“குருதட்சணை” – இந்திரா பார்த்தசாரதி

….
….

….

திரு.இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கதை எதையும்
இதுவரை இந்த வலைத்தளத்தில் பதிந்ததில்லை.
இப்போதெல்லாம் அவர் எழுதுவதுமில்லை;

எனவே, அவரது எழுத்துக்கள் பரிச்சயமில்லாத –
இளைய சமூகத்திற்காக -ஒரு சிறு அறிமுகம்.

தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் உள்ளவர்கள் அத்தனை
பேருக்கும் இ.பா. அவர்களை நிச்சயம் தெரிந்திருக்கும்.
அறிவுஜீவிகளுக்கு அவரை நிறையப் பிடிக்கும்.

சின்ன வயதிலிருந்தே அவரது எழுத்து எனக்குப் பழக்கம்.
நான் கடைசியாக படித்தது அவரது “ஔரங்கசீப்”…நாடகம்.

இன்றைய இளைஞர்களுக்கு இப்படிச் சொன்னால்
சுலபமாக புரியும் என்பதால் சொல்கிறேன் –

(மலையாள) இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கி
1992-ஆம் ஆண்டு வெளிவந்த “மறுபக்கம்” படம் இ.பா.
எழுதிய “உச்சி வெய்யில்” என்கிற நாவலை அடிப்படையாக
கொண்டது தான்.

தமிழில் சாஹித்ய அகாடமி மற்றும் சங்கீத் நாடக அகாடமி
ஆகிய இரண்டின் அங்கீகாரங்களையும் பெற்ற ஒரே எழுத்தாளர்
திரு. இந்திரா பார்த்தசாரதி மட்டும் தான்.

——————————

குருதட்சணை – சிறுகதை – இந்திரா பார்த்தசாரதி
————-

அது பசுபதிக்குப் பிடித்தமான ‘பேன்ட்’.
தமிழில் என்ன சொல்வார்கள் ‘பேன்ட்’டுக்கு?
‘இகந்த வட்டுடை’ என்று மணிமேகலையில் வருகிறது.
‘இகந்த’ என்றால், ‘தொளதொள’ என்றிருப்பது.
பைஜாமாவாக இருக்கலாம். அப்படியென்றால்,
வட்டுடை என்பது பேன்ட்டைக் குறிக்க வேண்டும்.
அந்தக் காலத்தில் தமிழர்கள் பேன்ட் போட்டுக்கொண்டு
இருப்பார்களா என்று பசுபதி ஒரு கணம் யோசித்தார்.
வட்டுடை என்றால் யாருக்குப் புரியப்போகிறது?
கால்சட்டை என்பதே சரி!

இப்போதைய பிரச்னை, அவருக்கு மிகவும் பிடித்த
மெரூன் நிற கால்சட்டையில், அதை இடுப்பில் நிறுத்தி
வைப்பதற்கு உதவும் இரண்டு ஊக்கிகள்!
அவர் கால்சட்டையைப் போட்டுக்கொள்ள முயன்றபோது,
அந்த ஊக்கிகள் பிய்ந்து கீழே விழுந்துவிட்டன.
அவர் சுற்று முற்றும் பார்த்தார்.

அவை கண்ணுக்குத் தென்படவில்லை. கட்டிலுக்குக்
கீழே விழுந்திருக்கலாம். சரீரத்தையே முழுவதும்
குறுக்கிக் குனிந்து கட்டிலுக்குக் கீழே பார்ப்பதென்பது,
அவருக்கு இந்த வயதில் இயலாத காரியம்.

அரசியலில் இருந்திருந்தால், அப்படி வளைந்து
பார்ப்பதற்கான பயிற்சி அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடும்…!

பசுபதி கட்டிலைப் பிடித்துக்கொண்டு தரையில்
உட்கார்ந்தார். குனிந்து கட்டிலுக்குக் கீழே நோக்கினார்.
இருட்டாக இருந்தது. ஊக்கிகள் கண்ணுக்குப்
புலப்படவில்லை. இடுப்புப் பிடித்துக்கொண்டதுதான்
மிச்சம். மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து நின்றார்.

