ஏ.ஆர்.ரெஹமான் சொன்னதற்கு – கவிஞர் வாலியின் வெகு சுவாரஸ்யமான விளக்கம்… “நிஷ்காம்ய கர்மா” –

….
….

கவிஞர் வாலி அவர்கள் விகடனில்
எழுதிய ஒரு கட்டுரையில் “நிஷ்காம்ய கர்மா” விற்கான
மிக சுவாரஸ்யமான நடைமுறை விளக்கங்களை
தந்திருக்கிறார்…

முதலில் வாலி அவர்களின் கட்டுரையும்
பின்னர் வேறு சிலவும்….

——————————————————————-

‘கடவுள் இல்லை;
கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை!’

-சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் இந்தப் பாட்டு!
எழுதியது நான்; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது திரு.
டி.எம்.எஸ்.

நாங்கள் மூவரும் அக்மார்க் ஆத்திகர்கள்.

பிரபு நடித்து – இந்தப் பாட்டு, தி.நகர் பஸ் நிலையம் அருகே
இருக்கும் பெரியார் சிலையைச் சுற்றிப் படமாக்கப்பட்டது,
டைரக்டர் திரு.யோகானந்தால்!

கடுமையான கடவுள் நம்பிக்கை உடைய நானும், எம்.எஸ்.வி-யும்;
டி.எம்.எஸ்-ஸும் இந்தப் பாடலை – நூறு விழுக்காடு ஈடுபாட்டோடு
உருவாக்கினோம்.

இதற்குப் பெயர்தான் ‘நிஷ்காம்ய கர்மம்’. விருப்பு வெறுப்பின்றி –
நமக்கிட்ட பணியைச் செவ்வனே செய்வது தான், ‘நிஷ்காம்ய கர்மம்’.

‘காலையில் தினமும்

கண் விழித்தால் நான்

கைதொழும் தெய்வம் அம்மா!’

– ‘நியூ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நான் எழுதிய பாட்டு.

ஒலிப்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் –

“வாலி சார்! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா
சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா
ஏதாவது சொல்லுங்க சார்!” என்று ரஹ்மானிடமிருந்து ஃபோன்
வந்தது.

“ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு…

சரி… சரி… தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ!”
என்று மாற்றிக் கொடுத்தேன்.

பரத்பூஷண், மீனாகுமாரி நடித்த படம் ‘பாய்ஜூபாவ்ரா’!
ஓர் இந்துக் கவிஞனைப்பற்றியது.

அதில் ‘ஓ! பகவான்!’ என்று இந்துக் கடவுளை விளித்து –
தர்பாரி கானடாவில் ஓர் அற்புதமான பாட்டு!

இசையமைத்தவர் திரு.நவுஷத் அலி; இசுலாமிய
நோன்புகளிலிருந்து இம்மியளவும் விலகாதவர்.

இந்தப் பாடலைப் பாடியவர் உலகு புகழ் உஸ்தாத்
திரு. படேகுலாம் அலிகான் அவர்கள். மூன்று காலங்கள்
அநாயாசமாக சஞ்சாரம் செய்யவல்ல சாரீரம்!
(படேகுலாம் அலிகான் அவர்கள் இந்தப்பாடலை
மேடையில் பாடுவது உண்டு; ஆனால், திரைப்படத்தில்
இதைப்பாடியவர் மொஹம்மது ரஃபி அவர்கள்…)

நம்ம ஊர் திரு. ஜி.என்.பி-யே – படேகுலாம் அலிகான்
கச்சேரியை, மியூசிக் அகாடமியில் கேட்டுவிட்டு – அவர்
பாதங்களில் விழுந்து பரவியவர்.

திரு. நவுஷத் அலிக்கும், படேகுலாம் அலிகானுக்கும்
சமயப்பற்று இல்லையா? ஆயினும் அவர்கள் கடைப்பிடித்தது
– ‘நிஷ்காம்ய கர்மம்’; இந்தப் பாட்டோடு அவர்களுக்கு இருந்த
சம்பந்தம், படத்தளவே!

திரு.பாலுமகேந்திரா இயக்கிய படம் – ‘ராமன் அப்துல்லா’.
இந்தப் படத்தில் திரு. இளையராஜா இசையில், நான் ஒரு
பாட்டு எழுதினேன்.

‘ஆண்டவன் எந்த மதம்?

இந்துவா? இசுலாமா? கிறித்துவமா?’

– என்று வரும் இந்தப் பாட்டை – முழுமுதற் கடவுளாக
அல்லாவையே முப்பொழுதும் கருதி – அஞ்சு வேளை தொழுகை
புரியும், திரு. நாகூர் அனிபா அவர்கள் பாடினார்கள்.

