யோசிக்க வைக்கும் – “எஸ்.ராமகிருஷ்ணன், ரஜினி , சாரு நிவேதிதா”….இடுகை


இன்று காலை நான் எனது கணிணியில்,
புதிய இடுகையை போட,
dash board-ஐ திறந்தபோது –

நான் முன்பொரு தடவை எழுதிய
“எஸ்.ராமகிருஷ்ணன், ரஜினி , சாரு நிவேதிதா…..”
என்கிற தலைப்பிலான ஒரு இடுகையை,

நேற்றிரவு மட்டும் 87 நண்பர்கள் தேடியெடுத்து
படித்திருக்கிறார்கள் என்று என் dash board
மூலமாகத் தெரிய வருகிறது. இந்த இடுகையை இப்போது
மீண்டும் படிக்கும்போது, எனக்கே மிகவும் சுவாரஸ்யமாக
இருக்கிறது. ( எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை
நான் கொஞ்ச நாட்களாக படிக்க மறந்து விட்டேன்..
நல்லவேளை இது நினைவுபடுத்தியது….இனி
மீண்டும் தொடருவேன். )

87 நண்பர்கள் எப்படி ஒரே இரவில் ஒரு பழைய
இடுகையை தேடியெடுத்து பார்த்திருக்க முடியும்
என்று யோசித்துப் பார்த்தேன்… விடை கிடைக்கவில்லை.
ஒருவேளை முகநூல் மூலமாக யாராவது தங்கள்
நண்பர்களுக்கு forward செய்திருப்பார்களோ…?
ஆனால் ஒரே இரவில் இத்தனை சாத்தியமா …?
சம்பந்தப்பட்டவர்கள் யாராவது எனக்கு தகவல்
கொடுத்தால் நன்றாக இருக்கும்…
( kavirimainthan@gmail.com)

எது எப்படி இருந்தாலும் சரி – அனைத்து வாசக
நண்பர்களும் அதைப் படிக்கும்பொருட்டு,
மீண்டும் அதே இடுகையை கீழே பதிப்பிக்கிறேன்..

இது திரு.எஸ்.ரா. அவர்களுக்கு கிடைத்த மரியாதை.

————————————————————————-

எஸ்.ராமகிருஷ்ணன், ரஜினி ,
சாரு நிவேதிதா…..


(அழைப்பிதழில் எல்லார் புகைப்படமும் இருக்கிறது !)

தமிழ் எழுத்தாளர்  எஸ்.ராமகிருஷ்ணன்
பற்றி சில வரிகள் …

எனக்கு ராமகிருஷ்ணனின்  எழுத்துக்கள் அறிமுகமானது
ஆனந்த விகடன் வார இதழில் அவர் எழுதிய
“துணையெழுத்து” வெளிவர ஆரம்பித்ததிலிருந்து.
சற்றும் கவர்ச்சி இல்லாத ஒரு தலைப்பில் –
எனக்கு அதற்கு முன் பரிச்சயம் இல்லாத –
ஒரு எழுத்தாளரின் உருவாக்கத்தை –
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் படிக்க
ஆரம்பித்தேன். ஆனால் காந்தம் இரும்பை இழுப்பதைப்
போல் அவரது படைப்பு என்னை உள்ளே இழுக்க
ஆரம்பித்தது.

அதன் பின் தொடர்ந்து,வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்,
நேரம் கிடைக்கும்போதெல்லாம் -தேடித் தேடி அவரது
படைப்புகளை ரசித்து படித்து வருகிறேன். எல்லா
புத்தகங்களையும் சொந்தமாக வாங்கி வைத்து படிக்கும்
அளவிற்கு வசதி இல்லாததால், பல சமயங்களில்
தொடர்ந்து லேண்ட் மார்க்கிற்கும், ஹிக்கின்பாதம்சுக்கும்
சென்று, கால் கடுக்க  நின்று கொண்டே மணிக்கணக்கில்
படித்து முடித்ததும் உண்டு.

