தமிழ் வார இதழ்களின் நிலை – (பகுதி-1)

….


….

இன்றைய நாட்களில் கொரோனா பாதிப்பு காரணமாக
பலத்த அடி வாங்கியிருக்கும் துறைகளில்
பத்திரிகைத் துறையும் முக்கியமான ஒன்று.

வார இதழ்களின் இன்றைய நிலை குறித்து,
“சென்றது இனி மீளுமா” – என்கிற தலைப்பில்
மூத்த பத்திரிகையாளர் மாலன் அவர்கள் தனது முகநூல்
பக்கத்தில் அண்மையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்…..

அதைத் தொடர்ந்து திரு.ஜெயமோகன் தனது வலைத்தளத்தில்
“வார இதழ்களின் வரலாறு – மாலன்” என்கிற தலைப்பில்
மாலனின் கட்டுரையின் தொடர்ச்சியாக தனது கருத்துகளை
சொல்லி இருக்கிறார்.

இதைப்பற்றி எனக்கும் கூட சில கருத்துகள் உண்டு.
விமரிசனம் வலைத்தள வாசகர்கள்
பலருக்கும் கூட, வித்தியாசமான கருத்துகள் இருக்கலாம்.

மாலன் சொல்லி இருக்கும் வார இதழ்கள்
பெரும்பாலானவற்றின் தொடக்ககாலத்தை,
சரித்திரத்தை –

– மூத்த வாசக நண்பர்கள் மட்டுமே அறிவார்கள்
என்று நினைக்கிறேன். நடுத்தர வயது நண்பர்களும் கூட
ஓரளவு அறிந்திருப்பார்கள்.

ஆனால் இந்த மாதிரி வார இதழ்களை தொடர்ந்து
படிக்கும் வாசகர்கள் அனைவருக்குமே –

இந்த தலைப்பிலான விஷயங்களை
தெரிந்து கொள்வதில் நிச்சயம் ஒரு ஆர்வம் இருக்கும்.

இந்த கட்டுரையை 2 பகுதிகளாக பதிப்பிக்கிறேன்.
முதல் பகுதியில் மாலன் அவர்களின் கட்டுரை.
அடுத்த பகுதியில் ஜெயமோகன் அவர்களின் கருத்துகள்.

இடையே பின்னூட்டங்களின் மூலம் நாம் நமது
எண்ணங்களையும் பரிமாறிக்கொள்வோம். இந்த தலைப்பின்
பின்னணியைப் பற்றி அறிந்த நண்பர்கள் அவசியம் தங்கள்
கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளவேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்…..

முதலில் திரு.மாலனின் கட்டுரை –

———————————————————–

சென்றது இனி மீளுமா?
மாலன்

என் ஊடக சகோதரர்கள் வேலை இழப்பு, பணி விடுமுறை,
சம்பளக் குறைப்பு என்ற இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள்
என்ற செய்திகளைக் கேட்க எனக்கு வருத்தமே மேலிடுகிறது.
அவர்களில் பலர் கடுமையான உழைப்பாளிகள்.

அவர்களின் பெயரோ முகமோ கூடப் பலருக்குத் தெரியாது
(என்னுடைய நூல் ஒன்றை அது போன்ற பத்திரிகையாளர்களுக்கு
சமர்ப்பணம் செய்திருக்கிறேன்) அவர்களுக்கு இது போல்
இடர் நேரிட்டிருக்கக் கூடாது. கொரானா உலகையே
வாட்டிக் கொண்டிருக்கிறது

கொரானா இப்படி ஒரு தாக்கம் ஏற்படுத்தும் என நான்
நினைத்ததில்லை. ஆனால் இது போன்ற நிலை என்றேனும்
நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் எனக்குக் கொரானாவிற்கு முன்னரே அவ்வப்போது ஏற்பட்டதுண்டு.

நான் பத்திரிகை உலகில் நுழைந்த போது வார இதழ்
அலுவலகங்களில் ஆசிரியர் துறையில் அதிகம் பேர்
இருக்கமாட்டார்கள். பெரும்பாலும் பத்திரிகையின் உரிமையாளாரே
ஆசிரியராக இருப்பார். வெறுமனே பெயருக்கு மட்டுமல்ல.
எழுத்தாளராகவும், பத்திரிகையில் வெளியிடப்படுவதைப் பற்றி முடிவெடுப்பவராக இருப்பார்.

