கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (1)


இந்த “விமரிசனம்” தளம் ஒரு பல்சுவைத் தளமாக
உருவாக வேண்டுமென்று முயற்சிக்கிறேன்.

அரசியலோடு கூடவே – சமூகம் தொடர்புடைய பல
விஷயங்கள், திரைப்படங்கள், பாடல்கள், நகைச்சுவை,
சுவாரஸ்யமான பல காணொளிகள், ஆன்மிகம்
என்று பல தரப்பட்ட விஷயங்களும் இந்த தளத்தில்
கொஞ்சம் கொஞ்சமாக – இடம் பெறுகின்றன.

இப்போது புதிதாக இன்னொரு தலைப்பையும் இதில்
சேர்த்துக் கொள்ளலாமென்று நினைக்கிறேன்.

நிறைய விஷயங்களை பார்க்கிறோம்…
நிறைய விஷயங்களை கேட்கிறோம்…
நிறைய விஷயங்களை படிக்கிறோம்…

ஆனால், இவற்றில் எத்தனை
விஷயங்கள் பற்றி யோசிக்கிறோம்…?
அநேக சந்தர்ப்பங்களில் பார்த்து, கேட்டு, படித்து விட்டு –
அப்படியே கடந்து சென்று விடுகிறோம்….ஏனென்றால்,
யோசிப்பதற்கான தேவை அங்கே இருப்பதாக நமக்கு
தோன்றுவதில்லை.

எனவே, யோசிப்பதற்கென்றே சில விஷயங்களை
எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

மிகச்சிறந்த அறிஞர்கள், பெரிய பெரிய ஞானிகள்,
விஞ்ஞானிகள், தத்துவ மேதைகள், அனுபவம் மிக்க
பெரியோர்கள்…சிறந்த பேச்சாளர்கள் – என்று நிறைய பேர்

வாழ்க்கையைசெம்மைப்படுத்திக்கொள்ள உதவக்ககூடிய பல
செய்திகளை, சிந்தனைகளை, கருத்துகளை சொல்லி
இருக்கிறார்கள்; இன்னமும் சொல்லிக்கொண்டும்
இருக்கிறார்கள்.

பள்ளியில் நாம் படித்த அல்ஜீப்ராவும், கால்குலஸும்,
ஜியாமெட்ரியும், கெமிஸ்டிரியும் பொதுவாக நமது
நிஜ வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லை.

சிலருக்கு மேல்படிப்பிற்கும், வேலை முயற்சிகளுக்கும்
உதவலாம். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு
பள்ளியில் படித்த பல விஷயங்கள், நிஜ வாழ்க்கையில்
எந்த விதத்திலும் துணை வருவதில்லை
என்பது தான் உண்மை.

எனவே, நம் வாழ்க்கைக்கு தேவையான
பல விஷயங்களை, நாம் பள்ளிக்கு வெளியிலிருந்து தான்
தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இத்தனை ஆண்டுக்கால வாழ்க்கை அனுபவத்திலிருந்து
நாம் தெரிந்து கொண்ட சில பயனுள்ள செய்திகளை,
உண்மைகளை – கொஞ்சம் அலசிப்பார்ப்போமே என்று
தோன்றியது.

அதன் விளைவே – ” கொஞ்சம் கொஞ்சமாக … யோசிக்க ” –
என்கிற தலைப்பிலான இந்த புதிய இடுகைத் தொடர்.

நான் பார்த்த, கேட்ட, அறிந்த, உணர்ந்த – அனுபவங்களை
வைத்து, இந்தத் தொடரை எழுத முயற்சிக்கிறேன்.
இதில் சொல்லப்படும் கருத்துகள், எண்ணங்கள் –
பெரும்பாலும் பல ஞானிகளும், விஞ்ஞானிகளும்,
அறிஞர்களும், தத்துவ மேதைகளும், உலகைத் துறந்த
சந்நியாசிகளும் கூறியவற்றை பின்னணியாக
கொண்டவையாகத் தான் இருக்கும்.

அதாவது, நான் புரிந்துகொண்டதை, தெரிந்து கொண்டதை,
உணர்ந்து கொண்டதையே பெரும்பாலும் இங்கே
ஒருங்கிணைத்து எழுதுகிறேன் என்பதால், என்னுடைய
சொந்தக்கருத்து என்பது இதில் சிறிய அளவிலேயே
இருக்கும்.

கடுமையான தத்துவங்களாக எடுத்துக் கொள்ளாமல்,
தெளிவான, எளிதான அணுகுமுறையின் மூலம் சில
விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்க எடுத்துக்

கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதனால் தான் –
“கொஞ்சம் கொஞ்சமாக – யோசிக்க” தலைப்பு….!!!

இந்த இடுகைத் தொடரை எழுத முற்படுவதன்
முதல் நோக்கம் – என்னை நானே உணர்ந்து கொள்ளவும்,
எந்த அளவிற்கு நான் இவற்றையெல்லாம் புரிந்து
கொண்டிருக்கிறேன் என்று அறிந்து கொள்வதற்குமே.

