மனசாட்சியின் படிக்கட்டுகள் – எஸ்.ராமகிருஷ்ணன்

….
….

….

படைப்பாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்
அண்மைக் காலத்தில் நிறைய குறுங்கதைகளை எழுதி
வெளியிட்டிருக்கிறார். சிறப்பாக இருக்கும் அவற்றைப்
படிக்கும்போதெல்லாம், இவற்றில் சிலவற்றை விமரிசனம்
தள வாசகர்களும் படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க
வேண்டுமென்று நினைப்பேன்… எப்படியோ -தவறி விடுவேன்.

இன்று நினைவு வந்தது. மீண்டும் தவற விட்டு விடக்கூடாது
என்று உடனடியாக இங்கே பதிகிறேன்.

இந்த குறுங்கதையை படித்து முடிக்கும்போது,
வாசகர்கள் ஒவ்வொருவருக்கும், தான் செய்த அல்லது
தனக்கு இழைக்கப்பட்ட குறைந்தபட்சம் ஒரு தவறாவது
நிச்சயமாக நினைவிற்கு வந்தே தீரும்….
படித்து முடிக்கும்போது நீங்களே அதை உணர்வீர்கள்.

—————————————————-

மனசாட்சியின் படிக்கட்டுகள் –
– குறுங்கதை- எஸ்.ராமகிருஷ்ணன்

நூறு வீடுகளுக்கும் குறைவாக உள்ள சிறிய ஊராகயிருந்தது.
காரில் வந்து இறங்கிய அவர்களைத் தெருவில் விளையாடிக்
கொண்டிருந்த சிறார்கள் வேடிக்கை பார்த்தார்கள். அதில்
ஒரு சிறுவனை அழைத்து கந்தசாமி வேணாங்குளம்
எங்கேயிருக்கிறது எனக்கேட்டார். அந்த சிறுவன் பரிகாரமா
எனக் கேலியான குரலில் கேட்டபடியே தெற்கே கையை
காட்டினான்.

காரிலிருந்து கந்தசாமியின் மனைவியும் அவரது
ஒரே மகளும் பரிகாரம் செய்யச் சொல்லி அழைத்து வந்த
ஜோசியரும் இறங்கினார்கள். ஜோசியர் அவிழ்ந்த வேஷ்டியை
இறுக்கிக் கட்டியபடியே சொன்னார்.

ரொம்ப பவர்புல் குளம் சார். எல்லா தோஷமும் போயிடும்.

கந்தசாமி தலையாட்டியபடியே தெற்கு நோக்கி நடக்க
ஆரம்பித்தார்.

கந்தசாமிக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தோல் நோய்
பீடித்திருந்தது. செய்து வந்த வணிகமும் எதிர்பாராமல்
நஷ்டமானது.

கட்டிக் கொடுத்த மகள் வீட்டிலும் பிரச்சனை.
இது போதாது என்று நீதி மன்றத்தில் நடந்து வந்த பழைய
வழக்கு ஒன்றிலும் அவர் தோற்றுப்போனார்.

பரமபதக் கட்டத்தில் பாம்பு தன்னை கீழே இறக்கிவிடுவதாக
உணர்ந்தார். கோவில்கள். பூஜைகள்
பரிகாரங்கள் என்று எதையெதையோ செய்து வந்தார்.
எதிலும் நலமடையவில்லை.

அப்போது தான் வேணாங்குளம் பற்றி சொன்ன ஜோசியர்
அங்கே தோஷம் நீங்க – வேணாட்டு மன்னரே குளித்துப்
போனதாக கதை சொன்னார். கந்தசாமிக்கு நம்பிக்கை
ஏற்பட்டது. வேணாங்குளத்திற்கு போய் வர
ஒத்துக் கொண்டார்.

சிறிய கிராமம். சிவப்பு நாழி ஒடு வேய்ந்த வீடுகள்.
சற்றே அகலமான தெரு. ஆனால் ஆள் நடமாட்டமேயில்லை.
சில வீடுகள் பூட்டப்பட்டிருந்தன.

