சி.வி.ஸ்ரீதர் – (பகுதி-19) நினைக்கத் தெரிந்த மனமே …

….
….

….

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத ஒரு மனிதர்
திரு.சி.வி.ஸ்ரீதர்…

1951-ல் தனது 18-வது வயதிலேயே கதாசிரியராக உருவெடுத்த
ஸ்ரீதர் முதல் முதலாக (அவ்வை டி.கே.ஷண்முகம்) டிகேஎஸ்
சகோதரர்களின் “ரத்தபாசம்” நாடகத்தின் மூலம் புகழ்பெறத்
துவங்கினார். பின்னர், அதே நாடகம், திரைப்படமாக
உருவாகியபோது, திரைத்துறையில் கதை, வசனகர்த்தாவாக
காலெடுத்து வைத்தார்.

கதாசிரியர், திரைக்கதை வசனகர்த்தா,
தயாரிப்பாளர், இயக்குநர் – என்று படிப்படியாக உயர்ந்து
தனது மறக்க முடியாத வித்தியாசமான படைப்புகளால்
தமிழில் மட்டுமல்லாது, ஹிந்தியிலும், தெலுங்கிலும் கூட
முத்திரை பதித்தவர் ஸ்ரீதர்.

ஹீரோ’க்களை நம்பியே படங்கள் எடுக்கப்பட்டு வந்த காலத்தில்,
ஹீரோக்களுக்காகவே படங்கள் ஓடிய ஒரு காலகட்டத்தில் –

இயக்குநருக்கென்றே ஒரு ரசிகர் கூட்டத்தை முதன் முதலாக
உருவாக்கிக் கொண்டவர் ஸ்ரீதர் தான் என்று சொல்லலாம்.

கல்லூரி மாணவ, மாணவரிடையேயும், படித்த நடுத்தரவர்க்கத்து
மக்களிடையேயும், இவரது படைப்புகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு
இருந்தது.

ஸ்ரீதரின் படங்கள் பெரும்பாலும், காதல், நகைச்சுவை,
நடுத்தரகுடும்பத்து சம்பவங்கள் ஆகியவற்றை வைத்தே உருவாயின.

ஸ்ரீதர் முதன் முதலில் இயக்குநராக உருவெடுத்த
“கல்யாணப் பரிசு” தமிழ்ப்படம் -1959-ல் வெளியானது.
அது திரையிடப்பட்ட பல அரங்குகளில் 25 வாரங்கள்
வெற்றிகரமாக ஒடி தமிழ்த்திரையுலகில்
ஒரு பெரும் திருப்பத்தை கொண்டு வந்தது.

அதன் பின்னர் அடுத்த 30 ஆண்டுகளில் பல மொழிகளிலுமாகச்
சேர்ந்து, 60 படங்களை உருவாக்கினார் ஸ்ரீதர்.
தனது 58-வது வயதில், 1991-ல் பக்கவாதத்தால்
பாதிக்கப்பட்டஸ்ரீதர், அதற்குப் பிறகு செயல்பட முடியாமல்
பாதிக்கப்பட்டு, பின் 2008-ல் மறைந்தார்.

அதுவரை பாடகராக மட்டுமே அறியப்பட்டு வந்த
ஏ.எம்.ராஜா-வை தனது ‘கல்யாணப் பரிசு’ படத்தின் மூலம்,
இசையமைப்பாளராக முதன் முதலில் அறிமுகப்படுத்திய
பெருமை ஸ்ரீதரையே சாரும்.

அதேபோல், அதுவரை சில சிறிய ரோல்களில் நடித்துவந்த
சரோஜாதேவியை, கல்யாணப்பரிசு படத்தில்- கதாநாயகியாக
மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தி
அவர் பிரபலமாக காரணமாக இருந்ததும் ஸ்ரீதர் தான்.

முதலில் கூட்டாளியாக வீனஸ் பிக்சர்ஸ் மூலமாகவும்,
பிற்பாடு தனது சித்ராலயா மூலம் தனது சொந்த பேனரிலும்
பல வெற்றிகரமான படங்களை உருவாக்கினார்.

