சினிமா தியேட்டரில் விபூதிப் பிரசாதம்…..!!!

”’

நேற்றைய இடுகை ஒன்றில், வாரியார் சுவாமிகள் பற்றி
ஏற்கெனவே இங்கே எழுதியிருந்த ஒரு இடுகையைப்பற்றி
கூறி, அது கிடைத்தால் அவசியம் மறுபதிவு செய்கிறேன்
என்று சொல்லி இருந்தேன்… அதிருஷ்டவசமாக
உடனடியாகவே கிடைத்து விட்டது..

வாரியார் சுவாமிகளைப்பற்றிய ஒரு இனிய அனுபவம் அது.
– 3 வருடங்களுக்கு முன்னர் நான் இந்த வலைத்தளத்தில்
எழுதிய “சினிமா தியேட்டரில் விபூதிப் பிரசாதம்” என்கிற
தலைப்பிலான அந்த இடுகையை கீழே மறுபதிவு
செய்கிறேன்.

————————————————————

இன்றைய இளைஞர்களிடையே அதிகம் அறிமுகம்
இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதற்கு முந்தைய
தலைமுறையில், வாரியார் சுவாமிகளை தெரியாத
தமிழர்களே இருந்திருக்க மாட்டார்கள் எனலாம்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல… தமிழ் கூறும் நல்லுலகம்
முழுவதையும், அவரது கணீரென்ற வெண்கலக் குரலும்,
அழகான, எளிய தமிழும் கட்டிப் போட்டிருந்தது எனலாம்.
வாரியார் சுவாமிகளைப்பற்றி இன்றைய இளைஞர்களுக்கு
சொல்ல வேண்டும் என்று நினைத்து இந்த இடுகையை
எழுதுகிறேன்.

25.08.1906-ல் பிறந்த திருமுருக கிருபானந்த வாரியார்
சுவாமிகள், தனது 87-வது வயதில், 07.11.1993 அன்று
லண்டனிலிருந்து தமிழகத்திற்கு விமானத்தில் திரும்பிக்
கொண்டிருந்தபோதே இறைவடி சேர்ந்தார்.
சுமார் 60 ஆண்டுக்காலம், தமிழுக்கும், ஆன்மிக
வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பணி அற்புதமானது.

எங்கே உரை நிகழ்த்தினாலும் –

“கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி ”

என்னும் திருப்புகழ் வரிகளோடு தான் துவங்குவார்.

பாரவண்டி இழுக்கும் தொழிலாளிக்கு கூட புரியும்
வண்ணம் எளிய தமிழில், இடையிடையே பாடல்களோடு
உரையாற்றுவார்… அவரது கூட்டங்களில் நிறைய
சிறுவர்களை முதல் வரிசையில் காணலாம். அவ்வப்போது,
சிறுவர்களிடம் எதாவது வினா எழுப்புவார் – சரியான
விடையை சொல்பவருக்கு உடனே ஒரு புத்தகத்தை
பரிசளிப்பார். அவர் கதை சொல்லும் விதம் சிறுவர்களை
கூட கவர்ந்திழுக்கும்.

இப்போது நினைத்தால் கூட வியப்பாக இருக்கிறது.
வாரியார் சுவாமிகளை நான் எப்போது முதல் முதலாக
தரிசிக்க நேர்ந்தது…?

1950-51 – எனக்கு 7-8 வயதிருக்கும். நாங்கள் அப்போது
மஹாராஷ்டிராவில் கர்க்கி என்னும் ஊரில் இருந்தோம்.
அங்கே ஒரு சிறிய ராமர் கோவில். கர்க்கியில் இருந்த
சுமார் 50 தமிழ்க்குடும்பங்களும் ராம நவமியின் போது
அங்கே ஒன்று சேர்ந்து விழாவெடுக்கும். தமிழகத்திலிருந்து
யாராவது ஆன்மிக பேச்சாளர்கள் அல்லது கலைஞர்களை
அழைத்து கலந்து கொள்ளச் செய்வார்கள். அந்த வருடம்
வாரியார் சுவாமிகள் பம்பாய் வருவதை அறிந்து,
அப்படியே அவரை கர்க்கிக்கும் அழைத்து வந்து விட்டார்கள்.

