….
….
….
அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் –
அசோகமித்திரன்
(1960-ல் வெளிவந்த சிறுகதை இது…)
ஸ்ரீராமுக்கு வயது இருபத்தொன்று நடந்துகொண்டிருந்தது.
பி. ஏ. பரிக்ஷை எழுதியிருந்தான். பரிக்ஷை முடிவுகள் ஜூன்
மாதத்தில் வரும். நடந்து கொண்டிருந்தது ஏப்ரல் மாதம்.
ராமஸ்வாமி ஐயர் ஸ்ரீராமின் அடுத்த வீட்டுக்காரர்.
மருந்துக் கம்பெனி ஒன்றில் குமாஸ்தாவாக இருந்தார்.
அவருக்கு ஐந்து குழந்தைகள். முதல் மூன்றும் பெண்கள்.
அப்புறம் நான்கு வயதில் ஒரு பிள்ளை. கடைசியாக ஒரு பெண்.
அது பிறந்து ஒன்பது மாதங்கள்தான் ஆகியிருந்தன.
ஸ்ரீராம் ஒரு ஆங்கில தினசரிக்குச் சந்தாதாரர். பத்திரிகை
தினமும் காலை ஆறு மணிக்கு அவன் வீட்டில்
விநியோகிக்கப்பட்டுவிடும். வழக்கமாகப் பத்திரிகை கொண்டு
வருபவனுக்கு அன்று கோர்ட்டுக்குப் போக வேண்டியிருந்தது.
ஆதலால் அவன் தன் மகனிடம் பத்திரிகைகளைக் கொடுத்து
விநியோகித்து வரச் சொல்லியிருந்தான்.
ராமஸ்வாமி ஐயர் காலையில் எழுந்தபோது அவர் வீட்டு
ஜன்னல் வழியாகப் பத்திரிகை ஒன்று நீட்டிக் கொண்டிருந்ததைப்
பார்த்தார். அது யாருடையது என்பது அவருக்குத் தெரியாது.
முகம் கழுவி, காப்பியும் குடித்த பிறகு அந்தப் பத்திரிகையை
ஒரு வரி விடாமல் படிக்க ஆரம்பித்தார்.
தெருவில் ஒருவன் புதுப்புளி விற்றுக்கொண்டு போனான்.
விலை மிகவும் மலிவு. ராம்ஸ்வாமி ஐயர் வெளியே வந்து புளி
விற்பவனை ஒரு மணங்கு நிறுத்துப் போடச் சொன்னார்.
புளி விற்பவன் தராசில் ஒரு தடவைக்கு இரண்டு வீசையாக
நிறுத்தான்.
புளி உருண்டைகளை உள்ளே கொண்டுபோய்ப் போட்டுவர
ஏதாவது தேவைப்பட்டது. ராமஸ்வாமி ஐயர் கையில்
பத்திரிகை இருந்தது. அது யாருடையது என்று
அவருக்குத் தெரியாது.
அவர் மூன்றாவது தடவையாகப் புளி உருண்டையை
உள்ளே கொண்டு செல்லும்போது ஸ்ரீராம் வெளியே வந்து
யாரிடமோ பத்திரிகைக்காரன் பற்றி விசாரித்துக்
கொண்டிருந்தான். ராமஸ்வாமி ஐயர் உள்ளே விரைந்து சென்று
புளியை உதறினார். அவரால் முடிந்தவரை அந்தத் தினசரியைச்
சுத்தம் செய்து, வெளியே வந்து அதுதான் அவன் பத்திரிகையாக
இருக்கக் கூடுமோ என்று ஸ்ரீராமிடம் கேட்டார்.
ஸ்ரீராம் பத்திரிகையை அவரிடமிருந்து பறித்துக் கொண்டு
பிரித்துப் பார்த்தான். முன் பக்கத்தில் ஒரு சினிமாப் படத்தின்
முழுப் பக்க விளம்பரம் இருந்தது.
அந்த விளம்பரத்தில் தென்னாட்டிலேயே மிகச் சிறந்த அழகி
என்று புகழ் பெற்ற நடிகையின் முகம் பெரிய அளவில்
அச்சிடப்பட்டிருந்தது. ஆறு வீசைப் புளி அந்த முகத்தில் பல
இடங்களில் கறை ஏற்படுத்தியிருந்தது.
ஸ்ரீராமுக்கு அந்த நடிகை மீது அளவிடமுடியாத ஆசை.
