153 ஆண்டுகளாக அணையாத ஒரு அற்புத அடுப்பு …!!!


….

….

….

இதை ஒரு உலக அதிசயமென்று தான் சொல்ல வேண்டும்.
இன்றைக்கு 153 ஆண்டுகளுக்கு முன்பு, திருவருட்பிரகாச
வள்ளலார் அவர்களின் திருக்கரங்களால் மூட்டப்பட்ட அடுப்பு
இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்து, பல கோடி
மக்களின் பசியை தீர்த்து வைத்திருக்கிறது….!!!

வடலூரில், 1867-ல் மே மாதம் 23ம் தேதி,
சத்திய தரும சாலையில் –
வள்ளளார் துவங்கி வைத்த “பசித்தவருக்கு சோறு” வழங்கும்
பணி இன்றும் தொடர்கிறது. தினமும் 3 வேளையும்
பசியென்று இங்கே வரும் அனைவருக்கும் சோறு
போடப்படுகிறது.

சாதாரண நாட்களில், இங்கு சராசரியாக தினமும்
600 நபர்கள் சாப்பிட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கு உத்திரவு காரணமாக
உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால்,
பலர் தொடர்ந்து சத்திய தரும சாலையிலேயே
தங்கியுள்ளனர்.

அன்னதானம் அநேகமாக அனைத்து கோயில்களிலும்
நிறுத்தப்பட்டுள்ள இன்றைய நிலையிலும்
வள்ளலார் தொடங்கிய இந்த தரும சாலையில்,
மட்டும் தினமும் தொடர்ந்து உணவு வழங்கப்படுகிறது.

பசியோடு வருபவர்களுக்கு உணவு வழங்கவேண்டும்
என்பது வள்ளலாரின் முக்கிய நோக்கம் என்பதால் தொடர்ந்து
செயல்படுவதாகவும், இங்கு ஊரடங்கு சம்பந்தமான
அனைத்து உத்திரவுகளும் கடைபிடிக்கப்படுவதாகவும்,
தவறாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதாகவும் இதன்
நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்…

அங்கு தங்கியிருப்பவர்கள் முகக்கவசம் அணிவது உறுதி
செய்யப்படுகிறது… தொடர்ந்து அங்கேயே தங்கி சாப்பிடும்
நபர்களுக்கு புதிதாக தனியே தட்டும் வழங்கப்பட்டுள்ளது.

வடலூர் சத்திய தரும சாலை மட்டுமல்லாது,
வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் மற்றும் தண்ணீரில்
விளக்கு ஏற்றிய கருங்குழி கிராமத்திலும் உணவு
வழங்குவதாக அவற்றின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

….

….

சாதாரணமாக, மாத பூஜை நாளில் சுமார் 20,000 நபர்கள்
இங்கே வருவார்கள். தற்போது வழிபாட்டிற்கு யாருக்கும்
அனுமதி கிடையாது என்பதால் அவ்வளவு கூட்டம் இல்லை.
ஆனால் உணவு வேண்டி வருபவர்களுக்கு தொடர்ந்து
உணவு கொடுக்கப்படுகிறது.

பண்டகசாலையில், எந்த நேரத்திலும் சுமார்
ஆறு மாதங்களுக்கு தேவையான அரிசி மற்றும் பருப்பு
போன்றவற்றை சேமிப்பில் வைத்திருப்பதால், தொடர்ந்து
உணவு வழங்கமுடிகிறது.

இங்கே சாப்பாடு போட உதவும் அரிசி, பருப்பு வகைகள்
முக்கியமாக, பெரும்பாலும் அறுவடை முடிந்ததும்
விவசாயிகளால் தங்கள் பங்காக அனுப்பப்படுகிறது.
அங்கே இருக்கும் அரிசி, பருப்பு உண்டியலில் சேர்க்க,
பலரும் அரிசி மூட்டைகளை அனுப்புகிறார்கள்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், இந்தியாவின்
பல்வேறு மாநிலங்களிலும் வள்ளலார் சபை மூலம்
அன்னதானம் வழங்கப்படுகிறது…

”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
என்னும் வள்ளலாரின் வரிகள் பலருக்கும் பரிச்சயமான
ஒன்று.