அன்றிரவு, ராம் மந்திரில் வாரியார் சுவாமிகளின் இசை-உரை.
அவர் தனியாகத்தான் வந்திருந்தார். அவர் பாடும்போது
சுருதிப்பெட்டியை இயக்க யாராவது தேவைப்பட்டார்கள்.
முன் வரிசையில் உட்கார்ந்திருந்த 7-8 வயது சிறுவனான

என்னை அவரே கூப்பிட்டு மேடையில், தன்னருகே
அமர்த்திக் கொண்டார். சின்ன சுருதிப்பெட்டியை என்
முன்னர் வைத்து, எப்படி பிடித்துக் கொள்ள வேண்டும்,
எப்படி இயக்க வேண்டும் என்பதையும் அவரே சொல்லிக்
கொடுத்தார்…

உரை திருப்புகழுடன் துவங்கியது.
விழா அமைப்பாளர் வாரியார் சுவாமிகளுக்கு மாலை
அணிவிக்க அருகே வந்தார். அவரிடம், என்னை கைகாட்டி,
அந்த சிறுவனுக்கும் மாலை போடுங்கள் என்றார்.
எனக்கு ஒரே மகிழ்ச்சி -ஆனந்தம். ஏற்கெனவே மேடையில்
இடம்… சுருதி வாத்தியக்காரன், பின் மாலை வேறு…!!!
என் வாழ்நாளில் முதல் முதலில் எனக்கு கிடைத்த மாலை..!!!
அதுவும் வாரியார் சுவாமிகளின் ஆசியுடன் …..
இது தான் நான் வாரியார் சுவாமிகளை முதன் முதலில்
அறிந்துகொண்ட வைபவம்.

இதற்குப் பிறகு …..?

1972 – நான் திருச்சியில் இருந்த சில வருடங்கள்…
ஒண்டிக்கட்டை… புதுப்படம் பார்க்க வாய்ப்பு
கிடைக்கும்போதெல்லாம் பார்த்து விடுவது வழக்கம்.
தீபாவளி நாள்… நான் ஊருக்கு போகவில்லை…நண்பன்
ஒருவனுடன் காலைக்காட்சி புதுப்படம் ஒன்றிற்கு
சென்றிருந்தேன்.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே அப்போது “சென்டிரல்”
என்று ஒரு திரையரங்கம் இருந்தது. ஒரு இஸ்லாமிய
குடும்பத்திற்கு சொந்தமானது….. தீபாவளிக்கு அங்கே
தேவர் பிலிம்ஸ் எடுத்த “தெய்வம்” திரைப்படம்
ரிலீஸ் செய்திருந்தார்கள்… முதல் நாள் – முதல் காட்சி..
ஆனாலும் கூட்டம் அதிகம் இல்லை..

விளக்குகள் அணைக்கப்பட்டு, விளம்பரமோ, செய்திப்படமோ
ஓடிக்கொண்டிருந்தது. நான் பால்கனியில் இருந்தேன்.
நிறைய சீட்டுகள் காலியாக இருந்தன. திடீரென்று கொஞ்சம்
சலசலப்பு… 8-10 பேர் உள்ளே வந்தது தெரிந்தது.
ஏதோ வித்தியாசமாக தெரியவே இருட்டில் உற்றுப்பார்த்தேன்…

ஆச்சரியம்….!!!
வாரியார் சுவாமிகள், நாலைந்து பக்தர்களுடன்
வந்திருக்கிறார். தியேட்டர் நிர்வாகிகள் கூடவே வந்து
டார்ச் விளக்கில் அவருக்கு உட்கார வசதி செய்து
கொடுத்திருக்கிறார்கள்.

