– எல்லாவற்றையுமா எதிர்க்கிறோம்….?

….
….

….

எல்லாவற்றையும் எதிர்ப்பது என்பது
எதிர்க்கட்சிகளின்
வேலையாக இருக்கலாம்…

ஆனால் நம் நோக்கம் அதுவல்ல.

நம்மைப் பொருத்தவரையில், மக்கள் நலனுக்கு விரோதமாக
உள்ளவற்றை – உண்மையிலேயே எதிர்க்க
வேண்டிய விஷயங்களை – எதிர்த்து தான் ஆகவேண்டும்.

EIA Draft 2020 என்றால் என்ன…?
இந்த வரைவு சட்டத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்…?

Environmental Impact Assessment அதாவது,
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020

—————

முதலில் – சூழலியல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன?

இது வரை, இந்தியாவில் பெருநிறுவனங்கள் மற்றும்
தொழிற்சாலைகளைத் தொடங்க
தற்போதுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன்
கீழ் அனுமதி பெற வேண்டும்.

அதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,
சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ்,
திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை
ஒன்றை தயார் செய்ய வேண்டும். அதனை,
அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து,
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக
இருப்பின் அனுமதி வழங்கவோ, இல்லாதபட்சத்தில்
அனுமதி மறுக்கவோ செய்யும்.

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் –

நம் குடியிருப்பு பகுதிக்கு அருகே ஒரு ரசாயன நிறுவனத்தைக்
கொண்டு வருகிறார்கள் என்றால், இது குறித்த
சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை, அந்த நிறுவனத்தை
கொண்டு வருபவர்கள் முதலில் தயார் செய்ய வேண்டும்.

தொழிற்சாலை அமையவுள்ள பரப்பளவு,
அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளின் அளவு, அதனால்
சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு,
மக்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் –
கழிவு மேலாண்மை திட்டங்கள் உள்ளிட்டவை
குறித்து அந்நிறுவனங்கள் முழுமையாகவும்,
வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டும்.

இதனை அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து,

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அதற்கு
அனுமதி வழங்கும். அப்படி இல்லை எனில் மறுக்கும்.

சரி. சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிக்கை
என்ன சொல்கிறது? அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு….?

சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 தற்போது இருக்கும் சட்டத்தினை
பெரும் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு மத்திய அரசு மாற்றி
அமைக்க முனைகிறது என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் சூழலியல்
செயற்பாட்டாளர்கள்.

கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசால்
வெளியிடப்பட்ட இந்த புதிய வரைவில் ஏராளமான
குறைபாடுகள் உள்ளன. அது முழுக்க
பெருநிறுவனங்கள் நலனை மட்டுமே பேணுவதாக
இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

இந்த வரைவு அறிக்கையில் மிக முக்கியமாக
மூன்று குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது….

“தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தேசிய நலன்
சார்ந்ததிட்டங்களுக்கு சூழலியல் மதிப்பீடு தேவையில்லை
என்கிறது இந்த சட்ட முன்வடிவு.

நாளை எந்த திட்டத்தையும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த
திட்டம் எனக் கூறி எந்த கருத்துக் கேட்பும் சூழலியல் மதிப்பீடும்
செய்யாமல் அமல்படுத்தலாம். இது ஒரு ஆபத்தான விஷயம்.

உதாரணமாக சொல்ல வேண்டுமானால் –

நம் இருப்பிடத்திற்கு அருகேயே ஒரு உரத்தொழிற்சாலை
அல்லது நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருட்களை
பயன்படுத்தும் தொழிற்சாலையை துவங்க ஒரு திட்டம்
கொண்டு வரப்படுகிறது என்றால், தற்போது –
அது குறித்து முதலில் மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும்.
அதன் பின்பே அந்த திட்டத்தை அமல்படுத்த முடியும்.

புதிய சட்டம் அமலுக்கு வந்தால், நாளையே, இதனையே
தேசிய முக்கியத்தவம் வாய்ந்த திட்டம். தேசிய நலனுக்கானது
என அறிவிக்கப்பட்டு, எந்த சூழலியல் மதிப்பீடும் இல்லாமல்
இதை அமல்படுத்த முடியும்.

எதிர்காலத்தில் மக்கள் கருத்துக் கேட்பே வேண்டாம் என்பது
நிச்சயமாக ஜனநாயகத்திற்கு விரோதமான ஒரு நோக்கு.

அதேபோல, தொழிற்சாலைகள் குறித்த பொது கருத்துக்கேட்பு
செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, பொதுமக்கள்
பங்கேற்புக்கு ஒதுக்கப்பட்ட கால அவகாசமும் 30 நாட்களிலிருந்து
20 நாட்களாகக் குறைக்கப்படுகிறது….

அடுத்துள்ள குறைபாடு மிகவும் அபாயகரமானது….

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமலே
ஒரு திட்டத்தைத் தொடங்கவும்,

ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை
விரிவாக்கம் செய்யவும்

– இந்த வரைவு வழி வகை செய்கிறது.

