…
…
…
சட்டங்கள், விதிகள் எதன் பொருட்டு, யாருக்காக
உருவாக்கப்படுகின்றன… ?
இதனை எத்தனை பேர் யோசிக்கிறார்கள்…?
இந்த 3 நிமிட காணொளியில் சுகி சிவம் அவர்கள்
ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்…
…..
…..
எனக்கு ஒரு மன திருப்தி உண்டு.
சுமார் 40 ஆண்டுக்காலம் மத்திய அரசின் பணியில்
இருந்த நான் என் பணிக்காலம் முழுவதும்,
சட்டவிதிகளை என் மனசாட்சிக்கு ஏற்ப வளைத்து தான்
நான் செயலாற்றினேன்.
அரசாங்க சட்டங்களை interpret பண்ணுவது என்பது
ஒரு நுட்பமான கலை.
சட்ட விதிகளை, நிறைவேற்றும் பொறுப்பில் இருப்பவர்கள்
அதனை, மனிதாபிமான கண்ணோட்டத்தோடு
அணுக வேண்டும் என்பது என் கருத்து.
ஏன் விதியை மீறினாய் என்று என்னை கேட்க முடியாதபடி,
பல சமயங்களில், அதற்கேற்ற விளக்கங்களையும் நானே
உருவாக்கிக்கொண்டேன்.
அரசு ஊழியர்கள் எப்போதும் சட்ட விதிகளைக் காட்டி
ஒன்றை மறுப்பதற்கு பதிலாக, அவற்றை எந்த விதத்தில்
மக்களுக்கு உபயோகமாக positive-ஆக பயன்படுத்தலாமென்று
மனிதாபிமான கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும்
என்பது என் கருத்து.
ஒரு சமயம், அரசின் சார்பாக, உயர்நீதிமன்றத்தில்
ஒரு வழக்கை கையாள வேண்டியிருந்த நான்,
தொழிலாளர்களின் பொது நன்மையை மனதில் கொண்டு,
அந்த வழக்கு தோற்றுப்போக என்னால் என்னவெல்லாம்
செய்ய முடியுமோ – அதைச் செய்தேன்….
( இந்த வழக்கைப்பற்றி நான் இதே தளத்தில்
வேறு எங்கோ விவரமாக எழுதியிருக்கிறேன் …
இப்போது கண்டுபிடிக்க முடியவில்லை…)
எனக்கு அமைந்த மேலதிகாரிகளில் பலரும்
என் அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, என்னை
சுதந்திரமாக செயல்பட விட்டார்கள். ஒரே ஒரு விஷயத்தை
அவர்கள் வலியுறுத்தினார்கள். என் செயல்களால்
பாதகமான விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால் –
அதற்கு நானே பொறுப்பேற்க வேண்டும் என்று
வலியுறுத்தினார்கள்.
ஒரே ஒரு சமயம் மட்டும் எனக்கு வாய்த்த ஜி.எம்.
(ஜெனரல் மேனேஜர் ) “அரசாங்கத்தில் இந்த மாதிரி
கருணைக்கெல்லாம் இடமில்லை; உன் அணுகுமுறையை
ஏற்பதற்கில்லை; ஒருவேளை உனக்கு இப்படித்தான் தொடர
வேண்டுமென்றால், வேலையை ரிசைன் பண்ணிவிட்டு
வெளியே போய் ஒரு ஆசிரமம் துவக்கு; உனக்கு
தோன்றுவதையெல்லாம் அங்கே செய்துகொள்” என்றார்…!!!
( if you want to continue like this –
better you resign your job and start an
Ashram outside …!!! )
அவர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை; பெரும்பாலான
அரசு அதிகாரிகள் அப்படித்தான் இருப்பார்கள்.
( ரோசப்பட்டுக்கொண்டு வேலையை விட்டுவிட்டு போய் விடவா
முடியும்…? சேமிப்பு எதுவும் கிடையாது; வெளியே போனால்
சோத்துக்கே தாளம் தான்; சுவர் இருந்தால் தானே சித்திரம்…?
எனவே, போகும் வரையில் –
– அவர் போகும் வரையில் (மாற்றலில் தான்…) –
கொஞ்ச காலம் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தேன்…!!! )
– சட்டம் வேறு; நியாயம் வேறு.
