(பகுதி-2) – ஜெமினி கணேசனுக்கு இப்படி ஒரு அத்தை …

….
….

….

இன்றைக்கு 115 ஆண்டுகளுக்கு முன்னர், அந்தக்கால
மெட்ராஸில் –

ஒரு இளம்பெண் மருத்துவக் கல்லூரியில் பலரது
எதிர்ப்புகளையும் தாண்டி, ஒற்றை மாணவியாகச் சேர்ந்து
படிப்பது அவ்வளவு சுலபான விஷயம் அல்லவே…

மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில், பணியாற்றி வந்த
கர்னல் ஜிப்போர்டு என்ற அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர்,

தன்னுடைய வகுப்பில் மாணவிகளை உட்கார அனுமதிப்பது
இல்லை. ஆனால் அறுவை சிகிச்சை பாடத்தில் முத்துலட்சுமி
தங்கப்பதக்கம் பெற்ற பிறகு, மனம் மாறிய பேராசிரியர்,
பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் தனது
வகுப்பில் பெண்களும் உட்காரலாம் என்று கூறினார்.

1912-ம் ஆண்டு முத்துலட்சுமி, இந்தியாவின் முதல்
பெண் மருத்துவராக பட்டம் பெற்றபோது, ‘சென்னை
மருத்துவக்கல்லூரி வரலாற்றில் இது பொன்னான நாள்’
என்று எழுதினார் கர்னல் ஜிப்போர்டு.

பின்னர் எழும்பூர் மருத்துவமனையில் முதல் பெண்
மருத்துவராக பணியில் சேர்ந்தார். லண்டனில் உள்ள
செல்சியா மருத்துவமனையில் தாய்சேய் மருத்துவம் மற்றும்
புற்றுநோய் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார்.

1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட
அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர்
பாரீசில் நடைபெற்றது.

அதில் இந்தியாவின் சார்பில் அதன் முதல் பெண் டாக்டர்
முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர்
நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள்
முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும்
வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, இந்தியப் பெண்கள் சங்கத்தின்
முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும்
பெருமையும் இவருக்கு உண்டு.

அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி
தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்கிற பெருமையும்
முத்துலட்சுமி பெற்றார்.

1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராக டாக்டர்
முத்துலட்சுமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப்
பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக்
கொண்டு வந்து நிறைவேற்றினார்.

அவற்றில், பெண்கள் நலனுக்கான –

தேவதாசி முறை ஒழிப்பு,
( பல தடைகளை சந்தித்து மீண்ட பிறகு டாக்டர் முத்துலட்சுமி
உருவாக்கிய இந்த மசோதா 1947-ல் சென்னை தேவதாசிச் சட்டம்
என்ற பெயரில் சட்டமானது. இதன் மூலம் தேவதாசிகள்
திருமணம் செய்து கொள்ள சட்டபூர்வ உரிமை கிடைத்தது…)

இருதார தடைச் சட்டம்,
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம்,
பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம்
போன்ற சில குறிப்பிடத்தக்கவை.

முதலில், தேவதாசி முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட
பெண்கள் தங்கிப் படிப்பதற்காக தமது வீட்டில் அவ்வை விடுதி
என்ற பெயரில் 1930-ல் ஒரு விடுதி தொடங்கினார் முத்துலட்சுமி.

துவக்கத்தில் – தேவதாசி முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட
பெண்களுக்கு மட்டுமே என்று தொடங்கப்பட்ட இந்த விடுதி
பின்னர் அடைக்கலமும், கல்வியும் தேவைப்படும் எல்லாப்
பெண்களுக்கும் என்று மாற்றப்பட்டது…
1936-ல் இந்த இல்லம் மயிலாப்பூரில் ஒரு வாடகை இடத்துக்கு
மாற்றப்பட்டு, பிறகு அடையாறுக்கு மாற்றப்பட்டது.

