சிசிலியன் டிபன்ஸ் … (Sicilian Defense) ….!!!

….
….

….

எதற்காகவோ யாருக்காகவோ என்றோ நடப்பது
இன்றும் நமக்கே பொருந்துமாம்..

வினை – பைபிளில் சொன்ன கதைகளை வைத்து
ஆயிரம் கதைகள் எழுதலாம் என்று 57 ஆம் பக்கத்தில்
குறிப்பு எழுதிக் கொள்கிறேன்.

நான் கிருத்துவன் எல்லாம் இல்லை. கும்பகோணம்
ப்ரஹச்சரன குடும்பத்தில் பிறந்து விட்டு பைபிள் படிக்கிறேன்
என்று சொன்னால் அதற்குக் காரணம் இங்கு அமெரிக்காவில்
ஹோட்டல் ரூம்களில் வைத்திருக்கும் ஒரே புத்தகம் பைபிள்.

“ப்ளீஸ் பப்ளிக் இடமா இருக்கே … ப்ளீஸ்”

“என்ன மாமா அங்க எல்லாம் தொட்டுண்டு”

“ச்ச்சே . ஒரு வயசான லேடி கிட்ட இப்படி மிஸ்பிகேவ்
பண்ணி இருக்க”

“அத்தை … இனிமேல் அர்ஜுன
ஆத்துக்கு அனுப்ப வேண்டாம் … ”

இது தான் நான். இப்படித்தான் தான் என்னைப் பற்றி
எல்லாரும் சொல்வார்கள்.

அர்ஜுன். ஹார்ட்வேர் என்ஜினீயர், சான்டியாகோவின்
கடைசிப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சராசரியன்.
எனக்குப் புலப்படாத விஷயங்களில் ஒன்று எதிர்
அபார்ட்மெண்டில் இருக்கும் அவள் யார்?

தினமும் இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு வருகிறாள்,
குளிக்கிறாள், கதையே இங்கு தான் தொடக்கம்.
லேசாக french window நீக்கினால் வைகுண்டம் தெரிகிறது,
ஒரே ஒரு முறை அவளின் பின் பக்கத்தை பார்த்ததில்
அடுத்த நாள் அரை நாள் லீவ், நல்ல பளிங்கு போன்ற தேகம்,
நிறைய முடி. ஆனால் முகத்தை இன்னும் பார்த்த பாடில்லை.
பார்க்க வேண்டும், பார்க்கலாம் …

நான் இந்த ப்ராஜக்டிற்கு வந்து ஒரு வாரம் தான் ஆகிறது,
அதனால் தற்காலிகமாக Embassy suites ஹோட்டலில்
தங்க வைக்கப் பட்டுள்ளேன்.
சொல்லப் போனால் எனக்கு இந்த SanDiego நகரத்திற்கு வர
சுத்தமாக மனதில்லை, நான் San Francisco பேர்வழி, நிறைய
நண்பர்கள், நிறைய சாப்பாடு, கொஞ்சம் பெண்கள் என்று
என் சகல தேவைகளும் அங்கு பூர்த்தி ஆனது.

“இல்ல ஆர்னஸ்ட், எனக்கு சான்பிரான்சிஸ்கோவே
சவுகரியமா இருக்கு, நீங்க லோகேஷை அனுப்பலாமே”
“Come on அர்ஜுன், உங்களுக்கே தெரியும், இந்த ப்ராஜக்ட்
ஆரம்பத்துல இருந்து நீங்க தான் பாலோ அப் பண்றீங்க,
லோகேஷ் நல்ல worker தான், ஆனா கல்யாணமானவர்,
நீங்க தான் சிங்கிள், work hours Concern கிடையாது,

நீங்க SanDiego ப்ராஜெக்ட டேக் ஆப் மட்டும் பண்ணி விடுங்க,

இந்தியாவுல இருந்து மாலினி ரெண்டு வாரத்துல வராங்க,
அவங்கள வெச்சு கண்டின்யூ பண்ணிக்கலாம், நீங்க இங்க
திரும்பவும் வந்துரலாம் … ”

“ஆர்னஸ்ட் … ப்ளீஸ், இங்க எனக்கு நிறைய
கமிட்மன்ட்ட்ஸ் இருக்கு … ”
“ஸ்ரீ ஜா தானே … ” என்று கண்ணடித்தார்.

ஸ்ரீ ஜா நான் ஆறு மாதமாக ஆபிசில் சிலாகிக்கும் மயில்.
என் எல்லாரகசியங்களும் எதிர்பார்ப்புகளும் இந்த ஆர்னஸ்டிற்கு
தெரியும். ஆர்னஸ்ட் என் ப்ராஜக்ட் மானேஜர், வந்தவாசிக்காரர்.
“என்ன அர்ஜுன், ரெண்டு வாரம் தானே? மத்தபடி, அங்க
மெக்சிகோ எல்லைல செம குட்டிங்க நியாய விலைல
கிடைக்கும், க்யூல நின்னு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி
வாங்கி சாப்பிடுங்க”

வழக்கமான சால்ஜாப்புகள். இதோ மூன்று நாளாகிறது
சான் டியாகோ வந்து, நல்ல சாப்பாடு இல்லை. மற்றபடி இந்த
க்ளாஸ் முதுகு பெண்ணால் கண் பசி ஓரளவு நிறைகிறது,
நேற்று பார்த்து விட்டேன்,
இன்று இன்னமும் காத்துக் …
ஏதோ நிழல் அசைவது தெரிகிறது. அவள் தான். நான் என்
ரூமின் லைட் ஆப் செய்கிறேன், அங்கு போடப் படுகிறது,
ஒரே சுவிட்ச் கண்ட்ரோல் செய்கிறதோ என்ற வீண் சந்தேகம்.

