எப்படிப்பட்ட திப்பு சுல்தான் – ….?

….
….

ஃப்ரென்ச் அரசின் கேலரியில் வைக்கப்பட்டிருக்கும் ஹைதர் அலி படம்

….

திப்பு சுல்தான் அவரது வித்தியாசமான சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் காட்சி

….

…..

இந்திய சுதந்திரப் போரின் நாயகர்களைப்பற்றி
நினைக்கும்போது, ஹைதர் அலி மற்றும் அவரது மகன்
திப்பு சுல்தான் ஆகியவர்களின் பங்களிப்பை மறுக்கவோ,
மறைக்கவோ முடியாது என்பதே சரித்திர உண்மை.

தங்களின் ஆட்சிக்காலம் முழுவதும்,
தந்தை ஹைதர் அலி (1761-82) மற்றும் மகன்
திப்பு சுல்தான் (1782-97 ) ஆகிய இருவருமே
பிரிட்டிஷ்காரர்களை தொடர்ந்து எதிர்த்து போரிட்டுக்கொண்டே
இருந்ததும், பல போர் முனைகளில் பிரிட்டிஷ் ராணுவத்தை
தோற்கடித்து சின்னாபின்னமாக்கியதும் சரித்திரம்
சொல்லும் உண்மைகள்.

அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலத்தில்,
இந்திய மன்னர்கள் ஒன்றிணைந்து போரிட்டிருந்தால்,
பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் காலூன்றி நிலைத்து நின்றிருக்க
வாய்ப்பே இருந்திருக்காது… “நம்மில் ஒற்றுமை நீங்கின்
அனைவர்க்கும் தாழ்வே” என்கிற பாரதியின் வார்த்தை
இங்கு உறுதிப்படுகிறது.

ஹைதர் அலி, 1782-ல் தண்டுவடப் பிரச்சினை காரணமாக
மரணப்படுக்கையில் இருந்தபோது கூட –

” ஆடுகளைப் போல 2௦௦ ஆண்டுகள் பிழைப்பதை விட
புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்”

-என்று முழக்கமிட்டிருக்கிறார்.

ஏவுகணைத் தொழில் நுட்பத்தை உலகிலேயே
முதல் முதலாக கண்டுபிடித்து, பயன்படுத்தி –
ஆங்கிலேயரையே அலற வைத்த இந்தியன் திப்பு.

திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளை
லண்டனுக்கு கொண்டுபோய், அதை தீவிரமாக ஆராய்ந்து,
மேலும் வலுக்கூட்டி, பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் ராணுவத்தில்

அறிமுகப்படுத்தினார்கள் என்று சரித்திரம் சொல்கிறது…
திப்புவின் துவக்ககால ஏவுகணை லண்டன் மியூசியத்தில்
இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

லண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள
ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான்
பயன்படுத்திய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதைப்பற்றி அறிந்த இந்தியாவின் ராக்கெட் விஞ்ஞானியும்
முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர்
அப்துல் கலாம் முயற்சி எடுத்துக்கொண்டு நேரில் சென்று
பார்த்தார்.

உலக அளவில் முதல் இராணுவ ஏவுகணைகள் அவையே
என்பதையும்,

பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆய்வு நடத்தி
அவற்றை திருத்தியமைத்து பயன்படுத்தியதையும்,

மேலும் இது இந்தியாவின் திப்பு சுல்தானின் –
சொந்த தொழில்நுட்பம் என்பதையும்,
பிரெஞ்சு நாட்டினரிடம் இருந்து கற்றது அல்ல என்பதையும்,

சர் பெர்னார்டு லோவல் என்கிற பிரபல
பிரிட்டிஷ் விஞ்ஞானி எழுதிய
“விண்வெளி ஆராய்ச்சிகளின் தோற்ற மூலங்களும்,
பன்னாட்டுப் பொருளாதாரங்களும்”
(The Origins and International Economics
of Space Explorations)
– எனும் நூலின் உதவியோடு
டாக்டர் அப்துல் கலாம் நிரூபித்தார்.

திப்புவை சிலர் கொடுங்கோலன் என்று சொல்லலாம்.
வேறு சிலர் பிரிட்டிஷாரை எதிர்த்து தன் வாழ்நாள் முழுதும்
போராடிய ஒரு இந்திய மன்னன் என்று சொல்லலாம்.
இன்னும் சிலர் மத ரீதியில் திப்பு இழைத்த கொடுமைகளை
பட்டியலிடலாம்.

அதே சமயம் இன்னும் சிலர் –
ஆவணங்களின்படி, ஆண்டுதோறும் இந்துக்களின்
158 பெரிய கோயில்களுக்கு நிதியுதவி அளித்து வந்த
திப்புவின் அரசு, பல கோயில்களுக்கு நிரந்தரமாக
நிலங்களையும் நன்கொடையாக கொடுத்ததை
நினைவுபடுத்தலாம். மராத்தியரால் சீரழிக்கப்பட்ட
சிருங்கேரி மடத்தை புனரமைப்பு
செய்து கொடுத்ததையும் சொல்லலாம்….

இஸ்லாமியரான அவர் தொடர்ந்து தனது கோட்டையில்
வருடந்தோரும் 10 நாட்கள் தசரா கொண்டாடியதை
மறக்க முடியுமா என்று கேட்கலாம்…

இன்றும்கூட தினமும் காலை 7.30 மணியளவில்
கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் திப்புவின் பெயரில்
பூஜைகள் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டலாம்.

மதக்கண்ணொட்டத்துடன் நோக்கினால் –
இங்கே எந்த ஒரு முடிவிற்கும் வர முடியாது…
நல்லதும், கெட்டதும் இணைந்த ஒரு மனிதரைத்தான்
திப்புவில் காண முடியும்.

நம்மைப் பொருத்தவரையில் – இங்கே
மதரீதியாக திப்பு சுல்தானை பார்க்காமல் –

18-ஆம் நூற்றாண்டில், இந்தியாவை ஆக்கிரமித்து,
நாடு முழுவதையும் தன்வசமாக்கிக் கொள்வதில் மிகத்தீவிரமாக

ஈடுபட்டிருந்த பிரிட்டிஷாரை, தீரமாக எதிர்த்து நின்ற ஒரு
இந்திய மன்னன் என்கிற பார்வையில் பார்த்தால் போதுமானது
என்று நினைக்கிறேன்.

பொதுவாக 15-16 வயதில் நாமெல்லாம் என்ன செய்து
கொண்டிருப்போம்…? திப்பு, தனது 16-வது வயதில்,
1766-ல் முதலாவது மைசூர் யுத்தத்திலும், 17-வது வயதில்
ஆங்கிலோ-மராத்தா யுத்தத்திலும் மிகப்பெரிய, வலுவான
ஆங்கிலேயப்படைகளை எதிர்த்துப் போரிட்டான்…
அந்த துணிச்சல், வீரம் பாராட்டத்தக்கதல்லவா…?

….

….

தனது 48-வது வயதில், ஸ்ரீரங்கபட்டனத்தில்,
பிரிட்டிஷாரை எதிர்த்து கடைசிவரை போரிட்டு
வீர மரணமடந்தான்.

பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய அத்தனை பேருக்கும்
இந்திய சுதந்திரத் திருநாளில் – நமது வீர வணக்கங்கள்…

.
—————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to எப்படிப்பட்ட திப்பு சுல்தான் – ….?

  1. arul சொல்கிறார்:

    well said KM sir. Happy Independence day

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.