விக்கிரக வழிபாடு தேவையா…? ஏன்…? கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – ( 7 )

….
….

….

எல்லையில்லாத அந்த பிரபஞ்ச சக்தியுடன் –
தொடர்பு கொள்ள முடியுமா…? எப்படி…?

– என்கிற கேள்வியுடன் கடந்த பகுதியை
முடித்திருந்தோம்.

மூன்றாம் விழியின் பயன் என்ன…?
பிறருடைய எண்ணங்களுடன் தொடர்பு கொள்ள
ஒருமித்த எண்ணங்களின் சக்தி தேவைப்படுகிறது /
பயன்படுகிறது என்று கடந்த பகுதியில் பார்த்தோம்.

இந்த மூன்றாம் விழியின் மூலம் – அதாவது ஒருமித்த
எண்ணங்களின் சக்தி மூலம் எல்லையில்லாத பிரபஞ்ச
சக்தியுடன் தொடர்பு கொள்ள முடியுமா…?

அந்த பிரபஞ்ச சக்தியின் மூன்றாம் விழி எங்கிருக்கிறது
என்று நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தால்
மட்டும் தான் இது சாத்தியமாகும்.

அது தெரியாத நிலையில், அந்த பிரபஞ்ச சக்தியை
எதாவது ஒரு உருவகத்தில் கற்பனையாக நிறுத்தி
அல்லது தொடர்பு படுத்தி தான் –
நாம் அதனுடன் தொடர்பு கொள்ள முடியும்… அல்லவா…?

நாம் உருவத்துடன் இருக்கும் வரையில் –
உருவமே இல்லாத ஒன்றை நம்மால் நினைவில்
நிறுத்திக் கொள்வது இயலாத காரியம் என்பதால் –

நாம் நமது எண்ணங்களை ஒருமுனைப்படுத்தி செலுத்த,
எதாவது ஒரு உருவகம் தேவைப்படுகிறது.

துவக்கத்திலிருந்தே “விக்கிரகங்கள்” மனிதருக்கு
தேவைப்பட்டது – இதன் பொருட்டு தான்.

ஆனால், அது விக்கிரகமாகத்தான் இருக்க வேண்டும்
என்பதும் அவசியம் இல்லை;

உருவங்களை கொண்டாடாத பிரிவினரும் இருக்கிறார்கள்.
இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ, பவுத்தர்களோ –

தங்களுக்குப் பிடித்த, தாங்கள் வணங்கும் வேறு எதாவது
ஒரு வடிவத்தை நினைவில் நிறுத்திக் கொள்ளலாம்.

இஸ்லாமியர்கள் உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும்,
எப்போதும், காபா’வை நோக்கி அமர்ந்தே –
தொழுகை நடத்துவதன் பொருள் என்ன என்று யோசித்தால்
ஓரளவு இது புரியக்கூடும்.

பவுத்தர்கள் புத்தர் சிலையையும்,
கிறிஸ்தவர்கள் சிலுவையையும் கூட நினைக்கலாம்.

எல்லையற்ற நிரந்தரத்திற்குள் நேரடியாக
நமது நினைப்பை நிலை நிறுத்துவது லட்சத்தில் ஒருவருக்கு,
அல்லது கோடியில் ஒருவருக்கு –
அபூர்வமாக சில ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியமாகலாம்.
அவர்களுக்கு நேரடியாகவே பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு
ஏற்பட்டு விடுகிறது…. அதனால் தான் நாம் அவர்களை
ஞானிகள் என்று கொண்டாடுகிறோம்..

மற்ற சாதாரண மனிதர்களுக்கு – எதாவதொரு
அடையாளச்சின்னம் அவசியப் படுகிறது.

அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
முருகனோ, ராமனோ, கிருஷ்ணனோ, சிவனோ, புத்தனோ,
ஏசுவோ, காபாவோ -எதுவாக வேண்டுமானாலும்….!!!

ஆனால், இந்த அடையாளங்களுடன் நாம் ஐக்கியப்படும்போது,
அந்த அடையாளங்கள் எதை பிரதிபலிக்கின்றன என்பதை
மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரபஞ்ச சக்தியை
நமக்கு அடையாளம் காட்டும் பொருட்கள் மட்டுமே அவை
என்பதை நாம் மனப்பூர்வமாக உணர வேண்டும்.

நான் எல்லா மதத்தினருக்கும் பொதுவாக இந்த தத்துவத்தை
அணுகுவதால், அந்த சக்தியை “பிரபஞ்ச சக்தி” என்று
அழைக்கிறேன்… அந்த சக்தியை படைத்தவர் என்றோ
கடவுள் என்றோ இறைவன் என்றோ கூட அழைக்கலாம்.

