தூக்கிலிடப்பட்ட புரட்சி வீரனின் – கடைசி 24 மணி நேரங்கள்…….புரட்சி வீரன் பகத் சிங்’கின் போராட்ட வரலாறு பற்றியும்,
ஆங்கிலேயரால் பகத்சிங் மற்றும் அவனது தோழர்கள்
ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் ரகசியமாக,
இரவோடிரவாக தூக்கிலிடப்பட்டது பற்றியும் முன்னதாக –

விவரமான இடுகையொன்று இதே விமரிசனம் தளத்தில்
இரண்டு பகுதிகளாக வந்தது…..

இரவில் தூக்கிலிடப்பட்டு, விடியும் முன்னே எரியூட்டப்பட்டு, அஸ்தியும் – ஆற்றில் கரைக்கப்பட்ட சுத்த வீரன் ஒருவனின் சரித்திரம் ….

இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே (part-2)

லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்ட இந்திய சுதந்திர
போராட்ட வீரன் பகத்சிங்’கின் வாழ்க்கையின் அந்தக் கடைசி
12 மணி நேரத்தில் நிகழ்ந்தவை மற்றும் அவனது மறைவுக்கு
பிறகு நாட்டில் மக்களிடையே ஏற்பட்ட உணர்ச்சிக்
கொந்தளிப்புகள் ஆகியவை குறித்த ஒரு தொகுப்பை
பிபிசி இணைய தளத்தில் பார்த்தேன்…

அதிலிருந்து சில பகுதிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் …

—————————–

1931 ஆம் ஆண்டு, மார்ச் 23ஆம் தேதி…

லாகூர் மத்திய சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை
போல இயல்பானதாக இல்லை. அன்று அதிகாலையிலேயே
அங்கு ஒரு சோகப்புயல் நுழைந்து மையம் கொண்டது.
ஆனால், அன்றைய மாலைப்பொழுதில், ஒரு வரலாற்று
சோகம் நிறைவேறப்போகிறது என்பது அப்போது யாருக்கும்
தெரிந்திருக்கவில்லை.

அன்று மாலை நான்கு மணிக்கே சிறைக்கைதிகள் தங்கள்
அறைகளுக்குள் அனுப்பப்பட்டது அனைவருக்கும்
ஆச்சரியத்தை அளித்தது. அதற்கான காரணத்தையும்
சிறை கண்காணிப்பாளர் கூறவில்லை.

மேலிடத்து உத்தரவு என்பதைத் தவிர வேறு எந்த
காரணமும் கூறப்படவில்லை. இதன் பின்னால் ஏதோ
விவகாரம் இருக்கிறது என்பது அனைவருக்கும்
புரிந்தாலும், குழப்பமாகவே இருந்தது.

பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும் அன்று
இரவு தூக்கிலிடப்படப்போவதாக சிறையில்
முடி திருத்தும் பணியில் இருப்பவர் ஒவ்வொருவரின்
அறைக்கும் வந்து தகவல் சொல்லிப்போனார்.

அனைவரையும் உலுக்கிப்போட்ட இந்தச் செய்தியால்,
சிறைச்சாலை மயான அமைதியில் மூழ்கியது. கலகம்
ஏதும் ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையின்
விளைவாகவே அனைவரும் விரைவாகவே அறைக்குள்
அடைக்கப்பட்டது புரிந்தது.

நிலைமையை மாற்றமுடியாது என்று உணர்ந்த கைதிகள்,
தாங்களும் பகத்சிங்குடன் சிறை வாழ்க்கையை
கழித்தவர்கள் என்று பெருமையுடன் கூற ஆசைபட்டார்கள்.
பகத்சிங் பயன்படுத்திய பேனா, சீப்பு, கடிகாரம் போன்ற
எதாவது ஒரு பொருள் கிடைத்தால், தங்கள்
பேரப்பிள்ளைகளுக்கு காண்பிக்கலாம் என்று
தெரிவித்தார்கள்.
….


….

….

பர்கத், பகத்சிங் அடைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று
பகத்சிங் பயன்படுத்திய பேனா, சீப்பு போன்றவற்றை
எடுத்துவந்தார். அதை எடுத்துக் கொள்வதற்காக
கைதிகளுக்குள் போட்டா-போட்டி நிலவியது. இறுதியில்
சீட்டுக் குலுக்கிப் போடப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு மீண்டும் அமைதி திரும்பியது. இப்போது
அறையில் இருந்து வெளியே செல்லும் பாதையின் மீது
அனைவரின் கவனமும் குவிந்தது. தூக்கில்
இடப்படுபவர்கள் அந்த வழியிலே தான் வெளியே
செல்லவேண்டும்.

