திருவண்ணாமலையில் – உடைக்கப்படவிருந்த 2 மலைகள்…

….
….

….

திருவண்ணாமலை, கிரிவலப்பாதையிலிருந்து
4 கி.மீ. தொலைவில் இருக்கும் 2 மலைகள் –
கவுத்தி மலையும், வெடியப்பன் மலையும்…

6 வருடங்களுக்கு முன், ஜிண்டால் குழுமத்தின்
ராட்சச பசிக்கு இரையாக இருந்த இந்த 2 மலைகளும்
பலருடைய ஒன்று திரண்ட முயற்சியால், கடைசி நேரத்தில்
தவிர்க்கப்பட்ட வரலாறு இது….

—————

நேற்று EIA 2020 குறித்து இந்த தளத்தில் எழுதப்பட்ட
இடுகையில் எழுப்பப்பட்ட வினாக்கள், கருத்துகள் எந்த
அளவிற்கு நியாயமானவை என்பதை இந்த இடுகை விளக்கும்…

—————

பெரிய தொழில், சுரங்கத் திட்டங்களைத் தொடங்குவதற்கு
அப்பகுதி மக்களிடையே கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவது
கட்டாயம் என்று ஏற்கெனவே இருக்கும் விதியை திருத்தி
கருத்துக் கேட்புக் கூட்டம் கட்டாயமில்லை என்று ஆக்கும்
வகையில் இருக்கிறது அரசு வெளியிட்டிருக்கும்
புதிய வரைவு அறிவிக்கை.

அது எந்த அளவிற்கு மக்களை பாதிக்கும்….?

இந்த வரைவு அறிவிக்கையின் 19-ம் பக்கத்தில் சுதந்திரமான
முறையில் மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முடியாத
நிலை இருந்தால் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து
செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதி எப்படி தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதை
மிகத்தெளிவாக எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வு இது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை யிலிருந்து 4 கி.மீ.
தொலைவில் உள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலை என்ற
இரண்டு மலைகளில் ஒரு இரும்புத் தாது திட்டம் வராமல்
தடுப்பதற்கு இந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் எப்படி
உதவியது என்ற சுவாரசியமான வரலாற்றை இது கூறுகிறது.

கிரிவலப்பாதைக்கு மிக அருகில் உள்ள கவுத்தி,
வேடியப்பன் மலைகளில்,

காப்புக் காட்டில், 325 எக்டேர்
நிலப்பரப்பில் இரும்புத் தாது வெட்டியெடுத்து, கழுவி,
வில்லைகளாக மாற்றி எடுத்துச் செல்லும் திட்டத்துக்கு
ஜிண்டால் குழுமம் உரிமம் கேட்டிருந்தது.

இதற்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 2008 டிசம்பர்
27ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

இதுவரை நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் தாக்க
மதிப்பீட்டு அறிவிக்கை- 2006-ன்படி இத்தகைய திட்டங்களுக்கு
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வெளியிடுவதும்,
பிறகு மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதும் கட்டாயம்.

முதலில் இந்தக் கூட்டம் பற்றியோ, திட்டம் பற்றியோ
மக்களுக்குப் பரவலாகத் தெரியவில்லை. ஆனால் சில
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த நிறுவனம்
வெளியிட்டிருந்த சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை
இணையத்தில் படித்து அதன் பாதிப்புகளை
மக்களிடம் பிரசாரம் செய்தனர்.
….

….


….

2 லட்சத்து 20 ஆயிரம் மரங்கள் –

அந்த நிறுவனம் வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க
அறிக்கையிலேயே – 2 லட்சத்து 20 ஆயிரம் மரங்கள்
வெட்டப்படும் என்றும்,

இதனால் காட்டுப் பகுதியில் தாவரங்கள், விலங்குகள்
ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும்,
தாதுவை வெட்டியெடுப்பதால் ஏற்படும்
சத்தம் காரணமாக கேட்புத் திறன் இழப்பு ஏற்படும் என்றும்,

வெட்டியெடுக்கும் தாதுவில் இருந்து வெளியாகும் சிலிகா தூசி
மற்றும் நுண்ணிய இரும்புத் துகள்களை சுவாசிப்பதன் மூலம்

ஆக்குபேஷனல் லங் டிசீஸ் எனப்படும் நுரையீரல் நோய்
ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்தப்
பாதிப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுற்றச்சூழல் செயற்பாட்டாளர்கள் செய்த பிரசாரம் காரணமாக
ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்
நடக்கவிருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

ஆனால், ஆட்சியரக கூட்ட அரங்கில் அனைவருக்கும்
இடமில்லை. சில நூறு பேர் மட்டுமே
கூட்ட அரங்கில் அமர்ந்தனர்.

