யார் சொல்வதைக் கேட்பது…? கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (4)

….
….

….

மனிதரில் பலருக்கு எக்கச்சக்கமான கவலைகள்…

சிலருக்கு குண்டாக இருக்கிறோமே என்று…
சிலருக்கு ஒல்லியாக இருக்கிறோமே என்று…
சிலருக்கு அதிகமாக சாப்பிடுகிறோமோ என்று கவலை…
சிலருக்கு மிகவும் கொஞ்சமாக சாப்பிடுகிறோமோ என்று…

சிலருக்கு ரொம்ப தூங்குகிறோமோ என்று …
சிலருக்கு மிகவும் குறைவாக தூங்குகிறோமோ என்று…

குண்டாக இருப்பதும்,
ஒல்லியாக இருப்பதும்,
அதிகம் தூங்குவதும்,
குறைவாகத் தூங்குவதும் –

– எதனால் நிகழ்கின்றன ….?

நம் செயல்கள் பொதுவாக இரண்டு விதங்களில் அமைகின்றன.
மனம் சொல்வதைக் கேட்பது ஒன்று…
உடல் சொல்வதைக் கேட்பது ஒன்று…

சாப்பிடும்போது, வயிறு –
போதும்…
இதற்கு மேல் சாப்பிட்டால் பிரச்சினை வரும் –
என்று சொன்னாலும் கூட, சாப்பிடும் பண்டம்
நமக்குப் பிடித்தமானதாக இருந்தால்,
அளவிற்கு மிஞ்சி சாப்பிடுகிறோம்….
இங்கே மனம் சொல்வதைக் கேட்கவில்லை;
வயிறு சொல்வதையும் கேட்கவில்லை;
நாக்குக்கு அடிமையாகிறோம்.
பின்னர் அவஸ்தைக்குள்ளாகிறோம்.

அதே போல், பசி இல்லாத நேரங்களில் கூட –
உடலுக்கு/வயிற்றுக்கு எதுவும் தேவைப்படாத நேரங்களில் கூட –
பழக்கத்தின் காரணமாக, கடமைக்கு சாப்பிட்டு வைக்கிறோம்.

அதிகமாக சாப்பிடுவதும் –
தேவையில்லாதபோது –
சாப்பிடுவதும் எதனால் நேர்கிறது…?
நமது உடல் சொல்வதை உணர்வு கேட்பதில்லை….

———————————–


……

……


……

……

இது போல் குழந்தைகள் வளர்ப்பில் சிலர்
எப்போதும் கவலையாகவே இருப்பதை பார்த்திருக்கிறேன்.

காரணம் – அவர்களது சிறு வயதுப் பிள்ளைகள்…

– கொடுக்கும் உணவை சாப்பிட மறுக்கிறார்கள்…
– ஏற்காமல் அழுது அமர்க்களம் பண்ணுகிறார்கள்…
– அல்லது குறைவாக சாப்பிடுகிறார்கள்.
– அல்லது கொடுக்கும் நேரத்தில் சாப்பிடுவதில்லை…
– தூங்க வேண்டிய நேரத்தில் தூங்குவதில்லை…

பொதுவாக குழந்தைகள் எப்போதெல்லாம்
பசியாக இருக்கிறதோ, அப்போது அழுது கேட்டாவது
தன் பசியை தீர்த்துக் கொண்டு விடும்.
பசி இல்லையென்றால் – சாப்பிடாது; அடம் பிடிக்கும்.

அதேபோல் தூக்கம் வரும்போது தான் தூங்கும்…
நாம் சொல்லுவதற்காக தூங்காது.
அதே போல் தூக்கம் எப்போது வந்தாலும் தூங்கி விடும்…
பகலா, இரவா என்கிற கவலையெல்லாம் அதற்கில்லை.

ஒரு சமயம் இந்த விஷயம்
ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
20 சிறு பிள்ளைகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி,
6 மாத காலத்திற்கு, அவர்களை தொடர்ந்து கவனித்து,

ஆவணப்படுத்தினார்கள்…

இந்த ஆராய்ச்சி காலத்தில், அந்தச் சிறு பிள்ளைகளை
எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை;
அவற்றை விரும்புகிற நேரத்தில், விரும்புகிற அளவுக்கு
சாப்பிட விட்டார்கள்;

சாப்பிட, நிறைய options வைத்திருந்தார்கள்.
அந்த குழந்தைகள் தாங்கள் விரும்பியதை சாப்பிட்டன.
அதே போல் அவை விரும்புகிற வரை
விளையாடவும் விட்டார்கள்.
அவற்றை நேரத்தில் தூங்கச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை;
அவற்றிற்கு தூக்கம் வந்தபோது, அவை தானாகவே தூங்கின.