எந்த எண்ணத்தில் வேறொருவருடைய பத்திரிகையைத்
தூக்கிச் சென்றார் என்று அவன் ராமஸ்வாமி ஐயரைக்
கேட்டான்.
ராமஸ்வாமி ஐயர் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும்,
பத்திரிகை அவர் ஜன்னலில் சொருகப்பட்டிருந்தது என்றும்
சொன்னார். ஸ்ரீராம் முணுமுணுத்துக் கொண்டே
பத்திரிகையைப் படிக்க ஆரம்பித்தான். அந்த அழகியின்
முகம் அலங்கோலமாக இருந்தது.
காது கேட்கும்படியாக ஸ்ரீராம், “முட்டாள்” என்று
முணுமுணுத்தான். ராமஸ்வாமி ஐயர் “என்ன” என்று கேட்டார்.
ஸ்ரீராம் “உமக்கு ஒன்றும் இல்லை” என்று கூறிவிட்டு
மறுபடியும் “முட்டாள்” என்றான்.
கால்மணி நேரத்திற்குள் ராமஸ்வாமி ஐயர் ஸ்ரீராமை அவன்
முட்டாள், மடையன், அயோக்கியன், போக்கிரி என்று
தெரிவித்தார். ஸ்ரீராமும் ராமஸ்வாமி ஐயரைப் பற்றி
ஏறகுறைய அதே அபிப்ராயத்தைத் தான் கொண்டிருப்பதாக
அறிவித்தான்.
அன்று ராமஸ்வாமி ஐயர் காரியாலயத்திற்குப்
போகும்போது ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டது.
இரண்டு நாட்கள் கழித்து அதிகாலையில் ராமஸ்வாமி ஐயர்
வேப்பிலை கொண்டு செல்வதை ஸ்ரீராம் கவனிக்க நேர்ந்தது.
ராமஸ்வாமி ஐயரின் பிள்ளைக்கு அம்மை போட்டிருப்பதாக
அவன் அம்மா தெரிவித்தாள். ஸ்ரீராம் அன்று எம்ப்ளாய்மென்ட்
எக்ஸ்சேஞ்சு, புத்தகசாலை, சினிமா இவையெல்லாவற்றிற்கும்
போக வேண்டியிருந்தது.
அவன் வீட்டை விட்டுக் கிளம்பியவுடன் முதல் காரியமாக
சுகாதார இலாகாவுக்கு ஒரு கடிதத்தைத் தபால் பெட்டியில்
போட்டான். அந்தக் கடிதத்தில் அவன் கையெழுத்திடவில்லை.
பகல் முழுவதும் நல்ல அலைச்சல். ஸ்ரீராம் மாலை வீடு
திரும்பும்போது முழுக்க இருட்டவில்லை. அப்போது
அவனுக்கு ஏதோ மாதிரி இருந்தது. அது என்னது என்று
அவனுக்குப் புலப்படவில்லை. மனம் நிம்மதியற்று இருந்தது.
பிளாஸ்கில் அவனுக்காக வைத்திருந்த காப்பியை மெதுவாகச்
சீப்பிக் குடித்தான். அப்போது அவன் அம்மா சொன்னாள்.
யாரோ அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அன்று
பகலில் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாத சமயத்தில்
அவர்கள் ராமஸ்வாமி ஐயரின் மகனை ஒரு மோட்டாரில்
காலரா ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் சென்று விட்டார்கள்.
ராமஸ்வாமி ஐயரின் மனைவி பெரிதாக அழுது
வந்தவர்களையெல்லாம் கெஞ்சினாள். ஆனால் அவர்கள்
அந்த நான்கு வயதுக் குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டார்கள்.
யாரும் ஒன்றும் செய்வதற்கில்லை. அதுதான் சட்டம் என்று
சொன்னார்கள். ராமஸ்வாமி ஐயரின் மனைவி பைத்தியம்
பிடித்தவள் போலக் கதறிக் கொண்டே தெருவில் ஓடினாள்….
ஸ்ரீராமுவுக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது. அவன்
இப்படியெல்லாம் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை.
ராமஸ்வாமி ஐயர் ஆபிஸிலிருந்து வீடு திரும்பினார். வந்தவர்
ஆபிஸ் உடைகளைக் கூட கழட்டாமல் வெளியே ஓடினார்.