ஆசிரியர் துறையில் மூன்று அதிகம் போனால் நான்கு பேர்
இருப்பார்கள். குமுதம் தமிழ் வார இதழ்களில் விற்பனையில்
முதலிடத்தில் இருந்த போது ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், சண்முகசுந்தரம் (புனிதன்) ஆகிய மூவர்தான் ஆசிரியர் பிரிவில்
முழு நேர ஊழியர்கள்.

….

.
( வார இதழ்களின் அட்டைப்படங்கள்
மாலன் கட்டுரையில் இல்லை;
இவை நானாகத் தேடியெடுத்து போட்டவை…)
….

பால்யூ அரசுப்பணியில் இருந்ததால் ரீட்டைனர் ஆக இருந்தார்.
ஆனால் அவரும் முழு நேரப் பணியாளர் போலத்தான் பங்களித்து
வந்தார். ரஜத், பாமா கோபாலன் போன்றோர் வெளியிலிருந்து
பங்களித்தார்கள். பின்னால் பிரபஞ்சன் முழு நேரப் பத்திரிகையாளராக இணைந்து கொண்டார்.எஸ்.ஏ.பி. யோடு சேர்ந்து
இவர்கள் எல்லோரும்தான் தமிழில் அதிகம் விற்பனையாகும்
இதழின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்து வந்தார்கள்

ராகி, ஜராசு, புனிதன், இந்த மூவரும் சிறுகதை, துணுக்கு,
தொடர்கதை முதல் வாசகர் கடிதத்தைத் தேர்வு செய்வது வரை
பத்திரிகை தொடர்பான அத்தனை வேலையையும் செய்வார்கள்.
எழுதுவதோடு எடிட் செய்வது, லே அவுட்டைத் தீர்மானிப்பது,
புகைப்படங்கள், ஓவியங்களைத் தேர்வு செய்வது என்று
அஷ்டாவதானம் செய்து கொண்டிருந்தார்கள்.

இறுதி முடிவை எடிட்டர் (எஸ்.ஏ.பி) எடுப்பார். அச்சுக்குப் போகிற
இறுதி நிலையில் கூட இது வேண்டாமே என்று அவர் சொல்லி
விட்டால் அந்தக் கடைசி நிமிடத்தில் அதற்கு மாற்றைத்
தேடியாக வேண்டும்.

அப்போது ஆஃப்செட்டில் அச்சாகி வந்தது.பிளேட் என்பதுதான்
இறுதி நிலை. பிளேட்டை மிஷினில் மாட்டி ஓட்டினால்
அதிலிருப்பது அச்சாகிவிடும். பிளேட் போட்டபின் அம்மோனியா
பிரிண்ட் என்று கட்டிட வரைபடங்களுக்கு நீல வண்ணத்தில்
பிரிண்ட் எடுப்பது போல முழுப்பத்திரிகையும் அம்மோனியா
பிரிண்டாக வரும் போது அதில் கூட எடிட்டர் திருத்தி நான்
பார்த்திருக்கிறேன்.

ரங்கராஜன், குமுதத்தோடு மாலைமதிக்கும் அவ்வப்போது
நாவலும் எழுதுவார். ஒருமுறை அந்த வாரத்திற்குத் தேர்வு
செய்யப்பட்டிருந்த நாவல் கடைசி நிமிடத்தில் நிராகரிக்கப்பட்டதால்
‘எடிட்டர் கூப்பிட்டால் மட்டும் சொல்லி அனுப்புங்கள்’ என்று
சொல்லிவிட்டு கட்டுக் காகிதங்களை எடுத்துக் கொண்டு
அலுவலக மாடிக்குப் போனவர் அன்று மாலை ஒரு
முழுநாவலோடு திரும்பி வந்தார்.

அநேகமாக அன்று இருந்த எல்லாப் வாரப்பத்திரிகைகளிலும்
இதுதான் நிலை. கல்கியில், கி.ராஜேந்திரன், மணி, சீதா ரவி.
பின்னர் இளங்கோவன் பா.ராகவன். சந்திரமெளலி வெளியிலிருந்து
பங்களித்து வந்தார் (இன்றும் கூட கல்கியில் அதிகம் பேர் இல்லை)
இதயம் பேசுகிறதுவில் தாமரை மணாளன், லட்சுமி சுப்ரமணியன்
(அவர் கூட முழு நேரப் பணியாளர் இல்லை) சாவியில்
பாரி வள்ளல் மட்டுமே முழுநேரப் பத்திரிகையாளர்.
ராணி மைந்தன், நான், பாலகுமாரன் போன்றவர்கள்
வெளியிலிருந்து பங்களித்து வந்தோம்.