அடுத்ததாக – இந்த தொடரை எழுதுவதற்காக, நான்
நிறைய புத்தகங்களை, தொடர்புகளை –
தேடிக் கண்டுபிடித்து படிக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு
கிடைக்கும். இன்னும் மேலும் மேலும் அறிந்து கொள்ள
வேண்டும் என்கிற என்னுடைய விருப்பத்தை
நிறைவேற்றிக்கொள்ள இது உதவியாக இருக்கும்.

அடுத்து – என்னுடைய அலசலை – இங்கே கொஞ்சம்
வெளிப்படையாகவும், உரக்கவும் செய்தால்,

இத்தகைய விஷயங்களில் ஆர்வம் உடைய இதர
நண்பர்களின் பங்கேற்பும், பங்களிப்பும் கூட இதன் மூலம்
கிடைக்குமே என்பது அடுத்த எண்ணம்.

இது win – win situation என்பார்களே அது போல் –

– எனக்கும்,
– அதே சமயம் என்னைப்போன்று
யோசிக்கக்கூடிய மற்ற நண்பர்களுக்கும்,
– பொதுவாக இதைப் படிக்கும் எல்லாருக்குமே
உதவியாக இருக்குமென்று நினைக்கிறேன்.

துவக்கத்திற்கு இது போதுமே…
தொடர்ந்து பேசிக்கொண்டே தானே இருக்கப்போகிறோம்…!!!

————————————————————–

“பசி” என்னும் பேராக்கினி….!!!

ஒருவர் ஒரு இடத்தில் வேலை செய்கிறார்…

ஒரு வாரம் வேலை செய்த பிறகு,
வாரக்கடைசியில் அவருக்கு சம்பளம் தருகிறார்கள்…

சிலருக்கு, ஒரு மாத காலம் வேலை செய்த பிறகு,
மாதக் கடைசியில் சம்பளம் தருகிறார்கள்…

சில இடங்களில், முன் தொகையாக, அட்வான்சாகவே
வேலைக்கான பணத்தைத் தருகிறார்கள்…

இவற்றில் எதிலுமே பிரச்சினை எதுவும் இருப்பதாக
நமக்குத் தெரியவில்லை…

ஏன்…?
சம்பளம் எப்போது வரும் என்பது உறுதியானால் போதும்.
அதற்கேற்றபடி நமது பணத்தேவைகளை ஒழுங்குபடுத்திக்
கொள்கிறோம்.

ஆனால், இதே கொள்கையை – நம்மால் சாப்பாட்டு
விஷயத்தில் கடைபிடிக்க முடியுமா…?

அடுத்த ஒரு வாரத்திற்கான சாப்பாட்டை முன் கூட்டியே
சாப்பிட்டு விட்டு, ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிடாமலே
வேலை செய்ய வேண்டுமென்று தீர்மானித்து
செயல்பட முடியுமா …?

அல்லது –

ஒரு வாரம் தொடர்ந்து வேலை செய்து விட்டு,
பிறகு ஒரு வாரத்திற்கான உணவை மொத்தமாக
சேர்த்து சாப்பிடுவோம் என்று தீர்மானித்து
செயல்பட முடியுமா…?

இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி
என்று கூட தோன்றலாம்…!!!
தோன்ற வேண்டும்… அப்போது தான் யோசிக்க முடியும்..

ஏன் முடியாது…?
ஏன் முடியவில்லை….?

நமது கை,கால்களின் மீது
நமது அதிகாரம் செல்லுபடியாகிறது….
உடலின் இதர பகுதிகளின் மீது
நமது அதிகாரம் செல்லுபடியாகிறது…

ஆனால் – நமது வயிற்றின் மீது
நமக்கு ஏன் அதிகாரம் இல்லை … ?

தம்முடைய பசி, தாகத்தின் மீதே
மனிதனுக்கு அதிகாரம்(control) இல்லையே – ஏன் …?

குழப்பமாக இருக்கிறது அல்லவா…?

———-

நாளை மீண்டும் வருகிறேன் –
அதுவரை கொஞ்சம் – யோசிப்போமா… 🙂 🙂

.
தொடரும் –
——————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (1)

 1. Jayakumar Chandrasekharan சொல்கிறார்:

  ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
  இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
  என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
  உன்னோடு வாழ்தல் அரிது. 11

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   அருமை நண்ப ஜெயகுமார் சந்திரசேகரன்.
   மிகப்பொருத்தம்.
   .

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    மேலே நண்பர் ஜெயகுமார் சந்திரசேகரன்
    கூறியுள்ள பாடல்,
    வயிற்றை நோக்கி ஒளவையார் பாடியது –

    இதன் பொருள்:

    ”என் வயிறே! இன்று உணவு கிடைக்கவில்லை.
    இன்று ஒரு நாளைக்கு மட்டும் சாப்பிடாமல் இரு
    என்று சொன்னால் இருக்கமாட்டேன் என்கிறாய்.