பின்னர் இது, அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து
அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் வகையில்,
மேலும் மாற்றப்பட்டு, அடையாறில் அவ்வை இல்லம்
என்கிற பெயரில் தொடர்ந்தது… இன்றும் நல்ல முறையில்
இயங்கும் அவ்வை இல்லத்தை திட்டமிட்டு உருவாக்கிய
பெருமை டாக்டர் முத்துலட்சுமியையே சாரும்.

புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கென நிதி திரட்டி
1952-ம் ஆண்டு அடையாறில் அன்றைய பிரதமர் ஜவகர்லால்
நேருவால் அடிக்கல் நாட்டப்பெற்று 1954-ல்
தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம்
அமைத்த பெருமையும் இவரையே சாரும்.

மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனைக்குப்
பிறகு இந்தியாவிலேயே புற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட
இரண்டாவது சிறப்பு மருத்துவமனை அடையாறு
புற்றுநோய் மருத்துவமனை.

முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956-ல்
பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம்
22-ஆம் தேதி – தனது 81-வது வயதில் மறைந்தார்.

இவரது நினைவை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக
அரசால் ‘டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டம்’
ஏழை கர்ப்பிணிகளுக்காக தொடங்கப்பட்டது.

2018-ம் ஆண்டு முதல் பேறுகால உதவியாக ரூ.18 ஆயிரம்
வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு முதல் டாக்டர்
முத்துலட்சுமி பிறந்த நாளான ஜூலை 30-ந் தேதியை
அரசு மருத்துவமனைகளில் ‘மருத்துவமனை தினமாக’
கொண்டாட தமிழக அரசு தீர்மானித்திருக்கிறது. தமிழக
அரசின் சார்பில் முதல் மருத்துவமனை தினம், கடந்த
30-ந்தேதி கொண்டாடப்பட்டது.

பெண்களுக்கு, சாதாரண அடிப்படைக்கல்வி கூட
மறுக்கப்பட்ட சமூகச் சூழ்நிலையில் 134 ஆண்டுகளுக்கு
முன்னர் பிறந்து வளர்ந்து –

தனது மனோபலத்தாலும், திறமையாலும், இடைவிடாத
முயற்சிகளாலும் –

இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே, இத்தகைய
மகத்தான பல சாதனைகளைப் புரிந்த டாக்டர் முத்துலட்சுமியின்
சரித்திரம் நம் வாசகர்களின் பார்வைக்கு வர வேண்டும் என்பதே
இந்த இடுகையின் நோக்கம்…
….

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை கவுரவப்படுத்தும் வகையில்
அவரது 133-வது பிறந்த நாளன்று, கூகுள் நிறுவனம்
வெளியிட்ட டூடுள் –
……….

……….

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to (பகுதி-2) – ஜெமினி கணேசனுக்கு இப்படி ஒரு அத்தை …

 1. புவியரசு சொல்கிறார்:

  தமிழராக நாம் எல்லாருமே பெருமைப்பட
  வேண்டிய ஒரு விஷயம். ஆனால் பரிதாபமான
  உண்மை நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இது
  பற்றி இதுநாள் வரை இதுபற்றி தெரியாது என்பது.
  மிக நல்ல இடுகை.
  ஒரு நல்ல சரித்திரத்தை வெளிக்கொண்டு
  வந்திருக்கிறீர்கள். இதில் அந்த அம்மையாரை விட
  அவருடைய தந்தைக்குத் தான்
  அதிகம் பாராட்டுகள் போய்ச்சேர வேண்டும்.
  130 ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு திருமணம்;
  எப்படியாவது தன் பெண்ணை நன்றாக படிக்க வைக்க
  வேண்டும் என்கிற லட்சியம். அபூர்வமான தந்தை.
  சாதனைப்பெண்.
  இடுகைக்காக உங்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள் சார்.

 2. புதியவன் சொல்கிறார்:

  //தன் வகுப்புகளில் பெண்களை உட்காரவிடுவதில்லை. பிறகு தங்கப்பதக்கம்// – அந்தச் சமங்களில் வகுப்பின் வெளியே நின்று நோட்ஸ்கள் எடுத்துக்கொள்வாராம். பிறகு தங்கப் பதக்கம் பெற்ற பிறகு உட்கார வைத்திருக்கலாம்.

