அரசு விளம்பரத்திலா பத்திரிகைகள் பிழைக்க வேண்டும்…?


மக்கள் பக்கம் நிற்கின்ற அச்சு ஊடகங்கள் சந்தித்து
வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக பிரதமரிடம்
வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு,
திமுக துணை நிற்கும் என, அக்கட்சித் தலைவர்
மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அச்சு ஊடகங்கள் வழக்கம்போல மக்களின் குரலாக
செயல்படுவதற்கு திமுக துணை நிற்க வேண்டும் என்ற
வேண்டுகோளினை நேரில் தெரிவிப்பதற்காக

மூத்த பத்திரிகையாளர்கள் ‘இந்து’ என்.ராம் ஆகியோர் சந்தித்து,
கோரிக்கைக் கடிதத்தை அளித்தனர் – என்று திரு.ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.

– மக்களிடம் உண்மைச் செய்திகளை,
நடுநிலையோடு கொண்டு சேர்க்க வேண்டிய
பொறுப்பில் உள்ள அச்சு ஊடகங்களான பத்திரிகைகளின்
தேவை மிகவும் அதிகம்.

அவை நெருக்கடிக்குள்ளாவதிலிருந்து மீளும் வகையில்,

– மத்திய அரசு, பத்திரிகை அச்சுக் காகிதம் மீதான
வரியைக் குறைக்க வேண்டும்;

– அரசு விளம்பரங்கள் தொடர்பாக மத்திய, மாநில
அரசுகள் வைத்துள்ள நிலுவைத் தொகையை உடனடியாக
பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும்;

– காலத்தின் தேவை கருதி அரசு விளம்பரக்
கட்டணத்தை நூறு விழுக்காடு அளவிற்கு உயர்த்தி
வழங்க வேண்டும்;

பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கைகளை
நிறைவேற்றுவதற்கு, திமுகவின் நாடாளுமன்ற மக்களவை,
மாநிலங்களவை உறுப்பினர்கள் நிச்சயம்
துணை நிற்பார்கள். பிரதமரிடம் இதனை வலியுறுத்துவார்கள்
என்ற உறுதியினையும் வழங்கினேன்”.

-என்று திரு.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சில கேள்விகள் –

– மக்களிடம் உண்மைச் செய்திகளை,
நடுநிலையோடு கொண்டு சேர்க்க வேண்டிய
பொறுப்பில் உள்ள அச்சு ஊடகங்களான பத்திரிகைகள் –

என்று திரு.ஸ்டாலினால் வர்ணிக்கப்படும் நிலையில்,
எவ்வளவு பத்திரிகைகள், எந்தெந்த பத்திரிகைகள்,
அகில இந்திய அளவில் – குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் –
இவ்வாறு நடுநிலையோடும் பொறுப்போடும்
செயல்படுகின்றன என்பதை
திமுக தலைவரால் சொல்ல முடியுமா…?

பத்திரிகைத் துறையில் பணிபுரிபவர்களும்
நமது சகோதரர்களே; அவர்களுக்கும் உதவி தேவை
என்பதில் சந்தேகம் இல்லை.

முதல் 2 கோரிக்கைகளுக்கும் ஆதரவு கொடுப்பது சரியே.

ஆனால் –

3-வதாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கை எந்த அளவில்
நியாயமானது…? அவசியமானது…? சரியானது…?

அரசு விளம்பரங்கள் என்னும் ஆயுதத்தை கையில்
வைத்துக்கொண்டு தான் ஆளும் கட்சிகள்
(அது எந்தக்கட்சியாக இருந்தாலும் )

– பத்திரிகைத் துறையை ஆக்கிரமிக்கின்றன;
– அதிகாரம் செய்கின்றன.
– விலைக்கு வாங்குகின்றன;
ஆளும் கட்சிக்கு, அரசுக்கு ஜால்ரா போட வைக்கின்றன…?

எனவே, அரசு விளம்பரங்களை நம்பித்தான் பத்திரிகைகள்
செயல்பட வேண்டும் என்கிற எண்ணமே தவறானது.

பத்திரிகைகள் தங்கள் சொந்த செல்வாக்கில்,
தாங்கள் எடுக்கும் நிலையால், தரத்தால் –
மக்களிடம் தாங்கள் ஏற்படுத்தும் நம்பகத்தன்மையால்,

வளர வேண்டுமேயன்றி, அரசு கொடுக்கும் காசையும்,
அது தரும் விளம்பரங்களையும் நம்பி அல்ல.

அப்படி ஒரு பத்திரிகை அரசின் உதவியால் வளர்ந்தால்,
அது நிச்சயம் மக்களுக்கும்,
ஜனநாயகத்திற்கும் நல்லது அல்ல.

இவ்வாறு இரண்டு மடங்கு விளம்பரக் கட்டணத்தில்
அதிகம் அரசு விளம்பரங்களைப் பெறும் பத்திரிகைகள் –
மக்கள் நலன் கருதியா செயல்படும்…?

விளம்பரத்திற்கு இரண்டு மடங்கு பணம் தரும்
ஆளும்கட்சிகளின் ஊதுகுழலாகத் தானே அவை
செயல்பட முடியும்…?

– திமுக எப்படி இந்த கோரிக்கையை ஆதரிக்கிறது…?

.
————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அரசு விளம்பரத்திலா பத்திரிகைகள் பிழைக்க வேண்டும்…?

