மோக முள் … தி.ஜானகிராமன்

….
….

….

இந்த விமரிசனம் வலைத்தளத்தில், நானே எழுதுகின்ற
இடுகைகளைத் தவிர,

அவ்வப்போது – நான் பார்க்கும், படிக்கும் பல விஷயங்களையும்
கூட இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதற்கு 2 அடிப்படை
காரணங்கள் உண்டு.

முதலாவது – நான், என் ரசனைக்கேற்ற நிறைய விஷயங்களைத்
தேடித்தேடி படிக்கிறேன்… பார்க்கிறேன்… அவற்றில் எனக்கு
பிடித்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டால், எனக்கு
கிடைக்கின்ற நல்ல அனுபவங்கள், சந்தோஷங்கள் அவர்களுக்கும்
ஏற்படும் என்கிற நம்பிக்கையில்.

இப்படித் தேடிச்சென்று படிக்க முடியாத நண்பர்கள் பலர்
இருப்பது எனக்குத் தெரியும். சிலர் என்னுடன்
கடிதத்தொடர்பிலும் கூட இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம்
இது உதவியாக இருக்கும்.

இரண்டாவது – இந்த வலைத்தளத்திற்கு நிறைய இளைஞர்களும்
வருகிறார்கள். அவர்களுக்கு இந்த மாதிரி ரசிக்கத்தக்க பல
விஷயங்கள் இருப்பதே தெரியாது…மிகப்பெரும்பாலானோருக்கு
10 நிமிடங்களுக்கு மேல், ஒரு தலைப்பில், ஒரு தளத்தில்
இருந்து படிக்க பொறுமை இருப்பதில்லை; அவர்களை நான்
குற்றம் சொல்ல மாட்டேன்… அவர்கள் வாழும் காலம்,
வளரும் சூழ்நிலை அப்படி இருக்கிறது.

எனவே, அத்தகைய இளைஞர்களுக்கு நல்ல சுவாரஸ்யமான
எழுத்தை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்பது
2-வது நோக்கம். ஒரு பிடிப்பு ஏற்பட்டால், அவர்களில்
ஒரு சிலராவது நல்ல வாசிப்பாளராக உருவாகக்கூடும்.

இன்று வாசிக்கும் வழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது…?
தமிழில் நல்ல சிறுகதைகளையோ, நாவல்களையோ தேடிச்சென்று
வாசிப்பவர்கள் எத்தனை பேர்…? முதலில் நல்ல எழுத்தாளர்கள்
யார் என்பதையாவது அவர்கள் அறிய வேண்டுமே.

நான் இங்கே அடிக்கடி, தகுந்த இடைவெளிகளில், சில நல்ல
எழுத்தாளர்களின் சிறுகதைகளை பதிவிட எண்ணி இருக்கிறேன்.
நான் இங்கே ஒன்றிரண்டு கதைகளை பதிவிடுவதால்,
யார் விற்பனையும் பாதிக்கப்படாது. மாறாக, அதில் ஆர்வம்
கொண்டவர்கள் யாராவது சிலர் முழு புத்தகத்தையும்
படிக்க எண்ணினால் விற்பனை கூடக்கூட கூடும்..!!!

இங்கே எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பது
எழுத்தாளர் தி.ஜானகிராமன் அவர்களின் புகழ்பெற்ற நாவல்
“மோக முள்”..

அதன் கதைச்சுருக்கத்தை இங்கே தந்துவிட முடியும்… ஆனால்,
முழு புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை
அது தடுத்து விடும் என்பதால் நான் செய்யவில்லை.

தி.ஜானகிராமனின் மிகச்சிறந்த படைப்புகள் – அம்மா வந்தாள்,
மரப்பசு, மோகமுள் – நாவல்கள்…தேடுங்கள்… கிடைக்கும்…
அந்த சுகத்தை, சுவாரஸ்யத்தை – படித்து அனுபவியுங்கள்….!!!