திசைகளில் சுதாங்கன் மட்டுமே முழுநேரப் பத்திரிகையாளன்.
அரஸ், கங்கன், லே அவுட்களை கவனித்து வந்தார்கள். சீனியர்கள்
பணி ஓய்வு பெற்றபின் குமுதத்தில் பிரியா கல்யாணராமன்,
மணிகண்டன், ரஞ்சன் ஆகியோர் முழு நேரமாகப் பணியாற்றினார்கள்.
இவற்றில் விகடன் மட்டும் விலக்கு.
அன்றே, கல்கி காலத்திலிருந்தே அங்கு அதிகம் பணி புரிந்து கொண்டிருந்தார்கள்.(ஒவ்வொருவரும் ஜாம்பவான்கள்) இவர்கள்
பெயர்கள் கூட பத்திரிகையின் இம்ப்ப்ரிண்ட்டில் வராது

அன்று பத்திரிகைகளின் உள்ளடக்கத்தில் பெரும்பாலும் கதைகள்.
இரண்டு அல்லது மூன்று தொடர்கள், சிறுகதைகள் கணிசமான
இடத்தை எடுத்துக் கொண்டன. 96 பக்கங்கள்தான். ஆனால்
இன்றுள்ள தொழில்நுட்ப வசதி கிடையாது. கையால் எழுதி,
கையால் அச்சுக் கோர்த்து, பலமுறை மெய்ப்புப் பார்த்து,
கையால் எடிட் செய்து, கையால் லே அவுட் செய்து,
பதினாறு பதினாறு பக்கங்களாக அச்சிட்டு… எல்லாம் பல மணி
நேரம் பிடிக்கும் வேலை.

செய்தி இதழ்கள் வந்த பின் வாரப் பத்திரிகை அலுவலகங்கள்
நாளிதழ் அலுவலகங்களைப் போலாகிவிட்டன.
வாரப்பத்திரிகைகளைப் போல நாளிதழ்களின் content
வெளியாட்களிடமிருந்து வராது என்பதாலும் அதே எடிட் செய்வது,
லே அவுட் பணிகளை ஒரு நாளின் சில மணி நேரத்தில்
செய்தாக வேண்டும் என்பதால் அங்கு பலரின்
உழைப்புத் தேவைப்பட்டது.

கதை வாசிப்பு, பத்திரிகை வாசிப்பு என்பவை நடுத்தர வர்கக்
கலாசாரத்தின் ஓர் அம்சமாக இருந்ததுதான் 90களின் இறுதிவரை வாரப்பத்திரிகைகளின் வேர். சினிமா கூட அந்த வேரை அதிகம் பாதித்ததில்லை.

நடுத்தர வர்க்கம் முதலில் தொலைக்காட்சித் தொடர்கள்,
பின் செய்திச் சானல்கள், அதன் பின் இணையம் என
ஈர்க்கப்பட்ட போது அதன் வேர் பலவீனமடையத் தொடங்கியது.
ஆனால் பேஸ்மெண்ட் பலவீனமாக இருக்கிறது என்பதை
உணராமல் மாடி கட்டிக் கொண்டிருந்தன பத்திரிகைகள்.

அச்சுப் பத்திரிகை என்பது அதிக வருவாய் (Revenue) தரும் தொழில்ல. விற்பனை மூலம் வரும் வருவாய் செலவுகளுக்கு
மட்டுமே போதுமானதாக இருக்கும். லாபம் என்பதெல்லாம்
விளம்பர ஆதரவைப் பொறுத்தது. (இப்போது அச்சிடும்
விளம்பரங்கள் தவிர விருது நிகழ்ச்சிகள் (events) மூலம்
வருவாயை அதிகரிக்க முயற்சிக்கிறார்கள்)

அதனால் முதலாளிகள் input cost களை குறைப்பதில் கவனமாக இருப்பார்கள்.அதில் முதலில் பணியாளர்களின் ஊதியம்,
எழுதுபவர்களுக்கான சன்மானம் என்பதில்தான் அவர்கள் கவனம் திரும்பும்.ஏனெனில் காகிதத்தின் விலை, மையின் விலை,
விநியோகச் செலவு இவற்றில் கை வைக்க முடியாது என்றாலும்
பணி நீக்கம் என்ற முடிவு ஏற்கத் தக்கதல்ல. ஏதோ ஒரு வேலை
என்று பத்திரிகைத் துறைக்கு வருகிறவர்கள் குறைவு. அதன் மீதான
தாகத்தில் வருகிறவர்கள்தான் அதிகம் இன்றும்.