  அடையாரில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பார்க்கில் பல முறை ஆவினில் பொருட்கள் வாங்கச் செல்வேன் (அதைச் சுற்றித்தான் நான் வீட்டிற்கு தினமும் போகணும்) பாரு..யாரோ ஆந்திரப் பெண்ணிற்கு சிறப்பு செய்திருக்காங்க என்று நினைத்துக்கொள்வேன் (அங்க அருகில் ஆந்திர மகிள சபா மற்றும் தெலுங்கர்கள் சம்பந்தப்பட்ட சாரிட்டிகள் உண்டு).

  பிறகு அவரது மருத்துவப் படிப்பு வரலாறு, செய்த சேவைகள் இவற்றை அறிந்துகொண்டேன். இவரது மூலம் புதுக்கோட்டையில் துவங்குகிறது என்பதை இதுவரை அறிந்திலேன். என்ன மாதிரியான காலத்தில் என்ன மாதிரியாக அசுர உழைப்பு செய்து மேலே வந்திருக்கிறார் என்பது மிகுந்த ஆச்சர்யத்தைத் தருகிறது.

  இனித்தான் முதல் பகுதியை இன்னொரு முறை படித்து எப்படி இந்தக் கட்டுரையை லிங்க் பண்ணியிருக்கீங்க என்று பார்க்கணும்.

 3. bandhu சொல்கிறார்:

  இப்படி எத்தனை எத்தனை பேர் தன் வாழ்க்கையை பிறருக்கு பயன் தரும் விதத்தில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்!

  மிக அழகாக தொகுத்து அளித்திருக்கிறீர்கள்.

  ஜெமினி கணேசன் இவரின் சொந்த மருமான் என்பது அவருக்கு பெருமை!

  • புதியவன் சொல்கிறார்:

   Bandhu – தமிழ், மிக கவனமாக எழுதாவிட்டால் பொருளை மாற்றிவிடும்.

   //இவருக்குப் பெருமை/ – முத்துலட்சுமி ரெட்டிக்கா? அப்படி என்றால் அர்த்தமே அனர்த்தமாகிறது. ஜெமினிகணேசன், பிறர் புகழும்படியாக ஒன்றுமே செய்தவரில்லை. டாக்டர் முத்துலட்சுமியின் சாதனைகள் பெண்கள் எல்லோருக்கும் பெருமை

   • bandhu சொல்கிறார்:

    புதியவன், மிக சரி.. ஜெமினிக்கு பெருமை. ஆனால் ஜெமினியால் பெருமையா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டி வரும்! தவறை திருத்தியதற்கு நன்றி!

 4. Sattainathan Manikkam Pillai சொல்கிறார்:

  இந்த உண்மைகள் ஏன் வெளியில் பேசிக்கொண்டாடப்படவில்லை ? தமிழ் பெண்களின் முன்னேற்றத்திக்கு அடித்தளம் இட்டு அதனை ஆரம்பித்தவர்கள் பிராமணர்கள் என்ற உண்மையை மறைத்து சகலமும் ஈவேரா தான் என்பதுபோல மாய்மாலம் செய்து வரலாறுகளை மாற்றிய திராவிட அரசியல் கொடுமைகளில் இதுவும் ஒன்று.

  • Rajs சொல்கிறார்:

   Sorry, I had to reply as some people are getting the impression that certain group (ஜாதி) fought for Women’s rights though that may not be the intention – only Kaveri can say that, so I will leave it to him. As a group there was no such thing, for instance one of the great freedom fighters was damn against abolishing “Devadashi Act”. Please read the history carefully. Do not support groupism – rather apply consciousness.

  • புதியவன் சொல்கிறார்:

   நாம இதில் ஜாதியைக் கொண்டுவரக்கூடாது. பிராமணரும் தேவதாசியும் சேர்ந்தால், பிறப்பவர் பிராமின் என்று நினைப்பதே, திருமணப் புரட்சி செய்தவர்களை அவமானப்படுத்துவது. சகலமும் பெரியார் அல்ல, ஆனால் பெரியாரும் சமூகப் புரட்சிக்குப் பாடுபட்டவரே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.