தன்னை விட பத்து வயது பெரிய – அழகிய, குணமுள்ள பெண்
ஒருத்தியின் மீது கொண்ட அன்பு ஒரு வாலிபனை
என்னபாடு படுத்துகிறது என்பது தான் கரு.

ஒரு பக்கத்தில் அவளை மனதில் தெய்வம் போல் தொழுகிறான்;
மற்றொரு பக்கம் அவள் அழகும், குணமும், வனப்பும்
அவள் மீது பெரும் மோகத்தையும் தூண்டுகிறது.

பாபு, யமுனா மீது கொண்டது காதலா இல்லை
அவள் அழகின் மீது கொண்ட மோகமா என்கிற தேடலில்
செல்கிறது கதை. ஒருவேளை இது காமத்தைச் சொல்லும்
கதையோ என்று நினைத்துவிட வேண்டாம். மனித உணர்வுகளை
மிக மிக அழகாக சித்தரிக்கும் நாவல் இது.

—————————————-

இந்த மோகமுள் நாவலை அவர் எழுத நேர்ந்தது எப்படி
என்பதை பிற்காலத்தில், கல்கி வார இதழில் தி.ஜா. அவர்களே
விவரித்திருக்கிறார்.
….

….

மோகமுள் – நாவல் பிறந்த கதை
தி.ஜானகிராமன் ஏப்ரல் 7, 2011
———

கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு
கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றப்பா அது, ஜானகியாடா?”
என்று கண்ணாடியை இரண்டு விரல்களால் தூக்கி விட்டுக்
கொண்டே அருகில் வந்தாள்.

“ஆமாம் பாட்டி. சௌக்கியம்தானே?”

“சௌக்கியமா இருக்கறதுக்குத்தான் வழி பண்ணிக்க
வந்திருக்கேன். பேப்பர்லே கதை போட்டுண்டு வறியே.
அதுக்கெல்லாம் பணம் தருவாளோ! இல்லே, ராமையா பாகவதரைக்

கூப்பிட்டுக் கதை பண்ணச்
சொல்றாப்பலே தேங்காய் மூடியோ?…” என்று கூறி
நிறுத்தினாள் பாட்டி.

“தேங்காய் விலைதான் ஏறிக்கிடக்கே, இப்போ!
பணமாகவே கொடுத்துவிடுகிறார்கள்.”

“அது என்னமோப்பா! பாதிப் பணம் அப்பப்ப எனக்கு
வரணுமே, வரலையேன்னு கேட்கிறேன். நான் கேட்கிறது
நியாயம்தானே?” என்றாள் பாட்டி.

“எல்லாம் உங்க ஆசீர்வாதம்தானே!”

“அப்படிச் சொல்லிண்டே கிளம்பிப் போயிடலாம்னு
பார்க்கறியா? என் பேச்சு, மூனாச்சி கதை, யோகாம்பா கதை,
ரங்கு கதை – அவாளுக்குக் கொடுத்தாலும் கொடு.
கொடுக்கப்பட்டாலும் போ – எனக்காவது கொடுக்கலாமோல்லியோ நீ…?”

பாட்டி கேட்டது வேடிக்கையாகத்தான். சொன்னது
அவ்வளவும் உண்மை. எழுதத் தூண்டிய, வழி காட்டிய பல குருமார்களில்
கண்ணாடிப் பாட்டிக்கு நான் தனி ஸ்தானம்
கொடுத்திருக்கிறேன்.

காவேரி வண்டலில் செழித்தபயிர் கண்ணாடிப் பாட்டி.
பேச்சில் அசாதாரணமான நயம், நகைச்சுவை,
‘சுருக்சுருக்’கென்று தைக்கிற கூர்மை,
சில சமயம் என்ன அர்த்தத்தில் சொல்லுகிறாள் என்று
இலேசில் கண்டுபிடிக்க முடியாத பூடகம்,
சொல்லாமல் சொல்லுகிற தொனி, அதிர்வேட்டு மாதிரியும்,
சிற்றிலை போலவும் பல தினுசுச் சிரிப்புகளை எழுப்பக் கூடிய
ஹாஸ்ய வகைகள், எதைச் சொன்னாலும் தனக்கென்று
ஒரு தனிப்பார்வை – பாட்டி ரொம்பப் பெரியவள்.

