….
….
….
இந்த தலைப்பில் இதற்கு முந்தைய இடுகையை பார்க்க –
இன்னும் கொஞ்சம் தெளிந்தால் தான் என்ன…
நமக்கு மன வலிமை, அமைதி, புத்தியில் தெளிவு
ஏற்பட என்ன செய்யலாம் …?
தெய்வ வழிபாடா … தியானமா…?
வழிபாடு என்றால் எதையாவது நினைத்து,
நமக்கு எதையாவது வேண்டி
எந்தக் கடவுளையாவது பிரார்த்திப்பது தான் வழிபாடா…?
எனக்கு இன்ன காரியம் வெற்றிகரமாக நடந்தால்,
நான் உன் கோவிலுக்கு நடந்தே வருகிறேன்….
மொட்டையடித்துக் கொள்கிறேன்…
காவடி எடுக்கிறேன்…
அங்கப் பிரதட்சணம் செய்கிறேன்…
கிரிப் பிரதட்சணம் செய்கிறேன்..
மண் சோறு சாப்பிடுகிறேன் – இப்படியெல்லாம் ….
எந்தவித வேண்டுதலும் இன்றி வழிபட முடியாதா…?
அப்படி எந்தவித வேண்டுதலும்
ஒருவருக்கு இல்லையென்றால்,
அவர் எதற்காக வழிபட வேண்டும்…?
அதற்கான அவசியம் என்ன…?
எதையாவது வேண்டி தான் வழிபட வேண்டும் என்றால்,
அது கடவுளுக்கும் நமக்கும் இடையே நடக்கும்
வியாபாரமாகி விடுகிறதல்லவா…?
சிலருக்கு எதாவது துன்பம் நேரிடும்போது மட்டும்
கடவுளின் நினைவு வந்துவிடும்…
அந்த துன்பம் நீங்கியவுடன் –
கடவுளின் நினைப்பும் போய் விடும்.
இது சரியா…?
சரி வழிபாட்டுக்கு மாற்று என்ன…? தியானமா…?
தியானம் என்றால் என்ன….?
எந்தக் கடவுளை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்…?
எந்த மந்திரத்தை அல்லது சொற்களைச் சொல்ல வேண்டும்…?
என்ன செய்ய வேண்டும்…?
எப்படிச் செய்ய வேண்டும்…?
மத அடிப்படையில் சிலர் தியானம் செய்யும்போது,
இஷ்ட தெய்வத்தை – அதாவது
தங்களுக்குப் பிடித்த கடவுள் உருவத்தை
மனதில் இருத்திக் கொண்டு, அதிலேயே முனைப்பாக
கவனத்தை செலுத்துவது உண்டு…
இதில் லேசில் வெற்றி கிடைப்பதில்லை…
மனம் ஒரு குரங்கு…ஒரு இடத்தில் நிற்காது…
மனம் அலைமோதுவதை தவிர்ப்பது மிக மிகக் கடினம்.
அம்மனை நினைத்துக் கொண்டு துவங்கினால் –
நயன் தாராவில் போய் நிற்பதுண்டு…. 🙂 🙂
சிலர் வேறு ஒருவித முறையை கையாள்வார்கள் –
கையில் 108 மணிகள் உள்ள துளசி மாலை அல்லது
ருத்திராட்ச மாலையை வைத்துக்கொண்டு,
ஒவ்வொன்றாக முன் நகர்த்திக்கொண்டே போவது.
அதிலேயே கவனத்தைச் செலுத்துவது.
ஒவ்வொரு முறை நகர்த்தும்போதும், ஓம் என்று
அல்லது வேறு எதாவது மந்திரத்தைச் சொல்வது…
இந்த முறைகளுக்குள் நான் செல்லவில்லை.
நான் சொல்ல முற்படுவது –
கடவுளைப் பற்றியோ,
மதத்தைப் பற்றியோ,
மந்திர ஜபங்களைப் பற்றியோ நினைக்காமல் –
யார் வேண்டுமானாலும்,
எந்த மதத்தினர் வேண்டுமானாலும்,
எந்த பாலினத்தவர், எந்த வயதினர் வேண்டுமானாலும்
செய்யக்கூடிய –
வெகு ஒரு சுலபமான தியான முறை உண்டு….
என்ன அது….?
ஒன்றுமே செய்ய வேண்டாம்…
அமைதியாக வெறுமனே அமர்ந்திருந்தால் போதும்.
நாம் எப்போதும் அமைதியில்லாமல் இருப்பதற்கு
முக்கியமான காரணம் என்ன….?
