முடியுமென்றால் முடியும்…!!! – கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – ( 6 )

….
….

….

ஒருவர் எண்ணம் இன்னொருவர் மனதிற்குள் –
இடையில் எந்தவித மீடியமும் இல்லாமல் –
நேரடியாக சென்றடைய முடியுமா..?

முடியும் என்கிறது நமது பண்டைய சமயம்.

நூற்றுக்கணக்கான சோதனைகளை செய்து பார்த்தபின்
அது முடியும் என்று கூறினார் ஜெர்மனிய தத்துவ மேதை
ரூடால்ப் ஸ்டெய்னர். நடுவில் – மனிதரோ, கருவிகளோ –
வேறெந்தவித ‘மீடியமும்’இருக்கத் தேவையில்லை
என்கிறார்.

அவர் சொன்னது –

” அதைச் செய்ய. நான் கண்களை மூடிக்கொண்டு
ஓர் எண்ணத்தை, மூன்றாம் விழியின் மையத்திற்குக்
கொண்டு போய் விடுவேன். அங்கிருந்து,
உங்கள் மூன்றாம் விழியின் மேல் அந்த எண்ணத்தைக்
குதிக்கச் செய்து விடுவேன்… ”

ரூடால்ப் ஸ்டெய்னர் சொல்லும் அந்த மூன்றாம் விழி
மனிதரிடம் எங்கே இருக்கிறது…?

————————

இங்கே தான் வருகிறது நமது 7 சக்கர தத்துவம்.
மனிதனின் சக்திநிலை பற்றிப் பேசும்போது நமது உடலில்
உள்ள ஏழு சக்கரங்கள் குறித்து சொல்லப்படுகிறது.
இவை மனிதனின் உடலில் காணப்படுபவை அல்ல.
சூட்சும சரீரத்தில் உள்ளவை… உணரப்படுபவை.

மூலாதாரம்,
சுவாதிஷ்டானம்,
மணிப்பூரகம்,
அநாகதம்,
விசுக்தி,
ஆக்ஞை,
சஹஸ்ரஹாரம் – ஆகிய சக்கரங்களே அவை.

இந்த சக்கரங்கள் பற்றிய தத்துவத்துக்குள் நுழைந்து
படிப்பவர்களை குழப்ப நான் விரும்பவில்லை; நிதானமாக,
ஆழமாகப் படித்து, சிந்தித்து உணர வேண்டிய விஷயம் அது.

மிக எளிமையாக, சுருக்கமாகவே நான் இதை
நமக்கு வேண்டிய இடத்திற்கு மட்டும் கொண்டு போய்
விடுகிறேன்.

ஆறாவது சக்கரமாகிய ஆக்ஞை (ஆக்கினை) –
இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ளது.
இது ஞானம், தெளிவு போன்றவற்றுக்கான சக்கரம்.
இந்த சக்கரம் முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் -சிறந்த
புத்திசாலிகளாக, ஞானிகளாக இருப்பார்கள்.

இதற்கு அடுத்த, கடைசி சக்கரமாகிய சஹஸ்ரஹாரம்
உச்சந்தலையில் இருக்கிறது. இந்த சக்கரம்
தூண்டப்பெற்றவர்கள் எப்போதும் ஒருவித பரவச
நிலையிலேயே இருப்பார்கள். பிரபஞ்சத்தை உணர்ந்த
பரவச நிலை; ஆனால், இந்த வாய்ப்பு
வெகு அபூர்வமாக, வெகு சில ஞானிகளுக்கே கிட்டுகிறது.
இந்த நிலையை எட்டியவர்கள், அதன் பின்னர்,
உலக பந்தத்தில் எந்தவித ஈடுபாடும் காட்ட மாட்டார்கள்.

————–

ரூடால்ப் – இங்கே “மூன்றாவது கண்” என்று
சொல்வது வேறு எதையுமல்ல …

நாம், நமது இரண்டு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும்
இடத்தை, ஆக்ஞை (ஆக்கினை) -என்று சொல்கிறோமே
அந்த கற்பனையான சக்கரம் இருக்கும் இடத்தைத்தான்.

‘டெலிபதி’ என்னும் ‘தொலைவிலுணர்தல்’ இதன்
அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

ரூடால்ப் ஓர் எண்ணத்தை ஆயிரம் மைல் தூரம்
அனுப்பிக் காட்டினார்..! ரஷ்யாவிலும், ஹார்வர்ட்
பல்கலைக் கழகத்திலும் மற்றும் பல நாடுகளிலும்
நடைபெற்ற சோதனைகள் ‘தொலைவிலுணர்தல்’ உண்மை
தான் என்று நிரூபித்துள்ளன.

இந்தச் சோதனையில் – முதலில், நமது எண்ணத்தை
மூன்றாம் விழியில்( அதாவது ஆக்கினையில்)
நிலைபெறச் செய்ய வேண்டும்.
நமது எண்ணம் ஒரு சிறிய சூரியன் போல் மனதில்
வேகமாகச் சுழல வேண்டும். இதன் மூலம் அந்தச் சூரியன்
உயர் சக்தியும் கூர்மையும் பெற்று விடும்.