“மோக முள்” நாவலில் வருகிற பல பாத்திரங்களும்
சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு
ரசித்தவைதான்.

அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத்
தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக்

கொண்டதனால்தான். பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
ஆனால் அவளுக்குத் தெரிந்த கதைகளும், மன விசித்திரங்களும்,
சொல் ஜாலங்களும் இந்த உலகத்திலேயே சிலருக்குத்தான்
கைவரும்.

பாட்டியின் கலைக்கண்ணில் ஒரு தவலை கூட நமக்கு
லபிக்கவில்லையே என்று எனக்குத் தீராத குறை.

“மோக முள்”ளில் சில அத்தியாயங்களைக் கிடைத்தபொழுது
வாசிக்கச் சொல்லிக் கேட்டாளாம் பாட்டி. ஓரிரண்டு
இடங்களை நன்றாக இருப்பதாக அவள் ஒப்புக்கொண்டு கூட
விட்டாள். ஆகவே மற்ற விமர்சகர்களைப் பற்றி நான்
கவலைப்படவில்லை.

பள்ளிக்கூடத்தில் படித்த பத்து வருஷங்களில் ஞாபகம்
இருக்கக் கூடியதாக ஒன்றுமில்லை. எப்பொழுது
இச்சிறையிலிருந்து விடுபடப் போகிறோம் என்று
ஆத்திரப்பட்டது ஞாபகம் இருக்கிறது.

“உனக்குக் கணக்கு வராது. நீ கதை பண்ணத்தான் லாயக்கு.
தொலை” என்று என் முகத்தில் பிரம்பை விட்டெறிந்த
நாமமும், அம்மை வடு முகமும் கொண்ட மூன்றாம்
வகுப்புக் கணக்கு வாத்தியார் ரங்காச்சாரியார், எனக்கு
ஆசீர்வாதம் செய்தார். அந்த ஆசீர்வாதம்-

வகுப்புக் கட்டுரைகளில் சொந்தக் கை வரிசையைக்
காட்டி அதிகப்பிரசங்கித்தனமாக அசடு வழிந்ததற்கு,
சில வாத்தியார்கள் மற்றப் பையன்களுக்கு நடுவில்
பரிஹாசம் செய்து மனத்தைக் கிழித்துப் போட்டதில்
ஏற்பட்ட புண்கள்-

தஞ்சாவூரில் அப்பொழுதெல்லாம் மூலைக்கு முலை
சங்கீதக் கச்சேரிகள் அமர்க்களப்படும். சிவகங்கை அனுமார்,
வெங்கடேசப்பெருமாள் சன்னிதி அனுமார், மேலவீதி
விசுவநாதர், மேலவீதிப்பிள்ளையார், தெற்குவீதிக் காளி அம்மன்,

வரகப்பையர் சந்தில் தியாகையர் பூஜித்த
ராம விக்கிரகங்கள், நாணயக்காரச் செட்டித்தெரு
ராமலிங்க மடம், பக்கத்தில் திருவையாறு – இத்தனை
தெய்வங்களுக்கும் நடக்கிற உற்சவ சங்கீதக் கச்சேரிகளை
ஒன்றுவிடாமல் ஐந்து வயதிலிருந்தே
கேட்டுக் கொண்டிருந்த பழக்கம்-

நாலைந்து பேரிடம் சிறுவயதிலிருந்தே சங்கீதம் கற்கும்
வாய்ப்புக் கிடைத்தது. கலைஞர்களுக்கு உரிய பேச்சின்
அழகில் மயங்கினது –