அப்படியே ஊக்கிகள் கிடைத்தாலும் அவரால் என்ன
செய்திருக்க முடியும்? அவருக்குத் தைக்கத் தெரியாது.
அவருக்குப் புத்தகங்களுக்கு அட்டைப் போடக்
கூடத் தெரியாது.

ஊக்கிகள் இல்லாத காரணத்தால், அந்தக் கால்சட்டையை
அவர் தியாகம் செய்ய விரும்பவில்லை. அவர் மனைவி
போய்ச் சேருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னால்,
அவருடைய பிறந்த தினப் பரிசாக அளித்தது அது.

அவர் அதைப் போட்டுக்கொண்ட நாட்கள் எல்லாம்
அதிர்ஷ்ட நாட்கள். போஸ்ட் ஆபீஸ் போனால்,
‘க்யூ’ இருக்காது. மெஸ்ஸிலிருந்து சாப்பாடு, சரியான
நேரத்துக்கு வந்துவிடும். எதிர்த்த வீட்டு பத்மநாபன்,
நாட்டு நடப்புகள் பற்றிப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு
அவர் எழுதிய கடிதங்களைப் படித்துக் காண்பிக்க
மாட்டார். இந்த மாதிரிச் சின்னச் சின்ன அதிர்ஷ்டங்களை
அடுக்கிக்கொண்டே போகலாம்.

பசுபதி கால்சட்டையை போட்டுப் பார்த்தார். அது இடுப்பில்
தங்க மறுத்தது. பதினைந்து வருஷங்களுக்கு முன்பு
வாங்கியது.

இந்தக் காலத்தில், இந்த மாதிரி ஊக்கிகள் தைப்பது
போன்ற சின்ன வேலைகள் செய்ய தையல்காரன்
எங்கு கிடைப்பான்? பிராண்ட் பெயர்களுடன்,
பெரிய பெரிய தையல் கடைகள்! அமிதாப் பச்சனுக்கும்
பியர்ஸ் பிராஸ்னனுக்கும் ‘டிஸைனர் சூட்’ தைத்துக்
கொடுக்கும் அவை, பழைய பேன்ட்டுக்கு ஊக்கிகள்
தைத்துக் கொடுக்குமா?

வாசல் மணி ஒலித்தது. பசுபதி கதவைத் திறந்தார்.
பத்மநாபன்! அவர் கையில் காகிதம் ஏதுமில்லை.
பசுபதிக்கு ஆறுதலாக இருந்தது.
“வெளியிலே கிளம்பிட்டிருக்கீங்களோ?”

“போகலாம்னுதான் இருக்கேன். உங்களை ஒண்ணு
கேட்கணும். என் பேன்ட்டுக்கு ‘பக்கிள்’ போயிடுச்சு.
அதைத் தைக்க யாரானும் கிடைப்பானா?” என்றார் பசுபதி.

“எந்த உலகத்திலே இருக்கீங்க, சுவாமி? கத்திக்குச்
சாணை பிடிக்கிறவன், ஈயம் பூசறவன் எல்லாம்
முன்னே தெருவிலே வந்திட்டிருப்பாங்களே,
இப்போ பார்க்க முடியுதா? உலகம் மாறிட்டிருக்கு.

ஒண்ணு, நீங்களே அதைத் தெச்சுக்குங்க. இல்லேன்னா,
வாசல்ல இருக்கிற வாட்ச்மேனுக்குக் கொடுத்துடுங்க.
இப்படிப் பழசைத் தெச்சு தெச்சுப் போட்டுட்டிருந்தா,
நாம எப்போ வெஸ்டர்ன் எகானமியோட போட்டி
போடறது?” என்றார் பத்மநாபன்.

பசுபதி பேசாமல் பத்மநாபனையே சிறிது நேரம் பார்த்தார்.
தான் அவ்வாறு பதில் சொன்னது பசுபதிக்குப்
பிடிக்கவில்லையோ என்று நினைத்த பத்மநாபன்,
சமாதானம் செய்பவர் போல, “பேன்ட் புதுசோ?” என்றார்.

“இல்லே. பதினஞ்சு வருஷமாறது அதை வாங்கி!”

