பிரபஞ்ச அறிவு – கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – ( 8 )

….
….

….

….

முன்பு படித்த சில விஷயங்கள் –
நினைவிற்கு வருகின்றன …

அவற்றிலிருந்து –
ஒரு கருத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்…

————-

உலகில், பறவைகளுக்கு என்று சில விசேஷமான
நுண்ணுணர்வுகள் இருக்கின்றன. குளிர் பிரதேசங்களில்
வசிக்கும் பறவைகள், பனி விழப்போகும் நாளை,
முன் கூட்டியே திட்டவட்டமாக அறிந்து கொள்கின்றன.
பல சமயங்களில் விஞ்ஞானிகளால் கூட சரியான நாளை
முன்கூட்டியே கணிக்க முடிவதில்லை; ஆனால், இந்த
பறவைகள், ஒரு மாதம் முன்பாகவே சரியாக கணித்து,
தங்கள் பயணத்தைத் துவங்கி விடுகின்றன.

ஆண்டுதோறும் குறிப்பிட்ட பருவங்களில், ரஷ்யா போன்ற
தொலைதூர நாடுகளிலிருந்து கூட பல பறவைகள்
இங்கே தமிழ்நாட்டில் வேடந்தாங்கலுக்கு வருவதை
நாம் பார்க்கிறோம்.

வருடந்தோறும் பல்வேறு விதமான பறவைகளும்
பருவநிலையில் ஏற்படப்போகும் அந்த நாளை சரியாக
முன்னதாகவே அறிந்து கொள்கின்றன என்பது
பல நூறு பரிசோதனைகள் சோதனைகள் மூலம்
தெரிய வந்திருக்கிறது.

ஜப்பானில், நகரங்களில் வாழும் ஒருவகை சாதாரணப்
பறவை இனம், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இருபத்து நான்கு
மணி நேரத்திற்கு முன்னதாகவே, அதை உணர்ந்து கொண்டு
ஊரை விட்டுப் பறந்தோடிப் போய் விடுகின்றன என்பது
தொடர்ந்து கவனிக்கப்பட்டிருக்கிறது.

பூமியில் ஒரு இடத்தில், நிலநடுக்கம் எப்போது ஏற்படும்
என்பதை இன்றைய தினம் நம்மிடம் இருக்கும் இத்தனை
சாதனங்களையும், வசதிகளையும் வைத்துக்கொண்டும் கூட –

எந்த விஞ்ஞானியாலும், எந்தவித சோதனைகளாலும்,
புள்ளிவிவரங்களாலும் – சரியாகக் கணித்துச் சொல்ல
முடிவதில்லை.

ஓரளவு சுமாராக கணிக்கலாமே தவிர இரண்டு மணி
நேரத்திற்கு முன்பு கூடத் தெளிவாகச் சொல்ல முடிவதில்லை;

நம்ம ஊர் வானிலை அறிவிப்பு மாதிரி –
வந்தாலும் வரலாம், வருவதற்கான சாத்தியக் கூறுகள்
இருக்கின்றன என்று மட்டுமே அவர்களால் சொல்ல முடிகிறது.

ஆனால், சில இடங்களில், ஜப்பானிய மக்கள் இருபத்து நான்கு
மணி நேரம் முன்பே, நிலநடுக்கம் வரப்போகிறது என்பதை
தெரிந்து கொண்டு உஷாராகி விடுகிறார்கள்…. எப்படி….?

அவர்கள் ஊர்களில் இருக்கும் பறவைகள் கூட்டம் கூட்டமாக
வெளியேறிப் போவதை வைத்து, அனுபவத்தில் தெரிந்து
கொள்கிறார்கள்.

அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய சில நகரங்களில்,
அந்த மாதிரி சமயங்களில் ஒரு பறவை கூடப் பின் தங்கி
நிற்பதில்லை; அத்தனையும் முன்கூட்டியே பறந்து

விடுகின்றன.பறவைகளுக்கு இருக்கும் இந்த அதீத உணர்வு
வியப்பூட்டுகிறது.

இந்த மாதிரி நிகழ்வுகளை வைத்துக்கொண்டு ஆராய்ந்ததில்,
ஒரு விஷயம் புலனாகிறது….

பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரும்,
பிரபஞ்சத்தில் நிகழும் தாக்கங்களை உணரும் ஒருவகை
உணர்வு மையத்தைப் பெற்றிருக்கிறது…

இதே உணர்வு, ஒரு காலத்தில் மனிதர்களுக்கும் நிச்சயம்
இருந்திருக்கும்… ஆனால், மனிதர்கள் விஞ்ஞான வளர்ச்சிகளின்
காரணமாக தங்களது இத்தகைய உணரும் திறனை
இழந்து விட்டார்கள்….

