கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (2)


நேற்றைய தொடர்ச்சி…

கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (1)

நாம் செய்யும் அனைத்து பணிகளுக்கும் ஆதாரமாக
முக்கிய தேவையாக இருப்பது “சக்தி”…( உயிர்-பிராணன்…)

இந்த “சக்தி” நமக்கு எங்கிருந்து வருகிறது…?
எப்படி கிடைக்கிறது…?

நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கிறது.

வயிறு என்பது ஒரு யாககுண்டம் மாதிரி தான்.
அது தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தால் தான்
சக்தி கிடைக்கும். எனவே, வேலை செய்ய சக்தி
வேண்டுமென்றால் –

யாக குண்டத்தில் நெருப்பு அணையாமலிருக்க
நெய்யோ, இதர பண்டங்களோ தொடர்ந்து
போட்டுக் கொண்டே இருப்பது போல் –

வேளா வேளைக்கு அந்த வயிற்றுக்கு
தீனி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்….

சாதாரணமாக குறைந்தபட்சம் 6 மணி நேரத்திற்கு
ஒரு முறையாவது சாப்பிட வேண்டும்.
உணவு இல்லையேல் –

-சக்தி இல்லை –
-பிராணன் இல்லை
-உயிர் இல்லை…

ஒரு நாள் இரண்டு நாள் சாப்பிடாமல் இருக்கலாம்.
சிலரால் இன்னும் கொஞ்சம் அதிக நாட்கள் கூட முடியும்…
ஆனால் முற்றிலும் சாப்பிடாமலே உயிர்வாழ முடியுமா…?

எனவே உணவு தான் உயிரின் இயக்கத்திற்கு காரணம்.

நமக்கு நினைவு தெரிந்த வயதிலிருந்து நாம்
சாப்பிடுவது நமக்குப் புரிகிறது…… சரி….

நாம் இந்த மண்ணில் வந்து விழுந்தவுடன்,
பிறந்தவுடன் – நமக்கு உணவாக அமைவது எது…?

ஜீரண உறுப்புகள் வெளி உணவை ஏற்றுக்கொள்ள
ஏதுவாக வளர்ச்சி பெறும் வரையில் நமக்கு உணவாக
அமைவது எது …?

தாய்ப்பால்…என்னும் அமுதம்.
குழந்தை வேறு எதையும் ஏற்றுக்கொள்ள தகுதி பெறாத
நிலையில், அந்தக் குழந்தையின் –

பசியைப் போக்க,
அதன் உயிரைக்காக்க-
அதைப் பெற்ற தாய்க்கு தானாகவே –
பால் சுரக்கிறதே அது எப்படி…?

ஒரு பெண்ணுக்கு –
(திருமணமாகி இருந்தாலும் கூட…)
– குழந்தை பெறுகின்ற வரையில் சுரக்காத பால்,
குழந்தை பிறந்ததும் சுரப்பது எப்படி…?

தான் பெற்ற குழந்தையின்
பசியைத் தீர்க்க, அதன் உயிரைக்காக்க
அந்தத் தாயின் ரத்தத்தை,
பாலாக மாற்றிக் கொடுப்பது யார்…?

அதே போல், அப்போது தான் பிறந்த குழந்தைக்கு –
தாயின் மார்பகத்திலிருந்து பாலை –
உறிஞ்சி சாப்பிட வேண்டும் என்கிற
உந்துதல் அந்த குழந்தைக்கு வந்தது எப்படி ….?

—————————————

உயிருக்கு,
நமது இயக்கத்திற்கு – மூல காரணமான
– உணவிற்கு –
உரிய மரியாதையை நாம் கொடுக்கிறோமா…?

உரிய இடைவெளியில்,
பசிக்கும்போது மட்டும் – சாப்பிடாமல்,
கிடைக்கிறதே என்பதற்காக, கண்ட நேரங்களில்
எல்லாம் சாப்பிடலாமா…?

தேவைக்கும் அதிகமாக சாப்பிடலாமா…?

வாய்/நாக்கு விரும்புவதை உண்ண வேண்டுமா
அல்லது வயிறு சொல்வதைக் கேட்க வேண்டுமா.. ?

சரியான அளவு எது என்பதை
அந்த வயிறு அல்லவா அறியும்….?

வாய்க்கு பிடிக்கிறது என்பது முக்கியமா
அல்லது வயிற்றுக்கு ஒத்துக்கொள்ள
வேண்டுமென்பது முக்கியமா..?

ருசி முக்கியமா அல்லது சத்து முக்கியமா….?