ஸ்ரீதருக்கு ஏற்றாற்போல் அமைந்த ஒரு அற்புதமான
ஒளிப்பதிவாளர் ஏ.வின்செண்ட். வின்செண்டின் படங்களில்,
கேமிரா ஓடிக்கொண்டே இருக்கும். ஓரிடத்தில் நிற்கவே நிற்காது…

பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான பல கோணங்கள்
கிடைத்துக் கொண்டே இருக்கும். இருவருக்குமே அற்புதமான
கேமிரா கண்கள்…. இவர்கள் இருவரும் சேர்ந்து படைத்த
படங்கள் அனைத்திலுமே கேமிரா கோணங்கள் அற்புதமாகவும்
ரசிக்கத்தக்கதாகவும் இருக்கும். நான் சொல்வது டெக்னாலஜி
முன்னேறாத 1950-60 களில் என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்.

ஸ்ரீதர் எடுத்த படங்கள் அனைத்துமே – வர்த்தகரீதியாக
வெற்றி பெற்றன என்று சொல்ல முடியாது…
ஆனால், அனைத்துமே மிகச்சிறந்த தரத்துடன்
இருக்கும். படங்கள் வெற்றி பெற நல்ல கதை முக்கியம்
என்பதை அவர் உணர்ந்து வைத்திருந்தார்… அவரது
வசனங்கள் மிகவும் எளிமையாக, சாதாரண மக்கள்
புரிந்துகொள்ளத்தக்கதாக, ரசிக்கத்தக்கதாக அதே சமயம்,
பாத்திரங்களுக்கு பொருத்தமாகவும் ஆழமாகவும் இருக்கும்.

பின்னர் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களுடன்,
கூட்டணி சேர்ந்து, இவர்கள் 3 பேருமாக தமிழ்த்திரையுலகையே
ஒரு புரட்டு புரட்டிப்போட்டு விட்டனர்.

இவர்கள் மூவருமாகச் சேர்ந்து பல வெற்றிப்படங்களை
உருவாக்கினார்கள்.

ஸ்ரீதர் ஒரே செட்டில், இருபத்தி எட்டே நாட்களில்
உருவாக்கி சாதனை புரிந்த படம் “நெஞ்சில் ஓர் ஆலயம்”.
இது 1962-ல் தேசிய அளவில் மிகச்சிறந்த படமாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டது. பல அவார்டுகளைப் பெற்றது இந்தப்படம்.
பின்னர், ஹிந்தி,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும்
எடுக்கப்பட்டது.

நாகேஷை, ஸ்ரீதருக்கு நடிகர் பாலாஜி தான் அறிமுகப்படுத்தி
வைத்தார். நாகேஷுக்கு முதன் முதலில் ஒரு மேஜர் ரோல்
கிடைத்ததும் இந்தப்படத்தில் தான்.

ஸ்ரீதரைப்பற்றி சொல்ல ஒரு இடுகை போதாது…
எனவே அடுத்த பகுதியிலும் தொடர்கிறேன்…

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் அனைத்துமே
ஹிட் பாடல்கள்…

கதைக்கு, கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான,
கருத்தாழமுள்ள,
ஆனால் மிக எளிய சொற்களைக் கொண்ட
கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் இந்தப்படம் புகழ்பெற
ஒரு முக்கிய காரணமாக அமைந்தன.

வின்செண்டின் அற்புதமான கேமிரா கோணங்களோடும்,
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின்
அற்புத இசையமைப்பாலும் உருவான இந்தப்படத்தின்
ஒரு சாம்பிள் பாடல் கீழே –

பல சிறப்புகளைக் கொண்ட இந்தப் பாடலும் படமும்
வெளியானது இன்றைக்கு 58 ஆண்டுகளுக்கு முன்
என்பதை நினைவில் இருத்திக் கொண்டால் தான் இதன்
அருமை தெரியும் …

சொன்னது நீ தானா….

…..

….

.
—————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to சி.வி.ஸ்ரீதர் – (பகுதி-19) நினைக்கத் தெரிந்த மனமே …

 1. natchander சொல்கிறார்:

  YES !!!
  SRIDHAR BITES HIS NAILS OFTEN !!!
  SRIDHAR BITES OUR HEARTS ALSO !!!
  THROUGH HIS BEAUTIFUL STORY DIALOGUES AND DIRECTION !!
  AN ADD OF A SRIDHARS FILM !!!
  WAS JUST ENOUGH FOR THE FILM AUDIENCES !!!
  TO RUSH TO THEATRES !!
  THE NAME SRIDHAR,,,, BECAME VERY POPULAR !!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.