“பதினஞ்சு வருஷமா? மை காட்! ஏதாவது சென்டிமென்ட்?”

“ரொம்பச் சரி! அதை எனக்குப் பரிசாக் கொடுத்தவ
போய்ப் பதினஞ்சு வருஷமாச்சு!”

“ஐ ஆம் வெரி ஸாரி, பசுபதி! எனக்கு இப்போ புரியுது.
ஒண்ணு பண்ணுங்க… ஜார்ஜ் டவுன் போனா அங்கே
இதைத் தைக்கிறதுக்கு ஆள் கிடைக்கலாம்.
ஆனா, நீங்க பஸ்ஸிலே போக மாட்டீங்க. ஆட்டோவிலே
போயிட்டு வர செலவுக்கு ஒரு புது பேன்ட்டே வாங்கிடலாம்.

வேணுமானா, அதை உங்க சென்டிமென்ட்டுக்குத்
தர்ற விலையா நினைச்சுக்கிட்டுப் போயிட்டு வந்துடுங்க!”
என்றார் பத்மநாபன்.

அவர் போன பிறகு, ஒரு துணிப் பையில் கால்சட்டையை
எடுத்துக்கொண்டு புறப்பட்டார் பசுபதி. காலியாகச் சென்ற
ஒரு ஆட்டோவை நிறுத்தினார். ஆட்டோக்காரரும்
அவரைப் போல் வயதானவராகத் தெரிந்தார்.

“டவுனுக்குப் போயிட்டு வரணும்!”

ஆட்டோக்காரர் பசுபதியை ஏற இறங்கப் பார்த்து,
“எவ்வளவு கொடுப்பீங்க?” என்றார்.

“இருநூத்தம்பது..?”

“மேல அம்பது ரூபா போட்டுக் கொடுங்க… ஏறுங்க!”

பசுபதி ஏறிக்கொள்ள, ஆட்டோ புறப்பட்டது. சிறிது தூரம்
சென்றதும், ஆட்டோக்காரர் தூங்குகிறாரோ என்ற
சந்தேகம் பசுபதிக்கு ஏற்பட்டது. அவ்வளவு மெதுவாக
வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார் அவர்.

“ஏன் இவ்வளவு மெதுவா போறீங்க?”

“சின்ன வயசுலதான் நேரம் பத்தாம, கால்ல றெக்கையைக்
கட்டிக்கினு பறக்கிறோம். இப்பதான் வயசாயிடிச்சில்லே?
இன்னும் கொஞ்ச நாள்தானே இருக்கப் போறோம்?
உலகத்தை நிதானமா பார்த்துட்டுப் போவோமே!
அவசரத்தைக் குறைச்சா, நம்ம நேரம் இன்னும்
கூடுதில்லே?” என்று கூறிவிட்டுச் சிரித்தார் ஆட்டோக்காரர்.

ஒரு ஆட்டோக்காரர் தத்துவம் பேசுவாரென்று பசுபதி
எதிர்பார்க்கவில்லை.

“எனக்குப் பரவாயில்லே. வயசாயிடுச்சு. நானும் உங்களை
மாதிரி உலகத்தை நிதானமா பார்க்கத் தயார். ஆனா,
ஆபீஸ் போற சின்னவங்க உங்க வண்டியிலே ஏறினா
என்ன செய்வீங்க?”

‘‘அவங்க ஏறி உட்கார்றப்பவே சொல்லிடுவேன்,
‘இதோ பாருங்க, வண்டி கொஞ்சம் நிதானமாதான் போவும்.
உங்களுக்கு அவசரமா இருந்தா வேற வண்டியிலே
போயிடுங்க’ன்னு!’’

பசுபதி சிரித்தார். “சரி, நீங்க இந்த வயசிலே ஏன்
வண்டி ஓட்டணும்? பசங்க யாருமில்லியா?”