அவர் மின்சார ரயில் நிலையம் இருக்கும் திசை நோக்கி
ஓடுவதை ஸ்ரீராம் கவனித்தான். தொத்து வியாதிகளுக்கான
ஆஸ்பத்திரி ஊருக்கு வெளியே பத்து மைல் தூரத்தில்
இருந்தது.
ஸ்ரீராமால் நிலைகொண்டு இருக்க முடியவில்லை.
சாப்பாட்டை ருசித்து உண்ண முடியவில்லை. வீட்டு
வெளிச்சுவர் அருகே நின்று கொண்டு தெருவில் வருவோர்
போவோரைப் பார்த்துக் கொண்டிருந்தான். மணி பத்துக்கும்
மேலாகிவிட்டது. ஊரோசை அடங்கத் தொடங்கிவிட்டது.
ரயில் நிலையம் அவன் வீட்டிலிருந்து அரை மைல் தூரத்தில்
இருந்தது. அங்கு வண்டிகள் வந்து போகும் ஊங்கார சப்தம்,
லெவல் கிராஸிங்கில் அடிக்கும் மணியின் சப்தம்,
சக்கரங்கள் இருப்புப் பாதையில் உருளும் சப்தம்,
இவை எல்லாவற்றையும் ஸ்ரீராமால் மிகத் தெளிவாகக் கேட்க
முடிந்தது.
தன்னைச் சுற்றி ஊர் அடங்கி ஒடுங்கிப் போவதை அவன்
அதற்கு முன்னால் உணர்ந்து கவனித்தது கிடையாது.
வைத்தியக் கல்லூரியில் படிக்கும் அந்தக் கோடி வீட்டுப்
பையனும் விளக்கை அணைத்து விட்டான்.
தெருவின் இரண்டு வரிசை வீடுகளும் கருத்த நிழல்களாகக்
காணப்பட்டன. ஸ்ரீராமின் கண்கள் கனத்தன. அவன்
படுக்கையில் சாய்ந்தான். அவனால் தூங்க முடியவில்லை.
அவன் மறுபடியும் தெருவுக்கு வந்தான். அவன் வேஷ்டி
மட்டும் அணிந்திருந்தான். அந்த வேளையில் எல்லாம்
இருட்டாக இருந்தது. எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
அவன் தன்னந்தனியாகத் தெருவில் காத்திருந்தான்.
கடைசியில் எது ஒன்றை நினைத்துப் பயந்து
கொண்டிருந்தானோ, எது ஒன்றைத் தவிர்ப்பதற்கு அவனுக்கு
உலகத்தில் உள்ளதையெல்லாம் கொடுத்துவிடுவானோ
அது தெருமுனையில் தோன்றிற்று.
அது ராமஸ்வாமி ஐயர். அவர் அழுது அழுது தொண்டை
கம்மிப் போயிருந்த தன் மனைவியைத் தாங்கிக்கொண்டு
அழைத்து வந்தார். இரண்டு வருடங்களாகப் பக்கத்து
வீட்டிலேயே இருந்தும்கூட ஸ்ரீராம் ராமஸ்வாமி ஐயரின்
மனைவியை எண்ணிப் பத்துத் தடவைகூடப் பார்த்தது
கிடையாது.
அவள் அப்படி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பாள்.
ஊமையோ ஊனமோ என்ற சந்தேகம்கூட ஸ்ரீராமுவுக்குத்
தோன்றியது உண்டு. அப்படிப் பட்டவள் அந்த அர்த்த
ராத்திரியில் தன் அடக்கத்தை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு
அழுதுகொண்டு வருகிறாள். பிற்பகலில் யார் யார்
காலிலெல்லாம் விழுந்திருக்கிறாள். பைத்தியம் பிடித்தவள்
போலக் கதறியிருக்கிறாள்.
ராமஸ்வாமி ஐயரும் அவர் மனைவியும் வீட்டினுள்
சென்றார்கள்.
அத்தனை நேரம் ஒன்றும் புரியாமல் தூங்கிப் போயிருந்த
குழந்தைகள் அனைத்தும் விழித்துக் கொண்டு ஒரு சேர
அழ ஆரம்பித்தன. தாயார் இன்னமும் புலம்பினாள். அது
அவள் மகன். அவளுடைய ஒரே மகன்.
நான்கு வயதுதான் ஆகிறது. ஒரு மணி நேரம்கூட அது
அவளைப் பிரிந்து இருந்ததில்லை. இப்போது அந்தக்
குழந்தைக்கு உடம்பு சரியில்லாதபோது எங்கேயோ
அத்துவானத்திற்குத் தூக்கிப் போய்விட்டார்கள்.