——————–

அடுத்து இதையே ஆன்மிக வழியில் யோசித்தால் –
செய்யும் தானங்களில் எல்லாம் சிறந்தது
அன்னதானம் தான் என்பார்கள்.

பொன்னோ, பொருளோ, வேறு எதை தானமாக
கொடுத்தாலும், பெற்றுக் கொள்பவர் முழு திருப்தி
அடைவாரென்று சொல்ல முடியாது.
இன்னமும் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள
அவர் தயாராகவே இருப்பார்.

ஆனால், அன்னம் விஷயத்தில்…?

ஒருவரை அழைத்து, உட்கார வைத்து சோறு போட்டால்,
வயிறு நிறைந்து விட்ட பின்னர், அவரால் இன்னமும்
வேண்டுமென்று நினைக்கத் தோன்றாது.
“போதும்; போதும்” என்று அவரே மறுத்து விடுவார்.

ஒருவர் உயிர் வாழ முக்கியமானதும்,
மனிதரை முழுவதுமாக திருப்திப்படுத்தக்கூடியதுமான –
அன்னதானத்தை தான் பெரியோர்கள் சிறந்த தானம்
என்று கூறி இருக்கிறார்கள்.

‘இந்து’ கடவுளரில் ஒருவரை இதற்காகவே
சித்தரித்திருக்கிறார்கள்…. “அன்ன பூரணி”…!
(ஒரு கையில் அன்ன பாத்திரமும்,
மற்றொரு கையில் கரண்டியுமாக… எப்போதும் உணவு அளித்துக்
கொண்டிருக்கும் ஒரு தெய்வம்….!!!)

———————

சோற்றுக்கான முக்கியத்துவம் புரிகிறது… சரி.
ஆனால் சோறு படைப்பவரின் முக்கியத்துவம்…?

ஒரு சின்ன உதாரணத்தை இங்கு சொல்ல விரும்புகிறேன்.
நான் இளைஞனாக இருந்த காலத்தில்,
திருமணத்திற்கு முன், சுமார் 7-8 ஆண்டுக்காலம்
ஓட்டல் சாப்பாட்டில் தான் உயிர் வாழ்ந்திருந்தேன்.

நான் வசித்து வந்த பாதுகாப்பு இலாகாவை சேர்ந்த
டவுன்ஷிப்பில் – ஒரே ஒரு வெஜிடேரியன்
ஓட்டல் தான் இருந்தது.

பரமேஸ்வர அய்யர் என்பவர் அதன் முதலாளி,
சமையல்காரர், பரிமாறுபவர் எல்லாமே.
அவரது மகன் ஒருவரும் அவருக்கு உதவியாக இருந்தார்.

நாங்கள் 4-5 நண்பர்கள் வழக்கமாக 3 வேளையும்
அங்கே தான் சாப்பிடுவோம்… மதியம் எல்லாருமே
கிட்டத்தட்ட ஒரே வேளையில் தான் சாப்பிடச் செல்வோம்.
( same lunch hour… )

என் கூட இருக்கும் நண்பர்கள் எப்போதுமே சாப்பிடும்போது
எதாவது comment அடித்துக்கொண்டே தான் சாப்பிடுவார்கள்.
(வயது…! ) “என்ன அய்யரே – டெய்லி கொத்தவரங்காய்
தானா…, மார்க்கெட்டில் உங்களுக்கு
முள்ளங்கியை விட்டால் வேறு எதுவுமே கிடைக்காதா…
சாம்பாரை இதைவிட தண்ணியாக பண்ண
முடியாதா.. etc. etc…

சம்பந்தப்பட்டவருக்கு இது எத்தகைய வேதனையைத்
தரும் என்பதை அவர்கள் உணர மாட்டார்கள்.

எனக்கு சின்ன வயதிலிருந்தே கத்தரிக்காய் பிடிக்காது.
ஓட்டலில் கத்தரிக்காயில் எதாவது சமைத்திருந்தால்,
அதை மட்டும் வேண்டாமென்று சொல்லி விடுவேன்…

ஆனால் அதற்காக எந்த comment- உம்
சொல்ல மாட்டேன்.. just தவிர்த்து விடுவேன்… அவ்வளவே.
துவக்கத்திலேயே நான் கத்தரிக்காயை தவிர்க்கிறேன்
என்பதை கவனித்திருக்கிறார் அய்யர்.

விளைவு – லஞ்ச் இடைவெளியில்,
வாசலில் என் தலையை பார்த்தவுடன், உள்ளே
அடுப்பில் சூடாக இருக்கும் பெரிய தோசைக்கல்லில்
கொஞ்சம் தாளித்துக் கொட்டி,
அரிந்து தயாராக வைக்கப்பட்டிருக்கும் முட்டைக்கோஸ்
தழையை – ஒரு கை அள்ளிப்போட்டு விடுவார்.