அவர்கள் வேணாங்குளத்திற்குப் போன போது காய்ந்து
உலர்ந்து போயிருந்தது. படிகட்டுகள் தூசிபடிந்திருந்தன.
குளத்தின் நான்கு பக்கமும் நான்கு பதுமைகள்.

இது தான் வேணாங்குளமா என்ற சந்தேகத்தில் அருகில்
விறகு பிளந்து கொண்டிருந்த ஒருவரிடம் இது தான்
பரிகாரக் குளமா எனக்கேட்டார். ஆமாம் என
தலையாட்டியபடியே அவர் தனது வேலையை தொடர்ந்தார்.

கந்தசாமி தனது மகளும் மனைவியும் வரட்டும் என
தூர்ந்து போயிருந்த குளத்தின் படியில் நின்றபடியே இருந்தார்.
குளம் வற்றிப் போனது அறியாமல் வந்துவிட்டோமோ.,
ஜோசியர் இதைக் கூடவா விசாரிக்காமல் இருப்பார் என்று
கோபமாக வந்தது.

ஜோசியரும் அவரது மனைவி மகளும் வேணாங்குளத்தருகே
வந்தார்கள்.

குளத்தில் கிழிந்த துணிகளும் உலர்ந்த இலைகளும்
பிளாஸ்டிக் குப்பைகளுமாக கிடந்தன. கந்தசாமி குளத்தில்
தண்ணியே இல்லையே என ஜோசியரிடம் கேட்டார்.

பல வருஷமா காய்ந்து போய் தான் கிடக்கு.
உள்ளே இறங்கி தண்ணி இருக்கிறதா நினைச்சிகிட்டு
தலையை நனைச்சிட்டு வாங்க என்றார்.

தண்ணியில்லாம எப்படிய்யா குளிக்கிறது என கந்தசாமி
கோபத்துடன் கேட்டார். செய்த பாவம் என்ன கண்ணுல
தெரியவா செய்யுது. மனசு அதை உணரலே…?
அப்படி தான் பரிகாரமும். இந்த குளத்துல கண்ணுக்கு
தெரியாத தண்ணீர் இருக்கு. அதை உணர்ந்து குளிச்சா
தோஷம் போயிடும். நம்பிக்கை தானே எல்லாமும்.

கந்தசாமி காய்ந்து போன குளத்தினுள் இறங்கினார்.
பத்து இருபது படிகள் கொண்டதாக தோன்றிய குளத்தினுள்
இறங்க இறங்க படிகள் கீழே போய்க் கொண்டேயிருந்தன.

ஒற்றை ஆளாக அவர் இறங்கிக் கொண்டேயிருந்தார்.
எவ்வளவு நேரம் இறங்கினார் என்று தெரியவில்லை.
ஆனால் அவர் நிமிர்ந்து பார்த்த போது பெரும்பாதாளம்
ஒன்றினுள் இறங்கி நிற்பது போல தோன்றியது.
இன்னமும் குளத்தின் அடிப்புறம் வரவில்லை.
படிகள் கீழே போய்க் கொண்டேயிருந்தன.

என்ன விந்தையிது. சிறிய குளம் எப்படி இவ்வளவு
பெரிதாக மாறியது எனக் குழப்பம் வந்தது. மனதில்
ஏதேதோ எண்ணங்கள் ஒன்று கூடின.

கூட்டு வணிகம் செய்த போது அண்ணனை ஏமாற்றியது,
நம்பிக் கொடுத்து வைக்கப்பட்ட பணத்தை மோசடி
செய்தது என அவரது பழைய பாவங்கள் யாவும்
நினைவுகளாக வந்து போயின.

சொந்த சகோதரனை ஏமாற்றிய ஒருவன் எப்படி
வீழ்ச்சி அடையாமல் இருப்பான்…? திடீரெனை
அண்ணன் முகம் மனதில் வந்து போனது.