“நானாவது ஆட்டோ ஓட்டறேன். என்னைவிட
வயசானவங்க நல்ல வெயில்ல, வேர்க்க விறுவிறுக்க
பொதிவண்டி இளுத்துக்கினு போறாங்களே,
பார்த்திருக்கீங்களா? இந்தியா பணக்கார நாடா
ஆயிக்கினுருக்குன்னு பேப்பர்லே அவன்பாட்டுக்குப்
போடறான். பணக்காரன்தான் இன்னும் பெரிய
பணக்காரனா ஆவுறான். ஏளை இன்னும் ஏளையாதான்

போய்க்கினுருக்கான். ஏளை விவசாயி நிலத்தைப்
பிடுங்கிக் கம்ப்யூட்டர் பார்க் கட்டிக்கினுருக்காங்க
படுபாவிக. இல்லாட்டி, ஏன் இத்தனை விவசாயிக
தற்கொலை செய்துகிட்டுச் சாவுறாங்க? வறுமைதாங்க
காரணம். இந்த நிலைமை எனக்கும் வரக்
கூடாதுன்னுதான் என் கையை நம்பிப்
பொளைச்சுக்கினுருக்கேன். வண்டி ஓடற மட்டும்
ஓடட்டும். என்ன சொல்றீங்க?”

“நீங்க சொல்றது சரிதான்” என்றார் பசுபதி. குழந்தைகள்
உண்டா என்ற கேள்விக்கு ஆட்டோக்காரர் பதில்
சொல்லவில்லை. ஆனால், பசுபதி மீண்டும் கேட்க
விரும்பவில்லை. அதன் பின் ஆட்டோக்காரர்
பேசவில்லை. வண்டி அதன் இயல்பான
வேகத்தில் ஓடியது.

“டவுன் வந்தாச்சுங்க. எங்கே போகணும்?” என்று
ஆட்டோக்காரர் கேட்டபோதுதான், தான் உறங்கிவிட்டதைப்
பசுபதியால் உணர முடிந்தது. கண்களை விழித்துச்
சுற்றுமுற்றும் பார்த்தார்.

“அட்ரஸ் இருக்குதுங்களா?” என்றார் ஆட்டோக்காரர்.

பசுபதி துணிப் பையிலிருந்து கால்சட்டையை எடுத்துக்
காட்டி, “இந்த பேன்ட்டுக்கு ஊக்கி போயிடுச்சு.
இதைத் தைக்கணும். இந்தச் சின்ன வேலையைச்
செய்யற தையல் காரன் யாரானும் இங்கே இருப்பானா?”
என்று கேட்டார் பசுபதி.

“அட, இதுக்காகவா ஆள்வார்பேட்டையிலேர்ந்து
இம்மாந்தூரம் வந்தீங்க?” என்று அவரை ஏற இறங்கப்
பார்த்துக்கொண்டே கேட்டார் ஆட்டோக்காரர்.

“சின்ன வேலை செய்யற தையல்காரங்க இப்போ
எங்கே இருக்காங்க? எல்லாம் பெரிய பெரிய கடைங்க.
சின்ன கடைகள் டவுன்ல இருக்கலாம்னு என் ப்ரெண்ட்
சொன்னார்” என்றார் பசுபதி.

“ஆள்வார்பேட்டைலயும் மயிலாப்பூர்லயும் சின்ன
வேலை செய்யற தையல்காரங்க உங்க கண்ணுக்குத்
தென்படலைன்னுசொல்லுங்க. எல்லோராலயுமா சிட்டி
சென்டர்லயும், ஸ்பென்ஸர் பிளாஸாலயும் ரெடிமேட்
துணி வாங்க முடியும்?

எட்டாவது மாடியிலேர்ந்து, தரையிலே ஊர்ந்து போற
எறும்பைப் பார்க்க முடியுமா? நீங்க எட்டாவது
மாடியிலே இருக்கிறவங்க. உங்க கண்ணுக்கு
ஆள்வார்பேட்டையிலே சின்ன வேலை செய்யற
டெய்லர் யாரும் தெரியலே, அவ்வளவுதான்!”

“நீங்க வேற! நான் எட்டாவது மாடியிலே இருக்கிறவன்
இல்லே. எப்பவோ பார்த்த வேலைக்குப் பென்ஷன்
வாங்கிட்டிருக்கிறவன். இந்த மாதிரி பழைய
கால்சட்டைக்குப் பிஞ்சு போன ஊக்கியை வெச்சுப்
போட்டுக்கிறவன்! சரி, ஆழ்வார்பேட்டையிலே
உங்களுக்குத் தெரிஞ்ச டெய்லர் இருந்தா சொல்லுங்க,
திரும்பிப் போயிடுவோம்!” என்றார் பசுபதி.