பாடல் வரிகளைப் பார்த்து, அவர் மறுக்கவில்லை; அற்புதமாகப்
பாடினார், தானொரு தாமரை இலைத் தண்ணீராக இருந்து!
இதுதான் ‘நிஷ்காம்ய கர்மம்’!

கும்பகோணம் திரு. ஏ.டி.சுல்தான் அவர்கள் அற்றை நாளில்
ஓர் அருமையான கர்னாடக சங்கீத வித்வான்!

தியாகராஜரையும், தீட்சிதரையும் – அவர் பாடி
நான் கேட்டிருக்கிறேன்!

கடையநல்லூர் திரு. மஸ்ஜீத் அவர்கள் முருகன் பாடல்களைப்
பாடி – ஒலிப்பதிவு நாடாக்கள் வந்திருக்கின்றன!

மகாபாரதத்தில் ஒரு கதை. ஒரு மகா முனிவன், தருக்கும்
செருக்கும் ஏறி நிற்பவன்-

ஒரு குடும்பப் பெண்ணிடம் குட்டுப்படுகிறான். அவள், எங்கோ
இவன் ஒரு கொக்கைக் கொன்றதைப் பேசுகிறாள்.

‘தருமம் யாதென முழுமையாய்த் தான் அறியவில்லை’ என்று
அந்த முனிவன் ஒப்புக்கொண்டு –
அதைத் தனக்குக் கற்பிக்கும்படி அந்தப் பெண்ணை
வேண்டுகிறான்.

அவள் – ஒருவன் பெயரைக் குறிப்பிட்டு, அங்கு போய் அவனிடம்
அறத்தை அறிந்துகொள் என்கிறாள்.

அந்தப் பெண் குறிப்பிட்ட தர்மிஷ்டனின் பெயர் ‘தரும வியாதன்’;
அவனிடம் முனிவன் சென்று, தனக்கு தர்மத்தை உபதேசிக்க
வேண்டுகிறான்.

‘இரு; என் வேலையைச் செய்துவிட்டு வருகிறேன்!’ என்று
அவன் ஆட்டை வெட்டுகிறான்; ஆம்! அவன் கசாப்புக் கடை
வைத்திருப்பவன்!

வேதபாராயணங்கள்; ஹோமங்கள்; ஆகியவற்றின் முடிவில்
இந்துக்களால் உச்சரிக்கப்படுவது – ‘ஓம்! சாந்தி! ஓம்!’

இந்தப் பெயரில் வந்து பெரும் வெற்றி பெற்ற படத்தின்
கதாநாயகன் – ஷாரூக் கான்; இயக்குநர் புகழ்வாய்ந்த
CHOREOGRAPHER ஆன, ஒரு முஸ்லீம் பெண்மணி!

B.R.சோப்ராவின் புகழ்வாய்ந்த ‘மகாபாரதம்’ டி.வி. சீரியலுக்கு
உரையாடல்கள் எழுதியவர் – மகா மேதையான ஓர்
உருதுக் கவிஞர்!

சுருக்கமாக நான் சொல்ல வருவது என்னவென்றால்…

படங்களில் பாட்டுகள், வசனங்கள் எழுதப்படுவதெல்லாம் –
கதைகளில்
காணுகின்ற
சமயத்துக் கேற்றபடி;

– சமயத்துக் கேற்றபடி அல்ல!

நன்றி: விகடன்

வாலி அவர்களின் விளக்கம் இதோடு முடிந்தது.
————————————————————-

நிஷ்காம்ய கர்மா பற்றி ரமண மகரிஷி தனது செயல் மூலம்
இதை அழகாக விளக்குகிறார்.

….

….

முன்பொரு சமயம், ரங்காச்சாரி என்ற பெயர் கொண்ட
தெலுங்கு பண்டிதர் ஒருவர் ரமண மகரிஷியிடம்
‘நிஷ்காம்ய கர்மம்’ பற்றி கேட்டார்.
ரமணரிடம் இருந்து பதிலே இல்லை. சிறிது நேரத்திற்கு
பின்னால், ஒரு குன்றின் மேல் ஏறி நடக்கலானார்.
கேள்வி கேட்ட பண்டிதரும் இன்னும் சிலரும், ரமணரை
தொடர்ந்து நடக்கலானர்.

கீழே தரையில் இருந்த ஒரு முட்கள் நிறைந்த குச்சியை
கையில் எடுத்தார் ரமணர். பின்னர் ஓரிடத்தில் அமர்ந்து
கொண்டு மெதுவாக, அந்த குச்சியில் இருந்த முட்களை
நீக்கலானார்..!.

அந்த குச்சியின் முடிச்சுகளை நேராக்கினார். பின்னர் ஒரு
தடினமான இலையைக் கொண்டு, அந்த குச்சியை
வழவழப்பானதாக மாற்றினார். சுற்றி இருந்தவர்கள் இவர்
என்ன செய்கிறார் என்று வியந்து கொண்டு இருந்தார்கள் !