இத்தகைய திட்டங்கள் குறித்து,
அவை செயல்படத்துவங்கிய பிறகு …( ??? )
ஒரு குழு போடப்பட்டு அவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை
எடுக்கப்படும் என்று வரைவு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு யாரால் அதனை
முடக்க முடியும்…? சம்பந்தப்பட்ட நிறுவனமும் சரி,
அரசாங்கமும் சரி – துவக்கப்பட்டு விட்ட வேலையை
நியாயப்படுத்த தானே முயல்வார்கள்…?
நிறுத்துவதற்கு அவர்களே எப்படி ஒப்புக்கொள்வார்கள்…?

மேலும் –

– தொழிற்சாலைகள் ஆண்டுக்கு இரண்டு முறை
செயல்பாடுகள் குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்
என்ற விதிமுறையை மாற்றி –

– வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தாக்கல் செய்தால் போதும்
என புதிய வரைவில் கூறப்பட்டுள்ளது. இதுவும் ஆபத்தானது.

இது சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் மீது
ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் விளைவுகள் குறித்த தகவல்களை
தெரிந்து கொள்வதை மட்டுப்படுத்தும்..

ஆபத்துகள் நிகழ்வதை உடனுக்குடன்
தெரிந்துகொள்வதை இந்தப்பிரிவு தடுக்கிறது.

இந்த அறிவிப்பு தொழிற்சாலைகளின் சட்டவிரோதமான
செயல்பாடுகளை சட்டப்பூர்வமாக்குவது போலத்தானே
இருக்கிறது….?

குறிப்பாக இன்னொரு மோசமான விதி –

சூழலுக்கு ஊறு விளைவிக்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து,
தனிப்பட்ட நபர்களும், சில அமைப்புகளும் தற்போது
நீதிமன்றங்களுக்குச் செல்கின்றன அல்லவா.
அதனைத் தடை செய்கிறது இந்த வரைவு.

ஒரு நிறுவனத்தை எதிர்த்து தனி நபர்களோ,
குடிமக்கள் சமூகமோ, இனி நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியாது.
அரசு அமைப்புகள் மட்டுமே செல்ல முடியும் என்கிறது
இந்த வரைவு.

இனி, மக்களுக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமானால்,
சம்பந்தப்பட்ட மக்களால் கூட நீதிமன்றங்களை
அணுக முடியாது என்று இந்த புதிய சட்டம் தடுக்கிறது.

பல புதிய திட்டங்களை கொண்டு வர
சுற்றுச்சூழல் விதிகள் தடையாக இருக்கின்றன
என்பதற்காக, இப்படி அபாயகரமான ஒரு
சட்டவடிவை கொண்டு வருவது –

சுற்றுச் சூழல் விதிகளே ஒரு தேவையற்ற சுமை என்று
அரசு நினைப்பது போன்ற தோற்றத்தையே உண்டுபண்ணுகிறது.

தேவையற்ற விதிகளை மட்டும் களைவதற்கு பதிலாக,
அடிப்படையிலேயே மாற்றம் செய்வது –

மக்களின் சுகாதாரம் மற்றும் அடிப்படை நலன்களை
ஒட்டுமொத்தமாக மறுப்பது போல் அமைந்திருக்கிறது.

கண்களை விற்று, சித்திரம் வாங்குவதால்
யாருக்கென்ன பயன்….?

பெரும் முதலாளிகளுக்காகவும்,
ஆபத்தான பொருட்களை தயாரிக்கக்கூடிய
பெரிய பெரிய நிறுவனங்களின் வசதிக்காகவுமே
இந்த சட்ட வடிவு வருகின்றது என்று
பொதுமக்களிடையே ஏற்பட்டிருக்கும் அச்சம்
நியாயமானதே….

ஆளும் கட்சியிடம் செல்வாக்குடைய –
பெரும் நிறுவனங்களும், தொழிலதிபர்களும்
தங்கள் சட்டவிரோதமான, ஆபத்தான தொழில்களை
துவங்கவும், தொடரவும் இந்த விதிகள் துணை போகின்றன
என்கிற அச்சம் நியாயமானது தானே…?

( எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் –
இவை நிகழக்கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
இங்கே அரசியலில் யார் யோக்கியர்…?
எந்த கட்சி யோக்கியமான கட்சி…? )

அரசாங்கம் இந்த அச்சத்தைப் போக்க
முன் வர வேண்டும்.

நியாயமான,
மக்களுக்கு பாதகமற்ற விதிகளை மட்டுமே –
புதிய சட்ட வரைவில் கொண்டு வர வேண்டும்.

.
—————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to – எல்லாவற்றையுமா எதிர்க்கிறோம்….?

