தமிழ் வார இதழ்களின் நிலை – அன்றும், இன்றும், இனியும்…. (பகுதி-2)





முதல் பகுதியில் திரு.மாலனின் கட்டுரை வெளிவந்தது.
இந்த 2-ம் பகுதியில், மாலனைத் தொடர்ந்து திரு.ஜெயமோகன்
தனது வலைத்தளத்தில் “வார இதழ்களின் வரலாறு – மாலன்”
என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரை கீழே –

————-

மாலன் இணையத்தில் எழுதிய இந்தக் குறிப்பை வாசிக்க
நேர்ந்தது. நான் அறுபதுகள் முதல் வார இதழ்களை
வாசித்தவன். அதாவது என் ஐந்து வயது முதல். நான்
குமுதம் வாசிக்க தொடங்கும்போது அதில் ராஜமுத்திரை
தொடராக வந்துகொண்டிருந்தது என்பது நினைவு. அதற்கு
லதா வரைந்து வெளிவந்த ஓவியங்கள், அந்தப்
பக்கங்களுடனேயே நினைவில் நிற்கின்றன. ‘விகாரமுக
வாலிபன்’ இந்திரபானு என்னுடைய அக்கால ஹீரோ.

இரண்டாயிரம் வரைக்கும்கூட நான் வார இதழ்களின்
வாசகன். புரட்டிப்பார்ப்பதாவது உண்டு. ஒரு கட்டத்தில்
சுஜாதா மட்டும். பின்னர் அவை வெறும் சினிமாச்
செய்திகளாக மாறின. இணையத்திலிருந்து எடுத்து
போட்டுக்கொள்ள தொடங்கின. இன்று அவை கிட்டத்தட்ட
மறைந்துவருகின்றன. ஒரு யுகத்தின் முடிவு என்றே
சொல்லலாம். வாரஇதழ்களை இனிமேல் காப்பாற்ற
முடியாது. ஊடகங்கள் அனைத்து செய்தி முறைமைகளையும் தொகுத்துக்கொண்ட அமைப்புக்களாகவே செயல்பட முடியும்.

இதழ்கள் மேல் வந்த ஈர்ப்பு எனக்கு தொலைக்காட்சிமேல் வரவில்லை. ஆச்சரியமான விஷயம், தொலைக்காட்சித்
தொடர்பே என் வீட்டில் இருக்கவில்லை. 1998-ல் தான்
வீட்டில் ஒரு கறுப்புவெள்ளை டிவி வாங்கினோம்.
அதிலும் மிகமிக குறைவாகவே தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளைப் பார்த்தோம். பெரும்பாலும் உள்ளூர்
இணைப்பில் மலையாளப்படங்கள்.

1999 ல் வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு தேவையில்லை
என்ற முடிவுக்கு வந்தேன். 2000-த்தில் கணிப்பொறி வாங்கி
விட்டேன். தொலைக்காட்சி சினிமா குறுந்தட்டுக்கள்
போட்டுப்பார்ப்பதற்காக மட்டும். இன்றுவரை கேபிள்
தொடர்பே வீட்டில் இல்லை. தொலைக்காட்சிச் செய்திகள்
மொத்தமாக இதுவரை ஐம்பது முறைக்கும் குறைவாகவே
பார்த்திருப்பேன். எந்த சீரியலையும் ஒரு எபிஸோட்
அளவுக்குக் கூட பார்த்ததில்லை. எந்த தொலைக்காட்சி
விவாதத்தையும் முழுக்க பார்த்ததில்லை – நானே தோன்றிய
ஒரே ஒரு தொலைக்காட்சி விவாதத்தையே கூட.

இன்று எப்போதாவது ஓட்டல்களில் தங்கும்போது
தொலைக்காட்சி போட்டுப்பார்ப்பேன். எதுவுமே எனக்கு
ஆர்வமூட்டாது. ஏனென்றால் தொடர்பே இல்லை.
பத்துப்பதினைந்து நிமிடம் பழைய கறுப்புவெள்ளை பாடல்கள்.
அல்லது நேஷனல் ஜியோக்ராஃபி. அவ்வளவுதான்.