ஹாலோஜன் விளக்கை அணைக்கிறாள்,
ஏசியை பத்து பாய்ண்ட் கூட்டுகிறாள், இங்கு சூடாகிறது.
அடுத்து துணி வைக்கும் ஹான்கருக்குச் செல்கிறாள்.
ஜெர்கினைக் கழட்டுகிறாள்”

“என்ன அர்ஜுன் சான் டியாகோ செட்டாயிடுச்சா?”
ஆனர்ஸ்ட் போனில் சிரித்தான்
“Kind of. But, சாப்பாடு அவ்வளவு நல்லா இல்லை, இங்கயும்
ஒரு கோமள விலாஸ் ரெஸ்டாரண்டும் கொஞ்சம் ஸ்ரீஜாவும்
இருந்தா நல்லா இருக்கும். மாலினி எப்போ வராங்க?”

” அவங்களுக்கு விசா கொஞ்சம் டிலே ஆகிருக்கு அர்ஜுன்.
Secondary processing. இன்னும் மூணு வாரதுக்குள்ள
வந்திருவாங்க. உங்க ஸ்ரீஜா எங்கயும் போய்ட போறதில்ல.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க”

சான் டியாகோ பிடிக்கவில்லை என்று சொன்னதில் முழு
உண்மை இல்லை. ஸ்ரீஜாவைத் திவிர யாரையும் சைட்
அடிக்க வேண்டாம் என்று தான் இருந்தேன், ஆனால் இந்த
எதிர் அபார்ட்மெண்ட் பெண் கொஞ்சம் அதிகமாகவே
வாட்டுகிறாள்.

பனியன் போட்டு விட்டு வெளியே வருகிறாள். தலையைத்
துவட்டுகிறாள், வாசனை இங்கு வரை வருகிறது.
கண்ணாடியைத் திறக்கிறாள், இன்னும் முகத்தைப்
பார்க்கவில்லை.

யாரையோ எதிர்பார்த்து வெளியே எட்டிப் பார்க்கிறாள்,
நானும் கொஞ்சம் குனிந்து எட்டிப் பார்க்கிறேன், யாரும்
வரவில்லை. திரும்பவும் ரூமுக்குள் போகிறாள், கதவைச்
சாத்துகிறாள், விளக்கை அணைக்கிறாள். இந்த கூத்து
இன்னும் எவ்வளவு நாளைக்கு.

மாலினிக்கு நான் work ட்ரான்ஸ்பர் செய்ய வேண்டுமாம்,
மாலினி கன்னடா ஐயங்கார் பெண் . இன்னும் மூன்று
வாரங்களில் அவள் வந்தவுடன், இந்த இம்சை பிடித்த
ஊரிலிருந்து கிளம்பி மறுபடியும் San Francisco செல்ல வேண்டும்

‘எதற்காகவோ யாருக்காகவோ என்றோ நடப்பது
இன்றும் நமக்கே பொருந்துமாம்.. வினை‘

நேற்று விட்ட இடத்தில் இருந்து படிக்கிறேன். முதல் நாள்
படித்த பொழுது இருந்த சுவாரஸ்யம் இன்று இல்லை.
இன்று பத்து நிமிடம் சீக்கிரமாகவே வந்திருக்கிறாள்,
கண்ணாடியைக் கழட்டுகிறாள்.
இந்தப் பெண்ணை தினமும் என் ஹோட்டல் அறையிலிருந்து
எட்டிப் பார்க்கிறேன். நான் இதுவரை ஒரு முறை கூட அவளிடம்

மாட்டியதில்லை. நான் இந்த விஷயங்களில் எல்லாம்
‘கில்லாடி’ என்று தற்பெருமை உணர்ச்சி வேறு.

ஹாலோஜன் விளக்கு. அவள் லிவிங் ரூமுக்குள்
நுழைகிறாள் … படபடக்கிறேன் …

இன்று அநேகமாக முகத்தைப் பார்த்து விடுவேன் என்றே
தோன்றுகிறது. முகம் பார்க்கும் கண்ணாடி முன் நிற்கிறாள்.
ஒரு வழியாக முகத்தைப் பார்த்து விட்டேன். மெக்சிகன் போல
இருக்கிறாள். திடீரென்று அவள் தன் அறைக் கண்ணாடி
வழியாக எதையோ உற்று நோக்கிப் பார்க் … ….
மேஜை மீதிருந்த லாப்டாப் ஆடுகிறது,
தலை சுற்றுகிறது … நில நடுக்கம் ….
பெரும் சத்தம் … கீழே ஓடுகிறேன்.

ஹோட்டலில் இருந்த எல்லாரும் கீழே ஒரு கூட்டமாய்ச்
சிதறி ஓடுகிறார்கள். மொத்த ஹோட்டல் கூட்டமும் வாசலில்.
தெய்வீகக் காட்சி சிதைந்து போன வருத்தம் தான்
பூகம்ப அதிர்ச்சியை விட அதிகம்.