சில சமயங்களில் இரண்டும் ஒன்றுக்கொன்று
முரணானதாக இருக்கும்.
என் பார்வையில் –
அத்தகைய சந்தர்ப்பங்களில்,
சட்டத்தை மீறினாலும் பரவாயில்லை;
இங்கு மனிதாபிமானம் முக்கியம்….
அதே போல் – சட்டத்தின் ஓட்டைகளால் –
நிச்சயம் தப்பி விடுவானென்று தெரிந்தால்,
ஒரு கொலைக் குற்றவாளியை, கற்பழிப்பாளனை –
என்கவுண்டர் செய்வதும் தப்பில்லை…!!!
இங்கு நியாயம் முக்கியம்…!!!
பெரும்பாலான நண்பர்களும் இதே கருத்தில் தான்
இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
.
————————————————————————————————-
எனக்கும் சுகி சிவமும், நீங்களும் சொல்வதில் 1000 % உடன்பாடு. சட்டங்களும், விதிகளும் மனிதனுக்காக ஏற்படுத்தப் பட்டவைகளே. எங்கெங்கு, எப்படி சட்டங்களையும், விதிகளையும் வளைத்து எல்லோருக்கும் நன்மை செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும். மதுரையில் டிவிஎஸ் கம்பெனி பஸ் ஓடும் போது, பஸ்சின் பின் வாசல் வழியே ஏறி, முன் வாசலில் இறங்க வேண்டும் என்று விதி. ஒரு வயதான மூதாட்டி பின் வாசலுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு இருப்பவளை துன்புறுத்தி முன் வாசலில் இறங்க வைப்பார்கள். இதை சில நண்பர்கள், “டிவிஎஸ்னா டிவிஎஸ்தான்”, என்று சிலாகித்து பேசுவதை பார்த்து இருக்கிறேன். இது மகாமுட்டாள்தனத்தை விட வேறு என்ன? ஏறி, இறங்குவது எளிதாக இருக்க ஏற்படுத்த பட்ட விதியை ஒரு மூதாட்டியை கஷ்டப் படுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது?
அரசு அலுவலர்கள் அனேகமாக லஞ்சம் வாங்குவதற்குத்தான் சட்ட விதிகளை கடினமானதாக்குகிறார்கள். சமீபத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம்.
அரசாங்கம், பட்டா வேணுமென்றால், அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 1 மாதத்துக்குள் (அல்லது அதற்குக் குறைவாக) பட்டா வழங்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. இந்த அதிகாரிகள் என்ன செய்யறாங்கன்னா, விண்ணப்பித்தாலும், விண்ணப்பத்தை கணிணியில் ஏற்றுவதில்லை. சும்மா சாக்குப் போக்கு சொல்லிக்கிட்டே காலத்தைக் கடத்தறாங்க. காசு வாங்கிய பிறகு அது கணிணியில் ஏறும். அப்புறம் ஏதோ ஒரு காரணத்தால் பட்டா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டால், அந்த லிங்க் இல்லை இது இல்லை என்று சொல்லி, கொடுத்த பணத்தை முழுங்கிடறாங்க. இந்தத் துறையே லஞ்சத்தில் ஊறித் திளைக்கிறது. பேசாம இந்தத் துறையையே அரசு நீக்கிவிட்டு, பேசாமல் வெளிநாட்டு கம்பெனிக்கு அவுட்சோர்ஸ் செய்துவிடலாம்.
காமராஜர், ஒவ்வொரு பிரச்சனையையும், சட்டப் புத்தகத்தை வைத்து ஆராயவில்லை. எதற்காக சட்டம் இயற்றப்பட்டதோ அந்த நோக்கத்திற்குப் பழுதில்லாமல் எல்லா முடிவுகளையும் உடனுக்குடன் எடுத்தார். அதிகாரிகள், ‘ஐயா..சட்டம்…’ என்று கட்டையைப் போடும்போது, அதை மீறி முடிவெடுக்கும் நல்லெண்ணம் அவரிடம் இருந்தது.
அரசாங்க அலுவலர்களில் ஒரு 0.1 % இப்படி நல்லவர்களாக இருக்கக்கூடும்.