ஆனால் பத்திரிகைத்துறை தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள
வேண்டிய தருணம் இது என்று எனக்குத் தோன்றுகிறது கொரானா
நம்மைப் பல விஷயங்களில் பழைய காலத்திற்குத் திருப்பிக்
கொண்டிருக்கிறது. பத்திரிகையும் பழைய காலத்திற்குப்
போய்விடுமோ?

————————

பின் குறிப்பு –

மாலனின் கட்டுரையில் விட்டுப்போன வேறு சில முக்கிய
வார, மாத இதழ்களும் உண்டு. முக்கியமாக “தினமணி கதிர்”,
“கலைமகள்”, “மங்கையர் மலர்”, “அமுத சுரபி”
போன்றவை…

சிறுவர்களுக்கான – அம்புலிமாமா, கல்கண்டு, கண்ணன்
சினிமா இதழ்களான – “பேசும் படம்” “பொம்மை”
போன்றவை. (இவற்றில் பல ஏற்கெனவே நின்று விட்டன…)

மாலன் அனைத்தையும் சேர்த்து விரிவாக எழுத வேண்டும்
என்று துவங்கவில்லை என்று நினைக்கிறேன்…. எனவே,
அவரது நினைவிற்கு வந்த சிலவற்றுடன் எழுதி இருக்கிறார்.

எனக்கென்னவோ பத்திரிகை முதலாளிகளின் மேல் எந்த
பரிதாபமும் வரவில்லை. அங்கு மாத சம்பளத்திற்கு
உழைக்கும் நண்பர்களின் நிலை குறித்து தான் கவலை.
வேலையை இழந்தவர்கள் மீண்டும் நிலையான
ஒரு பணியைப்பெற எவ்வளவு காலம் ஆகுமோ…?
அதுவரை அவர்களது குடும்பத்தின் நிலை….?

ஆனால், இந்தப் பிரச்சினை பத்திரிகைத்துறையை மட்டும்
சார்ந்ததில்லை. இன்றைய தினம், சமூகத்தின் பல பிரிவுகளும் மிகக்கடுமையான ஒரு நிலையை எதிர்கொண்டிருக்கின்றன.

-தொடர்கிறது… பகுதி-2-ல்
—————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to தமிழ் வார இதழ்களின் நிலை – (பகுதி-1)

 1. புவியரசு சொல்கிறார்:

  அந்தக்காலத்திய ஆனந்த விகடன்
  அதன் நகைச்சுவை, சிறு, தொடர்கதைகள்
  மற்றும் குறுக்கழுத்துப் போட்டிகள் மூலம்
  புகழ் பெற்றது.
  கல்கி அதன் ஆசிரியரின் தனித்துவத்தாலும்,
  சுதந்திரப்போராட்டத்தில் காட்டிய ஈடுபாட்டாலும்
  புகழ் பெற்றது.
  குமுதம் எஸ்.ஏ.பி. காலத்தோடு சரி.
  இன்றைய நாட்களில் விகடனைப் பார்த்தாலே
  குமட்டுகிறது. அரசியல்வாதிகள் எறியும்
  எலும்புத்துண்டுகளின் பின்னால் அலையும்
  பத்திரிகைகளிடம் என்ன தரத்தைக் காண முடியும் ?
  அவை இருந்தால் என்ன போனால் என்ன ?
  ஆனால், நீங்கள் சொல்வது போல் அதில்
  பணிபுரியும் ஊழியர்களின் நிலை தான்
  பரிதாபத்திற்குரியது. அவர்களின் நல்வாழ்வுக்காக
  வேண்டுவோம்.

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  ஒரு பத்திரிகை வாசகர்களை வைத்து நடக்கிறது .
  வாசகர் ஏன் மெனக்கெட்டு படிக்க வேண்டும் ?
  என்ன நடக்கிறது , ஏன் நடக்கிறது என்பதை
  நம்மால் நேரில் போய் பார்க்கமுடியாது

  பத்திரிகை சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
  என வாசகர்கள் படிக்கிறார்கள் .
  இந்த நம்பகத்தனம் இல்லையென்றால் யாரும்
  சீந்த மாட்டார்கள் .