உமையாள்புரம் சுவாமிநாதய்யரிடம் சில நாட்கள் சங்கீதம்
சொல்லிக் கொள்ளப் போய்க்கொண்டிருந்தேன்.
மற்றவர்களைவிட சங்கீதத்தை உபாசணையாக,
தியான மார்க்கமாக, அவர் கையாண்ட ஒரு தனிப்பண்பு,
உலகத்தின் ஒலிகளையெல்லாம்
நாதக் கடவுளின் பற்பல சைகைகளாகவும்
விவகாரங்களாகவும் அவர் கண்ட விந்தையைத் துளியாவது
பார்க்கக் கிடைத்த வாய்ப்பு-

கும்பகோணத்தில் கல்லூரியில் படித்த நாலு வருடங்களும்
பள்ளி வாழ்க்கைக்கு நேர்மாறாக இருந்தன. அவ்வளவு உற்சாகம்.

அவ்வளவு அமைதி. இலக்கியங்களைப் பரவலாகப் படிக்க
வாய்ப்புக் கிடைத்தது. பரம ரசிகர்களாக இருந்த இரண்டு
மூன்று ஆசிரியர்களின் தோழமை இந்த வாய்ப்பைப்
பெருக்கிற்று. அந்தப் பூரிப்பு-

கல்லூரியில் எனக்கு இணைபிரியாத நண்பன் ஒருவன் உண்டு.
எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தெய்வமாக வணங்குவான்.
அதை ஒரு தனி மதமாக வளர்த்திருந்தான் அவன்.
அவனோடு நெருங்கிப் பழகப் பழக என் உள்ளத்தில்
சபலத்துக்கும் தூய்மைக்கும் மூண்ட ஓயாத சண்டைகள்-

நான் குடியிருந்த தெருவில் ஒரு கிழவர் ஐம்பத்தைந்து
வயதில் ஒரு பதினாறு வயதுக் கட்டழகியை (அழகான பெண்கள்
யார் யாருக்கோ போய்ச் சேர்வதைப் பாருங்கள்) கலியாணம்
செய்து கொண்டு வந்து முப்பத்திரண்டு வயதுப் பிள்ளையை
அவன் மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு விரட்டி,
சரியாக ஒரு வருஷம் புது மனைவியோடு தனிக்குடுத்தனம்
செய்துவிட்டு,

திடீரென்று ஒருநாள் சிவபதம்
அடைந்து விட்டார். அதை ஒரு வருஷம் பார்த்துக்
கொண்டிருந்த ஆற்றாமை-

தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். அங்கே ஒரு மிராசுதார் .
சிறு பையனாக இருக்கும் பொழுதே முப்பது வேலிநிலத்துக்கு
வாரிசாகிவிட்டான். தகப்பனார் இறந்து, நிலம் கைக்கு வந்ததுமே,
பண்ணை முறையை உதறி எல்லா நிலங்களையும்
குத்தகைக்குவிட்டு விட்டுச் சுகவாசியாக வாழத் தொடங்கினான்.

சுகவாசியென்றால் வேறொன்றுமில்லை. திண்ணையில்
பெரிய கலியாண ஜமக்காளத்தை விரித்து, ஊரில் உள்ள
சின்னவர் பெரியவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு
சீட்டாட்டம்.

ஓயாத ஒழியாத சீட்டாட்டம்.
அரையில் வேட்டி நழுவியதைக் கூட உணராத சீட்டாட்டம்.

மற்ற நேரங்களில் திண்ணையில் மரச்சாய்வு நாற்காலியைப்
போட்டு, சட்டத்தை நீட்டி அதன்மேல் காலைப்போட்டு,
எப்பேர்ப்பட்ட பெரியவர்கள் வந்தாலும் (ரெவின்யூ
இன்ஸ்பெக்டர், தாசீல்தாரைத் தவிர) அந்தக் காலை மடக்காமல்,
எழுந்து கொண்டுவிடாமல் படுத்திருப்பான். வம்பளப்பான்.