அவளிருக்கும் அபார்ட்மென்ட் மக்களும் கீழே வந்திருந்தனர்.
நான் அவள் ரூமையே இங்கிருந்து பார்த்து கொண்டிருக்கும்
பொழுது …

“எக்சூய்ஸ் மீ” என்றாள். ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்ததை
விட அழகு தான்.
“எஸ் … ”
“ஐயம் ரஞ்சனி, மே ஐ ஹாவ் யுவர் நேம்?”
“அர் அர் … அர்ஜுன் ”
“இங்க இந்தியன்ஸ் அதிகம் இருக்கறதில்ல, நீங்க தான்
நான் பாக்கற முதல் இந்தியன்”
“நீங்க தான் நான் பாக்குற முதல் பெண்”
“மொக்கை . ” என்று சிரிக்கிறாள்.
“அப்போ நீங்க தமிழா?”
“ரஞ்சனின்னு லெபனான்ல பெரு வெச்சிக்கறதில்ல”
“மொக்கை”

“இங்க எல்லாம் இந்தியன்ஸ் ஒருத்தர் ஒருத்தர் பார்த்தா
காலங்கார்த்தால பெருங்காயம் சாப்பிட்ட மாதிரி
சுளிச்சுக்குவாங்க, நீங்க ரொம்ப வித்தியாசமா இருக்கீங்க?”
என்றேன்.

“யா … திடீர்னு பெரிய சத்தம். நான் டேபிளுல வெச்சிருந்த
என் Guitar ஆடிச்சு … பயந்து கீழ வந்துட்டேன் … அப்புறம்
தான் தெரிஞ்சது எர்த் குவேக்னு.
அப்போ தான் நீங்களும் பதறி அடிச்சு நீங்களும் கீழ
வந்தீங்க. நம்ம ஊரா இருக்கீங்க … அதான் பேச வந்தேன்”

பொய். அவள் அறையில் இருக்கும் எல்லாப் பொருட்களும்
எனக்கு அத்துபடி. என்னைக் கவர வேண்டும் என்பதற்காக
guitar என்று பொய் சொல்கிறாள் போல.
“ஐ தின்க் எல்லாரும் ரூமுக்கு திரும்பறாங்க. குட் நைட்”
ஹைக்கூ போல முடித்து விட்டு கிளம்புகிறாள்.

“மறுபடியும் நாம மீட் பண்ணனும் ”
“யா நிச்சயமா … நாளைக்கு லஞ்ச்”
மொபைல் நம்பர்கள் பரிமாறிக்கொள்கிறோம்,
கொஞ்சம் லேசான நட்பும்.
ரூமுக்குச் செல்கிறாள், விளக்கை அணைக்கிறாள்.
அடுத்த நாள் லஞ்சுக்கு வரவில்லை, call செய்தால் எடுக்கவும்
இல்லை. ஆனால் ரூமில் தான் இருக்கிறாள் என்று தெரிகிறது,
ஏன் வரவில்லை என்ற குழப்பம் தீர்ந்த பாடில்லை.

வாய்ஸ் மெயில் விடுகிறேன், இங்கிருத்து சைகை செய்தால்,
பொன் முத்து இடும் வாத்தை உடைத்தது போலாகிவிடும்,
டின்னருக்கும் கூப்பிட்டு பார்க்கிறேன். எடுக்கவில்லை.
மறுபடியும் பூகம்பம் வர வேண்டும் போல இருக்கிறது.
என் வாசலில் அழைப்பு மணி.

“ஹலோ” என்றேன் . அவள் தான்
“வாட் … Holy cow” என்று அதிர்ந்தாள்.
“உங்க நம்பர்க்கு ட்ரை பண்ணேன் … ஏன் எடுக்கல … ?
“என்ன சொல்லறீங்க நான் தான் இன்னைக்கு மத்தியானத்துல
இருந்து உங்களுக்கு கால் செய்றேன்”
“உங்களுக்காக காத்திருந்து காத்திருந்து வேற வழி இல்லாம்
Burger சாப்பிட்டு ஒப்பேத்தினேன்”

“ஐ ஆம் சாரி … But, நான் ட்ரை பண்ணேன் … உங்க மிஸ்ட்
கால் கொஞ்சம் பாக்க முடியுமா ப்ளீஸ்” என்று மிதம் மிஞ்சி
கொஞ்சுகிறாள்.

அவளிடமிருந்து எந்த மிஸ்ட் காலும், வாய்ஸ் மெயிலும்
வரவில்லை. “இல்லைங்க, உங்க கிட்ட இருந்து எந்த
மெஸேஜும் எதுவும் வரலியே” மடக்கினேன்.
“இட்ஸ் ஒகே .. தெரியல, ஆனா நான் கண்டிப்பா
கால் பண்ணேன்”

“சரி சரி … இன்னைக்கு டின்னர் போலாமா?
அசோகா ரெஸ்டாரன்ட்?”
“கண்டிப்பா”
“வாவ் … நல்லா இருக்கு உங்க ரூம் ஜன்னல்,
பார்சிலேன் தானே? ”
அடடா … ஜாக்கிரதையா பார்க்கணும் அவளை.
ரூமோட ஜியாக்ரபி பாத்துட்டா …
“தாங்க்ஸ்”
“சரி நான் கெளம்பறேன், எட்டு மணிக்கு நானே இங்க வந்து
உங்கள பிக் அப் பண்ணிக்கிறேன்” என்று சொல்லிக்
கிளம்பினாள்.

Volgkswagen Passat வைத்திருந்தாள் . 8:15 pm. அசோகா..