எங்களுக்கு இலை போட்டு, தண்ணீர்
எடுத்து வைத்து, சாதம், சாம்பார் வகைகள் பரிமாறுவதற்குள்,
இரண்டு மூன்று முறை, கோஸைக் கிளறி விடுவார்…

இதற்குள், தோசைக்கல்லில், கோஸ் வதக்கப்பட்டிருக்கும்…
ஒரே ஒரு கரண்டி – சுடச்சுட கோஸ் பொரியலை என்
இலையில் மட்டும் வைத்து விட்டு போய் விடுவார்.

நாங்கள் எல்லாரும் அங்கே வழக்கமாக சாப்பிடுபவர்கள்
என்பதால், எல்லாருமே அய்யரிடம் உரிமையோடு
பேசுவார்கள்.

என் நண்பன் ஒருவன் – சங்கரன் – அலறுவான்…

” அய்யரே.. அவனுக்கு மட்டும் என்ன ஸ்பெஷலா
கோஸ் பொரியல் …? ”
-அய்யர் பதிலே சொல்ல மாட்டார்… மவுனமாக
சிரித்துக்கொண்டே அவர் நகர்ந்து செல்லும் காட்சி
இப்போதும் என் நினைவில் நிறைவாக நிற்கிறது…!!!

எனக்குத் தெரியும்…
அய்யரின் தனி கரிசனத்திற்கு காரணம்
என்னவென்று…

சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது என்பது அந்த
நாளிலேயே என் principle. அங்கே சாப்பிட்ட
8 வருடங்களில் -ஒரு நாள், ஒருவேளை கூட –
நான் சாப்பாட்டில் குறையே சொன்னதில்லை. மாறாக
அவர் போடுவனவற்றில் அவ்வப்போது –
எது நன்றாக இருக்கிறதோ அதை மட்டும்
“அய்யரே … ரசம் சூப்பர்..” என்கிற மாதிரி –
எல்லார் எதிரிலும் பாராட்டுவேன்…

இந்த பாராட்டிற்கு, வெளிப்படையான
நன்றி தெரிவித்தல் தான் எனக்கு மட்டுமான –
நான் கேட்காத – அந்த கோஸ் பொரியல்…..

சமைப்பவரை, சாப்பாடு போடுபவரை – பாராட்டினால்,
அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா…?

———————-

நமக்காக சமைப்பவர் –
அம்மாவோ, மனைவியோ, மகளோ …சகோதரியோ
வேறு யாராவதாக இருந்தாலும் சரி –

நம்மில் எத்தனை பேர்
அவர்களுக்கு நன்றி கூறி இருக்கிறோம்…?
நம்மில் எத்தனை பேர்
அவர்களின் சமையலைப் பாராட்டி இருக்கிறோம்…?

நமக்காக அக்கறையுடன், பொறுப்புடன்
சமைத்து, சோறு போடுபவர்களுக்கு –
மனம் திறந்து பாராட்டுவதும்,
நன்றி சொல்வதும் மிக மிக அவசியம்.

பலர் இதை உணர்வதே இல்லையே –
யந்திரம் போல் வந்து உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு
போய் விடுகிறார்களே… இது சரியா…?

இந்த இடுகையைப் படிக்கும் ஒவ்வொருவரும்
இதைப்பற்றி, இனியாவது கொஞ்சம் யோசிப்போமா…?

.
——————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (2)

 1. புவியரசு சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  வாழ்க்கையின் உண்மைகளை மிக
  அழகாக அலசுகிறீர்கள். அநேகமாக
  நாம் எல்லாரும் உணர்வது தான்.
  ஆனால் யோசிக்கத் தவறி விடுகிறோம்.
  அதன் அவசியத்தை உணரத் தவறி
  விடுகிறோம்.

  //நமக்காக அக்கறையுடன், பொறுப்புடன்
  சமைத்து, சோறு போடுபவர்களுக்கு –
  மனம் திறந்து பாராட்டுவதும்,
  நன்றி சொல்வதும் மிக மிக அவசியம்.//

  முற்றிலும் உண்மை. என்னைப்
  பொருத்தவரையிலும், இன்றிலிருந்தே
  இது தொடங்கும். நினைவுபடுத்தியதற்கு
  நன்றிகள் பல.

 2. M.Subramanian சொல்கிறார்:

  Sir, It looks You had a beautiful life.