இந்த மாதிரி எத்தனையோ ஜன்மங்கள் தஞ்சாவூர் ஜில்லாவில்
இருக்கின்றன. (மற்ற ஜில்லாக்கள் அவ்வளவாக எனக்குப்
பழக்கமில்லை). இந்த ஜன்மங்கள் ஒன்றிரண்டைப்
பார்த்த குழப்பம் –

தஞ்சாவூரில் நான் படிக்கும்பொழுது ஒரு நாள் நாலைந்து
வடக்கத்தியர்கள் தம்புராவைத் தூக்கிக் கொண்டு வாசலோடு
போனார்கள். என் தகப்பனாரும் நானும் திண்ணையில் நின்று
கொண்டிருந்தோம்.

எங்கள் வாசலண்டை வந்த அவர்கள் என் தகப்பனாருக்குக்
கும்பிடு போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள்.
ஹாலில் உட்கார்ந்தார்கள். தம்புராவை மீட்டினான் ஒருவன்.
பெரியவர் ஒருவர் பாட ஆரம்பித்துவிட்டார்.

ஒரு மணி நேரம் உலகப் பிரக்ஞை அழிய அழியப் பாடினார் அவர்.
அவர் மகனும் சேர்ந்து கொண்டான். அந்தமாதிரி சாரீரங்களை
நான் இதுவரையில் கேட்டதில்லை.

அவ்வளவு கனம், அவ்வளவு இனிமை, அவ்வளவு
சுருதி உணர்வு, விண்ணுக்கும் பாதாளத்துக்கும் அனாயாசமாக
ஓடி, ஓடிப் பாய்கிற ஆற்றல்! கட்டி விழுந்த குழந்தையின்
முனகல் போன்ற சில கர்நாடக வித்வான்களின் குரல்களும்
நினைவில் வந்தன.

பல வருஷங்கள் கழித்து, பிழை பொறுக்காமல்
வடக்கத்தியர்களின் குரல்வளத்தைப் பற்றி ஒரு பிரபல
கர்நாடக வித்வானுடன் தர்க்கம் செய்ய நேர்ந்தது.
‘குரல் இருந்தால் மட்டும் போதுமா’ என்று ஒரே வார்த்தையில்
அலட்சியப் புன்னகையோடு அவ்வளவையும் ‘பைசல்’
செய்துவிட்டார் அவர்!

ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி
அடைத்திருக்கிறார் பகவான் என்று அப்போது
ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது.
அந்த ஆச்சரியம் –

என்னைவிட எட்டு வயது அதிகமான ஒரு பெண்.
நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு.
அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எதையும் கண்டு
வியந்துவிடாத -அழுத்தமும் நிறைந்த அவளை
மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில்
அது மோகமாக மாறி,

அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச்
சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு
மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட
செய்தியைக் கேட்டது –

இந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து “மோகமுள்”
என்ற நாவலாக ஆகிவிட்டது. முக்கியமானவற்றைச்
சொல்லியாயிற்று.

எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல
முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன.

ஒருநாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள்
வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள்.
நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள்,
என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க
வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள்
பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ,

எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின.

மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல
முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம்.
சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு
ஒரு வரிகூட எழுதமுடியவில்லை. நாட்கணக்கில்
எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே!

நாலு நாட்கள் வந்து நாட்கள் மண்டையை உடைத்துக்
கொண்டு, கடைசியில் அழாத குறையாக, படுத்து விடுகிறது.

காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில்,
சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் ‘குக்’கரில் வைத்துவிட்டுப்
போகிற அரிசி மாதிரி, எல்லாச் சிரமங்களும் விடிந்து,
தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும்.
வேகமாக, பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.

தொடர்கதை எழுதுவதைப் பற்றி விமர்சகர்கள் நல்ல
அபிப்பிராயம் சொல்வதில்லை. எனக்குக்கூட அந்த
அபிப்பிராயத்தில் சிறிது சார்பு உண்டு.
ஆனால் நான் எழுதின மூன்று நாவல்களும்
தொடர்கதைகளாக வந்தவைகள்தான். பாத்திரத்தில் பச்சைத்
தண்ணீரில் கிடக்கிற காய்கறிகளை வேக வைக்க,
தொடர்கதை எழுதச் சொல்லும் பத்திரிகாசிரியரின் தூண்டுதல்
நல்ல தீயாக வந்து உதவிச் சமைத்துக் கொடுக்கிறது.
நெருப்பை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவது நம் பொறுப்பு.

