கமல்ஹாசன் – ஜெயலலிதா – முதல் சந்திப்பு ….!!!

….
….

….


….

முக்தா ஃபிலிம்ஸ் என்கிற பெயரில் ஒரு திரைப்பட
நிறுவனம் 1960 முதல் 1988 வரை இயங்கி வந்தது.
இந்த நிறுவனம் 42 தமிழ்ப் படங்களை தயாரித்தது.

அந்த நிறுவனம் தயாரித்த படங்களில் ஒன்றைத்தவிர,
மற்ற அனைத்து திரைப்படங்களையும் அந்த நிறுவனத்தின்
முதலாளியான, திரு.வி.ஸ்ரீனிவாசன் அவர்களே இயக்கினார்.
ஸ்ரீனிவாசன் எப்போதுமே சிக்கனமாகப் படம் எடுப்பவர்.
திரையுலகில் – மிகவும் ஒழுக்கமானவர் என்று
பெயர் பெற்றவர்.

முக்தா ஸ்ரீனிவாசன் தற்போது, திரையுலகிலிருந்தும்,
பொதுவாழ்க்கையிலிருந்தும் – ஓய்வு பெற்று விட்டார்.

3-4 வருடங்களுக்கு முன்னர், சென்னையில் நடந்த
ஒரு புத்தக விழாவில், ஒரு ஸ்டாலில் – தனியாக உட்கார்ந்து
கொண்டிருந்த அவரைப் பார்த்தேன்.

கிட்டத்தட்ட 90-ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் அவரை
இன்றைய புத்தகக் கண்காட்சித் தலைமுறையினர்
அறிந்திருக்க வாய்ப்பில்லை. நான் அந்தக்காலத்திலிருந்தே,
அவரைப்பற்றிய செய்திகளை கவனித்துக் கொண்டிருந்தவன்.
அவரது சில படங்களை விரும்பிப் பார்த்தவன்.
அவரது படங்களில் பொதுவாக நகைச்சுவை தூக்கலாக இருக்கும்.
( குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் – சோ மற்றும் நாகேஷ்
நடித்த “தேன் மழை”யைச் சொல்லலாம்…)
சில நிகழ்ச்சிகளிலும் அவரைப் பார்த்திருக்கிறேன்.

தனியாக அமர்ந்திருந்த அவரிடம் சென்று, பக்கத்திலிருந்த
இன்னொரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு, என்னை அறிமுகம்
செய்துகொண்டு – அவரைப்பற்றி எனக்கு தெரிந்த சில
விஷயங்களைப் பேசினேன்…

அவரைப்பற்றி அறிந்த ஒருவர் இப்படி பேசக்கிடைத்தது
அவருக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது….
அவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்…
கொஞ்ச நேரம் அவரிடம் அவரது அனுபவங்களை
பற்றி பேசிக்கொண்டிருந்து விட்டு, அவர் கையாலேயே
அவரது சுயசரித புத்தகத்தையும் (ஒரு ஏழை ஏறி வந்த ஏணி..)
தரச்சொல்லி வாங்கிக்கொண்டேன்.

தனது சுயசரிதை மற்றும் வாழ்க்கை அனுபவங்களைப்பற்றி
அவர் எழுதி இருக்கும் அந்த புத்தகத்திலிருந்து
இந்த இடுகையின் தலைப்பிற்கு தொடர்புடைய ஒரு
சுவாரஸ்யமான தகவலை மட்டும், அவரது வார்த்தைகளிலேயே
கீழே தருகிறேன்….

—————–

அப்போது நான் சூரியகாந்தி என்கிற திரைப்படத்தை
தயாரித்து இயக்கிக் கொண்டிருந்தேன்.

….


….

இப்படத்தில் ஜெயலலிதா-முத்துராமன் நடித்துக்
கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஆடிப்பாடி நடிக்கும்
டூயட் காட்சி ஒன்றை படமாக்கினேன். சில நாட்களுக்குள்
அந்தக் காட்சியை எடிட் செய்தேன். அதை ஜெயலலிதாவுக்கு
போட்டுக் காட்டினேன். முதலில் காட்சியைக் கண்டு
களிப்புற்ற அவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னை
போனில் அழைத்தார்.