பிரபஞ்ச சக்தி என்கிற ஒரு உயர்நிலையை
சென்றடைவதற்கான ஒரு வழி மட்டுமே விக்கிரகம்
என்கிற அடையாளம் என்கிற –

இந்த உண்மையை, மறந்து விட்டு,
விக்கிரகத்திலேயே ஆழ்ந்து விட்டோமேயானால்,
விக்கிரத்துடனேயே ஐக்கியப்பட்டு விட்டோமேயானால் –

அதற்கு மேலான வளர்ச்சியை நம்மால் பெற முடியாது;
பிரபஞ்ச சக்தியை உணரவோ, அடையவோ முடியாது.

எனவே விக்கிரகம் என்பது பிரபஞ்ச சக்தியை,
மூலத்தை அடைய உதவும் ஒரு சாதனமாகவே
ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதுவே மூலம் அல்ல என்பதை நினைவில்
நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஆனால், இந்த புரிதல் இல்லாமலே தான் பலரும்,
விக்கிரகங்களை வழிபடுபவர்களில் பெரும்பாலானோர் –
அதற்கு அடுத்த நிலையைப்பற்றிய சிந்தனையே இன்றி,
அதற்கான முயற்சிகளும் ஏதுமின்றி,

பூஜை, பஜனை, ஆராதனை என்று முதல் படியிலேயே
நின்று விடுகிறார்கள்.

பலருக்கு இந்த நிலையிலேயே நிம்மதியும், சந்தோஷமும்
கிடைத்து விடுகிறது என்பதும் நிஜமே. அவர்களுக்கு
வேண்டிய சந்தோஷமும், திருப்தியும் இந்த நிலையில்
கிடைத்து விடுவதால், அடுத்த நிலையைப்பற்றி
யோசிக்க அவர்கள் விரும்புவதில்லை.
இதை ஒரு பெரிய குறையாக எடுத்துக்கொள்ள முடியாது.

இதற்கு மேலும் தொடர வேண்டும் என்கிற “தேடுதல்”
வேட்கை இருப்பவர்கள் தான் இதற்கு அப்பால் என்ன
என்று யோசிக்கிறார்கள்.

ஆனால், விக்கிரக வழிபாடு என்பது ஒட்டுமொத்தமான
உள்மாற்றத்திற்கு உதவும் ஒரு வழிமுறை என்பதை
அத்தகையோர் கூட உணர வேண்டும்.

மனதை ஒருவழிப்படுத்த, நிலைப்படுத்த, மனோசக்தியை
திரட்ட – விக்கிரக வழிபாடு ஒரு துவக்க நிலையாக
இருக்க வேண்டும்.

இதை விளக்க – திருமூலரின் ஒரு வாக்கு உதவும் –

” மரத்தை மறைத்தது மாமத யானை –
மரத்தில் மறைந்தது மாமத யானை”

இதை காஞ்சி பெரியவர் மிக எளிதான ஒரு உதாரணத்தின்
மூலம் விளக்குகிறார் – அவரது வார்த்தைகளிலேயே –

————————

ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன்.
அதைப் பரீட்சிப்பதற்காக இன்னொரு தச்சன் போனான்.
அவனோடு அவனுடைய குழந்தையும் போயிற்று.

மர யானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது.
மர யானையைப் பரீட்சிப்பதற்காக அதன் அப்பாவான தச்சன்
நெருங்கியபோது அந்த குழந்தை, “அப்பா! யானை கிட்டப்
போகாதே அது முட்டும்” என்று கத்தியது. தச்சன் குழந்தையிடம்,
“இது மரப் பொம்மைதான்; முட்டாது” என்று சொல்லிச்
சமாதானம் செய்து அதையும் யானைக்குப் பக்கத்தில்
அழைத்துப் போனான்.

குழந்தைக்கு அந்த வாகனம் அசல் யானையாகவே இருந்தது.
அதுமரம் என்கிற ஞானத்தைக் குழந்தையிடமிருந்து மறைத்தது,
அது யானையாக்கும் என்கிற நினைப்பு.

அதே சமயத்தில், அது தத்ரூபம் யானை மாதிரி இருந்தும் கூட,
தச்சன் பயப்படாததற்குக் காரணம், அதன் யானைத் தன்மை
அவனைப் பொறுத்தமட்டில் மறைந்து அது மரம்தான்
என்கிற அறிவு இருந்ததேயாகும்.

———-

அதைப்போல், பரம்பொருள், பிரபஞ்ச சக்தி வேறு,
இந்த விக்கிரகம் வேறு; இது ஒரு சாதனம் அவ்வளவே.
அதை நினைவுறுத்தவே இது –

என்பதை நினைவில் வைத்து அடுத்த நிலைக்கு உயர
முயற்சிக்க வேண்டும்.