ஆதி காலத்திய மனிதனிடம், பறவைகளைப்போல்,
விலங்குகளைப்போல் – அத்தகைய உணர்வுகள்
நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், பூவுலகில் மனிதர்களிடையே
ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சிகள் காரணமாக இயற்கை
அவனுக்கு இயல்பாகவே அளித்திருந்த அந்த உணரும்
விழிப்புணர்வை – அவன் இழந்து விட்டான்.

வரலாற்றில் படிக்கிறோமே, அந்த ஆதிமனிதர்களிடம்
இருந்த பலமும், வேகமும், வேட்டையாடும் சமயங்களில்
அவன் காட்டியது போன்ற நுன்ணுணர்வும் இன்றைய மனிதனிடம்
இருக்கிறதா..?

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக ஏற்படுத்திக்கொண்ட
செயற்கையான புத்திசாலித்தனத்தால் மட்டுமே மனிதன் இன்று
தன்னை மிக உயர்ந்த இனம் என்று சொல்லிக் கொள்கிறான்…
எல்லாவித பாதுகாப்புகளையும் செயற்கையாக
ஏற்படுத்திக்கொள்கிறான்.

ஆனால், மனிதனை விட சிறந்த பல ஆற்றல்களை –
இயற்கை தந்த பலங்களை, பறவைகளும்-விலங்குகளும்
இன்னமும் தக்க வைத்துக்கொண்டிருக்கின்றன.
அதனால் தான், மீன்களாலும், பறவைகளாலும், விலங்குகளாலும்
உணர முடிவதை மனிதனால் உணர முடியவில்லை;

முன்பு இருந்திராத எத்தனையோ புதிய பொருட்களை,
எலெக்ட்ரானிக் சாதனங்களை, பயண சாதனங்களை,
மருத்துவ உபகரணங்களை, விஞ்ஞான சாதனங்களை
மனிதன் கண்டுபிடித்து விட்டான்…. ஆனால் –

இந்த விஞ்ஞான வளர்ச்சிகள் எதனாலும் மனிதனுக்கு
சுயமாக இருந்த அந்த திறன்களை மீட்டுத்தர முடியவில்லை;

ஆனால், இந்த உலகில் – மிகச் சிறிய உயிரி கூட,
மனிதனிடம் இல்லாத உள்ளுணர்வுகளை கொண்டிருக்கிறது….

இப்போதைய அறிவியல் ஆராய்சிகள் அதை
உறுதிப்படுத்துகின்றன.

இத்தகைய ஆராய்ச்சி முடிவுகள் எதனைச் சொல்கின்றன…?

பிரபஞ்சத்தை விட்டு விலகி, உலகில் எதுவுமே
தனித்து இல்லை என்பதையே நமக்கு உணர்த்துகின்றது.
பிரபஞ்ச வெளியில் எங்கு எது நடந்தாலும்,
அது இங்கே இருக்கும் உயிர்களிடையே பாதிப்பை
உண்டாக்கவே செய்யும். ஆனால் அதனை அறியும்
உணர்வுகள் மனிதரிடையே இன்று இல்லை.

….

….

இன்றும் கூட சில மனிதர்களிடையே –
அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மூளை அதிர்வுகளில்
நுண்ணிய மாற்றங்கள் நிகழ்வதாக மருத்துவ விஞ்ஞானிகள்
கூறுகின்றனர். சில சமயங்களில் நாமே கூட இத்தகைய
மாற்றங்களை உணர்கிறோம். பௌர்ணமி சமயங்களில்,
நிலவின் ஒளியில் – உற்சாகமான உணர்வுகள் நம்மூடே
பொங்கிப் பெருகுவதை பார்க்கிறோம்.

பதினோரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின்
மேற்பரப்பில் பெரிய வெடிப்புகளும், கொந்தளிப்புகளும்
தோன்றுகின்றன… அந்த சமயங்களிலெல்லாம் –

சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றும்போதெல்லாம் பூமியில்
கொடிய நோய்கள் பரவுகின்றன, பெருகுகின்றன – என்கிற
கருத்தைக்கூட சில விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறி
வருகிறார்கள்..

அந்தப் புள்ளிகள் குறைந்தால் நோய்கள் குறைகின்றன.

பத்து அல்லது பதினோரு ஆண்டுகளுக்கு ஒரு முறை
– பூமியில் போர்கள் ஏற்படுகின்றன –
கொள்ளை நோய்கள் பரவுகின்றன,
புரட்சிகளும், கலகங்களும் வெடிக்கின்றன என்று
சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

நாம் இந்த பிரபஞ்சத்தில் தனியே இல்லை;
பிரபஞ்சக் கட்டமைப்பில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும்
மனிதரை எந்தவிதத்திலாவது பாதிக்கின்றன….