எதையாவது நினைத்துக் கொண்டே இருக்கிறோம்.
கடந்த கால நினைவுகள்…அல்லது
எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள்-எதிர்பார்ப்புகள்…
நம்மிடையே நிலவும் ஒரு தத்துவம் உண்டு –
கடந்த காலம் என்பது – உடைந்து போன பானை…
எதிர்காலம் என்பது – மதில் மேல் பூனை…
நிகழ்காலம் என்பது மீட்டப்படாத வீணை…
இந்த தத்துவம், எப்போதும் கடந்த காலம் அல்லது
எதிர்காலத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டு –
நிகழ்காலத்தை தவற விடுபவர்களுக்காக
சொல்லப்பட்டது.
இங்கே சொல்ல வந்தது வேறு விஷயம் …
தியானம் என்பது –
கடந்த காலத்தைப் பற்றிய சிந்தனையும் இன்றி
எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளும் இன்றி
எதைப்பற்றியும் சிந்திக்காத ஒரு மன நிலை…
எதைப்பற்றியும் சிந்திக்காமல் இருப்பது எப்படி…?
மனதின் சிந்தனைகளை நம்மால் அடக்க முடியுமா…?
அடக்க நினைத்தால் மீண்டும் மீண்டும்
சிந்தனைகள் தோன்றிக் கொண்டே தானே இருக்கின்றன…?
சிந்தனைகளை அடக்கினால் தானே பிரச்சினை…?
சிந்தையை ஒருமுகப்படுத்தினால்…?
அதெப்படி ஒருமுகப்படுத்த முடியும்…?
ஒரே விஷயத்தைப் பற்றி
எப்படி நினைத்துக் கொண்டிருக்க முடியும்… ?
நினைப்பு சிதறி விடுகிறதே…?
இதற்கான விடை தான் – மூச்சை கவனித்தல்…
நாம் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை
தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும் ஒரே செயல்
மூச்சு விடுதல் தான்… சுவாசம் தான்.
வெளியிலிருந்து காற்று உள்ளே போகிறது…
உள்ளேயிருந்து காற்று வெளியே போகிறது…
நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்,
விழித்திருந்தாலும், உறங்கிக் கொண்டிருந்தாலும் –
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் ஒரே செயல் –
மூச்சு விடுவது தான்.
எனவே நாம் வெளியே வேறு எதன் மீதும் கவனத்தை
செலுத்துவதை விட்டு விட்டு –
நம் மூச்சை கவனிக்கத் துவங்க வேண்டும்….
ஒவ்வொரு முறையும் வெளியிலிருந்து வரும் காற்று
எப்படி நமது மூக்கு வழியாக உள்ளே பயணித்து,
நுரையீரல் வரை சென்று, தங்கி, மீண்டும் எப்படி
வெளியே வருகிறது என்பதை –
மீண்டும் அந்த மூச்சு எப்படி உள்ளே வருகிறது,
தங்குகிறது, வெளியே போகிறது என்பதை…
கண்களை மூடிக்கொண்டு –
உள்நோக்கி கவனித்தால்…
தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தால் –
மனம் ஒருநிலைப்படுவதை நாமே உணரலாம்.
தினமும், காலையில் சில நிமிடங்கள், (20 நிமிடங்கள்..?)
மாலையில் சில நிமிடங்கள் – அமைதியான சூழ்நிலையில்
அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு,
நமக்குள் உள்நோக்கி கவனித்து
மூச்சு பயணப்படுவதை கவனித்தால் –
தியானம் வசப்படுவதை உணரலாம்.
இதற்கென்று தனியே நேரம், இடம் எல்லாம்
ஒதுக்கித்தான் செய்ய வேண்டுமென்றில்லை…
விருப்பமிருந்தால், எப்போது வேண்டுமானாலும்,
எங்கே வேண்டுமானாலும் இதில் ஈடுபடலாம்.
கொஞ்சம் பழக வேண்டும் – அவ்வளவே.
சுலபமாக தியானம் செய்யும் முறை ஒன்றை
இங்கே சொல்கிறேன்…
சொன்னால், சிரிப்பீர்கள்….
நான் சினிமா தியேட்டரில், இடைவேளைகளில்,
விளம்பரங்கள் ஓடும்போது கூட இதைச் செய்வதுண்டு.
நீண்ட தூர பஸ், ரயில்,
விமான பயணங்களின்போது கூட வசதியான,
ஓரமான இருக்கை கிடைத்தால் -செய்வதுண்டு.