இடைவிடாத முயற்சியும், மனதை ஒருங்கிணைப்பதில்,
எண்ணங்களை ஒரு இடத்தில் குவிப்பதில் பயிற்சியும்
பெற்றால் தான் அடுத்த நிலைக்கு நகர முடியும்.

எல்லா உயிர்களிடத்தும் அன்பும், கருணையும்,
அமைதியும், பேரானந்தமும் அடையப்பெறுவதே –
அந்த பிரபஞ்ச சக்தியை உணர்பவர்கள் பெறக்கூடியது.

அந்த நிலையை அடைவதற்கு விக்கிரகங்கள்
உதவும் என்பதால், உணர்வுடன் கூடிய விக்கிரக வழிபாடு
தேவை தான்…

————-

இந்த தலைப்பிற்கு இது போதுமான விளக்கம் அல்ல.
இது குறித்து மீண்டும் வேறொரு சமயத்தில் இன்னும்
விளக்கமாகப் பேசலாம்… இது அதற்கான அடித்தளமாக
இருக்கட்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக யோசிப்போம்.

——————

பின் குறிப்பு – இதை எழுதுவதுடன் என் கடமை
முடிந்து விட்டதாகவோ, இதைப்படித்தவுடன்,
உங்கள் ஆர்வம் தீர்ந்து விடும் என்றோ – நான்
நினைக்கவில்லை. இதைக் குறித்த கருத்து பரிமாற்றங்கள்
நமக்குள் இருக்க வேண்டும்…

இன்னும் விசாலமான எண்ணங்கள்
தோன்ற அது தான் உதவும்.

எனவே, நண்பர்களே, உங்கள் கருத்துகளையும்,
அனுபவங்களையும் இங்கே பரிமாறிக்கொள்ளுங்கள் –
என அழைக்கிறேன்.

….


….

.
———————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to விக்கிரக வழிபாடு தேவையா…? ஏன்…? கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – ( 7 )

 1. M.Subramanian சொல்கிறார்:

  // பூஜை, பஜனை, ஆராதனை என்று முதல் படியிலேயே
  நின்று விடுகிறார்கள்.

  பலருக்கு இந்த நிலையிலேயே நிம்மதியும், சந்தோஷமும்
  கிடைத்து விடுகிறது என்பதும் நிஜமே. அவர்களுக்கு
  வேண்டிய சந்தோஷமும், திருப்தியும் இந்த நிலையில்
  கிடைத்து விடுவதால், அடுத்த நிலையைப்பற்றி
  யோசிக்க அவர்கள் விரும்புவதில்லை.
  இதை ஒரு பெரிய குறையாக எடுத்துக்கொள்ள முடியாது.

  இதற்கு மேலும் தொடர வேண்டும் என்கிற “தேடுதல்”
  வேட்கை இருப்பவர்கள் தான் இதற்கு அப்பால் என்ன
  என்று யோசிக்கிறார்கள். //

  இது தான் நடைமுறை சாத்தியமாக இருக்கிறது.

  ஓடிக்கொண்டே இருக்கும் வயதில் இதற்கு மேல்
  எல்லாம் தேடவோ, யோசிக்கவோ தோன்றுவதில்லை.
  50-60 வயதைக் கடக்கும்போது தான்
  அடுத்த நிலையைப்பற்றி யோசிக்கத் தோன்றுகிறது.
  பொதுவாகவே மனிதர்களின் மனோபாவம்
  இப்படித்தான் என்று நினைக்கிறேன்.

  மனிதரின் வாழ்க்கையில் படிப்பது, வேலை தேடுவது,
  உழைப்பது, சம்பாதிப்பது, திருமண வாழ்க்கையில்
  ஈடுபடுவது, பிள்ளைகளை படிக்க வைத்து
  செட்டிலாக உதவுவது என்று ஒவ்வொன்றுக்கும்
  ஒவ்வொரு நிலை இருப்பது போல்,
  ” இதற்கு மேல் என்ன ” என்று தேடுவதற்கும்
  ஒரு வயது நிலை இருக்கிறது என்றே நினைக்கிறேன்.
  நானறிந்த வரையில் பெரும்பாலானோர்
  இப்படித்தான் இருக்கிறார்கள்.

 2. Pingback: விக்கிரக வழிபாடு தேவையா…? ஏன்…? கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – ( 7 ) — வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் R

 3. Pingback: விக்கிரக வழிபாடு தேவையா…? ஏன்…? கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – ( 7 ) — வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் | Mo

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.