விட வேண்டும்
என்பதற்காக முதல்வரிடம் நேரில் சென்று வலியுறுத்த
ஆரம்பித்தனர் வலதுசாரி அமைப்பினர். இந்து அமைப்புகள்
இந்து மக்கள் முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன்
மற்றும் இரு தலைவர்கள் முதல்வரை சந்தித்து
திங்கள்கிழமையான நேற்று, இந்த கோரிக்கையை
முன்வைத்தனர்.

உத்தரவை வாபஸ் பெறப்போவதில்லை என்று முதல்வர்
உறுதிபட தெரிவித்துள்ளார். உறுதிகாட்டும் முதல்வர் இந்த
தகவல் கிடைத்த பிறகுதான் இரவோடு இரவாக சுமார் 7
மணியளவில் பாஜகவின் மாநில தலைவர் முருகன்,
தானே நேரடியாக முதல்வரின் கிரீன்வேஸ் சாலை
இல்லத்திற்கு விரைந்தார். சுமார் அரை மணி நேரமாக,
எடப்பாடி பழனிச்சாமியுடன் அவர் இந்த விஷயம் பற்றி
ஆலோசனை நடத்தினார்.

( https://tamil.oneindia.com/news/chennai/vinayaka-chaturthi-celebration-cm-edappadi-palanisamy-rejects-bjp-chief-murugan-s-demand-394810.html)

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ” விநாயகர் ” நிச்சயம் கோபித்துக் கொள்ள மாட்டார்…

 1. புதியவன் சொல்கிறார்:

  உங்கள் கருத்து சரிதான். ஆனால் அரசு என்பது பொதுமக்கள் நலனுக்காக முடிவு எடுப்பதாக அமையவேண்டும். ஆனால் அரசியல்வாதிகள், ‘மதம்’ என்பதைப் பார்த்து அதற்கு ஏற்ப முடிவு எடுப்பதால்தான் இந்த மாதிரி பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கடந்த மூன்று மாதங்களில் செய்திகளைப் படித்தீர்களானால், சிறுபான்மையினர் என்றால் அரசியல் ஆதரவுக்காக இந்த மாதிரி விஷயங்களில் கண்டுகொள்ளாமல் இருப்பதும், அவர்கள் கேட்பது தேச விரோதம் என்றாலும் அதற்கு ஏற்றபடி முடிவெடுப்பதுமாக அரசியல் கட்சிகள் நடந்துகொள்கின்றன. அதனால்தான் பாஜக வோ இல்லை இந்து மதம் சார்ந்த முன்னணிகளோ இந்த மாதிரி தேவையில்லாதவற்றைக் கிளப்பும்போது, அரசு/அரசியல் கட்சிகள் ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு பார்வை வைத்துள்ளது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   .

   புதியவன்,

   சிறப்பாக குழப்புகிறீர்களென்று நினைக்கிறேன்.

   // ஆனால் அரசு என்பது பொதுமக்கள்
   நலனுக்காக முடிவு எடுப்பதாக அமைய
   வேண்டும். //

   அப்படியென்றால், தமிழக அரசின் முடிவு,
   பொதுமக்கள் நலனுக்காக அல்ல என்பது
   உங்கள் வாதமா…?

   ஆக, தமிழக அரசு ஹிந்துக்களுக்கு
   விரோதமாக முடிவெடுத்திருக்கிறது
   என்று கூறுகிறீர்கள்…?

   அதற்கு ஏன் இத்தனை சுற்றி வளைப்பு…?
   நேரடியாகவே சொல்லி இருக்கலாமே.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    தமிழக அரசு, நியாய தர்மத்தை ‘ஹிந்து’ மதத்திற்கு மட்டும்தான் பிரயோகப்படுத்துகிறது. இதுக்கு சிறுபான்மையினரின் வாக்கு வங்கி மிகப் பெரிய காரணம் என்று நான் நினைக்கிறேன். (ஏற்கனவே பாராளுமன்றத் தேர்தலில் அவங்க வாக்கு கிடைக்காததால், நியாய தர்மத்தை சிறிபான்மையினரின் எந்தப் பிரச்சனையிலும் அரசு கைக்கொள்வதில்லை. இங்கு உதாரணங்கள் தர நான் விரும்பவில்லை. நீங்களே செய்திகளில் பார்த்திருப்பீங்க) இது எதுல கொண்டுபோய் விடும் என்றால், பெரும்பான்மை வாக்கு வங்கி என்பதில் கொண்டுபோய்விடும். பாஜக வளர்ந்ததற்கு மிகப் பெரும் காரணமே காங்கிரஸ் மற்றும் அவங்களோட கூட்டுச் சேர்ந்து மத்திய அரசில் இருந்த கட்சிகள்தான்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     புதியவன்,

     தமிழக அரசின் இந்த முடிவில் தவறு
     எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை;

     நீங்கள் பிரச்சினையை பாஜக
     கண்ணோட்டத்தோடு பார்ப்பதால்
     உங்களுக்கு தவறாகத் தோன்றுகிறது…

     நீங்கள் உங்கள் கண்ணாடியை
     மாற்றிக் கொண்டாலொழிய
     இந்தப் பார்வை மாற வாய்ப்பில்லை
     என்றே நினைக்கிறேன். 🙂

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.