ஒரு முறை பகத்சிங் அந்த வழியாக செல்லும் போது
பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் பீம்சேன் சச்சர் உரத்தக்
குரலில் பகத்சிங்கிடம் கேட்டார், “நீயும், உன் நண்பர்களும்,
லாகூர் சதி வழக்கில், தவறு செய்யவில்லை என்று ஏன்
நீதிமன்றத்தில் முறையிடவில்லை?” என்று கேட்டார்.

அதற்கு பகத்சிங்கின் பதில் என்ன தெரியுமா..?

“போராட்டக்காரர்கள் என்றாவது ஒரு நாள் இறந்து தான்
ஆகவேண்டும், அவர்களின் உயிர்த் தியாகம்தான்
அமைப்பை வலுவாக்கும். நீதிமன்றத்தில் முறையிடுவதால்
மட்டுமே அமைப்பு ஒருபோதும் வலுவாகாது”.

பகத் சிங்கிடம் அன்பு கொண்ட சிறை கண்காணிப்பாளர்
சரத் சிங், தன்னால் முடிந்த உதவிகளை செய்துவந்தார்.
அவரின் உதவியால்தான் லாகூரின் துவாரகதாஸ்
நூலகத்தில் இருந்து பகத்சிங்கிற்காக புத்தகங்கள்
சிறைச்சாலைக்குள் வந்தது.

புத்தகப்பிரியரியரான பகத்சிங், தன்னுடைய பள்ளித்தோழர்
ஜெய்தேவ் கபூருக்கு எழுதிய கடித்த்தில்,
கார்ல் லிப்னேக்கின் “மிலிட்ரியிசம்”,
லெனினின் “இடதுசாரி கம்யூனிசம்”,
அப்டன் சின்க்லேயரின் “தி ஸ்பை” (உளவாளி)
ஆகிய புத்தகங்களை குல்வீரிடம் கொடுத்து அனுப்புமாறு
கேட்டுக்கொண்டுள்ளார்.

பகத்சிங்கின் சிறைத் தண்டனை பாதி முடிந்துவிட்டது.
அவருடைய செல் (அறை) எண் 14 -இன் தரை, புல்
முளைத்த கட்டாந்தரை. ஐந்து அடி, பத்து அங்குல உயரம்
கொண்ட பகத்சிங், படுக்கும் அளவிலான அறை அது.

பகத்சிங்கை தூக்கில் இடுவதற்கு இரண்டு மணி நேரம்
முன்பு, அவருடைய வழக்கறிஞர் பிராண்நாத் மெஹ்தா
சிறைக்கு வந்தார். அப்போது, கூண்டில் அடைக்கப்பட்ட
சிங்கம் போன்று பகத்சிங் காணப்பட்டதாக பின்னர்
அவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பகத்சிங் புன்னகையுடன் மெஹ்தாவை வரவேற்று,
“ரெவல்யூஷனரி லெனின்” புத்தகத்தை கொண்டு
வரவில்லையா?” என்று கேட்டாராம்! அந்த புத்தகத்தை
மெஹ்தா பகத்சிங்கிடம் கொடுத்ததும் அதை உடனே
படிக்க தொடங்கிவிட்டாராம் பகத்சிங்..! படிப்பதற்கு
அவரிடம் அதிக நேரம் இல்லையே…

நாட்டிற்காக எதாவது செய்தி சொல்லுங்கள் என்று
மெஹ்தா கேட்டதற்கு, புத்தகத்தில் இருந்து கண்ணை
விலக்காமல் பகத்சிங் சொன்னது,
“இரண்டு செய்திகள்… ஏகாதிபத்தியம் ஒழிக….
இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக)”.

தன்னுடைய வழக்கில் அதிக அக்கறை செலுத்திய
பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர
போஸிடம் தனது வணக்கத்தை தெரிவிக்குமாறு,
மெஹத்தாவை கேட்டுக்கொண்டார் பகத்சிங். பிறகு
மெஹ்தா, ராஜ்குருவின் அறைக்கு சென்றார்.

“விரைவில் மீண்டும் சந்திப்போம்” -இதுதான்
ராஜ்குருவின் கடைசி வார்த்தை. மெஹ்தாவிடம்
பேசிய சுக்தேவ், தன்னை தூக்கில் போட்டபிறகு, சிறை

அதிகாரியிடமிருந்து தான் பயன்படுத்திய கேரம்போர்டை
வாங்கிக்கொள்ளுமாறு கூறினார். மெஹ்தா சில
மாதங்களுக்கு முன்னதாகத்தான் அந்த கேரம்போர்டை
வாங்கிக் கொடுத்திருந்தார்.