அநாவசியமாக படத்தை நிறுத்தி, விளக்குகளை போட்டு,
சினிமா பார்க்க வந்தவர்களை தொந்திரவு செய்ய வேண்டாம்
என்று வாரியார் சுவாமிகள் சொல்லி இருக்கிறார் போலும்…
அதான் டார்ச் விளக்கிலேயே ….

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
20-21 வருடங்களுக்குப் பிறகு வாரியார் சுவாமிகளை
நான் எந்த இடத்தில் பார்க்கிறேன்…..!!!

அந்த படத்தில், சாண்டோ சின்னப்ப தேவர் மிகவும்
பிரியப்பட்டு, சில நிமிடங்களுக்கு வாரியார் சுவாமிகள்
உரையாற்றுவது போல் ஒரு காட்சி எடுத்திருந்தார். இது
எனக்கு ஏற்கெனவே தெரியும்… இருந்தாலும் வாரியார்
சுவாமிகள் படம் பார்க்க வருவார் என்று நான் எதிர்பார்க்கவே
இல்லை. படத்தில் அவர் தோன்றிய காட்சிகளை அவர்
ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்…
(அப்போது வீடியோ வசதிகள் எல்லாம் இல்லை..
படம் பார்ப்பதானால், தியேட்டருக்கு தான் போக வேண்டும்…)

இடைவேளை… விளக்குகள் போடப்பட்டன…
அதற்குள் தியேட்டருக்குள் செய்தி பரவி விட்டது…
பால்கனியில் இருந்தவர்களோடு, கீழே இருந்தவர்களும்,
மேலே வந்து விட்டார்கள். எல்லாரும்
வாரியார் சுவாமிகளை சூழ்ந்து கொண்டனர்.
திடீரென்று ஒருவர் வாரியார் அவர்கள் இருந்த இருக்கை
எதிரில், அவர் கால்களில் கீழே விழுந்து சாஷ்டாங்கமாக
வணங்கி எழுந்தார்….சுவாமிகள் தன் இடுப்பில் இருந்த
பெரிய சுருக்குப்பையை அவிழ்த்தார். உள்ளே கையை
விட்டு விபூதியை எடுத்து, வணங்கியவர் நெற்றியில்
பூசினார்…

அவ்வளவு தான்… மடமடவென்று மொத்த கூட்டமும்
அவரை சூழ்ந்து கொண்டது.. அவரும் எழுந்து
இடையில்கொஞ்சம் காலியாக இருக்கின்ற இடத்தில் நின்று
கொண்டார். வரிசையாக ஒவ்வொருவராக காலில்
விழுந்து வணங்கி பரவசத்துடன் விபூதி பிரசாதம் பெற்றுக்
கொண்டனர்….அன்று தியேட்டரில் இடைவேளை அரை
மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது…!!! தியேட்டர் முதலாளி
சாயபுவும் மிகுந்த பரவசத்துடன் எல்லாவற்றையும்
அனுபவித்துக் கொண்டிருந்தார்….!!!

இன்றைய இளைஞர்களுக்காக –
வாரியார் சுவாமிகள் தோன்றும் ஒரு காட்சி, தேவரின்
“துணைவன்” படத்திலிருந்து –

வாரியார் சுவாமிகளின் சமாதியையும் அதையடுத்து
அழகிய முருகன் கோவில் ஒன்றையும்
வேலூர்-காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரில்
எழுப்பி இருக்கிறார்கள்
ஓட்டல் சரவணபவன் குடும்பத்தினர்….

மிக அழகாக கட்டி இருக்கிறார்கள்.. சிறப்பாக maintain
செய்கிறார்கள்…. வாய்ப்பு கிடைக்கும்போது
போய் வாருங்கள்…

.
—————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to சினிமா தியேட்டரில் விபூதிப் பிரசாதம்…..!!!

  1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ஐயா
    இனிய பாரத தேசத்தின் 74-வது சுதந்திர நன்நாள் வாழ்த்துகள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.