“எப்போ சன் டியாகோ வந்தீங்க?”
“வாவ் நீங்க நான் சாபிடற அழகே தனி … ” என்று நான்
சொல்லி முடிக்கும் முன் ஸ்ரீஜா கூப்பிடுகிறாள்.
“ஹாய் ஸ்ரீ … யா … ஒகே … சரி … sorry … please ….
ஆமா … இப்போ முடியாது. யா .. ”
“உங்க wife ஆ ?”
“வாட் … நான் இன்னும் சிங்கிள் தான் ”
“சிங்கிளா? நம்பவே முடில. சாரி தப்பா நினைச்சுக்காதீங்க,
உங்கள பாத்தா மிடில் ஏஜ் மாதிரி தெரியுது”
“That’s fine. சரி உங்கள பத்தி சொல்லுங்க”

சொல்கிறாள். ஐ ஐ டீ கான்பூர், பீ டெக் முடித்து விட்டு,
Bostonல் M.S முடித்தவள், பெரும் படிப்பாளியாம். டிஜிட்டல்
டிசைன் இஞ்சினியர். இங்கே QualComm என்னும் பெரிய
கம்பெனியில் Senior ComSys scientist. அவள் வாழ்வின்
கனவு வேலை.
“கம் ஆன் நான் பே பண்றேன். டோன்ட் வரி”
“No No. Lets be Dutch. No worries. ”
வீடு திரும்புகிறோம். “பை பை”

ஸ்ரீஜாவுக்காக சாட் பாக்ஸில் காத்திருக்கிறேன். அவள்
வரவில்லை. ஆப் லைன் மெசேஜில் F*** *O** என்று அழகான
ஆங்கிலத்தில் திட்டி இருந்தாள்.

ஸ்ரீஜாவுக்கு போன் செய்யலாம் என்று மொபைலை எடுக்க
நினைக்கையில் ரஞ்சனி அவள் அறைக்குள் நுழைவது
தெரிகிறது. Nighty. Hot. நான் வெல வெலத்துப் போகிறேன்.
இன்றைய ராசி பலனில் சிம்மம் – யோகம் என்று
போட்டிருந்ததாக ஞாபகம்.

இதற்கு மேல் தாங்காது. ஒரு பியர் அடித்துத் தூங்குகிறேன்,
மொபைல் எங்கோ ஓரமாய் வீழ்ந்து கிடக்கிறது,
ஸ்ரீஜாவிற்கு கால் செய்யாமல் …
திங்கள், புதன் இரண்டு நாட்களில் ரஞ்சனியுடன் லஞ்ச்
மற்றும் டின்னர்.

“அர்ஜுன், மாலினிக்கு VISA Secondary process முடிஞ்சிடுச்சு,
இன்னும் ரெண்டு வாரம் அட்ஜஸ்ட் பண்ணுங்க, வெள்ளிகிழமை
Follow Up மீட்டிங் இருக்கு, கான்பரன்ஸ் கால் அட்டன்ட்
பண்ணுங்க, மத்தபடி மெக்சிகோ குட்டிகள் எப்படி? ஸ்ரீஜா
கொஞ்சம் உங்க மேல கோவமா இருக்காங்கன்னு
நினைக்கிறேன் … அவங்களையும் பாலோ அப் பண்ணுங்க”

” ஆர்னஸ்ட் , எனக்கு சான்டியாகோ புடிக்கல … ரொம்ப
சோம்பேரித்தனமா இருக்கு,
productivity கொறஞ்சிடும் போல இருக்கு … ப்ளீஸ் மாலினி
விஷத்துல premium priority கொடுத்து அவங்கள அனுப்பி
வையுங்க, நான் San Francisco எவ்வளவு சீக்கிரம் வரேனோ
அவ்வளவு நல்லது … ”

“தாங்க்ஸ் அர்ஜுன், மாலினி விஷயத்தை நான் சீக்கிரம்
முடிக்கிறேன்” எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னாலும்
உள்ளுக்குள் கொஞ்ச நாள் இங்கு இருந்தால் நல்லது என்று
தோன்றியது. ஆனால் ஸ்ரீஜாவைப் பார்த்து ஒரு வாரம்
ஆகிறது, காதல் எல்லாம் இல்லை. ஆனால் மிஸ்
செய்கிறேன் என்று தெரிகிறது.

நேற்று …

“வாவ் … Daniel calla புக்ஸ் படிப்பீங்களா? ரொம்ப ஆச்சரியமா
இருக்கே ? அவர் அவ்வளவு பேமஸ் ரைட்டர் கிடையாதே … ”
“யா … எனக்கும் ஆச்சரியம் தான் … அவர் எழுதினதுல
எது ரொம்ப புடிக்கும்?”
“பாண்டமிக்”
“ரியல்லி? என்னால நம்பவே முடில, எப்படி ரஞ்சனி நம்ம
டேஸ்ட் ஒரே மாதிரி இருக்கு”
“யா …” சொல்லிவிட்டு பர்சை எடுக்க குனிகிறாள், என்
எக்ஸ்ரே கண்களில் தெரிகிறது.
“கான் ஐ ஹாவ் பியர்”
“மீ டூ”
“என்ன … ட்ரின்க் பண்ணுவீங்களா?”
“ஏன் பொண்ணுங்க ட்ரிங்க் பண்ண கூடாதா?”

