….
….
….
கொஞ்ச நாட்களுக்கு முன் தமிழ் செய்தி தொலைகாட்சி ஒன்றில்
பார்த்தேன்… டாஸ்மாக் கடை முன் திரண்டிருந்த குடிகாரர்களை
அந்த தொலைக்காட்சி “மதுப் பிரியர்கள்” என்று சொல்லிக்
கொண்டிருந்த கொடுமையை…
அந்த மாதிரி தான் நமது தமிழ்த் திரையுலகமும்,
ஒரு பெண் பித்தரை, அவர் காலத்திய மொழியில் சொல்ல
வேண்டுமென்றால் – ஒரு ஸ்த்ரீலோல’ரை – “காதல் மன்னன்”
என்று கொண்டாடிக் கொண்டிருந்தது – டிருக்கிறது.
வரிசையாக எத்தனை பெண்களின் வாழ்க்கையில் விளையாடி
சீரழித்தார் அந்த மனிதர்….( மணம் செய்து கொண்ட பெண்மணியை
தவிர – புஷ்பவல்லி, சாவித்ரி, ராஜஸ்ரீ, ஜூலியானா ஆண்ட்ரூ
– வெளியில் தெரிந்த பெயர்கள்; இன்னும் வெளியே
தெரியாதவர்கள் எவ்வளவு பேரோ…)
சில மாதங்கள் முன்பு, அவரின் அசல் உருவத்தை சித்தரித்து
“நடிகையர் திலகம்” என்று ஒரு படம் வெளிவந்த சமயம்
ஏற்பட்ட விமரிசனத்திற்கு, அவர் பெற்ற திருமகள் –
செய்தியாளர்களை குறைகூறி சொல்கிறார் –
” எங்க அப்பா அழகில் மயங்கி பெண்கள் தான்
அவர் மீது விழுந்து மொய்த்தார்கள்; பாவம் அவர்
என்ன செய்வார்…? ”
(அப்பா, தன் வாரிசுகளுக்கு சேர்த்து வைத்த
சொத்தின் அளவு – அவரை இப்படிப் பேசச்சொல்கிறது…!!! )
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு புகழ்பெற்ற நபரைப்பற்றிய
செய்திகளை விவரமாகத் தேடியெடுத்து படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது, வியப்பான சில சம்பவங்கள் தெரிய வந்தன.
———————————–
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், நாம் சுதந்திரம் பெறும் வரையில்,
புதுக்கோட்டை சமஸ்தானம், சென்னை மாகாணத்தின் அதிகார
எல்லைக்குள் வராமல் தனித்து ஒரு சமஸ்தானமாக,
புதுக்கோட்டை மன்னரின் ஆட்சியின் கீழ் இயங்கி வந்தது…
அங்கே – திரு.நாராயணசாமி அய்யர் என்பவர் புதுக்கோட்டை
கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் –
அந்தக்காலத்திலேயே, தேவதாசி குலத்தைச் சேர்ந்த தெலுங்கு
பெண்மணி சந்திரம்மா என்பவரை திருமணம் செய்துகொண்டு
ஒரு பெரிய சமுதாயப் புரட்சியே செய்தார்.
நாராயணசாமி – சந்திரம்மா தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்தன.
அந்த நால்வரில் ஒருவர் முத்துலட்சுமி என்ற பெண்…
இன்னொருவர் ராமசாமி என்கிற ஆண்… ( மீதி 2 பேர் –
இந்த இடுகையுடன் சம்பந்தமில்லாதவர்கள். எனவே விவரமாக
போகவில்லை….)
…………………..
(திரு.நாராயணசாமி அய்யர் தனது மனைவி சந்திரம்மா
மற்றும் குடும்பத்தினருடன்….)
……………………………………………………..
இந்த ராமசாமி வளர்ந்த பிறகு அவர் பங்குக்கு அவரும் ஒரு
புரட்சித் திருமணம் செய்துகொண்டார். தந்தையைப் போலவே,
அவரும், தேவதாசி குலத்தைச் சேர்ந்த பாகீரதி அம்மா என்கிற
பெண்மணியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு
பிறந்த குலக்கொழுந்து தான் கணபதி சுப்ரமண்ய சர்மா
என்கிற ஒரிஜினல் பெயர் படைத்த திருவாளர் ஜெமினி கணேசன்.
இந்த ராமசாமி அய்யர் அவர்களை அடுத்து,
நாராயணசாமி-சந்திரம்மா தம்பதிக்குப் பிறந்த பெண் குழந்தையான
முத்துலட்சுமி என்பவரைப்பற்றி தான் நாம் இங்கே கொஞ்சம்
விவரமாக பார்க்கப்போகிறோம்…..