ஆனால் அச்சுஊடகம் மீதான மோகம் இன்றும் ஒரு
நினைவாக நீடிக்கிறது. ஏனென்றால் ஒரு காலத்தில்
அதை வெல்லவேண்டும் என்ற கனவு இருந்தது—அதுதானே
அன்று எழுத்தாளர்களை உருவாக்கும் களம். 1986 ல்
சுந்தர ராமசாமி வழியாக சிற்றிதழ்மோகம் ஏற்பட்டாலும்
மேலும் நான்கு ஆண்டுகளுக்குப்பிறகுதான் மெல்ல மெல்ல
வாரஇதழ்களுக்கு செல்லவேண்டும் என்ற ஆர்வம்
இல்லாமலாகியது.

அதற்கு வெளியே நான் ஓர் எழுத்தாளனாக உருக்கொண்டதே
காரணம்.1991 ல் கோவை ஞானியின் நிகழ் இதழில் எழுதிய
கதைகள் வழியாக நான் ஓர் அறியப்பட்ட எழுத்தாளானாகவே நிலைகொண்டுவிட்டேன். அதன்பின்னரே வார இதழ்கள்
என்னை அறிந்தன. அவற்றில் உள்ள நண்பர்கள் என்னிடம்
கோரியபோது அரிதாக சில படைப்புக்களை வாரஇதழ்களில்
எழுதியிருக்கிறேன்.

தமிழின் எந்த பெரிய ஊடகத்திற்கும் என் உருவாக்கத்தில்
சிறு பங்களிப்புகூட இல்லை. அவற்றிடமிருந்து நான்
பெற்றுக்கொண்டதும் ஏதுமில்லை. ஊடகநண்பர்கள் உண்டு.
அவர்கள் அவ்வப்போது என்னைப்பற்றிய செய்திகளை
வெளியிட்டதுண்டு. ஆனால் என்னுடைய முக்கியமான
படைப்புக்கள் சிற்றிதழில் வெளிவந்தவை. பல படைப்புக்கள்
நேரடியாக சிறுகதை தொகுதியில் சேர்க்கப்பட்டன

என்னுடைய வாசகப்பரப்பை நானே உருவாக்கிக்கொண்ட
சொல்புதிது, ஜெயமோகன்.இன் போன்ற ஊடகங்கள்
வழியாகவே பெரும்பாலும் அடைந்திருக்கிறேன்.
சற்றேனும் கடன்பட்டிருப்பது குறுகியகாலம் வெளிவந்த
சுபமங்களா இதழுக்கு மட்டுமே.

ஆனாலும் தமிழ் வாரஇதழ்கள் மேலுள்ள மோகம்
ஒரு நினைவாக நீடிக்கிறது. அதில் வந்த பெயர்கள்,
படைப்புக்கள். பல இதழ்களின் பக்க வடிவமைப்பே
நாற்பதாண்டுகள் கடந்தும் நினைவிலுள்ளது.

மாலனின் இக்குறிப்பில் உள்ள பெயர்களை படித்துக்
கொண்டிருந்தபோது தோன்றியது தமிழ் வாரஇதழ்களின்
வரலாற்றை சுவாரசியமான நிகழ்வுகளுடன் மாலன்
எழுதலாம் என்று. அவர் அதற்கு தகுதியானவர்.
அரைநூற்றாண்டாக அவ்வுலகில் வாழ்பவர்

கல்கி, தேவன் காலம், அதன்பின் சாண்டில்யன்,
ஜெகசிற்பியன், ஆர்வி, பிவிஆர் காலகட்டம்.அதன்பின் சுஜாதா,
பாலகுமாரன், இந்துமதி ,சிவசங்கரி காலகட்டம்.
அதன்பின் ராஜேஷ்குமார், சுபா,பட்டுக்கோட்டை பிரபாகர்
காலகட்டம் என்று நான்கு தலைமுறைகள்.
ஆப்டோன் அச்சு முதல் ஆப்செட் கணினி அச்சுவரையிலான
தொழில்நுட்ப மாற்றங்கள்….