“இல்ல இல்ல, இதுல என்ன இருக்கு … இன்னைக்கு பியர்
சாய்ஸ் உங்களது”
“Pliny the younger”
“வாவ் … எனக்கும் அது தான் புடிக்கும்”
இருவருக்குள்ளும் இடைவெளி குறைய லேசாக தொட்டுக்
கொள்கிறோம், அறிந்தும் அறியாமலும்”
ஸ்ரீ ஜா பண்ணும் கால்கள் எல்லாம் மிஸ்ட் காலாக
மாறுகிறது. ஏழு முறை ping செய்து திட்டி மெயில் அனுப்பி
இருக்கிறாள். அவள் என்னைக் காதலிக்கிறாள் என்று
சூசகமாய் ஒரு மெசேஜ் வேறு … எனக்கு அதில் எல்லாம்
நம்பிக்கை இல்லை.

இன்று பன்னிரண்டு மணி வரை ரஞ்சனிக்காக ஜன்னல்
இடுக்கில் காத்திருந்து விட்டு, அவள் வராததால்
தூங்கச் செல்கிறேன்.
திடீர் வெளிச்சம் … மூக்குக் கண்ணாடியைப் போட்டுப்
பார்க்கிறேன். கண் முன்னால் தேவதை, குளித்து விட்டு
டவலுடன் வந்திருக்கிறாள் … அம்ம்ம்மாஆடி “
அடுத்த நாள் …
“வாவ் … செஸ் (Chess) ஆடுவீங்களா? ஐ கனாட் பிலீவ் இட்.
என்ன ஓபனிங் பிடிக்கும்?”
“சிசிலியன் டிபன்ஸ் (Sicilian Defense) ”
“Outstanding. எல்லாரும் E4-E5 தான் ஆடுவாங்க … But,
அதுல வேரியேஷன் கம்மி … ஆனா எதிராளிக்கு தெரியாம
ஈசியா Mid game எடுக்கலாம் ”

“ஸோ நீங்க நல்லா செஸ் ஆடுவீங்களா?”
“யா … ஆனந்த் கிட்ட எல்லாம் ஸ்கூல் படிக்கும் போது
ப்ரைஸ் வாங்கி இருக்கேன்?”
“வாவ் … எந்த ஸ்கூல்?”
“பத்மா சேஷாத்ரி”
“என்ன சொல்லறீங்க … எந்த பாட்ச்? நான் 2002. நீங்க? ”
“1998”
நான் பார்த்த, பழகி ரசித்த பெண்களில் இல்லாத ஒரு அம்சம்
இவளிடம் இருக்கிறது.
பேசாமல் இவளை என் கம்பெனியில் சேர்த்து விடலாமா.
ச்சே வேண்டாம், அப்புறம், என் கை கீபோர்ட் பக்கமே போகாது.

“என்ன அர்ஜுன், மூணு கால் பண்ணி இருக்கேன்,
வாய்ஸ் மெயில், எதுக்கும் ரிப்ளை இல்ல?
” VOIP போனில் ஆர்னஸ்ட் கத்தினான்
“சாரி ஆர்னஸ்ட் … கொஞ்சம் பிசி”
“பிசியா … என்ன அர்ஜுன் பிசி … மெக்சிகோவா ?. வேலை தான்
அர்ஜுன் பர்ஸ்ட். அடுத்த வாரம் கான்பரன்ஸ். அர்ஜுன்,
give me a good reason. ஏன் இன்னைக்கு கால் எடுக்கல”

“சி ஆர்னஸ்ட் … அதுக்கு தான் சொன்னேன்,
மாலினிய வர சொல்லுங்க”
“அர்ஜுன் மாலினி மாமனாருக்கு ஹார்ட் அட்டாக்
ஆயிடுச்சாம் … ஸோ அவங்க வர கொஞ்சம் லேட் ஆகும்”

“ஆர்னஸ்ட் உங்களுக்கு ஏற்கனவே நான் சொல்லி இருந்தேன் …
ரெண்டு வாரம் தான் இருக்க முடியும்னு … Maximum ஒரு
வாரம் அதிகம் இருக்கலாம்”
“அர்ஜுன் … மாலினி விஷயம் பத்தி நாம இங்க பேசல …
அது next. மொதல்ல கான்பரன்ஸ் கால் பத்தி பேசணும்.
50 Million Samples. கிட்டத்தட்ட 90 மில்லியன் டாலர்ஸ்.

உங்களுக்கு தெரியாதா ஜாபனீஸ் கன்ச்டம்ர்ஸ் பத்தி,
இங்கிஷும் புரியாது எழவும் புரியாது. உங்களுக்குத்தான்
ஜாபனீஸ் தெரியும், அதுக்கும் மேல இந்த Chipல நீங்க
டாக்டரேட் பண்ண AGC ப்ளாக் இருக்கு. ப்ளீஸ் அர்ஜுன்
Pls be more accountable.”

இது வரை Arnest இப்படி பேசியதில்லை. எல்லாம் இந்த
ரஞ்சனியால்.

AGC – automatic gain control. ஒரு சிக்னலின் வீரிய அளவைத்
தானாகவே சரி செய்து கொள்ளும் வகை. இந்த ஜாபனீஸ்
கஸ்டமர்ஸ் கேட்பது குறைந்த power இழுக்கும்படி செய்யும்
self AGC, நான் Berkeleyல் வாங்கிய பீ.எச்.டி பட்டத்தின் டாபிக்.
சொல்லப் போனால் பெண்களும் AGC போலத்தான்.