தந்தையுடன் கூடப்பிறந்தவர் என்பதால், இந்த முத்துலட்சுமி
என்கிற பெண்மணி, ஜெமினி கணேசனுக்கு அத்தை உறவுமுறை
ஆகிறார்.
————-
இந்த முத்துலட்சுமி என்கிற பெண்மணியைப் பற்றி
கொஞ்சம் விவரமாக கீழே –
இவர் பிறந்தது, புதுக்கோட்டை சமஸ்தானத்தில், கோகர்ணம்
என்கிற கிராமத்தில்… ஜூலை 30, 1886 அன்று.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்கிற கொள்கை
கோலோச்சிய அந்தக் காலக் கட்டத்தில், 4 வயதில் திண்ணைப்
பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பு வரை முடித்து,
தொடர்ந்து கல்லூரியிலும் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு
அவரது தந்தை முழு ஆதரவும் ஊக்கமும் அளித்தார்.
துணை நின்றார்.
ஆனால், அப்போதைய காலத்தில், உள்ளூர் கல்லூரியில்
பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.
வெளியூர் கல்லூரிகளிலோ பெண்களுக்கு தங்க விடுதி
வசதி இல்லை.
இந்தச் சூழலில் புதுக்கோட்டையிலேயே மன்னர் கல்லூரியில்
சேர தனது 18-வது வயதில் விண்ணப்பித்தார். அப்போது
சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சிலர்,
பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். சில
பையன்களின் பெற்றோரோ, பெண்களைச் சேர்த்துக்கொள்வதாக
இருந்தால், தங்கள் பிள்ளைகளை அந்தக் கல்லூரியில்
சேர்க்க மாட்டோம் என்று தடங்கல் செய்தனர்.
ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு
சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட
பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு,
முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.
அதில் வெற்றி பெற்ற பிறகு, சிறிது காலம் உடல் நலம்
பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய்
சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்துபோனார். நோயும்,
அதன் கொடுமைகளையையும் நேரில் அனுபவித்ததால்,
முத்துலட்சுமியின் மனதில் தான் ஒரு மருத்துவராக வேண்டும்
என்ற வைராக்கியம் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, 1907 -ல் சென்னை மருத்துவக் கல்லூரியில்
முத்துலட்சுமியை சேர்த்துவிட, பெரும் முயற்சி செய்து,
அதில் வெற்றியும் பெற்றார் அவரது தந்தை நாராயணசாமி
அய்யர். பெண்கள் கல்லூரிக்குப் போவதே மிக அபூர்வமாக
இருந்த அந்த காலத்தில், 1907-ல் – முதன் முதலாக
ஒரு பெண்ணை மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பது அவ்வளவு
எளிதன காரியமா என்ன…?
இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக முத்துலட்சுமி
உருவாக ஒருவழியாக அடித்தளம் போடப்பட்டது.
பல சங்கடங்களுக்கிடையே, முத்துலட்சுமி
தன் படிப்பைத் தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு
ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப் பதக்கங்களும்
பெற்று, 1912-ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற
பெருமையைப் பெற்றார்.
அவருடைய விருப்பம் படிப்பிலும், சமூகப் பணியிலும்
தான் இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின்
வாழ்க்கையை மனத்தில் கொண்டு திருமணத்திற்குச்
சம்மதித்தார்.
டி. சுந்தர ரெட்டி என்பவர் அடையாற்றில் அன்னிபெசன்ட்
அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில்,
மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத்
தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்த ஒரு சமூக சேவகர்.
முத்துலட்சுமிக்கும் அன்னி பெசண்ட் அம்மையாரின் மீது
ஈர்ப்பு இருந்தது… அவருடன் சேர்ந்து நாட்டில் பெண்களின்
முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்பது அவரது
லட்சியமாக இருந்தது. அவரது லட்சியத்திற்கேற்ற
துணைவராக சுந்தர ரெட்டி அமைந்தார்.
அடையாற்றில் பிரம்ம ஞான சபையில் தான்
முத்துலட்சுமி – சுந்தரரெட்டி ஆகியோரின் திருமணம்
1914-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்தது
தனது 28-வது வயதில், நாராயணசாமி அய்யரின் மகளான
முத்துலட்சுமி, டி.சுந்தர ரெட்டி அவர்களை மணந்ததன்
மூலம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியாக மாறினார்.