  மேலும் இப்போது இன்டர்நெட் ,டீ வி போன்றவைகளில்
  நடக்கும் போதே பார்க்க முடிகிறது .
  பத்திரிகைகளில் ஒரு வாரம் கழித்து வரும் .

  இதனால் செய்தியை விட்டுவிட்டு மார்கெட்டிங்கில்
  இறங்கிவிட்டன – உ ம் ஜக்கி ,நித்தி மற்றும் பலர் .

  யார் படிப்பார்கள் ?
  அந்நேரத்தில் வாட்ஸாப் பார்த்து விடுவார்கள் !

 3. புதியவன் சொல்கிறார்:

  பொதுவா மாற்றம் என்பது எல்லாத் துறைகளிலும் வந்துகொண்டே இருக்கும். அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றால் நீரோட்டத்திலிருந்து விலக்கிவிடப் படுவார்கள்.

  நாளிதழ்கள், செய்தித் தாள்கள், அன்றைய செய்திகளை, முழுவதும் அலசாமல் டி.ஆர்.பி ரேட்டிங் போல அல்லது தங்கள் கருத்துக்கு ஏற்ப வெளிவிடும். செய்தியை செய்தியாக வெளியிட்டால் நம்பகத்தன்மை பாதிக்காது. தன் எண்ணத்துக்கு ஏற்றபடி தலைப்பு வைக்கும்போதுதான் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் வாய்ப்பு பெறுகிறது.

  ஆனால் பத்திரிகைகளில் நிகழ்வை அலசி கட்டுரை எழுதறாங்க. அதனால் நியாயமாக எழுதினால் நம்பகத்தன்மை அதிகமாகும். நம்பகத்தன்மை வந்துவிட்டால் கண்ணைமூடிக்கொண்டு வாசகர்கள் நம்புவார்கள். அரசியல் தவிர மற்றத் துறைகளையும் பற்றி கலந்துகட்டி எழுதும்போது வாசகனுக்கு ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி வரும்.

  10 வருடங்களுக்கு மேலாக நமக்கு எல்லாச் செய்திகளும் அனேகமாக தொலைக்காட்சிகளில் தெரிந்துவிடுகிறது. 5 வருடங்களாக அது நம் செல்ஃபோனிலேயே இருக்கிறது. அலசல்களும் மீம்ஸ்களும் என்று அதகளப்படுகிறது. அதனை மீறி, வாரப்பத்திரிகையில் என்ன இருக்கிறது? Content என்று பார்த்தால் அரசியல் சார்புகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஏகப்பட்ட பத்திரிகைகளைப் படித்த எனக்கு, குங்குமம் ஓரளவு சிறப்புடையதாக இருக்கு. (திமுக ஜால்ரா என்பதை மறந்து மற்ற பகுதிகளைப் படித்தால்). பத்திரிகை ஜாம்பவான்களான குமுதம், விகடன், அதன் அருகில்கூட வரமுடியாது.

  மதன் காலத்தில், ஜூவி ஒரு செய்தியைச் சொன்னால், அதை 90% நம்பமுடியும். இப்போ உள்ள விகடன் குழுமம் ஒரு செய்தியைச் சொன்னால் அது 90% பொய்யாகத்தான் இருக்கும். நம்பகத்தன்மை இல்லை என்றால், வியாபாரம் இல்லை (நக்கீரன், ஜூவி செய்திகளை வெரிஃபை செய்துகொள்ளும் பத்திரிகையாக எனக்கு இருந்தது. எப்போ அவங்க திமுகவிற்கு விலை போய்விட்டார்களோ அப்போவே அது வாசகர்களையும் இழந்துவிட்டது). வியாபாரம் இல்லை என்றால், அங்கு பணியாற்றும் அத்தனை தொழிலாளர்களையும் எப்படி ரிடெயின் செய்வது?

  கல்கி கன்சர்வேடிவ் பத்திரிகை. அங்கு சம்பளம் அதிகம் கிடையாது, பணியாற்றுபவர்களுக்கும் அவ்வளவு எதிர்பார்ப்பு கிடையாது. விகடனில் பொதுவாக சாலரி அதிகம் என்று சொல்வார்கள். சன்மானமும் அதிகம். அதனால் விகடன் குழுமத்தால் ஆட் குறைப்பு செய்யாமல் சஸ்டெயின் பண்ண முடியாது. ஆனால் திறமையானவர்கள் அனைவருக்கும் தொலைக்காட்சி மற்ற ஊடகங்களில் வேலை கிடைத்துவிடும் என்றே நம்புகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.