மிஞ்சினால் கெஞ்சுவதும் கெஞ்சினாள் மிஞ்சுவதும்
தன் வீரியத்தைத் தாங்களே சரி செய்து கொள்வார்கள்.
இவளைத் தவிர … இங்கு வீரியம் எனக்குத் தான் …

“நோ நோ நான் நாளைக்கு நான் காலைல public லைப்ரரி
போகணும். நைட் SanJose போகணும்” என்று வழக்கம் போல
மிதப்பாக பேசினாள்.
“வாட் … SanJoseவா … சான் பிரான்சிஸ்கோவில இருந்து
அரைமணி நேரம் தானே. ரஞ்சனி எப்படி போறீங்க?”
“ப்ளைட்ல”

எனக்கு அவளுடன் கூட போக வேண்டும் என்று ஆசை.
ஆனால் கான்பரன்ஸ் காலுக்காக ப்ரிபேர் செய்தாக வேண்டும்,
ஏற்கனவே ஒரு செண்டிமீட்டருக்குக் கெட்ட பெயர்.
சனி, ஞாயிறு ரொம்பவும் மொக்கையாகச் சென்றது.
கிளிஷேவாக சொல்வதென்றால் கண் மூடினால் இவள் தான்
வருகிறாள், ஸ்ரீஜா காரக்டர் ஆர்டிஸ்ட் போல அப்பப்போ
வருகிறாள் … ஸ்ரீஜா … கால் செய்ய வேண்டும்.

ஸ்ரீஜாவும் கால் எடுக்கவில்லை … அவளுடன்
காதல் என்ற உணர்வே வந்ததில்லை …
ஆனால் ரஞ்சனியிடம் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.
Corona பியருடன் இரண்டு நாட்களும் செல்கின்றன.

‘எதற்காகவோ யாருக்காகவோ என்றோ நடப்பது இன்றும்
நமக்கே பொருந்துமாம் வினை’
படித்து முடிக்கும் முன் தூக்கம் வருகிறது.
திங்கள் காலை. ஒரு வழியாக ரிப்போர்ட் சரி செய்து
கொள்கிறேன். ஆர்னஸ்ட்டிற்கு மெயில் அனுப்பி விட்டு
இவளுக்கு போன் செய்ய கை எத்தனிக்க
“ஹாய் … ” என்று மெசேஜ் வருகிறது.
ரஞ்சனி..புளகாங்கிதம் உணர்கிறேன். பதில் மெசேஜ்
அடிக்கிறேன்.
“இன்னைக்கு டின்னர்?”
“Afghan restaurant?”
அவளே கேள்வி கேட்டு அவளே முடிவும் செய்கிறாள்.

பெண்கள் முகத்தைக் காட்டினாலே மூக்கை அறுக்கும் ஊரின்
ஹோட்டலுக்கு ஸ்லீவ் லேசில் சென்று நானில் புதைந்து
குர்மாவில் நனைந்து விட்டு வருகிறாள்.
“நைட் என்ன ஸ்பெஷல்?”
“என்ன ஸ்பெஷல்?”
“இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு சொல்றேன் … ”
என்று வெகுளித்தனமாக கண் சிமிட்டினாள்
என் ரூமுக்கு வருகிறேன். அவள் குளிக்கப் போகிறாள் …

இளையராஜாவின் இசை தொடக்கம். வெளியே வர வர …
மணி பார்க்கிறேன். 11:50. ஒ காட் … ஞாபகம்
வருகிறது … அவள் ரூமுக்கு ஓடுகிறேன்.
11:58.

“என்ன இந்த நேரத்துக்கு வந்திருக்கீங்க?” ஷார்ட்ஸில்
இன்னமும் அழகாகத் தெரிந்தாள்
“கண்ண மூடுங்க. Many more happy returns of the day. ”
“Wow, nice, thanks. But, இன்னைக்கு எனக்கு பர்த்டேன்னு
யார் சொன்னது?”
எங்கோ தலையில் ஆயிரம் வால்ட்ஸ் பல்ப் எரிகிறது.

“ஐ யாம் சாரி … போன வாரம் நீங்க கேக்கும் பொது
ஜூலைன்னு வாய் தவறி சொல்லிட்டேன் … ஆக்சுவலா
டிசம்பர். சாரி” நான் இது வரை எல்லாருக்கும் கொடுத்த
பல்பை எனக்குத் தருகிறாள். மீதி கேக்கை
ப்ரிட்ஜில் வைத்து மூன்று நாள் கெடாமல் சாப்பிட்டேன்.

கான்பரன்ஸ் நல்ல படியாக முடிந்தது. ஓரளவிற்கு
நல்ல பெயர். “என்ன அர்ஜுன் Gain control algorithm ரொம்ப
inspired ஆ ப்ரிபேர் பண்ணி இருந்தீங்க. Well done. BTW,
ஸ்ரீஜா இப்போ எல்லாம் ஆபீஸ்க்கு வரதில்ல …
காரணம் கேட்டா பெர்சனல் அப்படின்னு சொல்லிட்டாங்க …
Work from home”

ஸ்ரீஜாவின் விஷயம் கொஞ்சம் நெருடலாக இருந்தது.
என் குட்டிச்சுவர் அவள் தான், அங்கு தான் மாலினி
வந்தவுடன் போக வேண்டும்,
நான்கு மாதங்கள் இப்படியே கழிந்தன …

ஒரு நாள் mission beach போகும் போது … .
“எனக்கு பாக்கற பையன் ஐ. ஐ. டீ யா தான் இருக்கணும்.
சைவமா இருக்கணும். கண்டிப்பா பீ. எச். டி. என்னோட
படிப்பு அளவு வராட்டியும் அட்லீஸ்ட் உங்க அளவுக்காவது

படிச்சிருக்கணும். நான் பாட்டுக்கு பேசிண்டே இருக்கேன் …
என்ன அர்ஜுன் ரொம்ப டல்லா இருக்கீங்க”
“கொஞ்சம் தலை வலிக்குது”
“ஓகே நான் டிரைவ் பண்றேன்” என்னையும் கூட்டிக்
கொண்டு நேராக அவள் ரூமுக்கே வந்து விட்டாள்.