எழுத எவ்வ்ளவோ உள்ளன.அலுவலகச்சூழல், அன்றிருந்த
அரசியல் சமூகவியல் நெருக்கடிகள். உதாரணம்
மு.கருணாநிதியின் ரோமாபுரிப் பாண்டியன் குமுதத்தில்
நின்றுபோனது, சுஜாதாவின் தொடர்கதைக்கு எதிராக நாடார்
சாதியினர் உருவாக்கிய எதிர்ப்பு. வெளியே அறியப்படாத
பல ஆளுமைகள். உதாரணமாக, நான் எட்டாம் வகுப்பு
படிக்கும்போது குமுதத்திற்கு கதை அனுப்பினேன். எனக்கு
பால்யூ பதில் கடிதம் எழுதியிருந்தார். என் வாழ்க்கையின்
மறக்கமுடியாத பெயர்களில் ஒன்று.

ஒரு முழுஉலகமே எழுதப்படாமல் இருக்கிறது. ஒருவேளை
இப்போது எழுதப்படாவிட்டால் எப்போதுமே எழுதப்படாமல்
போய்விடும்


——————————————————

என் குறிப்பு –

என் சிறிய வயதிலிருந்து –
(கிட்டத்தட்ட 1953-54-ல் இருந்து ) தமிழில் வெளிவரும்
பல வார, மாத இதழ்களை
(அவ்வப்போது சில இடைவெளிகளுடன் )
நான் தொடர்ந்து படித்து வருகிறேன். அவற்றுடன்
எனக்குண்டான தொடர்புகள் மறக்க முடியாதவை.

தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் அத்தனை பேரின்
எழுத்துக்களுடனும் எனக்கு பரிச்சயம் உண்டு.

இங்கே சொல்லப்பட்டிருக்கும் வார இதழ்களில்
எழுதியவர்களைத் தவிர –
பல நாவல் ஆசிரியர்களும் உண்டு.
வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார்,
திருமதி வை.மு.கோதைநாயகி அம்மையார்,
துப்பறியும் எழுத்தாளர் சிரஞ்சீவி, மேதாவி
“பேசும்படம்” ராம்நாத், “காதல்” அரு.ராமநாதன்
என்று இன்னும் பலர்…. (இன்னும் பலரை உடனடியாக
என்னால் நினைவிற்கு கொண்டு வர முடியவில்லை…!)

திரு.ஜெயமோகன் –

“தமிழ் வாரஇதழ்களின் வரலாற்றை
சுவாரசியமான நிகழ்வுகளுடன் மாலன்
எழுதலாம்…. அவர் அதற்கு தகுதியானவர்.
அரைநூற்றாண்டாக அவ்வுலகில் வாழ்பவர்..”

– என்று சொல்வதை நானும் வழிமொழிய
விரும்புகிறேன். தமிழ் வார, மாத இதழ்களின்
வரலாற்றை, (நின்று போன இதழ்களையும் சேர்த்து)
மாலன் அவர்கள் அவசியம் எழுத வேண்டும்.
தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியாக
அது அமையும்.

.
——————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to தமிழ் வார இதழ்களின் நிலை – அன்றும், இன்றும், இனியும்…. (பகுதி-2)

  1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    பத்திரிகைகள் ஒரு காலத்தில் வாசகர் எண்ணத்தை
    உருவாக்கி வந்தன . Mass media என்று இருந்தது
    செய்தித்தாள் மற்றும் பத்திரிகை மட்டுமே .

    சுதந்திர போராட்டத்தில் பத்திரிகையின் பங்கு இருந்தது .
    நிருபர் என்றால் பெரிய தலைவர்களும் நேரம் ஒதுக்கி
    பேசுவார்கள் .

    மக்களிடம் கருத்து சென்றடைய அது ஒன்றே வழி
    இப்போது யாரும் நிருபர்களை பார்ப்பது கூட இல்லை .
    டிவி யோ இல்லை இன்டர்நெட்டோ இப்போது !
    நிருபர் என்பது இன்று வேண்டா விருந்தாளி

    பாரதியார் பத்திரிகை ஆசிரியராக மக்கள்
    எண்ணத்தை தட்டி எழுப்பினார் .
    சுதேசமித்திரன் இதழில் தலையங்கம் , கதை ,
    கட்டுரை , செய்தி என்று அவரே எல்லாம் !

    பிற்காலத்தில் அது மாதிரி ரா கிருஷ்ணமூர்த்தி என்ற
    கல்கி விளங்கினார் .
    அதனால்தானோ என்னவோ ஆசிரியர்கள் எல்லாமே
    எழுதி கொண்டிருந்தார்கள் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.