பயிர்கள் வாடுவதை போல, மனிதன் பசி ஏற்படும்போது,
வாடுகிறான். பசிக் கொடுமையை போக்கிக்கொள்ள
அவன் எத்தகைய தீய காரியத்தையும் செய்ய துணிகிறான்
என்பதால், பசியைத் தீர்க்கவேண்டும் என்பதில் வள்ளலார்
உறுதியாக இருந்தார்.

சாதி, மதம், இனம், பாலினம் என எந்த வேறுபாடும்
இல்லாமல், பசியோடு வருபவர்களுக்கு உணவு
கொடுப்பதுதான் உண்மையான கடவுள் வழிபாடு
என்பது வள்ளலாரின் கருத்து.

இங்கு தொடர்ந்து அடுப்பு எரியவும், தேவைப்படும்
மக்களுக்கு உணவு அளிக்கவும் – சாதி, மத வேறுபாடின்றி
பலரும் உணவு பொருட்களை தானம் செய்கிறார்கள்.
இந்தப்பணி தொடர்ந்து நடக்க, பொது மக்கள் மனமுவந்து
அளிக்கும் ஒத்துழைப்பே காரணம்.

பசித்து வாடி இருப்பவருக்கு சோறு கொடுப்பதை
விடச்சிறந்த தானம் உலகில் என்ன இருக்கிறது…? –
என்பதை வள்ளலாரை உணர்ந்தவர்கள் எல்லாரும்
ஏற்றுக்கொள்கிறார்கள்….

(புகைப்படங்கள் ; நன்றி பிபிசி வலைத்தளம்…)

—————————————
பின் குறிப்பு –

திருச்சியில். மலைக்கோட்டை தெப்பக்குளத்தின்
படித்துறையில், ஒரு சிறு அறிவிப்புப் பலகை
வைக்கப்பட்டிருக்கும். அதில் “இங்கு தினந்தோறும் மாலை
ஆறரை மணியளவில் சோறு வழங்கப்படும்” என்று
எழுதப்பட்டிருக்கும்.

நான் பல நாட்கள் நேரில் பார்த்திருக்கிறேன்…..
வெளியூர்களிலிருந்து வந்தவர்கள், கூலி வேலைக்காரர்கள்,
என்று வசதியில்லாத பலர், 100 பேர்களுக்கு குறையாமல்
இருக்கும்…. சாப்பாட்டிற்காக காத்திருப்பார்கள்.
தினமும் அந்தி சாயும் வேளையில், சுடச்சுட சாதமும்,
காய்கறிகள் மிதக்கும் சாம்பாரும், எவர்சில்வர் தட்டுகளும்
வண்டியில் வைத்து கொண்டு வருவார்கள்.
எத்தனை பேர் இருந்தாலும், அனைவருக்கும், சோறும்,
காய்கறிகள் நிறைந்த சாம்பாரும் தட்டில் போட்டு
தரப்படும். வரிசையில் நின்று, வாங்கி, குளத்தின்
படிக்கட்டுகளில் உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.
இந்தப்பணி மிகச்சுத்தமாகவும், அழகாகவும் நடைபெறும்.

எத்தகைய விளம்பரமும் இல்லாமல் –
வள்ளலார் மீது ஈடுபாடு கொண்டவர்கள் செய்யும்
இந்த அற்புதமான தொண்டு சற்றும் தன்னலமில்லாதது.
இந்த உலகில் அன்பும், கருணையும் தான் அனைத்தையும்
விடச்சிறந்தது என்று உணர்த்துகிறது.

.
——————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to 153 ஆண்டுகளாக அணையாத ஒரு அற்புத அடுப்பு …!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  வள்ளளாரின் பணி மகத்தானது.
  ஜீவகாருண்யம் – அதாவது உயிர்களை நேசிப்பது –
  அத்தனை உயிர்களையும்,
  அனைத்து படைப்புகளையும் நேசிப்பது,
  அனைவரின் மீதும் பரிவு, கருணை;
  அவர் வழியில் அதிகம் பேர் செல்ல ஆரம்பித்தால்,
  நிஜமாகவே இந்த உலகம் நிம்மதியாக இருக்கும்.
  இந்த இடுகைக்கு மிகவும் நன்றி காவிரிமைந்தன் சார்.

 2. புதியவன் சொல்கிறார்:

  //அன்பும் கருணையும்தான் மகத்தானது// – அட்சரலட்சம் பெறும் வார்த்தை.

  ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’

  பெரிய சேவை இது. இதற்கு உதவி செய்பவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.