மெஹ்தா சென்ற பிறகு, குறிப்பிட்ட நேரத்திற்கு
12 மணி நேரம் முன்னதாகவே, அதாவது, அடுத்த நாள்
காலை ஆறு மணிக்கு தூக்கில் போடுவதற்கு பதிலாக
அன்று மாலை ஏழு மணிக்கே அவர்களுக்கு
மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று
அறிவிக்கப்பட்டது.

மெஹ்தா கொடுத்துச் சென்ற புத்தகத்தின் சில
பக்கங்களை மட்டுமே பகத்சிங்கால் படிக்க முடிந்தது.
இந்தப் புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தைக் கூட படிக்க
விட மாட்டீர்களா? என்று அவர் சிறை அதிகாரியிடம்
கேட்டாராம்.

தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள், சிறையில் துப்புரவுத்
தொழிலாளியாக பணியாற்றிவந்த பேபே என்ற
இஸ்லாமியரின் வீட்டில் இருந்து உணவு கொண்டு
வருமாறு பகத்சிங் கேட்டுக்கொண்டாராம்.

——————

பகத்சிங் வாழ்க்கையின் கடைசி 12 மணி நேரம்
இயல்பானதாக இல்லை.
பகத்சிங்கின் கடைசி ஆசையை பேபேவால்
நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் 12 மணி
நேரத்திற்கு முன்னதாகவே பகத்சிங் தூக்கிலிடப்பட்டார்.
சிறைக்குள் செல்ல பேபே அனுமதிக்கப்படவில்லை.

சிறிது நேரத்திற்கு பிறகு, மூன்று புரட்சியாளர்களை
தூக்குமேடைக்காக தயார் செய்வதற்காக வெளியே
அழைத்து வந்தார்கள். அப்போது, பகத் சிங், ராஜ்குரு,
சுக்தேவின் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில்,
தங்களுக்கு விருப்பமான சுதந்திரப் பாடல்களை பாடத்
தொடங்கினார்கள் –

அந்த நாளும் கண்டிப்பாக வரும்…

நாம் சுதந்திரம் அடையும் போது,

இந்த மண் நம்முடையதாக இருக்கும்

இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்…

-என்ற பொருள் கொண்ட பாடல்கள் அவை.

பிறகு ஒவ்வொருவரின் எடையும் பார்க்கப்பட்டு,
குறிக்கப்பட்டது. அனைவரின் எடையும், முன்பு
இருந்ததைவிட அதிகமாகியிருந்தது! இறுதிக்
குளியலை மேற்கொள்ளலாம் என்று அவர்களிடம்
கூறப்பட்டது. பிறகு கருப்பு உடை அணிவிக்கப்பட்டது,
ஆனால், அவர்களுடைய முகம் மூடப்படவில்லை.

“வாயே குரு” என்ற சீக்கியர்களின் புனிதமான
வார்த்தையை நினைவில் கொள்ளுமாறு சரத் சிங்,
பகத்சிங்கின் காதில் சொன்னார்.

“என் வாழ்க்கை முழுவதும் நான் கடவுளை
நினைக்கவில்லை. உண்மையில், ஏழைகளின்
துயரங்களை பார்த்து, கடவுளை நான் திட்டியிருக்கிறேன்.

அவர்களிடம் இப்போது நான் மன்னிப்பு கேட்க
நினைத்தால், என்னை விட பெரிய கோழை வேறு
யாரும் இருக்கமுடியாது. இவனுடைய இறுதி காலம்
வந்துவிட்டதால், மன்னிப்பு கேட்கிறான் என்று
நினைப்பார்கள்” – என்று பகத்சிங் கூறினார்,

சிறைச்சாலையின் கடிகாரம் ஆறு மணியை காட்டியதும்,
கைதிகளின் ஓலக்குரல் தொலைவில் இருந்து கேட்டது.
அத்துடன் காலணிகளின் கனமான ஓசையும் ஒலித்தது.
அத்துடன், பாடலும் கேட்டது.

“தியாகத்தின் ஆசையே எங்கள் இதயத்தில் உள்ளது”
என்ற பொருள் கொண்ட பாடல் அது.