 1. jksmraja சொல்கிறார்:

  KM சார்

  இந்த EIA 2020 வரைவு அறிக்கை, பொதுவாக பார்க்கும்போது இந்திய முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துவது போல தோன்றும். ஆனால், இது தமிழ்நாட்டை மட்டும் குறிவைத்து தாக்கப்போகின்ற surgical strike என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் மட்டுமே உணர முடியும்.
  இந்தியா முழுவதும் அஹமதாபாத் – மும்பை புல்லட் ட்ரெயின் திடடத்தை தவிர வேறு எந்த மக்கள் விரோத சுற்று சூழலை பாதிக்கும் திடடமும் நிலுவையில் இல்லை. இந்த புல்லட் ட்ரெயின் திடடம் நடைமுறைக்கு வந்தால் கூட விவசாய நிலங்கள் பரப்பளவு மட்டுமே குறையும். சுற்றுசூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவது இல்லை.

  ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் சுற்று சூழலை பாதித்து தமிழ் நாட்டை பாலைவனம் ஆக்கும் கூடங்குளம் அணு உலை விரிவாக்கம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் , மேற்கு மலை தொடரை அழிக்கும் nutron துகள் திடடம், எட்டு வழி சாலை திடடம் மற்றும் முக்கியமாக வாழ்வாதாரத்தை பாதித்து மக்கள் வாழ தகுதி இல்லாத நஞ்சு நிலமாக மாற்றும் ஹைட்ரொ கார்பன் திடடம் போன்றவை மக்கள் எதிர்ப்பால் நிலுவையில் உள்ளது. இவை அனைத்தும் ஒரு வருடத்திற்குள் தொடங்கப்படும். மொத்தத்தில் தமிழ் நாடு ஐந்து வருடத்திற்குள் மக்கள் வசிக்க தகுதி இல்லாத பாலைவனமாக மாற்றப்படும். மற்ற மாநிலங்களில் அழிவு திடடம் வராமல் எல்லா கட்சிகளும் ஓன்று பட்டு பார்த்துக்கொள்ளும். தமிழ் நாட்டின் சாபக்கேடு, அந்த பாக்கியம் நமக்கு இல்லை. ஜெயலலிதா அம்மையாரின் மரணம் இயற்க்கை யானது தானா ? இப்பொழுது கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  தமிழ்நாடு மட்டுமல்ல – அஸ்ஸாம் போன்ற வடகிழக்கு
  மாகாணங்களிலும் எதிர்ப்பு உருவாகி வருகின்றது .

  மக்கள் கருத்து சொல்வதோ அல்லது எதிர்த்து
  வழக்கு போடுவதோ முடியாது .

  ஆளுங்கட்சிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது .
  அதனால் சட்டம் நிறைவேற்ற முடியும் .

 3. புதியவன் சொல்கிறார்:

  //பெரும் முதலாளிகளுக்காகவும், ஆபத்தான பொருட்களை தயாரிக்கக்கூடிய
  பெரிய பெரிய நிறுவனங்களின் வசதிக்காகவுமே இந்த சட்ட வடிவு வருகின்றது என்று பொதுமக்களிடையே ஏற்பட்டிருக்கும் அச்சம் நியாயமானதே….

  ஆளும் கட்சியிடம் செல்வாக்குடைய – பெரும் நிறுவனங்களும், தொழிலதிபர்களும் தங்கள் சட்டவிரோதமான, ஆபத்தான தொழில்களை
  துவங்கவும், தொடரவும் இந்த விதிகள் துணை போகின்றன என்கிற அச்சம் நியாயமானது தானே…?//

  நியாயமானதுதான். இந்த வரைவுத் திட்டம் ஏதோ ஒரு திட்டத்தோடுதான் கொண்டுவரப்பட்டுள்ளது. பாஜக, பெரும்பான்மை இருப்பதால் இத்தகைய சட்டங்களை நிறைவேற்றினாலும், அது விவாதத்துக்கு வரும்போது, தமிழக எம்.பிக்கள் ஒட்டுமொத்த எதிர்ப்புக்குரல் தெரிவிக்கவேண்டும். நம் நாட்டிற்கு ஏன் ‘அதிபர்’ முறைத் தேர்தல் சரிப்பட்டு வராது என்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். நேரடியாக, உணர்வு பூர்வமாக மக்கள் ஆதரவு பெற்று அதிபராகிவிட்டால் அது சர்வாதிகாரத்துக்குத்தான் இட்டுச் செல்லும். பாஜக செய்ய முனைவது, 10% நாட்டிற்கு நன்மை பயத்தாலும் (எதற்கெடுத்தாலும் அரசியல் செய்து எல்லாத் திட்டங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் கட்சிகள், மக்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தும் கட்சிகள்), 90% ஆபத்தானது.

  நம் அரசியலின் பிரச்சனை என்னவென்றால், இந்தச் சட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கும் கட்சி(கள்), நாளை ஆட்சிக்கு வந்தால், தங்களுக்கு வசதியான இந்தச் சட்டத்தை அப்படியே விட்டுவைத்துவிடுவார்களே தவிர, வாபஸ் வாங்க மாட்டார்கள்.

  பாஜக செய்ய முயல்வது தவறு. கண்டிப்பாக நாம் எதிர்க்கவேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.