திட்டத்தைப் பற்றி ஜிண்டால் நிறுவனத்தின்
அதிகாரிகள் ஆங்கிலத்தில் விளக்க முயன்றபோது
கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் முனைவர்
மு.ராஜேந்திரன் தமிழில் விளக்கும்படி கூறினார்.

பிறகு சுமார் 50 பேர் கருத்துத் தெரிவித்தனர். அதில் படூர் ரமேஷ்
என்னும் வழக்குரைஞர் ஒருவர் மட்டுமே திட்டத்துக்கு ஆதரவாக
கருத்துத் தெரிவித்தார்.

பச்சையம்மாள் என்ற 85 வயது மூதாட்டி தாம் சிறு வயது முதல்
இந்த மலையை நம்பியே வாழ்வதாகவும், பஞ்ச காலத்தில்கூட
மலையில் விறகு பொறுக்கி வாழ்ந்ததாகவும்
கூறியதோடு, “இந்த மலையை வெட்டவேண்டுமென்றால்
என்னை முதலில் வெட்டுங்கள்” என்று உணர்ச்சி பொங்கக்
கூறியது இன்றும் பலரால் நினைவுகூறப்படுகிறது.

இதைப் போலவே மருத்துவமனையும், பள்ளிக்கூடமும்
கட்டித் தருவோம் என்று இரும்புத் தாது நிறுவனம் உறுதி
அளித்ததை சுட்டிக்காட்டிய ஒருவர் –
“எங்கள் அரசாங்கம் எங்களுக்கு பள்ளிக்கூடமும்,
மருத்துவமனையும் கட்டித் தந்துள்ளது. இதையெல்லாம் நீங்கள்
ஏன் செய்யவேண்டும்? –

எங்களை நோயாளியாக்கிவிட்டு பிறகு
மருத்துவமனை கட்டித்தருவீர்களா” என்று கேட்டார்.

வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக அம்பாசமுத்திரம் அருகே
தனியார்க்காடு ஒன்றை விலைகொடுத்து வாங்கி
வனத்துறைக்குத் தருவதாக நிறுவனம் வாக்குறுதி அளித்திருந்தது.
இதை சுட்டிக்காட்டிப் பேசிய கிராமவாசி ஒருவர்,

“அம்பாசமுத்திரத்திலே மரமிருந்தால் திருவண்ணாமலைக்கு
காற்று வருமா?” என்று கேட்டார்.


மரங்களையும், வனங்களையும் தவிர, அந்த மலையில்
உற்பத்தியாகும் இரண்டு ஓடைகள் பல ஏரிகளை நிரப்புவதைக்
குறிப்பிட்ட விவசாயிகள் –
இந்த திட்டத்தால் ஓடைகள் அழிந்து, ஏரிகள் நிரந்தரமாக
வறண்டு போகும் என்றும், இரும்புத் தாது துகள்களால்
விவசாயம் செய்யத் தகுதியற்றவையாக விளைநிலங்கள் மாறும்
என்றும் தெரிவித்தனர்.

இந்த கருத்துகளையெல்லாம் கேட்டுக்கொண்ட மாவட்ட
ஆட்சியர் ராஜேந்திரன், உங்கள் எதிர்ப்புகளையெல்லாம் பதிவு
செய்துகொள்கிறேன். உங்கள் உணர்வுகளை அரசு
புரிந்துகொள்ளும், இவ்வளவு எதிர்ப்பையும் மீறி அரசு இந்த
திட்டத்தை தொடர விரும்பாது என்று அங்கேயே வாக்குறுதி
அளித்தார்.

இப்படி வாக்குறுதி அளித்ததோடு மட்டுமில்லாமல் கூட்டத்தில்
நடந்தவற்றைப் பற்றி தெளிவான, முழுமையான அறிக்கையைத்
தயாரித்து அரசுக்கு அனுப்பினார். அந்த அறிக்கையில்,
இந்த திட்டம் வந்தால் முன்னெப்போதும் கண்டிராத வகையில்
திருவண்ணாமலையில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று
அவர் எச்சரித்திருந்தார்.

மினிட்ஸ் எனப்படும் இந்த கூட்ட அறிக்கையை அடிப்படையாக
கொண்டு, இந்த எச்சரிக்கையை சுட்டிக் காட்டி, உச்சநீதிமன்றம்
நியமித்த மத்திய அதிகாரம் பெற்ற குழு (Central Empowered
Committee) இந்த திட்டத்துக்கு உரிமம் வழங்க இயலாது என்று
2009 ஜூன் மாதம் இறுதியாக நிராகரித்து ஆணையிட்டது.