தான் தவறே செய்யவில்லை என்பது போல
இத்தனை நாட்களாக பாவனை செய்து வந்தது அந்த
நிமிசத்தில் மனதில் உறுத்த ஆரம்பித்தது.

மறைத்துக் கொள்ளும் போது தவறுகள்
எடையற்றிருக்கின்றன. உணரத் துவங்கியதும் தவறின் எடை
மிகுந்து விடுகிறது என கந்தசாமிக்குப் பட்டது

தான் மனசாட்சியின் படிக்கட்டுகளில் இறங்கிக்
கொண்டிருக்கிறோம் என்று தாமோதரனுக்குப் புரிந்தது.

செய்த பாவத்திலிருந்து விடுபடுவதற்கு ஏமாற்றிய
அண்ணன் குடும்பத்திற்கு உரியதை கொடுத்து விடவேண்டும்
என்று மனதில் பட்டது.

அந்த நினைப்பு வந்தவுடன் திடீரென கால்களில்
தண்ணீர் படுவது போல உணர்ச்சி எழுந்தது. அவர்
நின்றிருந்த படி தண்ணீரினுள் இருப்பது போல உணர்ந்தார்.
குனிந்து தண்ணீரை அள்ளித் தலையில் தெளிப்பது போல
பாவனை செய்தார்.

“படியில் நின்னுகிட்டு அப்படி என்ன யோசனை“
என மனைவி சப்தமாக கேட்டதும் அவருக்கு தன் உணர்வு
வந்தது.

குளத்தின் ஆழத்திற்கு இறங்கவேயில்லையா.
மனம் தான் அப்படி கற்பனை செய்து கொண்டதா என
குளத்தை உற்றுப் பார்த்தார். காய்ந்த படிக்கட்டுகள். நீரற்ற குளம்.

அந்தக் குளம் மனசாட்சியை விழிப்படையச் செய்கிறது.
செய்த குற்றங்களின் ஈரத்தை உணரவைக்கிறது.
உண்மையில் அது மாயக்குளமே தான்.

அவர் குளித்து முடித்தது போல பாவனை செய்தபடியே
குளத்திலிருந்து வெளியே வந்தார்

“மனசில எதையாவது நினைச்சிட்டு காசை குளத்துல
போடுங்க“ என்றார் ஜோசியர்

பையிலிருந்த சில்லறைகளை எடுத்து அண்ணன்
குடும்பத்திற்கு உரியதை கொடுத்துவிடுகிறேன் என
நினைத்தபடியே குளத்தில் வீசி எறிந்தார்

குளத்திலிருந்த பதுமையின் பார்வை அவரைக்
கேலியாகச் சிரிப்பது போலிருந்தது

.
———————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to மனசாட்சியின் படிக்கட்டுகள் – எஸ்.ராமகிருஷ்ணன்

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  மனசாட்சியின் படிக்கட்டுகள் – எஸ்.ராமகிருஷ்ணன் – மெய்சிலிர்க்க வைக்கிறது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

 2. atpu555 சொல்கிறார்:

  நல்ல கதை. இடையில் தாமோதரன் என்று ஒருவர் வருகிறார். யார் அவர்?

 3. Gopi சொல்கிறார்:

  atpu555 – அடடா எப்பேற்பட்ட சந்தேகம் 🙂

 4. Gopi சொல்கிறார்:

  ஆசிரியர் கவனக்குறைவாக
  கந்தசாமி’க்கு பதிலாக தாமோதரன்
  என்று அந்த இடத்தில் எழுதி விட்டார் அய்யா.
  புரிந்துக் கொள்ளக்கூடியது தானே.
  இதை ஒரு விஷயமாக எடுத்துக்கொண்டு
  பெரிதுபடுத்தலாமா ?