வியாதியுடன் படுத்திருக்கும் குழந்தைக்குப் பெற்ற தாயாரால்
சிசுருஷை செய்ய முடியாது. அது தாகம் தாகம் என்று
கதறும்போது ஒரு வாய்ப்பால் தர முடியாது. குழந்தையை
எங்கேயோ பழக்கமில்லாத பயங்கரமான இடத்தில் ஆயிரம்
குஷ்டரோகிகள், காலரா வியாதிக்காரகள் நடுவில்
போட்டு விடுவார்கள்.
குழந்தைக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூற ஒருவரும்
இருக்க மாட்டார்கள். குழந்தை கிலி பிடித்து நடுங்கும்.
அதைக் கொல்லைப்புறம் அழைத்துப் போக யாரும் இருக்க
மாட்டார்கள். யாரோ மீசை வைத்திருக்கும் முரடன் தான்
இருப்பான். அவன் குழந்தையை அதட்டி மிரட்டுவான்.
ஆண்டவனே, நான் என்ன பாவம் செய்தேன்? ஏன்
இந்த மாதிரி ஆக வேண்டும்? ஏன் இப்படி இரக்கமில்லாமல்
என் குழந்தையை வாட்டுகிறாய்?
ஸ்ரீராம் இரவு முழுவதும் தூங்கவில்லை. இரண்டு நாட்கள்
கழித்துக் குழந்தை இறந்துவிட்டது. அம்மை
போட்டிருந்தபடியால் உடலை வீட்டுக்குக் கொண்டு வராமல்
நேரே சுடுகாட்டிற்குக் கொண்டு போய்விட்டார்கள்.
ஒரு மாதம் கழித்து மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு
ஸ்ரீராம் – ராமஸ்வாமி ஐயர் வீட்டினுள் அடி எடுத்து
வைத்தான். ராமஸ்வாமி ஐயர் ஒரு சாய்வு நாற்காலியில்
உட்கார்ந்திருந்தார்.
ஸ்ரீராம் மெதுவாக, “ராஜூ பற்றி உங்களிடம் ஒன்று
சொல்ல வேண்டும்,” என்றான். ராஜூ என்பது
ராமஸ்வாமி ஐயரின் மகனின் பெயர்.
ராமஸ்வாமி ஐயர் தலையைத் தூக்கி, “என்ன?” என்றார்.
“அவனுக்கு அம்மை போட்டிருந்தது பற்றித் தகவல்
கொடுத்தது யார் தெரியுமா?”
“யாராயிருந்தால் என்ன?”
”அது நான்தான்”
ராமஸ்வாமி ஐயர் அவனையே உற்று நோக்கிக்
கொண்டிருந்தார். பிறகு “காமு!” என்று அழைத்தார்.
அவர் மனைவி சமையலறையிலிருந்து வந்தாள்.
ஒரு மாதத்தில் அவள் மிகவும் மாறிப் போயிருந்தாள்.
ராமஸ்வாமி ஐயர் அவளைச் சுட்டிக் காட்டி,
“அவளிடம் சொல்லு,” என்றார்.
ஸ்ரீராமுவுக்கு அந்தக் கணமே அவள் காலில் விழுந்து
கதறி அழ வேண்டும் போலிருந்தது. அவன் நெஞ்சிலுள்ளதை
விழுங்கிக் கொண்டு, “ராஜூவைப் பற்றித் தகவல்
அனுப்பியவன் நான் தான்,” என்றான்.
அவளிடமிருந்து அவன் மிகக் கொடூரமான சாபங்களுக்காகக்
காத்திருந்து, உள்ளூரப் பிரார்த்திக்கவும் செய்தான். ஆனால்
அவள் தன்னுடைய இயல்பான அடக்கத்தைத் திரும்பப்
பெற்றுக் கொண்டவளாக இருந்தாள்.
அவள் ஒன்றும் சொல்லவில்லை.
————————————————————-
என் குறிப்பு – அக்கம் பக்கத்தில் இருப்போர், அலுவலகத்தில்
கூடப் பணிபுரிவோர் என்று சிலரோடு அடிக்கடி பல்வேறு
காரணங்களுக்காக மனஸ்தாபங்கள் ஏற்படுவது சகஜம்.