“அந்தக் காட்சியை மறுபடியும் ரீடேக் செய்து விடுங்கள்’
என்று வேண்டினார். ஏன் என்று நான் கேட்க, “என் உடை
எனக்குப் பிடிக்கவில்லை; வேறு உடையில் அதில் நான்
நடிக்க விரும்புகிறேன்” என்றார்.

எனக்கு அதனால் கூடுதல் செலவு 8000 ரூபாய் ஆகும்.
இருந்தும் நான் சரி என்று சொல்லி விட்டேன். முத்துராமன்
(நடிகர்) அவர்களிடம் விஷயத்தைக் கூறி தேதி
வாங்கி வைத்து விட்டேன்.

அந்தக் காட்சியின் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன்.
அவர் ஊரில் இல்லை. ஜெயலலிதாவிடம் அதை கூறினேன்.

அவர் – “பரவாயில்லை; தங்கப்பன் மாஸ்டரோடு ஒரு
இளைஞர் உதவியாளராக பணியாற்றினாரே; அவரை
வைத்துக் கொண்டு படமாக்கலாம்” என்று கூறினார்.

அந்த உதவி டான்ஸ் மாஸ்டர் வேறு யாருமில்லை;
நம் கமல்ஹாசன் தான். அப்போது அவர் தங்கப்பன்
மாஸ்டரிடம் டான்ஸ் அசிஸ்டெண்டாக பணியாற்றிக்
கொண்டிருந்தார். (கமலுக்கு அப்போது 18-19 வயது
இருக்கலாம்.ஜெயலலிதாவுக்கு 25-26 வயது.) அவரை
அழைத்து வந்து, அவர் ஆடிக்காட்ட,
ஜெயலலிதா -முத்துராமனை நடிக்கவைத்து
அந்தக் காட்சியை மீண்டும் படமாக்கினேன்.

——————————————————————————————————


….

பின் குறிப்பு – பிற்காலத்தில் பல வருடங்களுக்குப்பின்
நடந்த சில ஈகோ மோதல்களுக்கு வித்திட்ட
அடிப்படை நிகழ்வாக கூட இந்த முதல் சந்திப்பு
இருந்திருக்கலாம்…!!!

யார் கண்டது – யார் மனதில்
என்ன இருந்தது – என்ன இருக்கிறது என்பதை…!!!

.
————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to கமல்ஹாசன் – ஜெயலலிதா – முதல் சந்திப்பு ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  பொதுவாக திரையுலகில் ஆணாதிக்க மனப்பான்மை அதிகம். ஜெ. அவர்கள், தமிழக முதலமைச்சராகவும், மக்கள் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாகவும் 25 வருடங்களுக்கு மேல் இருந்தார். திரையுலகில் சீனியர்கள், அவரை இயக்கியவர்கள், அவருக்கு சம்பளம் கொடுத்தவர்கள், திரையுலகப் பின்னணி அறிந்தவர்கள், ஜெ.வைவிட திரையுலகில் கோலோச்சியவர்கள் அனேகமாக எல்லோரும், முதல்வர் என்ற முறையில் ஜெ.விடம் தணிந்து போகவேண்டி இருந்தது. இது நிச்சயமாக அவர்களுக்கு உறுத்தலாகத்தான் இருந்திருக்கும். (சாதாரண கிளர்க்காக பணியாற்றிய ஒருவர் பிற்காலத்தில் முதலாளியாக உயரும்போது, அவரைச் சந்திக்க அவர் அலுவலகத்தின் வாசலில் சில பல மணி நேரங்கள் காத்திருக்க நேரும்போது மனசில் எழும் எண்ணங்கள்தாம்).

  ஜனநாயகத்தில் மக்களின் செல்வாக்குதான் மிக உச்சபட்சமானது. அந்த மக்களின் செல்வாக்கைப் பெற்றவர்களுக்கு மற்றவர்கள் அடிபணிந்துதான் ஆகவேண்டும்.

  • Rajs சொல்கிறார்:

   Will this fit for MuKa too or Only J and Cho

   • புதியவன் சொல்கிறார்:

    கருணாநிதிக்கும் இது பொருந்தும். From செல்வாக்கு, பாரம்பர்யம் point of view, கருணாநிதியும் ஏவி மெய்யப்பன் அவர்கள், ஜெமினி அவர்கள் போன்றோரிடம் கை நீட்டி சம்பளம் வாங்கியவர்தானே. (ஏன் அண்ணாத்துரையும் ஏவிஎம் இடம் கை நீட்டியவர்தானே)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.