நான் அவள் படுக்கையில் தூங்க வைக்கப்படுகிறேன்.
விளக்கு அணைக்கப்படுகிறது.
மூன்று மணி இருக்கும் … ஹாங் ஓவர் குறைகிறது.
எழுந்திருக்க முடியவில்லை.
என் கை மேல் அவள் கை வைத்திருக்கிறாள்.
அவளுக்குத் தெரியாமல் என்று நினைத்து தெரிந்தே
முத்தம் கொடுத்தேன்.

அந்த மயக்கம் தெளிய ஒரு வாரம் ஆனது, நடந்த
உண்மையின் எதார்த்தம் அவளை எதுவும் செய்யவில்லை,
ஆனால் அதில் இருந்த தாக்கம் என்னை
லேசாக நிலை குலைய செய்தது …

ஸ்ரீஜா என்ற பெயர் எனக்கும் சரி உங்களுக்கும் சரி
மறந்தே போய் இருக்கும் … மெயில் போன் எல்லாம் காலி.
இந்த ரஞ்சனி என் நிஜத்தை லேசாக ஆட்டிப் படைக்கிறாள்.
அவளைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற திடீர்
எண்ணமெல்லாம் வந்து போகிறது அதற்காகக்
காத்திருக்கிறேன். இன்னொரு நாள் .. இன்னொரு நாள்.
இப்படியே நான்கு மாதங்கள் சென்றது.

இதோ ஐந்தாவது மாதத்தின் முதல் நாள் … தலையில் இடி
“அர்ஜுன் ப்ராஜக்ட் இன்னும் மூணு வாரம் தான் …
இன்னொரு நல்ல விஷயம் …
மாலினிக்கு வீசா கிடைச்சிடுச்சு … இன்னும் ரெண்டு நாளுல
வராங்க … Sony project Approve ஆகி இருக்கு. Mass production.
நீங்க மாலினிக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டு ரெண்டு நாளுல
இங்க கிளம்பி வந்திடுங்க. மூணாவது நாள் நீங்க Chicago
போகணும்”

என் வாழ்க்கையின் உச்ச கட்ட அதிர்ச்சி. இந்த ரஞ்சனிக்கு
இங்கே பெரிய வேலை … கண்டிப்பாக வேலையை விட
மாட்டாள் .. கல்யாணம் போன்ற விஷயத்திற்கெல்லாம்
ஒத்து வர மாட்டாள். எப்படி இவளைக் கூட்டிப் போவது …
ப்ரபோஸ் செய்தால் என்ன …

“ஆர்னஸ்ட் …மூணு வாரம் தானே …. நானே முடிச்சிட்டு வரனே … ”
“நோ நோ … சோனி ப்ராஜக்ட் ஏற்கனவே டிலே ஆயிடுச்சு
அர்ஜுன் … மாலினி தான் வராங்க இல்ல … என்ன அ
ர்ஜுன் மெக்சிகன் மோகமா?”
எனக்கு அவன் பேசியது பிடிக்கவில்லை. காதல் என்றால்
என்ன என்று சொல்ல எத்தனித்து நிறுத்துகிறேன்.

ராத்திரி ஒன்பது மணி.
“ரஞ்சனி, நான் உன் ரூமுக்கு இப்போ வரட்டுமா …
கொஞ்சம் முக்கியமா பேசணும் … ”
“சாரி அர்ஜுன் … நல்ல Korean படம் …
ப்ளீஸ் நாளைக்குப் பேசுவோமே … ”
இளையராஜா பாடுகிறார். அவள் வழக்கம் போல
குளிக்கச் செல்கிறாள். நான் விளக்கை அணைக்கிறேன்.
வெளியே வருகிறாள். ஜன்னலை லேசாக திறக்கிறேன் …

பூகம்பம் … நான் கீழே விழுகிறேன். கைத் தவறி லைட்டை
போடுகிறேன் … அவள் என்னைப் பார்த்து விட்டாள் … shit”
கீழே ஓடுகிறேன் … எனக்குப் பெரும் பதற்றம் …
நான் பார்ப்பதைப் பார்த்து விட்டாள் …

ஊரே நவம்பர் குளிரில் நடுங்கும் பொது நான்
வேர்த்துக் கொண்டு … பளார் …
“அர்ஜுன் . What the hell is happening here? ”
“சாரி ரஞ்சனி … ”
“What crap. இவ்வளவு நாளா ரகசியமா என் ரூமை
எட்டிப் பார்த்துட்டு என்ன சாரி? வெறும் flesh தானே .
வெக்கமா இல்ல நீங்க என் கிட்டே நேராவே
கேட்டிருக்கலாம். அத விட்டுட்டு. Get lost you **** “

அடுத்த நாள் காலை அவள் ரூம் இருட்டாக இருந்தது.
அவள் அபார்ட்மெண்டின் leasing officeல் கேட்டதற்கு அவள்
காலி செய்து விட்டாள் என்றார்கள்.