இதை மனதில் வைத்து, பதிலுக்கு பழி தீர்த்துக்கொள்வதாக
நினைத்துக் கொண்டு, சில சங்கடங்களை அடுத்தவர்களுக்கு
உண்டாக்குபவர்களும் உண்டு. இத்தகைய பழிவாங்கல்கள்
சாதாரணமாக சிறிய அளவில் இருக்கும்… ஆனால், சில
சமயங்களில் இது மற்றவருக்கு எப்பேற்பட்ட பாதிப்புகளை
ஏற்படுத்தும் என்பது முன்பாகவே தெரிந்திருந்தால், அவர்கள்
இத்தகைய பழிவாங்கல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்…
அத்தகையோர், விளைவுகளைப்பார்த்து – மிகவும்
சங்கடப்படுவார்கள். அவர்களது மனசாட்சி அவர்களை உறுத்தும்..
உறுத்தவே உறுத்தாத, மாறாக மகிழ்ச்சி கொள்ளும்
மனசாட்சி உடையோரும் உண்டு.
அத்தகைய ஒருவரிடம் அலுவலகத்தில் நான் மாட்டிக்கொண்டு
இப்படி நிறைய அவஸ்தைப்பட்டிருக்கிறேன்.
எங்கள் அலுவலகத்தில் டேபிள் மேல், திறந்த இடத்தில் தான்
கையாளப்பட்டுக்கொண்டிருக்கும் ஃபைல்கள் இருக்கும். நான் என்
இருப்பிடத்தில் இல்லாத சமயத்தில் – மிக அவசரமானதும், கையாண்டுகொண்டிருப்பதுமான ஃபைல் எதையாவது
எடுத்து வேறு எங்காவது ஒளித்து வைத்து விடுவார்.
நான் பதட்டத்திலும், சங்கடத்திலும் தவிப்பதைப்பார்த்து
மனதுக்குள் சந்தோஷப்பட்டுக்கொள்வார். பின்னர்
வேறு வழியின்றி பல முயற்சிகளுக்குப் பின் நான்
மாற்று ஏற்பாடு ஒன்றை செய்தபிறகு
பழைய ஃபைல் என் டேபிளில் இருக்கும்….
இந்தக் கதையில் ஸ்ரீ ராம் மனம்மாறி வருந்துகிறார்.
ஆனால், என் அலுவலக நண்பரோ கடைசி வரையில்
மாறவே இல்லை….!!!
திருந்தாத, வருந்தாத ஜென்மங்களும் உண்டு என்பதை அவர்
நிரூபித்துக் கொண்டிருந்தார்….
அவர் மாற்றலாகி வேறு இடம் போகும் வரை என் துன்பங்கள்
தொடர்ந்துகொண்டே இருந்தன.
.
——————————————————————————————————-
அருமை
இன்றைய காலத்திற்கும் பொருந்துகிறது.
மனசாட்சி – நின்று கொல்லும்.
எனவே அடுத்தவருக்கு எந்த சிறிய அளவும்
தீங்கு செய்யாமலிருப்பதே நிம்மதிக்கு வழி.
Dear ka.mai sir ungalukku office la than ipdi oruthanga konja nalil unga problem seri agiduchi.but veetukulleye ipdi oruthar irundha epdi samalikradhu?..
கமலி,
வீட்டிலேயே, உறவுக்குள்ளேயே இப்படி ஒருவர்
அமைவது நமது துர்பாக்கியம் தான்.
முடிந்தால், அவரிடம் தனியே மனம்விட்டு
பேசிப்பார்க்கலாம். அவரது செயல்களால்,
பாதிக்கப்படுவோரின் துன்பங்களை எடுத்துச்
சொல்லி நல்ல விதத்தில் மாற்ற முயற்சிக்கலாம்.
அப்படியும் மாறவில்லையென்றால் –
பிரிந்து வாழக்கூடிய உறவென்றால்,
அவர்களைத் தவிர்த்து வாழ முயற்சிக்கலாம்.
பிரிய முடியாத உறவு என்றால் –
அவருக்கு மனமாற்றம் ஏற்பட கடவுளிடம்
பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி
எதுவும் இருப்பதாக எனக்குத்
தெரியவில்லை;
பிரார்த்தனைகள் பலிப்பதற்கு
சில சமயம் நீண்ட நாட்கள்
பிடிக்கின்றன… ஆனால், நிச்சயம்
அவை ஏற்கப்படுகின்றன.
உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை
அமைய நானும் வேண்டுவேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Thank you so much sir…