ஆனால், மீண்டும் அதே நிறுவனம் 2014ல் 23 ஹெக்டேர்
காப்புக் காட்டில் சுரங்கம் தோண்ட அனுமதி கேட்டு புதிதாக
விண்ணப்பித்தது. ஆனால், அப்போது மக்கள் எதிர்ப்பு மிகக்
கடுமையாக இருந்தது. ஒரு முறை கால் பதித்தால் சுரங்க
நிறுவனங்கள் முழு மலையையும் எடுத்துவிடுவார்கள்
என்று எதிர்ப்பாளர்கள் பிரசாரம் செய்தனர்.

– இப்படி சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தைப் பற்றி முன்பே
தெரிந்துகொள்ளும் வாய்ப்பும்,

– அதை எதிர்த்து மக்கள் கருத்துகளைப் பதிவு செய்யும் வாய்ப்பும்,
புதிய வரைவு அறிக்கையில் பறிக்கப்பட்டுள்ளது.

தாம் நடத்திய இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் பற்றிய
நினைவைப் பகிர்ந்துகொள்ளுமாறு அந்நாள் கலெக்டரும்,
தற்போது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மு.ராஜேந்திரன்
அவர்கள் தற்போது பகிர்ந்து கொண்ட கருத்து –

“பல இடங்களில் கருத்துக் கேட்புக் கூட்டம் கண் துடைப்பாக
நடக்கும். மக்களுக்குப் போதிய தகவல்கள் தெரியாமல்போய்
திட்டம் தொடங்கிய பிறகு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்.

ஆனால், கவுத்திமலை வேடியப்பன் மலை
தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முதலில்
அவர்களை இந்த திட்டம் தொடர்பான விவரங்களை
தெளிவாக எடுத்துக்கூறும்படி செய்தேன்.

திட்டத்துக்கு சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர்
எடுக்கப்படும், 2 லட்சத்து 20 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்
என்ற தகவல்களைக் கேட்டபோது மக்கள் கடுமையாக
எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஒருவர் மட்டுமே திட்டத்தை
ஆதரித்தார்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை துல்லியமாகத்
தெரிவித்து, இந்த திட்டத்தால் சட்டம் ஒழுங்கு
முன்னெப்போதும் இல்லாத வகையில் சீர்குலையும் என்று
அறிக்கை அனுப்பினேன். அதைக் குறிப்பிட்டுதான்
உச்சநீதிமன்றக் குழு இந்த திட்டத்துக்கு உரிமம் வழங்க
முடியாது என்று நிராகரித்தது” – என்று கூறுகிறார் ராஜேந்திரன்.

ஒருவேளை இந்த புதிய வரைவு அறிக்கையில் உள்ளபடியே
சட்ட விதிகள் இருந்தால் கவுத்தி, வேடியப்பன்
மலை எதிர்ப்பியக்கம் என்ன ஆகி இருக்கும் …?

ஜிண்டால் நிறுவனத்தினர் முதலில் சுரங்கம் தோண்டிவிட்டு
பின்னர், அரசு விதிக்கக்கூடிய சில லட்சம் ரூபாய் அபராதத்தை
செலுத்திவிட்டு, தங்கள் சுரங்கத்தை தொடர்ந்திருப்பார்கள்…

நிலக்கரி, தாதுச் சுரங்கங்கள் உள்ளிட்ட பல தொழில்களுக்கும்,
மீத்தேன், ஷேல் எரிவாயு ஆகியவற்றைக் கண்டறிவதற்கான
ஓர் ஆய்வுக்கும் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற
வேண்டியதில்லை என இந்த வரைவு அறிக்கையின் 26வது
பிரிவு கூறுகிறது.

இந்த சுரங்கம் வந்தால் 10 ஆயிரம் பேருக்கு வேலை
கிடைக்கும் என்றெல்லாம் ஜிண்டால் கம்பெனி ஆட்கள்
மக்களிடம் கூறி வைத்திருந்தார்கள்.

ஆனால், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் -உண்மையில்
180 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும் என்ற நிஜத்தை
அவர்கள் ஆட்சியர் முன்னிலையில் கூறவேண்டிய
கட்டாயம் ஏற்பட்டது.

இவ்வளவு பாதிப்புகளையும் ஏற்படுத்தும்
ஒரு திட்டம், வெறும் 180 பேருக்கு மட்டுமே வேலை தரும்
என்ற தகவல் கூட்டத்துக்கு வந்திருந்த கிராம மக்களை
வெகுண்டெழச் செய்தது.