  • atpu555 சொல்கிறார்:

   இத்தனை பிரபலமான கதாசிரியர் அத்தவறை விடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது மீள்திவு என்பதால் திருத்திப் பதிவிடுவது சிரமமல்ல. அப்படிப் பதிவிடவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். எனது கேள்வி உங்கள் மனதைப் புண்படுத்துவதால் அதை நீக்கி விடுகிறேன்.

   • atpu555 சொல்கிறார்:

    அப்பதிவை நீக்கவோ, திருத்தவோ வசதி இருப்பதாகத் தெரியவில்லை. எனவே மன்னிக்கவும்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    atpu555,

    நண்பரே,

    நான் இப்போது தான் பின்னூட்டத்தில்
    எழுதுகிறேன். முதலில் எழுதியவர்கள்
    எல்லாம் வாசக நண்பர்கள்.

    உங்களுக்கான என் பதில் –

    எஸ்.ராமகிருஷ்ணனின் கதையை முதல்
    தடவை நான் அவரது தளத்தில் படிக்கும்போதே
    இதை கவனித்தேன். இருந்தாலும்
    இன்னொருவர் எழுதியதைத் திருத்த
    எனக்கு அதிகாரமில்லை என்பதால்,
    அதை அப்படியே இங்கே பதிவிட்டேன்.

    இந்த விஷயம் இவ்வளவு தூரம்
    கவனிக்கப்படும் என்று தெரிந்திருந்தால்,
    நானே அதைப்பற்றி இடுகையில்
    பின்குறிப்பாக எழுதி இருப்பேன்.

    இது மிகவும் சிறிய விஷயம்… விடுங்கள்.
    நல்ல கதையை ரசித்த திருப்தியுடன்
    இருப்போம்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 5. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Yes.I too had that doubt. Who is that Damodaran?

 6. Ram சொல்கிறார்:

  அது வேற ஒண்ணும் இல்லை. இந்தக் கதையை ராம்கிருஷ்ணன் எழுதிக் கொண்டிருக்கும் போது அவரது மனைவியின் குரல் கேட்டது..’ ‘எப்ப‍ப் பார்த்தாலும் கதை எழுதறன்னு கம்யூட்டரை தட்டிகிட்டு இருந்தால் எப்ப சமைக்கறது சீக்கரம் ஆகட்டும்”. உடனே எஸ்ரா யூடிபை திறந்து நல்ல ரெசிப்பி ஒன்றினை தேடினார், செஃப் தாமோதரன் செய்த ஐட்டம் ஒன்றினை அன்று செய்வது என அதை குறிப்பெடுத்தார். பின்பு இந்த கதைய முடித்து விட்டு சமையலுக்கு செல்வோம் என மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தார். ஆனால் சமையல் ஞாபகமாகவே இருந்ததால் கதாபாத்திரத்தை தாமோதரன் என மாற்றி எழுதிவிட்டார். அப்போது அவர் மனைவியார் இன்னுமா ஆரம்பிக்கல என சவுண்டு விட்டார். உடனே சமையலறைக்கு ஓடிச்சென்று வேலை முடிந்த‍தும், தாமோதரனை மறந்து நிஜ கதாபாத்திரத்தை நினைபடுத்தி கதையை எழுதி முடித்தார் அவ்வளவுதான்! போதுமா டீடெயிலு!

 7. Giri Alathur சொல்கிறார்:

  மனசாட்சிக்கு படிக்கட்டுகள் உண்டு போலும் ..

 8. புதியவன் சொல்கிறார்:

  செய்த செயல்களை நினைத்துப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தாங்கள் செய்துவந்த அநீதி தெரியும். ஆனால் பலதடவை, தெரியாமல் பலருக்கு அநீதி செய்திருப்போம். அதற்குத்தான் என்ன பரிகாரம் என்றே தெரியாது.

  அது சரி… அரசியல்வாதிகள்லாம் இப்படி குளத்தைத் தேடிப்போனால் எத்தனை கிலோமீட்டர்கள் படிக்கட்டுகள் வழியாக இறங்கவேண்டியிருக்குமோ..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.