( இடுகை நீள்கிறது. இன்னமும் முடியவில்லை… மீதியையும்
எழுதி முடித்து அடுத்த பகுதியாக, இன்று மதியமே பதிவிடுகிறேன்…)
.
—————————————————————————————————————————
ஒருவர், திரையுலகில் வெளிச்சத்துக்கு வந்து நன்கு சம்பாதித்து சொத்து சேர்த்து (அவர் உடல் உழைப்பால், அதாவது ரெஃபர் பண்ணுவது மூலம், அல்லது இன்னொருவருக்கு போன் பண்ணி திரையுலகத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு உதவியிருக்கிறாரே தவிர ஒரு பைசா தன் பாக்கெட்டிலிருந்து செலவழிக்க மாட்டாராம்), தன் புத்திசாலித்தனத்தினால் சொத்தைக் காப்பாற்றி, கடைசி வரை செளகரியமாக வாழ்ந்து மறைந்தார். இதுவரை அவர், பிறப்பால் பிராமணர் என்றும் ஜெமினி ஸ்டூடியோவுக்கு வேலைக்குச் சேர்ந்த பிறகு நான் வெஜ் (அது அப்போது அபூர்வம் என நினைக்கிறேன்) முழுவதுமாகச் சாப்பிட ஆரம்பித்துவிட்டார் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். (நடிகர் சிவகுமார் தன் புத்தகத்தில் மாமா ஜெமினி எப்படி தனக்கு நான் வெஜ்களை உபசரிப்பார் என்று சிலாகித்து எழுதியிருந்தார்).
இன்னொருவர், தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தேடியிருக்கிறார். இவர் காலவெள்ளத்தால் மறக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம், ஆனால் செய்த சேவை மகத்தானது (ராம் மோகன் ராய்-சதி ஒழிப்பு-1830கள், குழந்தைத் திருமண ஒழிப்பு போன்ற சமூகப் புரட்சிகள் செய்தவர்களும் நம் முன்னேறிய வாழ்வுக்குக் காரணகர்த்தாக்கள்)
புதியவன்,
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரைப்பற்றி
இன்னும் கொஞ்சம் விவரமாகத் தெரிந்து கொள்ள
விரும்பித்தான் இவரைப்பற்றிய விவரங்களை,
படிக்க ஆரம்பித்தேன்.
பின்னர் பின்புலம் தெரிய வந்தவுடன், நிறைய
தேடியெடுத்து, படித்து, விவரங்கள் அறிந்து
வியந்து போய் – இந்த இடுகையை எழுதினேன்.
எனக்கென்னவோ – “தந்தை பெரியார்” பிறப்பதற்கும்
முன்னாலேயே, இவ்வளவு பெரிய புரட்சிகளை
செய்த அந்த “தந்தை நாராயணசாமி” அற்புதமானவராகத்
தெரிகிறார். அதுவும் ஒரு பிராம்மணராக…?
1905-06 -களில் ஒரு பெண்ணை, புதுக்கோட்டையிலிருந்து
மெட்ராசுக்கு அழைத்து வந்து, மெடிகல் காலேஜில்
சேர்க்க அந்த மனிதர் என்ன பாடு பட்டிருக்க வேண்டும்…!!!
அவர் கூடவே இருந்து அளித்த ஊக்கமும், பாதுகாப்பும்
தானே அந்தப் பெண் ஜெயிக்க அடிப்படை காரணங்கள்…
(foundation…? )
அதன் பின்னர் அந்தப் பெண் செய்தவை
அருமை…அற்புதம்…தனித்து ஒரே ஒரு
பெண் மாணவியாக கல்லூரியில் –
அதுவும் மருத்துவக் கல்லூரியில் படிப்பது
எவ்வளவு மனக்கிலேசத்தை தந்திருக்கும்…?
அத்தனையையும் தாண்டி, பதக்கங்களோடு
படிப்பை முடித்து, தொடர்ந்து தன் வாழ்நாள்
முழுதும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின்
கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, சமூக உரிமைகள் –
அத்தனைக்காகவும் பாடுபட்டிருக்கிறாரே …!!!
இந்தக்கால அரசியல்வாதிகளைப் போல வெறுமனே
குரல் கொடுப்பதோடு நிற்காமல், இத்தனை
சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்திருக்கிறாரே…
நாம், முக்கியமாக நம் பெண்கள் கற்றுக் கொள்ள
இதில் நிறைய இருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப்பிறகு எனக்கு மிகுந்த
மனநிறைவை தந்த ஒரு இடுகை இது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்