“வந்ததுதான் வந்தோம். இங்கே இருக்காரானு
பார்ப்போம்” என்றார் ஆட்டோக்காரர்.

கொஞ்ச தூரம் சென்றதும்… “அதோ ஒரு
கடை இருக்கு, பாருங்க!”

“பெரிய கடையா இருக்கும் போலிருக்கே,
தைப்பானா?” என்றார் பசுபதி.

“கேட்டுப் பாருங்க. கேக்கறதிலே என்ன தப்பு?’’

பெரிய கடைதான். உள்ளே புகுந்ததும் குளிர்க் காற்று
வீசிற்று. வாடிக்கைக்காரர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்.

மற்றவர்கள் நடுத்தர வயதினர். சூட்டோ, ஷெர்வானியோ
தைத்துக்கொள்ள வந்திருப்பவர்கள் போல் தோன்றியது.

ட்ரிம்மாக உடை தரித்து, இன்முகத்துடன் வரவேற்கும்
கடைக்கார இளைஞனிடம் சென்று, துணிப்பையிலிருந்து
பழைய பேன்ட்டை எடுத்து, ஊக்கி தைத்துத் தர முடியுமா
என்று கேட்பதற்கு அவருக்குக் கூச்சமாக இருந்தது.
திரும்பிப் போய்விடலாமென்று தீர்மானித்தார். அதற்குள்,
அந்தக் கடையைச் சேர்ந்த நடுவயதுக்காரர் ஒருவர்,
அவரை “வாங்க” என்று வரவேற்றார்.

பசுபதி மிகுந்த தயக்கத்துடன், “என்னுடையது
பெரிய வேலை இல்லே! ரொம்பச் சின்ன வேலை” என்று
சொல்லிவிட்டுத் துணிப் பையிலிருந்து கால்சட்டையை
எடுத்துக் காட்டிக் கேட்டார்… “இது ரொம்பப் பழைய பேன்ட்.
ஆனா, எனக்கு சென்டிமென்டல் வேல்யூ! இதுக்கு
இடுப்பிலே ‘பக்கிள்’ போயிடுச்சு. வெச்சுத் தர முடியுமா?”

அவன் அவரைப் பார்த்துப் புன்னகை செய்தான்.
அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குப்
பசுபதி முட்டாள் இல்லை. பேன்ட்டைத் துணிப்பைக்குள்

வைத்துக்கொண்டு, “சரி, நான் வரேன்” என்றார்.
அதற்கும் அதே புன்னகைதான் பதில்!

அவர் ஆட்டோக்காரரை அடைந்தபோது, அவர் சாப்பிட்டு
முடித்துக் கை கழுவிக்கொண்டு இருந்தார். “ஐயா! நீங்க
சாப்பிட்டப்புறந்தானே புறப்பட்டீங்க?” என்றார்
ஆட்டோக்காரர்.

“ஆமாம்!”

“போன காரியம் என்ன ஆச்சு?”

“என் துணியை வெளியிலே எடுத்தவுடனேயே
கடைக்காரன் சிரிச்சான். நான் வந்துட்டேன்” என்றார் பசுபதி.

ஆட்டோக்காரர் புன்னகை செய்தார்.
“இந்த வயசான காலத்திலே, பழைய பேன்ட்டுக்கு
ஊக்கி போட இந்த வேவாத வெயில்ல
அலைஞ்சுக்கினுருக்கீங்களே, எனக்கு வேற முந்நூறு ரூபா!
இது உங்களுக்கு வேடிக்கையா இல்லே?’’

“அதான் சொல்றேனே… இது பழசா இருக்கலாம்.
ஆனா, என் வீட்டுக்கார அம்மா என் பொறந்த
தினப் பரிசா பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாலே
கொடுத்தது. அவ போயும் பதினஞ்சு வருஷமாகுது. இப்போ
புரிஞ்சுதா?” என்றார் பசுபதி.