இந்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வரைவு அறிக்கை
அப்படியே அமலுக்கு வந்தால், எந்த திட்டத்துக்கு
வேண்டுமானாலும் –

“சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்கும் சூழ்நிலை இல்லை”
என்று அரசு தன் விருப்பம்போல கூறி மக்கள் கருத்துக்
கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வழி,வசதி இருக்கிறது.
(அரசின் முடிவு என்பது அரசியல்வாதிகளின் முடிவு தானே…
நம் அரசியல்வாதிகளைப்பற்றி நமக்குத் தெரியாதா…? )

இதனால், மக்கள் கருத்துகளைக் கேட்பதற்கான வாய்ப்பு
மட்டுமல்லாமல், வரப்போகும் திட்டம் பற்றிய அனைத்து
உண்மைகளையும் மக்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும்
இல்லாமல் போகும் என்பதே நிஜம்.

( தகவல்கள், படங்கள் – உதவிக்கு நன்றி -Facebook pages of
Tiruvannamalai-Kavuthi-and-Vediyappan-Hills-Protection-Association-
மற்றும் அ.தா.பாலசுப்ரமணியன்-bbc.tamil.com )

.
————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to திருவண்ணாமலையில் – உடைக்கப்படவிருந்த 2 மலைகள்…

 1. புதியவன் சொல்கிறார்:

  அருமையான உதாரணத்தைக் காட்டியுள்ளீர்கள். டாஸ்மாக் கடைக்கே, அந்த இடத்தைச் சுற்றியுள்ள மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினால் மூடவேண்டும் என்ற நிலை வரவேண்டும்.

  இந்த மாதிரி வாய்ப்புகள் இருந்தும் எப்படி கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது? அதை கொஞ்சம் ஆராய முடியுமா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   //டாஸ்மாக் கடைக்கே, அந்த இடத்தைச்
   சுற்றியுள்ள மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினால்
   மூடவேண்டும் என்ற நிலை வரவேண்டும்.//

   நூற்றுக்கு 100 ஆதரிக்கிறேன்.
   மஹாராஷ்டிராவில் அன்னா ஹஜாரே
   அவர்களின் முயற்சியில் இதற்காக
   சட்டமே கொண்டு வரப்பட்டிருக்கிறது.

   //கூடங்குளம் அணு உலை,
   ஸ்டெர்லைட் தொழிற்சாலை//

   சில வருடங்களுக்கு முன்பே
   நாம் இங்கு விவாதித்து விட்டோமே…!
   மறந்து விட்டீர்களா…!
   அலுத்துப் போய் விட்டது…

   கனிமொழி அவர்களின் தயவிலும்,
   முயற்சியிலும் மீண்டும்
   ஸ்டெர்லைட் துவங்கிவிட்டால்,
   ஒருவழியாக அந்தப் பிரச்சினை
   தீர்ந்து விடும்.

   துவக்க விழாவில் திரு.வைகோ
   அவர்களே கலந்துகொள்வார்… 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    மக்களின் வாழ்வாதாரம் முக்கியம். தாமிரத்தை எதிரி சீனாவிடமிருந்து வாங்கக்கூடாது. அதனால் நாங்கள் மிகவும் ஆலோசித்து, எல்லாவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் ஆலை நிர்வாகத்தால் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை ஆராய்ந்து இன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் துவங்க முயற்சி எடுத்திருக்கிறோம். இதனால் தூத்துக்குடி மக்கள் மிகவும் பயனுறுவார்கள். ஆனால் ஆலை பாதுகாப்பு மிக முக்கியம். முன்பிருந்த மாதிரி பிரச்சனைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அதற்கான முன்னேற்பாடுகள் தலைவர் ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பாலும் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சியாலும் செய்யப்பட்டிருக்கிறது. மக்களின் உடல் நிலைக்கு ஸ்டெர்லைட் ஆலையால் பிரச்சனை என்றால் இந்த வைகோ தன் உயிரையும் கொடுத்து அதைத் தடுத்துவிடுவான்.

    இப்படீல்லாம் வைகோ உளரவேண்டும், தொண்டர்கள் கை தட்டுவார்கள். நாம தொலைக்காட்சில பார்த்து, எவ்வளவு இவங்க தேத்தியிருப்பாங்கன்னு யோசிக்கணும் என்பது நம் தலையெழுத்து. என்ன செய்ய? என்ன ஒண்ணு, அடுத்து ஐந்து வருடங்கள் கழித்து எதிர்கட்சியாகும்போது, மக்கள் பாதுகாப்பு முக்கியமாகப் போய்விடும், தாமிரத் தேவை பின்னுக்குப் போய்விடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.