என்பது உண்மையா….?

பிரபஞ்சத்துடன் ஆதிகாலத்தில் இருந்த தொடர்பை
மனிதனால் மீண்டும் உருவாக்கிக்கொள்ள, புதுப்பித்துக்கொள்ள
முடியுமா…? தனது நுண்ணுணர்வுகளை பெருக்கிக்கொள்ள
முடியுமா…?

கொஞ்சம் யோசிப்போமே….!!!

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பிரபஞ்ச அறிவு – கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – ( 8 )

 1. புதியவன் சொல்கிறார்:

  ஒரு உதவியை ஏற்றுக்கொண்டால், அந்த உறுப்பு அந்த உதவியின்றி வேலை செய்யும் திறனை இழந்துவிடும். உதாரணமா சக்கர நாற்காலியில் உட்காருவது என்று முடிவெடுத்துவிட்டால், அதன் பிறகு நடப்பது துர்லபமாகிவிடும். விரல்களை அசைக்காமல் இருக்கப் பழகிவிட்டால் பிறகு விரல்கள் stiff ஆகிவிடும். நாம எந்தத் துணையும் இன்றி, காலை 4 மணிக்கு எழுந்துகொள்ளணும், 5 மணிக்கு இரயில் நிலையத்துக்குப் போகணும் என்ற அர்ஜென்ஸி இருக்கும்போது நாமாகவே 4 மணிக்கு எழுந்துகொள்வதை அனுபவபூர்வமாகக் காணலாம். அது அன்றி, அலார்ம் வைத்துக்கொண்டால், சில சமயங்களில் எழுந்திருக்க விட்டுவிடுவோம். நம் மைண்ட் அலர்ட் ஆக இருப்பதை நாமே விரும்பாமல், அதற்குத் துணையைக் கொடுத்துவிடுகிறோம். இராமாயணத்துல வரும் இல்லையா, பிரம்மாஸ்திரம் ஒருவனை பீடித்திருக்கும்போது கயிறு கொண்டு கட்டினால் பிரம்மாஸ்திரத்தின் சக்தி போய்விடும் என்று. அதுதான் சரியான உதாரணமாக இருக்கும். As long as we train ourselves to depend on external help (gadget or anything) இயல்பான திறமை மழுங்கிப்போகும்.

 2. atpu555 சொல்கிறார்:

  உண்மை. விஞ்ஞான வளர்ச்சியால் சில வல்லமைகள் மழுங்கிப்போகின்றன. Calculator வந்ததால் மனக்கணக்கின் திறம் அருகிவிட்டது. இணையம் வந்த பிறகு மனனம் செய்யவேண்ண்டிய தேவைகள் குறைந்து விட்டன. அது ஞாபகசக்திக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகளவு தொலைக்காட்சி/கைப்பேசித் திரைகள் சிறார்களின் கவனவீச்சைக் குறைக்கின்றன.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,
   atpu555,

   நீங்கள் சொல்வது இந்த தியரியை மேலும்
   வலுப்படுத்துகின்றன என்று நினைக்கிறேன்.

   பொதுவாக, நான் கணக்கில் நல்ல வேகம்…
   பெரிய பெரிய பெருக்கல்களை எல்லாம்
   (5 டிஜிட் 6 டிஜிட்…) மிக வேகமாகவும்
   accurate ஆகவும் செய்து விடுவேன்.
   பல சமயங்களில் – மனதிலேயே ஒர்க் அவுட்
   பண்ணி விடுவேன்.

   நான் அலுவலகத்தில் பணியாற்றிக்
   கொண்டிருக்கும்போது, கால்குலேட்டரால்
   எனது இந்த திறமை பறிபோய்க்கொண்டிருப்பதை
   உணர்ந்தேன். கால்குலேட்டரை தூக்கி
   போட்டு விட்டேன்… என் ஸ்டாஃப் எல்லாரும்
   என்னை அதிசயமாக பார்ப்பார்கள்…
   சுலபமாக கால்குலேட்டரில் செய்யக்கூடியதை
   இவர் ஏன் இவ்வளவு மெனக்கெட்டு
   செய்கிறாரென்று…

   காரணம் – நீங்கள் சொல்கிற அதே காரணம் தான்.
   எந்திர சக்தியை பயன்படுத்தும்போது, நம்
   இயற்கை சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக
   இழந்து விடுகிறோம் என்று நான் அச்சப்பட்டது தான்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.