 3. Jayakumar Chandrasekharan சொல்கிறார்:

  தானம் என்பது இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுப்பது. அந்த வகையில்ஒருவர்  வாழத்  தேவையான உணவைத் தானமாகக் கொடுப்பது புத்துயிர் கொடுப்பது போன்றதாகும். அதனால் அது சிறப்பு பெற்றது.

  ஆனால் இன்றோ? அது ஒரு பெருமையாகவும் விளம்பரமாகவும் மாறிவிட்டது. அன்னதானத்தில் உண்பவர்கள் எத்தனை பேர் இல்லாதவர்கள். இலவசம் என்பதற்காக வருபவர்களே அதிகம். ஆனாலும் ஒரு நன்மை உண்டு. அது சமத்துவம். பந்தியில் பணக்காரன் ஏழை வித்யாசம் இல்லை, ஒரே சாப்பாடு தான்.

   Jayakumar

  • jayakumar chandrasekaran சொல்கிறார்:

   I am a follower already and receive your posts by mail. I had been a regular visitor for last 8 years. I have started commenting only recently. Jayakumar ,

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஜெயகுமார் சந்திரசேகரன்,

    நீங்கள் நீண்ட நாட்களாக இந்த
    வலைத்தளத்திற்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்
    என்பது எனக்கு மகிழ்ச்சியான செய்தி.

    உங்களைப்போன்ற அனுபவசாலிகள்
    பின்னூட்டங்களின் மூலம் அடிக்கடி உங்கள்
    கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும்.
    நல்ல, கருத்தாழமிக்க பின்னூட்டங்கள்
    வலைத்தளத்திற்கு மேலும் வலுவைத்
    தருகின்றன என்பது என் கருத்து.

    எனவே, அடிக்கடி எழுதுங்கள்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   ஜெயகுமார் சந்திரசேகரன்,

   பொதுவான அன்னதானம் என்பதில் எனக்கு
   நம்பிக்கை இல்லை….
   இல்லாதவர்களுக்கு அளிக்க வேண்டும்.
   அது தான் நோக்கமாக இருக்க வேண்டும்.

   சிலர், தங்கள் இல்லங்களில் நடைபெறும்
   விசேஷங்களின் போது, அருகிலுள்ள
   ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும்
   சேர்த்து விருந்தளிக்கிறாகள்.

   மீந்து போனதை கொடுப்பது என்றில்லை.
   விருந்துக்கு வெளியில் ஆர்டர் கொடுக்கும்போதே,
   அந்த இல்லங்களில் இருப்பவர்களின் எண்ணிக்கையை
   கேட்டறிந்து அதற்கும் சேர்த்து ஆர்டர்
   கொடுக்கிறார்கள். அண்மைக் காலங்களில்
   இந்தப்பழக்கம் அதிகரித்து வருவதைப்
   பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

   பொதுவாகவே, இல்லாதவர்களுக்கு
   கொடுப்பது தான் சிறப்பு.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  இன்று பத்திரிகைகளில் இது மாதிரி எழுதி
  பிரசுரம் செய்வதில்லை . எல்லாம் வியாபாரம் .

  ஏவிஎம் நிறுவனம் வள்ளலார் பற்றி ஒரு தொடர்
  தயாரிக்க இருந்தது . பிறகுதான் , டிவிகாரர்கள்
  இதை ஒளிபரப்ப மாட்டார்கள் என தெரியவந்தது .
  DD கூட ஸ்பான்சர் கிடைக்காது என மறுத்து விட்டது .

 5. புதியவன் சொல்கிறார்:

  //நம்மில் எத்தனை பேர் அவர்களின் சமையலைப் பாராட்டி இருக்கிறோம்…?// – எங்கு சாப்பிட்டாலும், உணவு நன்றாக இருந்தால் அதனைப் பாராட்டுவது என் சிறு வயதிலிருந்தே உள்ள குணம். ஆனா அந்தக் குணத்தோடு சேர்ந்து குறைகள் சொல்வதும் இணைந்துவிட்டது. (கத்திரிக்காய்ல உப்பு ரொம்ப ஜாஸ்தி, நூல்கோல் சரியா வேகலை என்பது போன்று).

  நான் சமைக்க ஆரம்பித்த பிறகு (8 வருடங்களாக), அதன் கஷ்டங்கள், எப்படி நாம் நினைத்தாலும் சில சமயம் சமையல் சொதப்புகிறது என்பதையெல்லாம் புரிந்துகொண்ட பிறகு, எதிர்மறை விமர்சனம் செய்வது தவறு என்று புரிந்தது.