இந்த நான்கு மாதத்தின் க்ளைமாக்சில் எல்லாம் சரிந்து
போனது. நான் உருப்படியாக செய்த ஒரே காதல் பஸ்பம்.
36 முறை போன் செய்தும் ரஞ்சனி எடுக்கவில்லை …
மாலினி வந்தாள் , work transfer செய்து முடித்தேன்.
ரூமை விட்டு வருகையில் ஒரு முறை ரஞ்சனியின்
அறையை பார்க்கிறேன் . White wash
செய்து கொண்டிருந்தார்கள் …

அவளுடன் பேசிய வார்த்தைகள் நினைவில் வந்து போகிறது
“இங்க இந்தியன்ஸ் அதிகம் இருக்கறதில்ல, நீங்க தான்
நான் பாக்கற முதல் இந்தியன்”
“வாவ் … என்னால நம்பவே முடில … எப்படி ரஞ்சனி
நம்ம டேஸ்ட் ஒரே மாதிரி இருக்கு”
“வாவ் … செஸ் ஆடுவீங்களா ஐ கனாட் பிலீவ் இட் …
என்ன ஓபனிங் பிடிக்கும் … ”
“சிசிலியன் டிபன்ஸ்”

சான் பிரான்சிஸ்கோ வருகிறது. நேராக ஆபீஸ் செல்கிறேன்.
கடைசி வரை அவளிடம் என் காதலைக் கூட சொல்லவில்லை …
“வாங்க அர்ஜுன். Congrats. ஜாபனீஸ் ப்ராஜக்ட் பெரிய சக்சஸ்”
ஆர்னஸ்ட் இன்னும் குண்டாகி இருந்தான்.

“ஒகே ஆர்னஸ்ட் இந்தாங்க ப்ராஜக்ட் ரிப்போர்ட்.
நான் வீடு போய் தூங்கணும்”
“அர்ஜுன் ஸ்ரீஜா திரும்பவும் ஆபீஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க …
போய்ப் பாக்கலையா? ”
“இட்ஸ் ஒகே … அப்புறம் பாக்கறேன்னு சொல்லிடுங்க”
“அர்ஜுன் … உங்களுக்கு 34% hike. அப்புறம் போனஸ் 1800 RSUs.

சாப்பிடுங்க. ஒரு நிமிஷம் … ஏதோ கால் வருது … ”
என்று மொபைலை எடுத்துக் கொண்டு கான்பரன்ஸ் அறைக்குள்
செல்கிறான்.

நல்ல மனுஷன். நிறைய வேலை வாங்கினாலும் நியாயமாக
இருப்பான். ரஞ்சனியிடமிருந்து ஏதாவது மிஸ்ட் கால்
இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறேன். இல்லை .
ஸ்ரீஜாவைப் பார்க்க கால் எத்தனிக்கிறது, மனது
எத்தனிக்கவில்லை.

“வெல் டன் ரஞ்சனி. ஆமாம், அர்ஜுன் இங்க வந்தாச்சு.
பொண்ணு விஷயம் தவிர எதுக்கும் மசிய மாட்டான்.
சான் பிரான்சிஸ்கோ வரணும் வரணும்னு சாவடிப்பான்.
மாலினி திடீர்னு வர்றேன்னு சொல்லிட்டா. அதனால தான்
நேத்திக்கு அரேஞ் பண்ணேன். பூகம்பம் வேறயா … குட் குட் ……
Yes, அதே டீல் தான். தாங்க்ஸ். சோனி ப்ராஜக்ட்
67 million dollars . Equally important. ஒகே அடுத்த வாரம்
சிகாகோ போய்டுங்க ரஞ்சனி . bye”

என்று ஆர்னஸ்ட் யாரிடமோ ஆபீஸ் விஷயமாக
பேசிக்கொண்டிருந்தது அந்த கான்பரன்ஸ் அறையின்
பெல்ஜியம் கண்ணாடியைத் தாண்டி எனக்குக்
கேட்கவில்லை.
“வாவ் … செஸ் ஆடுவீங்களா ஐ கனாட் பிலீவ் இட் …
என்ன ஓபனிங் பிடிக்கும் … ”
“சிசிலியன் டிபன்ஸ் ”

—————————————————————————-

-என்ன நண்பர்களே, சிறுகதையை படித்து விட்டீர்களா…?
எங்காவது சுஜாதாவை உணர்ந்தீர்களா…?
அந்த feel இருந்ததா…?

இந்தக் கதையை எழுதியவர் சுஜாதா அவர்களின்
தீவிரமான ரசிகர்களில் ஒருவர் – இன்னொரு ஏகலைவன்…!!!
திரு.அனந்த நாராயணன்….!

————————

வாழ்த்துகள் – அனந்த நாராயணன்…
மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள்… குருவின் பாணியில்…!!!

by chance – உலகின் எந்த மூலையிலிருந்தாவது
நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருந்தால் – தயவுசெய்து
என்னுடன் மெயிலில் தொடர்பு கொள்ளவும் …
( kavirimainthan@gmail.com)

-அன்புடன்,
காவிரிமைந்தன்

.
———————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to சிசிலியன் டிபன்ஸ் … (Sicilian Defense) ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  Am surprised that you have decided to release this story. இது உங்க டேஸ்ட் இல்லை, உங்க ஸ்டேண்டர்டுக்கு நிச்சயம் வெளியிடமாட்டீங்க என்பது என் அபிப்ராயம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   என் ரசனை மீது நீங்கள்
   வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி.

   சுஜாதா எந்த வகையில் அவரது
   தீவிர ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்
   என்று அறியும் ஒரு முயற்சி இது.

   அதற்காகத்தான் எழுதியவருடன்
   தொடர்பு கொள்ள முயற்சி.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I thought it was Sujatha himself.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s