————
நன்கு சௌகரியமாக அமர்ந்துகொண்டு,
Just – கண்களை மூடிக்கொண்டு,
நமது மூச்சு உள்ளே போவதையும்,
சிறிது தங்கி, மீண்டும் வெளியே வருவதையும்,
மீண்டும் அடுத்த மூச்சு உள்ளே போவதையும்
கவனிக்க – வேறு என்ன வசதி தேவை…?
என்ன – அருகில் இருப்பவர்கள்
நாம் தூங்கிக்கொண்டிருக்கிறோம் என்று
நினைத்துக் கொள்வார்கள்….!
————
இதனால் நமக்கு கைவரப் பெறுவதென்ன…?
பதட்டமும், பரபரப்பும்
கொஞ்சம் கொஞ்சமாக குறைதல்…
மனதில் அமைதி, நிதானம்…
தெளிவாக சிந்தித்து, முடிவெடுக்கும் திறன்…
எதையும் கூர்ந்து கவனிக்கவும்,
கவனத்தில் கொள்ளவும் முடிவது ….
அவ்வளவு தானா….?
இதற்கு மேலும் உண்டு…
ஆனால் அவற்றைப்பற்றி நான் இங்கே
சொல்லப் போவதில்லை…
இதைச் செய்பவர்கள் தாங்களாகவே –
அனுபவத்தில் உணர்ந்து கொள்ள வேண்டிய
விஷயம் அது…. !!!
.
—————————————————————————————————————————————————–
Meditation & focus – articulated very well! Iam surely going to start. Thank you
தியானத்தின் முதல் நிலை இதுதான். அதிலும் கண்ணைமூடிக்கொண்டு மூச்சை கவனிக்கவேண்டும். அதற்கு முன்னால் மூச்சு செல்லும் வழியில் உள்ள சக்ராவை நினைத்து அந்த இடம் வரை மூச்சு செல்லும்படி மூச்சிழுத்துவிட்டு (அரை நிமிடங்கள், இப்படி மூன்று இடங்களில்) பிறகு மூச்சை மெதுவாக இழுத்து கவனித்துக்கொண்டிருந்தால் போதுமானது. இதிலும் சில ஸ்டேஜ்கள் இருக்கின்றன. அவற்றின் பலனை நம்மால் உணரமுடியும்.
நான் மூன்று வருடங்கள் செய்துவிட்டு நிறுத்திவிட்டேன். (நிறைய தடவை நேரமின்மையால் 25 நிமிடங்கள் மட்டும் செய்தேன். ஆனா பொதுவா 45 நிமிடங்கள் என்னால் அமரமுடிந்தது). இந்தப் பயிற்சி கான்சண்ட்ரேஷனை அதிகரிக்கும், நிச்சயம் இரத்த அழுத்தத்தைச் சரி செய்யும்.
புதியவன்,
இந்த மூச்சுப் பயிற்சியை,
எவ்வளவு எளிமையாக,
எவ்வளவு சுலபமானதாக –
செய்வதற்கு லகுவானதாக –
சொல்லித்தர வேண்டுமோ – அவ்வளவு
எளிமையானதாகக் காட்டி நான் எழுதினேன்.
கெடுத்தீர்களே காரியத்தை …
என் முயற்சியை சுத்தமாக பாழாக்குகிறது
உங்கள் ” சக்கரங்கள்…”
வேண்டாமே இந்த “வேண்டாத பாரங்கள்…”
எத்தனை பேருக்குத் தெரியும்
” மூச்சு செல்லும் வழியில் உள்ள சக்கரங்கள்” பற்றி….?
——————————–
நண்பர் புதியவனின் இந்த பின்னூட்டத்தை
தெரிந்தோ, தெரியாமலோ –
படித்து விட்ட நண்பர்களுக்காக ஒரு விளக்கம்…
“இந்த சக்கரங்கள் பற்றிய எந்தவித
நினைப்பும் நமக்குத் தேவை இல்லை …
எந்தவித பாரமோ, சிந்தனையோ இல்லாமல்,
சும்மா கண்களை மூடிக்கொண்டு,
மூச்சை மட்டும் கவனித்துக் கொண்டிருங்கள் –
போதும். நமக்கு வேண்டிய பலன் இதிலேயே
கிட்டி விடும்…”
புதியவன் சொல்லும் “சக்கரங்கள்”
எல்லாம் அரை சந்நியாசிகள் செய்ய வேண்டிய
முயற்சிகள்… அவர் இடம் தெரியாமல்
இங்கே சொல்லி விட்டார்… 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்