“இன்குலாப் ஜிந்தாபாத்” என்றும்,
“ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ”
(“புரட்சி ஓங்குக”, இந்தியா விடுதலை
வேண்டும்”) என்ற முழக்கங்கள் எழுந்தன.

தூக்குக்கயிறு மிகவும் பழையதாகவும், வலுவிழந்தும்
இருந்தது. ஆனால், தூக்கில் இடப்படுபவர்களோ மிகவும்

பலமானவர்களாக இருந்தார்கள். தூக்கில் இடும் பணியை
நிறைவேற்றுவதற்காக, லாகூரில் இருந்து சிறப்புப்
பணியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார்.

மூவரில் பகத் சிங் நடுநாயகமாக நின்றார். தனது தாயை
மனதில் நினைத்துக்கொண்ட பகத் சிங், தூக்கில்
இடப்படும்போதும் இன்குலாப் ஜிந்தாபாத் என்று
முழங்கப்போவதாக அளித்த வாக்குறுதியை
நிறைவேற்றவேண்டும் என்பதை நினைவுபடுத்திக்
கொண்டார்.

லாகூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிண்டி தாஸ்
சோந்தியின் வீட்டிற்கு அருகாமையில் தான் லாகூர்
மத்திய சிறைச்சாலை இருந்தது. இன்குலாப் ஜிந்தாபாத்
என்ற பகத்சிங்கின் உரத்த முழக்கம் சோந்தியின்
காதுகளையும் எட்டியது.

பகத் சிங்கின் குரல் கொடுத்த உத்வேகத்தில், சிறைக்
கைதிகளும் முழக்கங்களை எழுப்பினார்கள். மூன்று
இளம் புரட்சியாளர்களின் கழுத்திலும் தூக்குக்கயிறு
மாட்டப்பட்டது. அவர்களின் கைகளும் கால்களும்
கட்டப்பட்டன. அப்போது தண்டனையை
நிறைவேற்றுபவர் கேட்டார், -“யாருக்கு முதலில்
செல்ல விருப்பம்?”.

சுக்தேவ் முதலில் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார்.
ஒன்றன் பின் ஒன்றாக தூக்குக் கயிற்றை இழுத்து,
அவர்களின் காலின் கீழ் இருந்த பலகையை
அகற்றினார் தண்டனை நிறைவேற்றுபவர்.

தூக்கில் இடப்பட்ட புரட்சியாளர்களின் வீர உடல்களும்
நீண்ட நேரத்திற்கு தொங்கிய நிலையிலேயே
விடப்பட்டன.

இறுதியில் அவர்களை கீழே இறக்கியபோது,
அங்கிருந்த மருத்துவர்கள், லெஃப்டிணென்ட் கர்னல்
ஜே.ஜே.நெல்சன் மற்றும் லெஃப்டிணென்ட் கர்னல்
எம்.எஸ்.சோதி மூவரின் மரணத்தையும்
உறுதி செய்தனர்.

இறுதிச் சடங்கு

இவர்களை தூக்கிலிட்டது பலரையும் அதிர்ச்சிக்கு
உள்ளாக்கினாலும், அங்கிருந்த ஒரு சிறை அதிகாரி
மிகுந்த மனவேதனை அடைந்தார். மரணத்தை
உறுதிப்படுத்துமாறு அவரிடம் கூறப்பட்டபோது,
அவர் மறுத்துவிட்டார். பிறகு மற்றொரு இளைய
அதிகாரிதான் மரணத்தை உறுதிப்படுத்தினார்.

இறுதிச்சடங்குகள் சிறைச்சாலைக்குள்ளேயே
செய்துவிடலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால்,
வெளியில் காத்திருக்கும் மக்கள் கூட்டம், இங்கு
சிதை மூட்டப்பட்டு, புகை வெளிவந்ததுமே,
சிறையை தாக்கக்கூடும் என்ற பேரச்சத்தின்
காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.

எனவே, சிறையின் பின்புறச் சுவர் உடைக்கப்பட்டு,
அந்த வழியாக டிரக் ஒன்று வரவழைக்கப்பட்டது.
மிகவும் தரக்குறைவான முறையில், பொருட்களைப்
போல வீரர்களின் உடல் டிரக்கில் ஏற்றி,
கொண்டு செல்லப்பட்டது.

ராவி நதிக்கரையில் இறுதிச்சடங்குகளை நடத்தும்
யோசனை, அங்கு நீர் குறைவாக இருந்ததால்
கைவிடப்பட்டது, பிறகு சட்லஜ் நதிக்கரையில்
சிதையூட்ட முடிவு செய்யபட்டது.