  நான் சிலவற்றை சமைத்து, இது சூப்பர் என்று சொல்லும்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சி தனி. அதே சமயம், இது சரியில்லை என்று சொல்லும்போது (எனக்கு அது சரியாகவே இருக்கும்), கொஞ்சம் சங்கடப்படும் என் மனது.

  //உணவிற்கு – உரிய மரியாதையை நாம் கொடுக்கிறோமா…?// – இதில் நீங்கள் சொன்ன காரணங்கள் சரியானவை அல்ல. உணவு சாப்பிடும்போது, தொலைக்காட்சி பார்ப்பது, பேசிக்கொண்டிருப்பது, அதைவிட வாட்சப் மெசேஜ் டைப் பண்ணிக்கொண்டே உண்பது, இணையத்தை வலம் வருவது…இவைதான் நாம் உணவிற்கு மரியாதை கொடுக்கவில்லை என்பதைப் பறைசாற்றும். ஒரு உணவைத் தயாரிக்க 2-3 மணி நேரம் ஒருவர் உழைக்கணும். அதற்கான மூலப் பொருட்களை (குறிப்பா காய்கறிகள்) ஒருவர் வாங்கிக்கொண்டுவரணும். சாப்பாட்டு மேசையில், உணவை உண்டு, அதனைப் பற்றிய கமெண்டுகள்தான் உணவிற்கு அதைச் செய்தவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்று நினைக்கிறேன் (இந்தத் தடவை நூல்கோல் கொஞ்சம் முத்தலாகிவிட்டதோ?, பீட்ரூட் இன்னும் சிறிது வெந்திருக்கலாம், உப்பு அளவு இனிமேல் சிறிது குறைக்கணுமோ, கூட்டு ரொம்ப நல்லா வந்திருக்கு என்பது போல). என்னவோ தட்டுல போட்டாங்க, என்னவோ சாப்பிட்டோம் என்று சென்றால் அது உணவுக்கும் அதைப் படைத்தவருக்கும் நாம் செய்யும் அவமரியாதை என்று நினைக்கிறேன்.

  • புதியவன் சொல்கிறார்:

   இடுகையில் பிற்பகுதியில் இவற்றைக் குறிப்பிட்டிருக்கீங்க கா.மை சார்.

 6. புதியவன் சொல்கிறார்:

  //அதே போல், அப்போது தான் பிறந்த குழந்தைக்கு – தாயின் மார்பகத்திலிருந்து பாலை – உறிஞ்சி சாப்பிட வேண்டும் என்கிற உந்துதல் அந்த குழந்தைக்கு வந்தது எப்படி ….?// – மனிதர்களை விடுங்கள். அவைகளுக்கு சொல்லிக்கொடுக்க ஆள் இருக்கு (எடுத்துவிடு என்பார்கள்).

  கங்காருவின் கரு, ஒரு சிறு குழந்தையாக (இல்லை ஒரு சிறு உருவமாக, சுண்டுவிரலில் பாதி அளவு) வந்தபிறகு, கருப்பையிலிருந்து சிறிது கீழே இறங்கி, தாயின் உள் பகுதியில் உள்ள காம்பில் வாயை வைத்துக்கொண்டு அங்கேயே சில மாதங்கள் இருந்து வளரும். பல மாதங்களுக்குப் பிறகுதான் அது கங்காரு குட்டியாக உருமாறி, பிறகு தாயின் பைக்குள் சென்று உட்கார்ந்துகொள்ளும். இதைப் பற்றிக் கண்டபோது இயற்கையின் அதிசயத்தை உணர்ந்தேன்.

  மான், Beast, கங்காரு போன்றவைகளின் குழந்தை மண்ணில் விழுந்தபின், சில நிமிடங்களில் ஓடத் தயாராகிவிடும் (இல்லைனா, அந்த வாசனையை முகர்ந்து புலி, சிறுத்தை, சிங்கம் போன்றவை தாக்கிக்கொல்ல வந்துவிடும்). பார்க்க அவ்வளவு ஆச்சர்யம்.

  இறைவனின் விளையாட்டு, அலகிலா விளையாட்டுடையான் என்று சொல்வதில் என்ன சந்தேகம்.

 7. natchander சொல்கிறார்:

  YOU CANNOT TALK OF GOD TO A STARVING PERSON !!
  YOU MUST GIVE HIM FOOD !!
  FIRST !!
  JAWAHARLAL NEHRU HAD TOLD ONCE !!!!
  SO ONE SHOULD ACCEPT ,,, THE FOOD !!!
  WHAT WE GET DAILY !!!
  SIMPLE !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.