அவர் எழுத்துக்கள் எனக்கு பரிச்சயம் ஆன அளவு,
அவரது சொந்த பின்புலம் பரிச்சயம் இல்லை என்பதால்,
அவரது வலைத்தளத்திற்கு சென்று சில விவரங்களை
தேடித் தெரிந்து கொண்டதும் உண்டு.

அவரைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் –

அவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு,
கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம்
உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

10 தமிழ்த் திரைப்படங்களின்  -கதை,
வசனகர்த்தா !

நல்ல கதை சொல்லி.மன வளர்ச்சி குன்றிய
சிறுவர்களுக்காக சுமார் 30 கதை சொல்லும்
நிகழ்ச்சிகளை நிகழ்த்தி இருக்கிறார்.
சிறுவர்களுக்கான படைப்புகள் நான்கை உருவாக்கி
இருக்கிறார்.

சுமார் 15 வருடங்கள் – இந்தியா முழுவதும் பலமுறை
சுற்றி இருக்கிறார்.அவரது “உப பாண்டவம்” நாவலுக்காக
மட்டும்,  4 ஆண்டுகள் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள

அஸ்தினாபுரம், துவாரகை. குருஷேத்திரம் உள்ளிட்ட
பலமுக்கிய நகரங்கள், இடங்கள் ஒவ்வொன்றையும்
தேடித்திரிந்து பார்த்திருக்கிறார். பல்வேறுபட்ட மகாபாரத
பிரதிகளை வாசித்து ஆய்வு செய்து, மகாபாரதத்தின்

உபகதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு இந்த
உபபாண்டவம் நாவலைப் படைத்தார்.

இந்த நாவல் மலையாளம், வங்காளம், ஆங்கிலம்
ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு
வருகின்றது.

ராமகிருஷ்ணன் பெற்ற விருதுகளில் சில  –
தாகூர் இலக்கிய விருது,
சங்கீத நாடக அகாடமி விருது,
சிறந்த நாவலாசிரியருக்கான தமிழக அரசின் விருது,
முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் -சிறந்த
நாவலாசிரியருக்கான  விருது,
கண்ணதாசன் விருது.

அவருடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து
மூன்று தமிழ் ஆய்வாளர்கள் டாக்டர் பட்டம்
பெற்றிருக்கிறார்கள்.
பதிமூன்று பேர் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

நான்கு கல்லுரிகளிலும் இரண்டு பல்கலைகழங்களிலும்
அவருடைய படைப்புகள் பாடமாக வைக்கபட்டிருக்கின்றன.

கடைசியாக இப்போது அவர் எழுதி ஜூனியர் விகடன்
வார இதழில் வெளிவந்து கொண்டிருக்கும்
தொடர் கட்டுரை “எனது இந்தியா”.
நாம் ஒவ்வொருவரும் பல முறை படித்த அதே
இந்திய சரித்திரத்தை ராமகிருஷ்ணன் கூறும்போது
எவ்வளவு புத்தம் புதிதாக, அழகாக, சுவையாக
இருக்கிறது !

எஸ். ராமகிருஷ்ணன் தற்போது கடைசியாக
கனடா நாட்டில் உள்ள
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் என்கிற
அமைப்பிலிருந்து
“இயல்” விருதைப் பெற்றதும்,
அதற்கான பாராட்டு விழாவில் (சென்னை, காமராஜர்
அரங்கில் பிப்ரவரி 2ம் தேதி வியாழக்கிழமை மாலை
ஆறுமணிக்கு நடந்தது )
ரஜினிகாந்த கலந்து கொண்டதும்  
சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

(ரஜினியைத்தவிர,இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து,
இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் ஞானசம்பந்தம்,
பாரதி கிருஷ்ணகுமார், இறையன்பு ஐஏஎஸ்,
எஸ்.ஏ.பெருமாள், பிரண்ட்லைன் எடிட்டர் விஜயசங்கர்
ஆகியோரும் கலந்து கொண்டனர் )

என்ன சர்ச்சை ?