சற்று நேரத்தில் பக்கத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு
ஒரு சிறுவன் அந்தப் பக்கம் வர எல்லோரும் ஒதுங்கி
ஆடுகளுக்கு வழி விட்டனர். அந்த சிறுவன் கையில் குச்சி
இல்லாமல், ஆடுகளை வழிப்படுத்த சிரமப்பட்டுக் கொண்டு
இருந்தான்!

இதைப் பார்த்த உடனே ரமணர், தன் கையில் இருந்த
புதுக் குச்சியை, அந்த சிறுவனுக்கு கொடுத்து விட்டு
அங்கிருந்து நகர்ந்தார் ரமணர்!.

ரமணரிடம் கேள்வியெழுப்பிய பண்டிதருக்கு –
இதைப்பார்த்த பின்னை வேறு விளக்கம் ஏதும்
தேவைப்படவில்லை.

———————————————————

பின் குறிப்பு – வாலி அவர்கள் இந்த கட்டுரையில்
குறிப்பிடும் “பாய்ஜு பாவ்ரா” பாடல் பற்றி நான்
ஏற்கெனவே விமரிசனம் வலைத்தளத்தில் என் விருப்பம்
பகுதியில் எழுதியிருக்கிறேன்.

அற்புதமான அந்தப்பாடலை மாலையில்
அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.

.
——————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஏ.ஆர்.ரெஹமான் சொன்னதற்கு – கவிஞர் வாலியின் வெகு சுவாரஸ்யமான விளக்கம்… “நிஷ்காம்ய கர்மா” –

 1. R.Gopalakrishnan சொல்கிறார்:

  kokkendru ninaithayo konganava?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   R.Gopalakrishnan,

   ஆமாம். வாலி சொல்வது அதே
   கொங்கண முனிவர் கதை தான்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  சில நாட்களுக்கு முன்பு ரஹ்மான் ஏதோ சொல்ல போக அது குறித்து பேஸ்புக்கில் சிலர் ரஹ்மான் மதபற்றுக்கொண்டு சில நபர்களை அவர்கள் பூசியிருந்தா விபூதியை அழித்து விட்டு வருமாறு சொன்னாதாக படித்தேன் அதை படிக்கும் போது, கொஞ்சம் சந்தேகம் இருந்தது ஆனால் அந்த சந்தேகம் உண்மையாக இருப்பதற்கான ஆதாரத்தை வாலி சொல்லியிருக்கிறார், ஆம் இந்த வரிகள்

  //“வாலி சார்! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா
  சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா
  ஏதாவது சொல்லுங்க சார்!” என்று ரஹ்மானிடமிருந்து ஃபோன்
  வந்தது.

  “ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு…

  சரி… சரி… தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ!”
  என்று மாற்றிக் கொடுத்தேன்.//

  உண்மையில் இந்த படத்திற்கு சம்பளம் வாங்கி கொண்டு பணி செய்யும் போது ரஹ்மான் இப்படி சொல்லி மாற்ற சொல்வதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லாதவர். ஒரு வேளை இவரின் இந்த அதீத மனப்பற்று கூட பாலிவுட்காரர்களுக்கு மிகை படுத்தலாக இருந்திருக்கலாம்.

  இதை போலவே ஒரு முறை பொதுவெளியில் ஒரு நிருபர் இப்பொழுது வரும் பாடல்கள் அதிக இசையோடு வார்த்தைகள் புரியாமால் இருக்கிறதே பழைய பாடல்கள் மிக மென்மையாக இருக்கும் அதில் இசையும் இருக்கும் என சொல்லும் போது ரஹ்மான் சொல்கிறார் நல்ல தரமான மியூசிக் சிஸ்டம் வச்சு பாட்டு கேட்டா நல்லா இருக்குமென்று சொன்னார், என்ன மனிதர் இப்படி பதில் சொல்கிறாரே என.

  • natchander சொல்கிறார்:

   A R RAHMAN HAD NEVER REVEALED HIS GURU BHAKTHI
   TO ILAYARAJA,,, !!
   OBVIOUSLY A R RAHMAN IS THOROUGHLY IGNORED,, IN INDUAN FILM MUSIC FIELD !!!! NOWADAYS !!
   SIMPLE BRO !!!
   HA HA HA !

  • புதியவன் சொல்கிறார்:

   நானும் வருத்தத்துடன் படித்தேன். ஒரு கவிஞரிடம், விபூதி இல்லாமல் வந்தால் பாடல் எழுத வாய்ப்புகள் தருகிறேன் என்று சொன்னதாகவும், அப்படி வரத் தயாரில்லை என்பதால் பாடல் எழுதும் வாய்ப்பை ஏற்கவில்லை என்றும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.