சில விநாடி அமைதிக்குப் பின், “நீங்க போறப்போ இந்த
பேன்ட்டையும் கொண்டு போக முடியுமா? பந்தம் பாசம்
எல்லாத்தையும் பார்த்தவன்தான் நானும். அந்த
ஆடம்பரம் எல்லாம் நமக்குக் கட்டிவராதுன்னு
தீர்மானிச்சுட்டேன். இப்பொ நானா தேடிக்குனு இருக்கிற
இந்த வாள்க்கையிலே ஒரு சிக்கலும் இல்லே!” என்று
சொல்லிக்கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தார்
ஆட்டோக்காரர்.

“இப்போ நீங்க என்ன சொல்றீங்க? இந்தப் பழைய
பேன்ட்டைத் தெருவிலே கடாசிடலாம்கிறீங்களா?”
என்றார் பசுபதி.

“கடாச வேணாம்! பளசா இருந்தாலும் கிளியலே,
கண்டிஷனா இருக்கு. தகுதியா இருக்கிறவங்க
யாருக்காச்சும் கொடுங்களேன். ஊக்கி தெச்சுப்
போட்டுப்பான். உங்க வீட்டுக்கார அம்மா எங்கே
இருந்தாலும் அவங்க மனசும் குளிரும்” என்றார்
ஆட்டோக்காரர்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, பசுபதி சொன்னார்…
‘’நீங்க தப்பா நினைச்சுக்கலேன்னா ஒண்ணு
சொல்லட்டுமா?”

“சொல்லுங்க!”

“நீங்களே இதை எடுத்துக்குங்களேன்!”

ஆட்டோக்காரர் முகச் சலனம் ஏதுமில்லாமல்
பசுபதியைத் திரும்பிப் பார்த்தார். ஒன்றும் கூறவில்லை.
பசுபதிக்கு தான் அவ்வாறு சொல்லியிருக்கக்கூடாதோ
என்று தோன்றிற்று.

வீடு வந்து சேரும் வரை ஆட்டோக்காரர் எதுவும்
பேசவில்லை. வண்டியிலிருந்து இறங்கியவுடன்,
பசுபதி சொன்னார்… “ஸாரி! நான் உங்ககிட்டே
அப்படிச் சொன்னது தப்புதான். யோசிக்காம பேசிட்டேன்.
மன்னிச்சுடுங்க!”

“‘பேன்ட்டைக் கொடுங்க” என்றார் ஆட்டோக்காரர்.
“நான் பேன்ட்டை எடுத்துக்கறேன். ஆனா, ஒரு
கண்டிஷன்! நீங்க எனக்கு முந்நூறு ரூபா கொடுக்க
வேணாம். அதான் விலை. நான் யார்கிட்டேர்ந்தும்
எதையும் தானமா வாங்கினதில்லே. உங்க உணர்ச்சியை
விலை பேசறேன்னு நினைக்க வேணாம். சும்மா
வாங்கிக்கினு போனேன்னா, எனக்கு நைட்டு தூக்கம்
வராது. இது நான் என் தூக்கத்துக்குக் கொடுக்கிற
விலை” என்றார் ஆட்டோக்காரர்.

“இது தானம் இல்லே. தட்சணை. நீங்கதான் என் குரு.
உங்ககிட்டேர்ந்து நான் பல விஷயங்களைக்
கத்துக்கிட்டிருக்கேன்” என்றார் பசுபதி.

கால்சட்டையை வாங்கிக்கொண்டு, பசுபதி கூறியது
காதிலேயே விழாதவர் போல் வண்டியைக்
கிளப்பிக்கொண்டு போய்விட்டார் ஆட்டோக்காரர்.

வண்டி முன்னைக்குச் சற்று வேகமாகப் போவது போல்
பசுபதிக்குத் தோன்றிற்று!

.
—————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to “குருதட்சணை” – இந்திரா பார்த்தசாரதி

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    “இது தானம் இல்லே. தட்சணை. நீங்கதான் என் குரு.
    உங்ககிட்டேர்ந்து நான் பல விஷயங்களைக்
    கத்துக்கிட்டிருக்கேன்” என்றார் பசுபதி. – அற்புதம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.