சாதாரணமாக நாம் சூரிய கிரணங்களின்
முழு சூட்டையும், நடைமுறையில்அனுபவிப்பதில்லை.

ஆனால், ஒரு பூதக்கண்ணாடியின் மூலம்
அதை ஒரு புள்ளியில் குவித்தால்,
காய்ந்த சருகுகளை, காகிதங்களை பற்ற வைக்கும்
அளவிற்கு அதில் சூடு உருவாவதை
அனுபவத்தில் பார்க்கலாம்.

எனவே, நமது எண்ணத்தை –
பரவ விடாமல் ஒருமுகப்படுத்தி,
மூன்றாம் கண்ணில் (ஆக்கினையில்) குவிக்க வேண்டும்.

அந்த எண்ணம், ஒன்றுபட்டு, ஒருமுகப்பட்டு, ஆற்றல்
மிகுந்த ஒளிக்கற்றை போலக் குவிய வேண்டும்.

இனியும் இதற்கு மேல் இறுகாது, கூர்மை பெறாது என்று
உணரும் கணம்தான், அந்த எண்ணம் பாய்ச்சப்படுவதற்கு
சரியான நேரம்.

அந்தக் கணத்தில், அந்த எண்ணத்தை, மற்றவரின் மனதில்
செலுத்த வேண்டும். பாய்ச்ச வேண்டும்.

அந்த மற்றவர், எவ்வளவு தொலைவில் இருந்தாலும்,
அவர் நம்முடைய கற்பனைப் புலத்திற்குள் இருக்க வேண்டும்.

அத்துடன் நமது எண்ணம், அவருடைய மூன்றாம் விழி
வழியே அவர் மனதிற்குள் புகுந்து விட்டதாகக் கற்பனை
செய்து கொள்ளவும் வேண்டும்.

இது நிகழ்ந்ததும், எண்ணப் பரிமாற்றம் ஏற்பட்டு விடும்.

ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி,
கடல், மலைகளைக் கடந்து,
உலகின் வேறேதோ மூலையிலிருந்து –
ஒருவர் பேசுவதை, மற்றொருவர் -அந்தக்கணத்திலேயே
கேட்க முடிகிறதல்லவா…?

கேட்பதோடு மட்டுமல்லாமல், வீடியோ அழைப்பு
மூலமாக பேசுபவரது தோற்றத்தையும் காண முடிகிறதல்லவா…?

இது எப்படி சாத்தியமாகிறது…?
நம் பேச்சும், தோற்றமும் –
பயணிப்பதில்லை – கடத்தப்படுகிறது…
எப்படி…?

பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கும்
அலைவரிசைகளின் மூலம், அவற்றை ட்யூனிங்க்
செய்வதன் மூலம்…ஒரு எல்லையிலிருந்து மற்றொரு
எல்லைக்கு கடத்தப்படுகிறது.
ஆனால் இதற்கு சில கருவிகள், (மீடியம்) தேவைப்படுகின்றன.

இடையில் எந்தவித மீடிய’த்தின் தேவையுமில்லாமல்,
ஒருவர் எண்ணத்தை இன்னொருவருக்கு
நேரடியாக மாற்றுவதுதான் இந்த –
“தொலை நுண்ணுணர்வு”

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு இது சாத்தியமா…?

சாத்தியம் தான். ஆனால் –

அதற்கு நிறைய முயற்சி தேவை;
இடைவிடாத பயிற்சி தேவை.
இதற்கென்று தனியே நேரம் ஒதுக்கி,
தினமும் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

நம்பிக்கையுடன் ஈடுபட வேண்டும்.
முற்றிலுமாக – நம்பிக்கை சார்ந்த விஷயம் இது.

ஒரு வாரம் முயன்று விட்டு,
ஒரு மாதம் முயன்று விட்டு,
ஒரு வருடம் முயன்று விட்டு –
வரவில்லையே என்று விட்டுவிடக்கூடியவர்களுக்கு
இது சாத்தியம் இல்லை.
வெற்றி கிட்டும்வரை முழு நம்பிக்கையுடன்
தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.

இரண்டு மனிதர்களுக்கிடையே, எந்தவித மீடியமும்
இல்லாமல் எண்ணங்களின் மூலம் தொடர்பு கொள்ளும்
இந்தக் கலையின் மூலம் –

எல்லையில்லாத அந்த பிரபஞ்ச சக்தியுடன் –
தொடர்பு கொள்ள முடியுமா…? எப்படி…?

அடுத்து அதையும் யோசிப்போம்…ஆனால்,
கொஞ்சம் கொஞ்சமாக யோசிப்போமே….!!!
கொஞ்சம் இடைவெளி விட்டு – அடுத்த பகுதியில் …

.
—————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.