இயல்பில் விட்டதில் தெரியவந்தது –
அந்தக்குழந்தைகள் தேவைக்கு அதிகமாக
எப்போதும் சாப்பிடவில்லை;
குறைவாகவும் சாப்பிடவில்லை;
அவற்றிற்கு தேவையான – சரியான – அளவு சாப்பிட்டன.

அவற்றிற்கு உடல் நலம் குன்றியபோது, தாமாகவே
உணவை குறைத்துக் கொண்டன. அந்த நோய்க்கு
ஒத்துக்கொள்ளாத உணவை – அவை
தாமாகவே ஒதுக்கி விட்டன.

இதிலிருந்து அவர்கள் அறிய வந்தவை –

குழந்தைகளுக்கு இயல்பாகவே தங்கள் உடலுக்கு
தேவையானது என்ன என்பது குறித்த புரிதல் இருக்கிறது.
தங்கள் பசிக்கு மட்டுமே சாப்பிட்டன.
தங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாததை அவர்கள்
தாங்களாகவே தவிர்த்து விட்டார்கள்.
அந்தக் குழந்தைகள், தங்களுக்கு
தேவையான அளவு தூங்கின.

ஆக, அந்த குழந்தைகளுக்கு அவர்களின்
உடல் சொல்வதை மனம் கேட்கிறது….
அதன்படியே நடக்கின்றனர்.

ஆனால் வளர்ந்த மனிதர்கள்,
வாய்க்கும்,
நாக்கிற்கும்,
பழக்கத்திற்கும்
அடிமையாகி,
உடல் சொல்வதைக் கேட்காமல் –
உடல் நலத்தை இழக்கின்றனர்….

பழக்கத்திற்கும், கட்டுப்பாடுகளுக்கும் அடிமையாவதை விட –
உடல் சொல்வதை, மனம் சொல்வதை – கேட்டால்….
இன்னும் நன்றாக வாழ முடியுமோ…?

……

……

.
——————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to யார் சொல்வதைக் கேட்பது…? கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (4)

 1. புவியரசு சொல்கிறார்:

  நல்ல யோசனை.
  என் மனதிலும் நீண்ட நாட்களாக
  இது போன்ற யோசனைகள் தான்.

  இந்த இடுகைக்காக
  நீங்கள் தேர்ந்தெடுத்து பதிவிட்டிருக்கும்
  புகைப்படங்கள் அருமை. அழகு. அற்புதம்.

 2. புதியவன் சொல்கிறார்:

  நல்ல டாபிக் இது.

  என் பாஸ் எனக்குச் சொல்லுவார். எந்த ஸ்வீட் வேண்டுமானாலும் எப்போதும் ஒரு சிறு துண்டு சாப்பிட்டால் போதும். அதற்கு அப்புறம் சாப்பிடுவதெல்லாம் வயிற்றை ரொப்புவதற்குத்தான், ருசிக்கு இல்லை என்பார். என் பெண், சிறிது சாப்பிட்டவுடன் இடத்தைக் காலிசெய்துவிடுவாள் (என்னையும் அப்படியே பழகச் சொல்லுவாள்… ஆனால் நான் மனம் போதும் என்று சொன்னாலும் சும்மா பஜ்ஜி, இனிப்பு வகைகள் போன்றவை செய்யும்போது அதிகமாகவே சாப்பிடுவேன்). ஓரிரு முறை, ஒரு சப்பாத்தியும் கொஞ்சம் அதிக சப்ஜியும் சாப்பிட்டபோது கொஞ்ச நேரத்தில் நல்ல திருப்தி வந்தது. ஆனால் அதிகமாக சாப்பிடும்போது, சாப்பிட்டு முடித்த கொஞ்ச நேரத்தில் regretதான் வரும். ஏண்டா தேவையில்லாமல் அதிகமா சாப்பிட்டுவிட்டோமே என்று.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.