 1. புதியவன் சொல்கிறார்:

  //மக்களின் குரலாக செயல்படுவதற்கு திமுக துணை நிற்க வேண்டும்// – இன்று ஏப்ரல் 1 இல்லையே…. எப்படி இப்படி ஒரு இடுகை? ‘நடு நிலைமை’யாக பத்திரிகைகள் செயல்படுதா? அப்படியா? நல்ல ஜோக்.

  //அரசு விளம்பரக் கட்டணத்தை நூறு விழுக்காடு அளவிற்கு உயர்த்தி// – எதுக்கு இவங்க, அரசு விளம்பரத்தை எதிர்பார்க்கணும்? ‘உளுந்து விற்பவர்கள்’, அரசு மாநியத் தொகையாக ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் கொடுத்தால், மக்களுக்கு 50 ரூபாய்க்கு உளுந்து விற்கமுடியும் என்று சொல்வதில் எத்தனை அர்த்தம் இருக்கோ, அவ்வளவு அர்த்தம் இவங்க ‘அரசு விளம்பரங்களை’ எதிர்பார்ப்பதில் இருக்கு. எத்தனை தடவை தங்களுக்கு வேண்டாத பத்திரிகைகளுக்கு அரசு விளம்பரங்கள் கொடுப்பதில்லை. இவங்க பத்திரிகை நியாயமான பத்திரிகையாக இருந்தால் மக்கள் வாங்குவாங்க. அதிக மக்கள் படிக்கும் பத்திரிகையில் அரசு விளம்பரம் கொடுப்பது நடக்கும். ஹிந்து பத்திரிகை ரொம்ப முக்கியம்னு இவங்க நினைத்தால், ஒரு பக்க விளம்பரத்துக்கு அரசு 1 கோடி தந்தால்தான் விளம்பரம் வெளியிடுவேன் என்று சொல்லவேண்டியதுதானே.

  இடுகையில் சொல்லியபடி முதலிரண்டு கோரிக்கைகளில் அர்த்தம் உண்டு. ஆனால் ஸ்டாலினிடம் போய் இவர்கள் நின்றிருப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கு. அவருக்கு ‘ஊடகங்கள் நடுநிலை’யோடு இருப்பதில் அவ்வளவு ஆர்வம் பாருங்க.

 2. tamilmani சொல்கிறார்:

  தி ஹிந்து பத்திரிகை நடுநிலை எப்போதோ தவறி விட்டது .
  இவர்களுக்கு விளம்பர தொகை இரட்டிப்பு ஆகவேண்டுமாம் .
  கோரோனோவால் ரியல் எஸ்டேட் படுத்துவிட்டது. ஹிந்துவில்
  முழுப்பக்க விளம்பரங்களை ரியல் எஸ்டேட் , ஜுவெல்லர்ஸ்
  இப்போது கொடுப்பதில்லை . இதன் மூலம் கோடி கோடியாய்
  சம்பாதித்தார்கள் . அதற்க்கு பதில் இப்போது அரசு விளம்பரங்கள் வேண்டும் .
  இவர்கள் ஸ்டாலினிடம் போகும் போதே இவர்கள் “நடுநிலை”
  தெரிந்துவிட்டது. வேண்டுமானால் திமுக முழு பக்க விளம்பரம்
  கொடுக்கட்டும்.

 3. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்…

  பத்திரிகை என்பது மக்களுக்கு உண்மை நிலையையையும், நடப்பதை நடந்ததுபோலச் சொல்வதும்தான். இதுவும் ஒரு வியாபாரம். சில செய்திகளைச் சொல்வதற்கும் ‘வரவு’, சொல்லாமலிருப்பதற்கும் ‘வரவு’, சொன்ன மாதிரியும் இருக்கணும் ரொம்பவும் உண்மையைப் பேசாமலிருக்கணும் என்பதற்கும் ‘வரவு’. தனக்குப் பிடித்த கட்சி சார்பாகவும் எழுதணும், ஆனால் நடுநிலை போல தொனிக்கணும். அது அவங்களோட வியாபார அணுகுமுறை.

  பத்திரிகைகள் செய்தி சேகரிக்க, அதைப் பற்றி ஆராய, அதனை வெளியிட, நல்ல சூழலை அரசு செய்துதரணும். மிரட்டக்கூடாது, செய்தி சேகரிப்பவர்களை துன்புறுத்தக்கூடாது, செய்தி தரும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும். இதுவும் சரிதான்.

  ஏன் இவங்களுக்கு அரசாங்கம் விளம்பரம் கொடுக்கணும், அதுவும் அதிக விளம்பரக் கட்டணத்தோடு? ஏற்கனவே விளம்பரங்கள் போக மீதி இடத்தில்தான் செய்திகள் அமர்ந்திருக்கு. தர்ம ஸ்தாபனம் நடத்தியா இப்படி கோடி கோடியாச் சம்பாதிக்கறாங்க? அதிகக் கட்டணம் கேட்பது, நீங்க லஞ்சம் கொடுத்தால் உங்களுக்கு ஆதரவா செய்தி போடறேன் என்று சொல்வது போலனா இருக்கு.

  இவங்க ஸ்டாலின் மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளையும் அணுகியிருக்காங்க. அதாவது அரசியல்கட்சிகளை பகடைக்காயாகப் பயன்படுத்தி தாங்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கும், மக்களை இளிச்சவாயர்கள் ஆக்குவதற்கும்தான் இந்து ராம் தலைமையில் முயல்கிறார்கள் என்று தோன்றுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.