என்ன, சமையல் உபமானமாகவே இருக்கிறதே என்று
நீங்கள் கேட்கிறீர்களா? முன் ஜன்மத்தில் தவசிப் பிள்ளையாக
இருந்தேனோ, என்னவோ, யார் கண்டார்கள்?

( நன்றி – கல்கி – 27.08.1961)

.
————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மோக முள் … தி.ஜானகிராமன்

 1. Varnan Thirugnanasambandan சொல்கிறார்:

  One of the best stories i like to read again.First time in 1990 i got this story book from ms.subashini, a lady i like very much,she was doing her m.phil in tamil dept and i was doing m.com.i took leave to complete this story.moreover,my native village is very near by kumbakonam.the story has a lot with kumbakonam,kaveri river…and so on.I like the author very much and passion towards his other stories like amma vandahl,mara pasu.
  vellaivaranan
  9791197980.

 2. புதியவன் சொல்கிறார்:

  கிட்டத்தட்ட 100 பக்கங்கள் படித்திருக்கிறேன். இன்னும் பாபுவுக்கு ‘காதல்’ உணர்வு வரலை. சட்னு கடைசிஅத்தியாயத்துக்குத் தாவி என்ன நடக்குதுன்னு பார்ப்போம்னா கதை பிடிபடலை. ஆனால் படிக்க இப்போவும் ரசனையா இருப்பது வியப்பாக இருக்கு. அதுவும்தவிர, அந்நாளைய சமூகத்தை ஒட்டி அவர் எழுதும் பல முன்னேற்றக் கருத்துகள் (கதைமாந்தர் மூலமாக) மிகவும் வியப்பாக இருக்கிறது.

  60களில் எழுதிய கதை(?)..கதைக்களம் சுதந்திரத்துக்கு முன்பு. அப்போதே பெண் பார்க்கும் வைபவத்தை தவறு என்று சொல்வது, மராத்தியர்கள் தமிழர்களோடு ஐக்கியம் ஆவது (இதுபோலத்தானே தெலுங்கர்களும் தஞ்சையில் ஐக்கியம் ஆயிருக்கணும், மதுரையில் செளராஷ்டிரர்கள், நாயக்கர்கள், தெலுங்கு செட்டியார்கள் போன்றவர்கள்), இரண்டாவது மனைவியை ஏற்படுத்திக்கொள்வது (சட்டம் இல்லாத போது. சட்டம் வந்தபிறகு சட்டத்தை ஏமாற்றி அல்ல. அட..எந்த அனர்த்தத்தை எடுத்தாலும் கருணாநிதிதானா), இரண்டாவது மனைவி என்பதே ‘வைப்பு’ என்ற இழிபெயர் மூலமாக அழைக்கப்பட்டது, அதனால் பிறக்கும் குழந்தை பாதிக்கப்படுவது, இசையைப் பற்றியும் அதன் பாலிடிக்ஸைப்பற்றித் தொட்டுச் செல்வது (ஒரு கிணற்றுக்குள் இத்தனை தவளைகளா?)….. நிஜமாகவே நல்லா இருக்கு. என்னிடம் இருந்தது. படிக்காமலேயே இருந்திருந்தேன். நீங்க எழுதினதுனால, அப்படி என்னதான் இருக்கு இந்தப் புத்தகத்தில் என்று படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் ஆர்வம் வந்திருக்கு. கதையைவிட எனக்கு அந்தக் கால கும்பகோணச் சூழல் (அவர் சொல்லும் இடங்களுக்குச் சென்றிருக்கிறேன்), சமூகப் பழக்கவழக்கங்கள், மொழி (வடயம்-என்னன்னு புரியலை. வடையா அல்லது வேறு இனிப்பா என்று..பார்ப்போம்) இதெல்லாம் நன்றாக இருக்கு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.