ரஜினி ஒரு நடிகர் தானே.
அவருக்கும் இலக்கியத்திற்கும் என்ன சம்பந்தம் ?
இலக்கியம் பற்றி ஒன்றுமே தெரியாத ரஜினி
இந்த விழாவில் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டாமா?
ஒரு சினிமா நடிகர் வந்து பாராட்டியது
எழுத்தாளனுக்கு பெரிய பெருமையாகி விடுமா ?
அழைப்பிதழில் ரஜினி புகைப்படத்தை ஏன் பெரியதாகப்
போட்டார்கள் ?
பாராட்டு பெறும் ராமகிருஷ்ணன் தானே கடைசியில்
பேசி இருக்க வேண்டும்.
ஏன் ரஜினியை கடைசியில் பேச வைத்தார்கள்.
ரஜினி முன்னரே பேசினால் கூட்டம் போய் விடும்
என்று தானே ?
தைரியம் இருந்தால் இன்னும் ஒரு முறை இதே
காமராஜர் அரங்கில், ரஜினியை அழைத்து கூட்டம்
நடத்தி, ரஜினி பேசிய பிறகு கடைசியாகப் பேச
ராமகிருஷ்ணனுக்கு தைரியம் இருக்கிறதா ?

இப்படி எல்லாம் சர்ச்சையை கிளப்பியது யார் ?
“பெருங்குடிமகன்”திருவாளர் சாரு நிவேதிதா
தான் – இந்த முறை “ஞானி”யின் துணையுடன் !

விழாவில் ரஜினி என்ன பேசினார் ?

“ராமகிருஷ்ணனை எனக்கு பத்து வருஷம்
முன்னாடிலேந்து, அதாவது 2002 லன்னு
நெனக்கிறேன் தெரியும். அப்ப வந்து பாபா படம்
எடுக்கணும்னு நான் முடிவு பண்ணபோது, நானே
அந்தப் படத்துக்கு கதாசிரியர். கதையை நான்தான்
எழுதினேன்.

அதுல வந்து ஒரு சீக்வென்ஸ் இருந்தது…

அது ரொம்ப கஷ்டமா இருந்தது. எழுத்தாளர் சுஜாதா
கிட்ட நான் கேட்டேன். “ரஜினி அது எனக்கும் கூட
கஷ்டமான விஷயம்தான். ஷங்கர் கிட்ட ஒரு பையன்
இருக்கான். ராமகிருஷ்ணன்னு சொல்லிட்டு.
அவன் ரொம்ப அறிவாளி. நெறைய விஷயம் தெரியும்,
அவனை நீங்க கான்டாக்ட் பண்ணுங்க”ன்னார்.

அதுக்கப்புறம் ஷங்கரை நான் மீட் பண்ணேன். ஷங்கர்
சொன்னாங்க, ‘ராமகிருஷ்ணனுக்கு ரொம்ப விஷயம்
தெரியும் சார். அப்படியே அள்ளி வீசுறாரு. நாமதான்

எடுத்துக்கணும்’னாரு. அதன் பிறகு ராமகிருஷ்ணனை

அறிமுகப்படுத்தினார். பேசினேன்.
அப்படி பேசின பிறகு, அவர் சொன்ன சில
விஷயங்கள்லாம் கேட்டு நான் பிரமிச்சுப் போனேன்.
நான் கேள்விப்படாதது, பார்க்காதது, படிக்காததுன்னு
பல விஷயங்களை அவர் சொன்னார்.
இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு விஷயங்கள்
தெரிஞ்சிருக்காரேன்னு நான் ஆச்சர்யப்பட்டேன்.
அந்த நட்பு அப்படியே ஆழமான பிறகு,
ரொம்ப பர்சனலா ஆன பிறகு……..

சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கதையா பண்றார்.
வாழ்க்கையை அப்படியே ரசிக்கிறார்,
ஒரு மூணு வயசு குழந்தை மாதிரி.