லாகூரில் நோட்டீஸ்

புரட்சியாளர்களின் சடலங்கள் ஃபிரேஜ்புர் அருகில்
சட்லஜ் நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது இரவு பத்து மணி ஆகிவிட்டது. இதற்குள்
காவல்துறை கண்காணிப்பாளர், சுதர்ஷன் சிங்,
கசூர் கிராமத்தில் இருந்து ஜக்தீஷ் என்ற பூசாரியை
அழைத்துவந்துவிட்டார்.

சிதையூட்டப்பட்ட பிறகு, இது குறித்து மக்களுக்கு
தகவல் தெரிந்துவிட்டது. மக்களின் கூட்டம்
வெள்ளமென தங்களை நோக்கி வருவதைக் கண்ட
பிரிட்டன் சேனைகள், சடலங்களை அப்படியே விட்டு,
அங்கிருந்த தங்கள் வாகனங்களை நோக்கி
ஓடினார்கள். மக்கள் கூட்டம் இரவு முழுவதும்
சிதைகளை சுற்றி நின்றது.

பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு என மூவருக்கும் ஹிந்து
மற்றும் சீக்கிய மத முறைப்படி இறுதிச் சடங்குகள்
செய்யப்பட்டதாக, அடுத்த நாள் காலை அருகில்
இருந்த மாவட்ட நீதிபதியின் கையொப்பத்துடன்,
லாகூரின் எல்லா பகுதிகளிலும் நோட்டீஸ்கள்
ஒட்டப்பட்டன.

இந்த செய்தி மக்களின் மனதில் பெரும் எதிர்ப்பை
எழுப்பியது. இறுதிச் சடங்குகள் செய்வது ஒருபுறம்
இருக்கட்டும், அவர்களின் சடலங்கள் முழுமையாக

எரிக்கப்படவில்லை என்று மக்கள் கோபக்கனலை
கக்கினார்கள். இதை மாவட்ட நீதிபதி மறுத்தாலும்,
யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

புரட்சி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில்
மூன்று மைல் தொலைவுக்கு பேரணி ஒன்று
நடத்தப்பட்டது. எதிர்ப்பை காட்டும் வகையில்
ஆண்கள் கருப்பு நிற பட்டைகளையும், பெண்கள்
கருப்பு நிற உடைகளையும் அணிந்திருந்தார்கள்.

ஏறக்குறைய அனைவரும் கையில் கருப்புக் கொடியை
ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டார்கள்.
லாகூரின் மால் வழியாக சென்ற ஊர்வலம், அனார்கலி
சந்தைப்பகுதியில் நடுவில் நின்றது.

அங்கு ஊர்வலம் நின்றதும் பேரமைதி நிலவியது.
பகத் சிங்கின் குடும்பத்தினர், மூன்று மாவீரர்களின்
எச்சங்களுடன் ஃபிரோஜ்புரில் இருந்து வந்துவிட்டது
தான் அதற்கு காரணம்.

மலர் தூவிய சவப்பெட்டிகள் அங்கு வந்ததும், மக்கள்
கூட்டத்தின் உணர்ச்சிகள் கரை கடந்தன. அனைவரின்
கண்களின் இருந்து கண்ணீர் பொங்க,
கண்ணீரஞ்சலி நடந்தேறியது.

“வீரர்களின் உடல் பாதி எரிந்த நிலையில்,
திறந்தவெளியில் தரையில் இருந்தது” என்பது பற்றிய
செய்தியை அந்த இடத்தில் இருந்த பிரபல
பத்திரிகையாளர் மெளலானா ஜஃபர் அலி வாசித்தார்.

அங்கே, சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் சரத் சிங்
தளர்ந்த நடையில் தனது அறைக்கு சென்று,
மனம் விட்டு கதறினார். அவருடைய முப்பதாண்டு
பணிக்காலத்தில், நூற்றுக்கணக்கானவர்களுக்கு
தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருந்தாலும்,
இது போன்ற தீரமிக்கவர்களுக்கு அவர்
மரணதண்டனையை நிறைவேற்றியதே இல்லை
என்பதுதான் அதற்கு காரணம்.

16 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் சாம்ராஜ்யம்,
இந்தியாவில் தனது ஆட்சியை முடித்துக்கொண்டு
வெளியேறுவதற்கு இந்த நாளும் ஒரு முக்கியமான
காரணமாக இருக்கும் என்பது அப்போது
யாருக்கும் தெரியாது.

.
——————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.