    வயிற்றுப் பசி கிள்ளுகிறது. இன்று நிறைய
    உணவு கிடைத்திருக்கிறது. இரண்டு நாளைக்கு
    சேர்த்து சாப்பிட்டுகொள் என்று சொன்னாலும்
    சாப்பிடமாட்டேன் என்கிறாய்.

    உணவுக்காக நான் போராடும் துன்பம் உனக்குத்
    தெரியவில்லை. உடம்புத் துன்பத்தை
    அதிகமாக்கிக்கொண்டே இருக்கிறாய்.
    அதனால் வயிறே! எப்படியும் உன்னோடு
    நிம்மதியாக வாழமுடியவில்லை.”

    ஒரு சமயம் இந்தப் பாடலை தன் ஆசிரமத்தில்
    இருந்த பண்டாரம் ஒருவர் பாடுவதைக் கேட்டுக்
    கொண்டிருந்த ரமண மகரிஷி, அதே பாடலை
    வயிறு மனிதனை நோக்கிப்
    பாடுவதுபோல, மாற்றிப் பாடினார்.

    ”ஒரு நாழிகை வயிறு எற்கு
    ஓய்வு ஈயாய் நாளும்
    ஒரு நாழிகை
    உண்பது ஓயாய்
    ஒரு நாளும்
    என்னோ அறியாய்
    இடும்பை கூர்
    என் உயிரே
    உன்னோடு வாழ்தல் அரிது”

    இந்தப் பாடலின் பொருள் –

    ”ஓ, உயிருக்கு உறைவிடமான மனிதனே!
    வயிறாகிய எனக்கு நீ ஒரு நாழிகை கூட
    ஓய்வு அளிப்பதில்லை. ஒரு நாழிகைகூட
    நீ சாப்பிடுவதை நிறுத்துவதில்லை.
    என் துன்பம் உனக்குப் புரிவ தில்லை.
    எனக்குத் தொல்லை தரும் என்னுயிரே!
    உன்னோடு வாழ்தல் அரிது.”

    இந்தப் பாடல் எழுந்த சூழ்நிலை பற்றிக்
    கூறும்போது, ”விளையாட்டுக்காக எழுதிப்
    பாடினேன்” என்றார் மகரிஷி.
    விளையாட்டாகப் பாடிய பாடலா இது ?

 2. புதியவன் சொல்கிறார்:

  உயிர் வாழ ஆதாரமாக இருப்பது எதையும் நம்மால் லேசில் கட்டுப்படுத்த முடியாது. தண்ணீருக்குள் மூழ்கினாலும் மூச்சு இழுக்க ஆட்டமேட்டிக்காக நாம் பிரயத்தனப்படுவோம். அதுபோல உயிரைப் பாதுகாக்கும் ஒவ்வொரு செயலும் அநிச்சையாக நடைபெறுவதே.

  இதைப்போன்றதுதான் சந்ததிகளை உருவாக்குவதும். இப்போதுள்ளதுபோல நாலெட்ஜ் (புரிதல்) இல்லாதிருந்தபோதும் சந்ததி உருவாக்கம் யுகம் யுகமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,
   ( மற்ற நண்பர்கள் கூட இதற்கு
   விளக்கம் அளிக்கலாம்…)

   “சந்ததி உருவாக்கல்” பற்றி நீங்கள்
   கூறியதைத் தொடர்ந்து விடை
   காண வேண்டிய சில கேள்விகள் …

   – சந்ததி உருவாக்கலுக்கு, பாலுறவு
   தேவைப்படுகிறது; இதற்காகவே
   இருபாலருக்கும் ஒருவரை மற்றொருவர்
   கவர்ந்திழுக்கும் வகையில் உறுப்புகள்
   படைக்கப்பட்டிருக்கின்றன.

   சந்ததி உருவாக்கலுக்கு இதைப்பற்றிய
   உணர்தல், புரிதல் தேவை.
   (உதாரணம் – ரிஷ்யசிருங்கர்… )

   ஆனால், பிறவியிலிருந்தே பார்வை
   இல்லாத, ஆணுக்கும் பெண்ணுக்கும்
   உள்ள வித்தியாசங்களை உணர முடியாத,
   கவர்ச்சி உறுப்புகளைக் காணவோ,
   உணரவோ – வாய்ப்பில்லாத –
   ஒரு ஆணும், பெண்ணும் கூடி, வாரிசுகளை
   உருவாக்கும் அதிசயம் எப்படி நடக்கிறது…?

   அவர்களின் உணர்வுகள் தூண்டப்படுவதும்,
   பாலுறவு வழிமுறைகள் பற்றிய
   அவர்களது புரிதலும் எப்படி நடக்கிறது…?

   நமக்குத் தெரியாத, நமக்குப் புரியாத
   சில விஷயங்களை தெரிந்துகொள்ளும்
   முயற்சியில் எழுதப்படும் தொடர் என்பதால்
   இத்தகைய கேள்விகள்… !

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   .

 3. பிங்குபாக்: கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (2) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.