அந்த ‘ஓ’ என்கிற ஆச்சர்யமிருக்கே…
வயசான பிறகு நமக்கு எல்லாமே மரத்துப்போகுது.
இதானே எல்லாமே பாத்துட்டோம்…
எல்லாமே தெரிஞ்சிக்கிட்டோம்னு லைப்பே போரடிச்சிப்
போகுது. பட், அவருக்கு சின்னச் சின்ன விஷயம் கூட
அவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.
அவரால வந்து ரசிக்க முடியுது. அந்த ரசிக்கிறத
அப்டியே அழகாக பேனா மூலம் பேப்பரில் எழுத
முடிகிறது. இமாஜின் விஷுவலைஸ் பண்ண முடிகிறது.
நல்ல விஷயங்களை புதுசு புதுசா தமிழ் மக்களுக்கு
கொடுக்கணுங்கற ஆர்வம் இருக்கு.

தாஸ்தாயேவ்ஸ்கியிருந்து, ஷேக்ஸ்பியரிலிருந்து,
ப்ரெஞ்சில் பெரிய பெரிய எழுத்தாளர்களின்
புத்தகங்களையெல்லாம் மொழிபெயர்த்துக்
கொடுத்திருக்கார். நிஜமா சொல்றேன்..
இந்த யங்க்ஸடர்ஸுக்கு அது நல்ல விஷயம்.

நான் வந்து அவர் வீட்டுக்குப் போய்,
அவரை பிக்கப் பண்ணிக்கிட்டு, அப்படியே சென்னையை
யெல்லாம் காரில் ஒரு ரவுண்ட் அடிச்சி, அரசியல்,
சினிமா, கலை, புத்தகங்கள்லருந்து எல்லா விஷயமும்
பேசிட்டு, ராகவந்திரா மடத்துக்குப் போய்
சாப்பிட்டுவிட்டு போவது வழக்கம்.

அப்ப ஒரு நாள் நான் கேட்டேன்,
இந்த மாதிரி விருது கிடைச்சிருக்காமேன்னு.
ஆமா கிடைச்சிருக்குன்னாரு. உடனே வாழ்த்துக்கள்
சொல்லிவிட்டு,  
“இவ்வளவு பெரிய விருது கிடைச்சிருக்கே,
யாருக்குமே தெரியலியே அது.

எப்டி அது எனக்கு தெரியாம போச்சு…
“எதுவும் விழா எடுக்கலையான்னு கேட்டேன் .
“இல்ல இல்ல ஒண்ணும் பண்ணல..
நீங்க வந்தா செய்யறேன்”னார்.
நான் சரின்னு சொன்னேன்.
அப்டிதான் இந்த விழா நடந்தது.
இதில் கலந்துகிட்டதில் எனக்கு மிக்க சந்தோஷம்.”

இந்த பேச்சில், கூட்டம் கூட்டுவதற்காக ராமகிருஷ்ணன்
ரஜினியை அழைத்து வந்ததாகவோ, ஒரு (பார்மாலிடி)
சடங்காக நினைத்து ரஜினி வந்ததாகவோ நினைக்கத்
தோன்றவில்லை.  அவர்கள் இருவருக்கும் இடையே
நிலவும் ஆத்மார்த்தமான அன்பும், நெருக்கமும் தான்
தெரிகின்றன.

திரையுலகில் 10 படங்களுக்கு மேல் பணியாற்றிய
ஒரு எழுத்தாளர், 10 வருடங்களுக்கு மேலாக
தன்னுடன் நெருங்கிப் பழகிய ஒரு நண்பரை தன்னை
கௌரவிக்க நடந்த ஒரு பாராட்டு விழாவிற்கு அழைத்து
பேசச்சொன்னதைத் தான் இந்த பாடு படுத்துகிறார்
சாரு நிவேதிதா என்கிற அறிவழகன் (!)

நியாயமாக என்ன செய்திருக்க  வேண்டும் சாரு ?
தகுதியும், திறமையும் உள்ள சக எழுத்தாளர்
ஒவ்வொருவர் இத்தகைய பெருமையைப் பெற்றதற்கு
நடத்தப்படும் விழாவில், தானும் கலந்து கொண்டு –
வாழ்த்தி இருக்க வேண்டும்.
விழாவிற்கு போக விருப்பமில்லை என்றால் –
குறைந்த பட்சம், தனது வலைத்தளத்தில்  
வாழ்த்துக்களாவது தெரிவித்திருக்க வேண்டும்.

இது எதையும் செய்யாத, சாரு கேவலமான
காரணங்களைக் கூறி ஒரு நல்ல நிகழ்வை
அசிங்கப்படுத்த முயல்கிறார்.
சாரு வை, அவரது கீழ்த்தரமான  நடத்தைக்காக
என்ன சொல்லித் திட்டினாலும் தகும்.

ஆனால் –
என்ன சொல்லித் திட்டினாலும் அவருக்கு
அது உரைக்காது. அது தானே பிரச்சினை !
திட்டாமல் விடவும் எனக்கு மனம் வரவில்லை !

எனவே ஒரே ஒரு வார்த்தையில்
சொல்லி விடுகிறேன் –

“சீ – நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு “

.
—————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to யோசிக்க வைக்கும் – “எஸ்.ராமகிருஷ்ணன், ரஜினி , சாரு நிவேதிதா”….இடுகை

 1. புதியவன் சொல்கிறார்:

  ரஜினி, ‘நண்பர்’ என்ற முறையில் அந்த விழாவுக்குப் போயிருக்கிறார். ரஜினி வந்து அந்த விழா நடத்தினால் தனக்கு அது ஒரு பெரிய அறிமுகத்தைத் தரும் (திரையுலகில்) என்று எஸ்.ரா. எண்ணியிருக்கலாம். இதில் தவறு ஒன்றும் இல்லையே. எஸ்.ரா எழுத்துக்கள் வாழ்க்கைக்கு ரொம்பவே நெருக்கமாக இருக்கும்.

  நான் சாரு நிவேதிதாவின் எழுத்துக்களைப் படிப்பவன். அவரது நல்ல எழுத்துக்களை (கீழான இச்சைகொண்ட எழுத்துக்களை அல்லது அந்த இச்சைகளைப் பற்றி எழுதுவதைப் படிப்பதை நான் விரும்புவதில்லை). சாரு எப்போதுமே சொல்லிவருவது, இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் ‘எழுத்தாளர்’ என்பவர்களுக்கு பொதுமக்களிடையே மரியாதை கிடையாது, அவர்களைக் கொண்டாடுவது கிடையாது. சினிமாக்காரன், சினிமாக்காரி என்றால் அவர்கள் காலடியில் தமிழர்கள் விழுந்துகிடக்க மிகுந்த இச்சை கொள்வார்கள். சினிமாக்காரன் என்ன சொன்னாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள், அதைச் சொல்ல அவனுக்கு என்ன தகுதி இருக்கு என்று பார்க்க மாட்டார்கள் என்பதுதான் பெரும்பாலும் அவருடைய கருத்து.

  விகடனைப் பற்றி இன்னொரு இணைய எழுத்தாளர், தனக்கு விருது கொடுப்பதை (விகடன் விருதுகள்) ஏதோ போற போக்கில் அறிவித்துவிட்டு, முக்கியத்துவம் கொடுக்காமல் விகடன் நிர்வாகத்தினர் இருந்தனர். அதே விழாவில் நயனதாராவுக்கு வழங்கும் விருதுக்காக, அவரது காலடியில் கிடப்பதுபோல் விழுந்து விழுந்து கவனித்தனர், முக்கியத்துவம் கொடுத்தனர் என்று எழுதியிருந்தார்.

  அந்த எண்ணத்தில்தான் சாரு, ஒரு இலக்கியவாதி விருது பெறுவதற்கு சினிமாக்காரர்களை முக்கியமாக அழைக்கணுமா என்ற ஆதங்கத்தில் எழுதியிருப்பார். அவருக்கு ‘தமிழகத்தில்’ எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் இல்லையே, பிற நாட்டில் (ஏன் கேரளத்தில்கூட) எழுத்தாளர்களை பலரும் மதிக்கும் நிலை இருக்கிறதே என்ற எண்ணம் பதிந்திருக்கிறது.

  இந்தக் கட்டுரையை இன்று படிக்கும்போது எனக்கு மேற்கூறிய எண்ணங்கள்தான் ஏற்படுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.